தேர்வும் நேர்வும் – கரசங்கால் கோ. நாத்திகன்

2024 ஏப்ரல் 1-15, 2024 சிறுகதை

மீனாட்சி சுட்டியான பெண். அப்பா சரவணன்; ‘அம்மா லட்சுமி; காமாட்சி பாட்டி. சென்னை புறநகரில் வசிக்கும் சிறு குடும்பம். காமாட்சி அம்மா ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். சரவணனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிற்றூர். சரவணனுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு தளம் போட்ட ஆயிரம் சதுர அடி மாடி வீடும் ஊரில் இருந்தும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அய்ம்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்ததால் சென்னைப் புறநகர் பகுதியில் குடியேறினார்கள்.

திருமணம் முடிந்து அய்ந்து ஆண்டுகள் கடந்தும் சரவணன்- லட்சுமி தம்பதியருக்குக் குழந்தை இல்லாத காரணத்தினால், காமாட்சி அம்மா மதுரை மீனாட்சி அம்மனுக்கு வேண்டிக்கொண்டார். அம்மாவின் வேண்டுதல்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மாவின் பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள். சரவணன் தம்பதியருக்கு அதற்குப் பின்பும் குழந்தை பிறக்கல்லை. அருகில் உள்ள படைத்தல் தொழிலை மிகவும் வெற்றியுடன் செய்யும் மீனாட்சி கருத்தரிப்பு மருத்துவமனைக்குச் சென்ற பிறகு தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

தன்னுடைய வேண்டுதலை மதுரை மீனாட்சி அம்மன்தான் நிறைவேற்றினாள் என்ற நம்பிக்கையில் குழந்தைக்கு மீனாட்சி என்று பெயர் சூட்டினார் காமாட்சி. சரவணன் மற்றும் லட்சுமிக்கு மட்டுமே தெரியும் மீனாட்சி கருத்தரிப்பு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்த பின்புதான் மீனாட்சி பிறந்தாள் என்ற இரகசியம்.

இப்போது மீனாட்சி சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +2 படித்து வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவிகிதம் மதிப்பெண்கள் மட்டுமே பெற்று இருந்தாள். நடக்க இருக்கும் +2 தேர்வில் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நியாயமான ஆசை சரவணன் குடும்பத்தினருக்கு. இதற்காகப் பாட்டி காமாட்சி சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்வதாகவும் காணிக்கையாக தன்னுடைய தலை முடியைச் செலுத்துவதாகவும் வேண்டிக் கொண்டார்.

இந்தப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி ஏழைப் பிரிவில் தன் மகளுக்கு ஒன்றிய அரசில் எதாவது வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது சரவணனுக்கு. என்றாலும் அம்மா காமாட்சி கட்டளைப்படி தேர்வு தொடங்கும் நாளன்று கோவிலுக்குச் சென்று தேர்வு நுழைவுச் சீட்டை வைத்து அர்ச்சனை செய்த பின்புதான் தேர்வு‌க்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம். பத்து மணிக்குதான் தேர்வு தொடங்குகிறது. அதற்குள் காரில் சென்று காமாட்சிப் பாட்டியின் வேண்டுதலை நிறைவேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் சரவணன், லட்சுமி, மகள் மீனாட்சி, பாட்டி காமாட்சி ஆகியோர் முருகனைத் தரிசிக்கப் புறப்பட்டார்கள் முருகன் சன்னதியில் மீனாட்சியின் +2 தேர்வு நுழைவுச் சீட்டை அர்ச்சனைத் தட்டில் வைத்து அர்ச்சகரிடம் கொடுத்து சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொன்னார்கள். அர்ச்சனை முடிந்த பின்பு காமாட்சி; ஆண்டவா! என் பேத்தி நடக்க இருக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று நெஞ்சுருக வேண்டிக்கொண்டு அர்ச்சகர் தட்டிலும் கோவில் உண்டியலிலும் காணிக்கை செலுத்திய பின் நல்ல சாமி தரிசனம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் காருக்குத் திரும்பி, மீனாட்சி தேர்வு எழுதும் பள்ளிக்கு நால்வரும் புறப்பட்டனர். 2 கி.மீ தூரம் சென்று இருப்பார்கள். திடீரென்று கார் டயர் வெடித்துப் பஞ்சரானது. அன்று கார் டிரைவர் வராததால் சரவணனே காரை ஓட்டி வந்தார். அவருக்கு டயர் மாற்றத் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த சரவணன் மற்றவர்களைக் காரிலே அமரச் செய்துவிட்டு டயர் மாற்றும் மெக்கானிக்கைத் தேடி நடந்தார்.

