அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 16-31, 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்

மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா அலு மற்றும் கப்பாஸ், தமிழ்நாட்டில் இருந்து சுப. சீதாராமன், கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, ஆந்திராவில் இருந்து ஜெய்பால், அரியானாவில் இருந்து சாந்த், உ.பி. மாநிலத்தில் இருந்து முகமது அப்துல்லா, ஹீராலால், மோதிலால் சாஸ்திரி, கேரளாவில் இருந்து ராமதாஸ் கதிரூர் முதலியவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர், சமூகநீதிப் போராட்டத்தை மற்றொரு விடுதலைப் போராட்டத்தைப் போல் நடத்தவேண்டும் என்றனர்.
கூடியிருந்தவர்களில் கணிசமான ஒரு பகுதி மகளிர் ஆவர்.

இந்த மாநாடு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாநாடு.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. அரசுப் பணிகளில் தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அளவு தற்போதைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும்.

2. மக்கள் தொகைக்கு ஏற்ற கல்வி வாய்ப்பு பெற, உயர் கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி
நிலையங்களின் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநாட்டில் தலைவர்களுடன் ஆசிரியர்

3. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை அரசுத்துறை, தனியார்துறை, மின்னணுவியல் துறை, பத்திரிகைச் செய்தித்துறை அமைப்புகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

4. தாழ்த்தப்பட்ட பழங்குடி, மக்கள் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே அரசமைப்புச் சட்ட அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கமிஷனுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

5. ராணுவத் துறை, மத்திய மாநில அரசுகளின் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளும் இடஒதுக்கீட்டு முறைப்படி செய்யப்பட வேண்டும்.

6. நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ளதைப் போல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

7. அமைச்சர்கள், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள், ஹை-கமிஷனர்கள், கமிஷன்களின் உறுப்பினர்கள், அரசுக் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகிய நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
8. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தங்கள் மக்கள்தொகைக்கேற்ப முன்னேற்றத்தை எட்டும் வரை, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்னும் ‘கிரீமிலேயர்’ கொள்கை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

9. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயமாக இந்தப் பிரிவு மக்களிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும்.

10. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையின்படி பொது மற்றும் தனியார் நிறுவன நியமனங்கள் மற்றும் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்.

11. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தேசிய நீதிக்கமிஷன் ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்தக் கமிஷன் உறுப்பினர் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. சட்ட அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளில் அரசு வழக்குரைஞர்கள் (ஸ்டாண்டிங் கவுன்சில்) நியமனங்களிலும் இடஒதுக்கீடுச் சட்டம் உடனடியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

13. இடஒதுக்கீடு முறையை சரியாக நடைமுறைப்படுத்துவோருக்குப் பதவி உயர்வும், தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தகுந்த ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

14. சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நல்வாழ்விற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி பத்திரிகைச் செய்தி, தொலைக்காட்சித் துறைகள் மூலமாகப் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

15. 2005ஆம் ஆண்டில் ஜாதிகளின் அடிப்படையில் தனி மக்கள் தொகைக் கணக்கீடு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

16. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

17. பல்கலைக் கழக மான்யக் குழுத் தலைவர் உதவித் தலைவர் பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலைவர் மற்றும் உதவித் தலைவர் பணியிடங்கள் இந்தப் பிரிவு மக்களைக் கொண்டே கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்.

18. மேற்கண்ட பிரிவுகளிலான இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாக்க, ஓர் ஒருங்கிணைந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆகிய 18 கோரிக்கைகளை மாநாட்டின் தீர்மானங்களாக நாம் முன்மொழிந்தோம். அதை கூடியிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி ஒரு முறை, பலத்த கைதட்டல் மூலம் (மற்றொரு முறை என்று) ஒரு மனதாக நிறைவேற்றினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு குழுவும் ஆயத்தமாகி பல்வேறு மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சமூக நீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், கருநாடக மகளிர் சார்பில் திருமதி ஜெயராமன், மாநாட்டுத் தலைவரும் நேஷனல் யூனியன் தலைவருமான மேனாள் எம்.பி. டி.பி. யாதவ் ஆகியோர் வழிமொழிந்தும் விளக்கியும் பேசினர்.

