டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் உயிரோடு அமர்ந்து இருப்பது போல் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ அமைப்பு இருக்கிறது. நாம் அவருக்கு எதிரே அமர்ந்து கையை ஆட்டிச் சொன்னால், அவரும் நாமும் உரையாடுவது போல இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் இதற்கு வழி வகுத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் வரும் பலரும் இப்படி டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எதிரே அமர்ந்து அவரோடு உரையாடுவது போன்ற மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள். நிழற்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
இங்கு டாக்டர் கலைஞர் அவர்களும், பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும்,ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் மற்றும் திராவிடர் இயக்கத்துத் தலைவர்களும் எழுதிய நூல்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நூலகத்திற்கு வரும் ஒருவர் டாக்டர் கலைஞர் அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்புகளைப் படித்து அவரின் வாழ்க்கையை, அவரின் போராட்டத்தை – இலக்கிய ஈடுபாட்டை அறிந்து கொள்ளமுடியும்.
இதற்கு மாற்றாக 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வருகின்றான். டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எதிராக அமர்கின்றான். ‘தாத்தா, நீங்கள் எந்த வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? எந்த வயதில் ‘கையெழுத்துப் பிரதி’ பத்திரிகையை ஆரம்பித்தீர்கள்?’ என்று கேள்வி கேட்கின்றான். உடனே கலைஞர் அவருக்கே உரித்தான அவரது கரகரத்த குரலில் ‘உன் வயதில்தானடா தம்பி நான், ‘கையெழுத்துப்பிரதி’யை ஆரம்பித்தேன்.அதற்கு அடுத்த ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே கலந்து கொண்டேன்’ என்று தனது மாணவர் பருவத்து நினைவுகளை – போராட்டவுணர்வை எதிரே உட்கார்ந்து இருக்கும் மாணவனுக்கு விளக்கினால் எப்படி இருக்கும்? இது சாத்தியமா என்றால் இந்தச் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் சாத்தியம்தான்.
நான் எனது மகனை அழைக்கிறேன்.தம்பி எனது வாழ்க்கையை நான் செயற்கை நுண்ணறிவில் பதிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் அதற்கான தளம் ஒன்று இருக்கிறது.அதில் பணம் கட்டிப் பதிந்து கொள்ளவேண்டும்.எனது நினைவுகளை எல்லாம் அதில் பதியலாம்.படங்களாக,வீடியோக்களாக என அனைத்து வடிவங்களிலும் பதிந்து கொள்ளலாம். ஒரு 50 ஆண்டுகளுக்குப் பின் நான்இல்லாத காலத்திலும், இருப் பதைப் போல கேட்பவர்கள் எல்லோருக்கும் நான் பதில் சொல்லலாம்.சிரிக்கலாம். அழுகலாம். சிந்திக்க வைக்கலாம்.கேட்பவரை எதிர்க் கேள்வி கேட்கலாம்.அதாவது இறந்தபின்னும் உயிரோடு இருப்பது போலவே சொற்களால், உரையாடல்களால் அளவளாவலாம்.
இதற்குச் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் சாட்போட்கள் உதவுகின்றன. முதன் முதலில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்போட்டை அமைத்தவர் அமெரிக்காவின் கலிபோர்னியா- ஆக்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் விலாஹோஸின் என்பவர். அவர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாட்போட்டிற்குப் பெயர் hereafter.ai. இந்த hereafter.ai என்னும் இணையதளத்திற்குள் சென்று பார்த்தால் ,உங்கள் கதைகளும் குரலும் என்றைக்கும் (Your stories and voice for ever) என்னும் முகப்பு வாசகம் வரவேற்கிறது.
இந்தச் சாட்போட் நம்மிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்கிறது. இளமைக்காலம், மறக்க முடியாத நினைவுகள், வாழ்வில் மறக்க இயலாத மனிதர்கள்,நமது சொந்த விசயங்கள் என்று பலவற்றைக் கேள்வி கேட்கிறது. நாம் சொல்லும் பதில்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறது. நமது நிழற்படங்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. பின்பு இவற்றை எல்லாம் இணைத்து மற்றவர்கள் கேள்வி கேட்டால் நாம், நமது குரலிலேயே பதில் சொல்வது போல வடிவமைத்துக் கொடுக்கிறது.