கடைத்தெரு முழுவதும் தேடியும் ஒருவரும் கிடைக்கவில்லை. மீண்டும் காருக்கே வந்தார். “அப்பா என்னாச்சி! மெக்கானிக் கிடைத்தாரா?” பதற்றத்துடன் கேட்டாள் மீனாட்சி. “கவலைப்படாதே மீனாட்சி! மெக்கானிக் யாரும் கிடைக்கவில்லை. வழியில் யாராவது கார் மெக்கானிக் கிடைக்கிறார்களா பார்ப்போம் என்று சாலையை நோக்கினார். எதிரில் ஒரு கார் வந்தது. அந்தக் காரைக் கை காட்டி நிறுத்தினார்.

காரை நிறுத்தியவர் என்னவென்று கேட்டார். “டயர் பஞ்சராகிவிட்டது. பாப்பா தேர்வுக்குப் போகணும். டயர் மாற்ற யாராவது கிடைப்பார்களா என்று பார்த்தேன். கிடைக்கவில்லை. காரில் வருகின்றவர்களின் உதவியைக் கேட்கலாம் என்றுதான் நிறுத்தினேன்” என்றார்.

அதற்குள் மீனாட்சி “சார் சார் எப்படியாவது உதவுங்க. நான் தேர்வு எழுதணும்” என்று கெஞ்சினாள். “கவலைப்படாதே! நான் உதவி செய்கிறேன்“ என்று கூறிவிட்டு, காரிலிருந்து இறங்கி தன் காரிலிருந்த ஜாக்கியை எடுத்து வந்தார்.

“அய்யா நீங்களே செய்யப் போறீங்களா? உங்களுக்கு ஏன் வீண் சிரமம்!” என்றார் சரவணன்.
“இதிலென்ன சார் இருக்கு. என் பெண்ணுக்கு இப்படி ஒரு பாதிப்பு வந்தால் நான் செய்ய மாட்டேனா!” என்று கூறியபடி, தரையில் அமர்ந்து ஜாக்கியைப் பொருத்தி டயரைக் கழற்றினார்.

அதற்குள் அவர் அணிந்திருந்த ஆடைகள் அழுக்காயிடுச்சி. அதைப் பார்த்த சரவணன்,

“அய்யா! எங்களால உங்களுக்கு பெரிய கஷ்டம். நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்!” என்றான்.

“நன்றி எதிர்பார்த்துச் செய்வதில்லை உதவி என்பார் பெரியார்” என்றபடி டயரை மாற்றினார்.

“அய்யா! நீங்க பெரியார் கட்சியா?” என்றார் சரவணன்.

“பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெரியார் தன் சொத்தையெல்லாம் மக்களுக்கே கொடுத்து, 90 வயதுக்கு மேலும் இரவு பகல் பாராது உழைத்தார். அதனால் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் கொள்கைகளும் எனக்குப் பிடிக்கும்” என்றார்.

“கடவுள் இல்லை என்பது உங்கள் கொள்கையா? என்றார் சரவணன்.

“கடவுள் நமக்கு என்ன செய்கிறது? உங்கள் மகள் தேர்வுக்குப் போக முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு கடவுள் உதவுதா? நான் உதவுகிறேனா?” என்றார். சரவணனால் பதில் சொல்ல முடியவில்லை. காமாட்சியம்மாள் குறுக்கிட்டு,

“கடவுள் கடவுள் என்று எல்லாத்துக்கும் கடவுளை நம்பினேன். கடவுள் எதுக்கும் உதவல என்றார். கோவிலுக்குப் போகாம நேரே பள்ளிக்கூடம் போயிருக்கலாம். இப்படி முடியாமப் போயிருச்சே” என்று வருத்தப்பட்டார்.