“நிறைவாக எமது உரையில், “உரைகள் நிகழ்த்தும் காலம் இனிமேல் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம். இடஒதுக்கீடு இரக்கத்தால் பெறுவது அல்ல; அது சமத்துவத்துக்கான உரிமை ஆகும். அதைப் பெறும் வகையில் ஆட்சியாளர்களைச் செயல்பட வைக்கவேண்டும்” என்று வலியுறுத்தினோம்.
அதற்குப் பின்பு சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை மத்திய அரசுக்கு அளிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்றபொழுது, அது தடை செய்யப்பட்டது. தடையை மீறிச் செல்ல முயன்றதால், சந்திரஜித் ஆகியோர் தலைமையில் சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டோம்.
கழகத்தின் சார்பில் 30 தோழர்களும், தோழியர்களும் கைதாயினர். பின்பு மாலை 5 மணிக்கு அனைவருமே விடுதலை செய்யப்பட்டோம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் பேராசிரியர் ஆர். சத்தியநாதய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. 20.12.2004 திங்கள்கிழமையன்று காலை 10.30 மணிக்கு சேப்பாக்கத்திலுள்ள சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு கட்டடத்தில் எப்-50 அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.
இச்சிறப்பான சொற்பொழிவுக்கு சென்னைப் பல்கலைக் கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவரும் பள்ளி வரலாற்றுப் பாடங்கள் துணைத் தலைவருமான டாக்டர் ஜி. வெங்கட்ராமன் தலைமை வகித்து பேராசிரியர் ஆர். சத்தியநாதய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளின் நோக்கம். பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் ஆர். வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் டாக்டர் ஜி. வெங்கட்ராமன் எமக்கு சால்வை அணிவித்து மலர்க் கொத்துகளை வழங்கினார்.

முதல் பொழிவாக காலை 10.55 மணிக்கு “வரலாற்றில் திரிபுவாதங்கள்” (Distortions in History) எனும் தலைப்பிலும் நண்பகல் 12.10 மணிக்கு இரண்டாவது பொழிவு நீதிக் கட்சியும் அதன் சாதனைகளும் (The Justice Party and its Achievements). எனும் தலைப்பிலும் வரலாற்று நூல்களிலிருந்து தகுந்த ஆதாரங்களைக் காட்டி சிந்தனையுரையினை நிகழ்த்தினோம். மாணவி த. தாட்சாயினி நன்றி கூறினார்.

இந்தியாவின் பிரதமராக 1991 முதல் 1996 வரை இருந்த பி.வி. நரசிம்மராவ், புதுடில்லியில் இதய தாக்கத்தின் காரணமாக டிச.23 அன்று மருத்துவமனையில் இயற்கை எய்தினார். செய்தி அறிந்து அதிர்ச்சியுற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

பி.வி.நரசிம்மராவ்

“நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது பொருளாதாரத்தில் தாராளமயக் கொள்கை எனும் சீர்திருத்தம் தொடங்கியது. அப்பொழுது டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார்.
அவர் பிரதமராக இருந்தபொழுது, சிறுபான்மையாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இருந்தது. இருப்பினும் அவர் அய்ந்தாண்டுகாலம் நிலையான ஆட்சி அளித்தவர். அவர் காலத்தில் சில சாதனைகளை நிறைவேற்றினார். அவர் இறப்பு நாட்டிற்கு பெரிய இழப்பு; அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டோம்.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக மதிப்பியல் பேராசிரியர், பிரபல பல் மருத்துவர் ஜே.ஜி. கண்ணப்பன்- வாசுகி ஆகியோருக்கான விழா மிகச் சிறப்பாக 26.12.2004 ஞாயிறு காலை 10 மணியளவில் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையிலுள்ள பிரீஸ் ஓட்டல் அரங்கில் தொடங்கியது. விழாவிற்கு டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் தலைமை வகித்தார். டாக்டர் கே.ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நாம் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன்- வாசுகி தம்பதியினருக்கு சால்வை அணிவித்து கழக நூல்களை அன்பளிப்பாக வழங்கினோம். நிறைவாக விழா நாயகர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினோம்.
சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றச் செயலாளரும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழக துணைச் செயலாளரும் இலக்கிய ஆர்வலருமான மயிலாடுதுறை வட்டம் வடகரை அறங்கக்குடி எம். இலியாஸ் மைத்துனர் (ஏ. சேக்தாவூத் மகன்) எஸ். முகமது ரஃபிக்கும்- அறங்கக்குடி ஹாஜி எம்.முகமது யாகூப் மகள் எம். ரீமா பர்வீனுக்கும் 27.12.2004 அன்று காலையில் வடகரை, அறங்கக்குடி ஏ.எஸ்.டி. மகால் அன்று இல்லத்தில் திருமணம் நடந்தது.