“செயற்கையாக மக்களை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவின் தற்போதைய சாதனைகள் அனைத்துமே நீண்டகாலமாக அறிவியல் புனைகதைகளில் மட்டுமேபேசப்பட்டு வந்தன. ஆனால் ஏஅய் தொழில்
நுட்பத்தின் வளர்ச்சி இப்போது நடைமுறை வாழ்க்கையிலேயே அதைச் சாத்தியமாக்கியுள்ளது.”
2017இல் ஜேம்ஸ் விலாஹோஸினின் தந்தைக்குப் புற்று நோய் ஏற்படுகிறது.விரைவில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், தனது தந்தையின் குரலை,நினைவுகளை இந்த உலகத்தில் நிரந்தரமாக்க வேண்டும் என்று ஜேம்ஸ் விலாஹோஸின் விரும்புகிறார். அதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.
“பின்பு 2019ஆம் ஆண்டில் ஜேம்ஸ் விலாஹோஸின் தனது சாட்போட்டை hereafter.ai என்ற செயலியாகவும் அதையே ஒரு தொழிலாகவும் மாற்றினார். இது, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்த பின்னும்கூட அவர்களைச் செயற்கை வழியில் பூமியில் தக்கவைக்க உதவுகிறது. .
hereafterai செயலியின் பயனர்கள் தங்கள் அன்புக்குரியவரின் ஒளிப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் அவர்கள் செயலியைப்பயன்படுத்தும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்அல்லது கணினியின் திரையில் அன்புக்குரிய
வர்களின் முகம் தோன்றும் “ என்று விரிவாகப் பி.பி.சி.தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..
“இதேபோல் மற்றொரு நிறுவனம் மக்களைச் செயற்கை நுண்ணறிவு சாட்போட்களாக மாற்றுகிறது. தென் கொரியாவின் DeepBrain AI ஆனது, ஒரு நபரின் முகம், குரல் மற்றும் பழக்க வழக்கங்களைப் பல மணிநேர வீடியோ மற்றும் ஆடியோவாகப் பதிவு செய்வதன் மூலம் வீடியோ அடிப்படையிலான அவரைப் போன்ற அவதாரை உருவாக்குகிறது” என்றும்” உண்மையான நபரின் உருவத்தோடு 96.5% ஒத்துப்போகும் அளவிற்கான உருவத்தைக் குளோனிங் செய்கிறோம்” என்று அந்த DeepBrain நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மைக்கேல் ஜங் சொல்வதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
இந்தச் சாட்போட்களைப் பயன்படுத்த இப்போது நாம் நிறையப் பணம் செலுத்தவேண்டும். ஆனால், வரும் காலத்தில் இது வெகுவாகக் குறைந்து நிறையப்பேர் பயன்படுத்தும் நிலை வரலாம்.செயற்கை நுண்ணறிவினால் சில புதிய கடவுள்கள் உருவாக்கப்படலாம்; அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட புராணங்களை _ கடவுள் கதைகளை உண்மையைப் போல் வடிவமைத்துக் காட்டலாம். ஆனால், அப்படி வடிவமைக்கப்படும்போது, எல்லாக் கடவுள் கதைகளும் தந்தை பெரியார் கற்றுத்தந்த கேள்விகளுக்கு முன்னால் காணாமல் போகும்.புராணக் கதைகள் உயிர்பெற்று வரும்போது நாம் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கத் தலைவர்களும், உலகில் உள்ள அத்தனை பகுத்தறிவாளர்களும் கொடுத்த கேள்விகளோடு எதிர்கொள்ளப் பழகலாம். மாணவ- மாணவிகளுக்கு,
இருபால் இளைஞர்களுக்கு அந்தக் கேள்விகளைக் கேட்கும் தன்மையை உருவாக்கலாம்.
புதிய கண்டுபிடிப்பு எப்போதும் இருபுறமும் கூர்மை உள்ள கத்தி. நன்மையைப் போலவே சில தீமைகளும் புதிய கண்டுபிடிப்புகளால் அமைவதுண்டு. அதைப்போல இந்த செயற்கை நுண்ணறிவு. இதற்குப்பின்னால்(hereafter.ai) சாட்போட்களால் ஏற்படப் போகும் தீமைகள் பற்றியும் நிறையப் பேசப்படுகின்றன..மனிதகுலம் அந்தத் தீமைகளை எல்லாம் கடந்து வரும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.