“சார் டயர் மாற்றியாச்சி. நீங்கள் புறப்படலாம்” என்றார்.

“அய்யா மிகவும் நன்றி! என்று சரவணன் குடும்பத்தினர் எல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டனர்.
மணி இப்போது 9:30. உடனே புறப்பட்டுப் போங்க. தேர்வு எழுதவேண்டிய பிள்ளையைக் கோயிலுக்கு அழைத்து வரலாமா? அதுவும் தேர்வுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் அழைத்து வரலாமா?” பாப்பா, நீ பயப்படாம தேர்வு எழுது. உன் வாழ்க்கை உன் கையில். நீ படித்தால்தான் நன்றாக தேர்வு எழுத முடியும். நீ முயன்றால்தான் முன்னுக்கு வரமுடியும். சரியா!” என்றார் உதவி செய்தவர்.
சரவணன் விடைபெற்றுக்கொண்டு விரைவாய் புறப்பட்டார். இன்னும் 5 கி.மீட்டர் தூரம் இருக்கு என்று சொல்லிக்கொண்டே ஓட்டினார். கார் ஒரு கி.மீட்டர் தூரம் சென்றதும் வழியிலே பெரிய வாகன விபத்து. லாரியும் பேருந்தும் எதிர் எதிர் மோதிக்கொண்டிருந்தது. சாலையில் வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் வேறு பாதையில் திருப்பி விட்டனர். அந்தப் பாதை மிகவும் கரடுமுரடானது. கார் மெல்ல ஊர்ந்துதான் செல்ல முடியும். கார் மெல்ல நகர்ந்து சென்றது. பள்ளியை அடைந்தபோது மணி 10:45 பள்ளிக்கதவு சாத்தப்பட்டிருந்தது. பள்ளிக் காவலாளியிடம் கெஞ்சிப் பார்த்தனர்.

“அய்யா, உள்ளே செல்லும் நேரம் கடந்துவிட்டது. இனி யாரும் தேர்வு எழுதச் செல்ல முடியாது!” என்று மிகச் சரியாகச் சொன்னார்.

சரவணன் படித்தவர் என்பதால் உண்மை நிலையைப் புரிந்துகொண்டார். மீனாட்சி சோர்ந்து தன் தந்தைமீது சாய்ந்தாள்.
அவளைத் தாங்கலாக அழைத்துச் சென்று அமரவைத்து குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்தார்.

“சரி வாங்க வீட்டுக்குப் போகலாம். நாளைய தேர்வுக்குப் படித்து நல்ல முறையில் எழுது.” என்றார் மகளைப் பார்த்து.

“ஆயா! கடவுள் கடவுள்ன்னு என் படிப்பைக் கெடுத்துட்டீங்களே!” என்றாள் கண்கலங்க.

‘‘தப்புதாம்மா! என்ன மன்னிச்சிடும்மா! கடவுள் எதையும் செய்யப் போவதில்லை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். நம்ம அறிவும் முயற்சியும்தான் நம்மைக் காப்பாற்றும், உயர்த்தும். வேண்டுதல், பிரார்த்தனை என்பதெல்லாம் அறியாமை என்று எனக்குத் தெளிவாகிவிட்டது. கடவுளை அவ்வளவு நம்பினோம். கடவுள் இருந்தா இப்படி நடக்குமா? உன் படிப்பு பாழாகுமா? அறியாமைக்கு இதுதான் தண்டனை. இனி பகுத்தறிவுடன் வாழவேண்டும் என்பது நமக்கு இது ஒரு பாடம்!” என்றார்.

“சரி, மீனாட்சி! இந்தத் தேர்வை, அடுத்து ஒரு மாதம் கழித்து நடக்கும் உடனடித் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். கவலைப்படாதே! மேற்படிப்பு கெடாமல் இந்த ஆண்டே கல்லூரியில் சேரலாம். மனம் தளராது தொடர்ந்து மூடநம்பிக்கையைக் கைவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வதே சரி”
என்றார் சரவணன். வீடு நோக்கிக் கார் புறப்பட்டது.l