டிசம்பர் 29 அன்று இரவு 8.50 மணிக்கு வடகரை அறங்கக்குடி பள்ளிவாசல் தெருவிலுள்ள மணமகன் இல்லத்திற்குச் சென்று மணமக்கள் எஸ்.முகமது ரஃபி -எம். ரீமா பர்வீன் ஆகியோரை வாழ்த்தி பரிசினை வழங்கினோம்.

எஸ்.முகமது ரஃபி -எம். ரீமா பர்வீன் ஆகியோரை வாழ்த்தி பரிசினை வழங்கினோம்.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ரஷிய கலாச்சாரமய்ய அரங்கில் 30.12.2004 அன்று காலை 10 மணிக்கு அண்ணாவின் அமைச்சரவையில் உணவு மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவரும் திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான கே.ஏ. மதியழகன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கே.ஏ. மதியழகனின் மகன் உதயசூரியன் நினைவுரை ஆற்றினார். டாக்டர் கே.எம். செல்வராஜ் தொகுத்து எழுதிய “மாமனிதர் மதியழகன்” எனும் வாழ்க்கை வரலாற்று நூலினை நாம் வெளியிட திராவிடர் இயக்க மூத்தத் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதநேய நண்பர்கள் குழுவின் தலைவருமான இரா. செழியன், வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதனும் பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி சு.இரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ச. மோகன், மேனாள் அமைச்சர்கள் பண்ருட்டி, ச. இராமச்சந்திரன், க. இராசாராம், வி.வி. சாமிநாதன், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அண்ணா இலக்கியக் கழகத் தலைவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் மற்றும் பல்துறை அறிஞர்கள் புகழுரையாற்றினர்.

மாமனிதர் மதியழகன் புத்தக வெளியீட்டு விழா

உலக வரலாற்றில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஒரு பெரிய கருப்பு நாள். கடலுக்குள் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப் பேரலை காரணமாக பல லட்சக்கணக்கானோர் மாண்டனர்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வீடுகளும் மீன்பிடி படகுகளும் அழிந்தன.

சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைப்பு நிதியாக திராவிடர் கழகம் மற்றும் பெரியார் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 2 லட்சம் வழங்குவதாக தமிழர் தலைவர் அறிவித்தார்.

27.12.2004 அன்று பிரதமர் நிவாரண நிதிக்கும் அனுப்பப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பெரியார் கல்வி நிறுவனங்கள், விடுதலை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 731 ரூபாய் காசோலை மூலம் தலைமைச் செயலகத்தில் நிதித்துறைச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.
நமது பங்களிப்பாக சுனாமியால் தகவல் தொடர்பற்ற நிலையில் தவித்த அந்தமான் – நிக்கோபார் மக்களுக்காக 200 வானொலிக் கருவிகளை திராவிடர் கழகத்தின் சார்பில் நூறும், நன்கொடையாளர்கள் சார்பில் நூறும் ஆக மொத்தம் 200 டிரான்சிஸ்டர்களை வழங்கினோம். அவற்றை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர்கலி.பூங்குன்றன் அவர்கள் சென்னை வானொலி நிலைய இயக்குநர் சீனிவாச ராகவன் அவர்களிடம் அளித்தார்.

30.12.2004 அன்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களின் துயரத்தை அறிந்து தேவையான உதவிகளைச் செய்தோம். பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் மருத்துவ முகாம்கள் மற்றும் மீட்புப் பணிகளையும் மேற்கொண்டோம்.

தி.மு.க. மேனாள் சட்டத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் சீரிய பகுத்தறிவாளருமான ஆலடி அருணா, 31.12.2004 அன்று படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டது. 2.1.2005 காலை 8.30 மணியளவில் அவரது இல்லம் சென்று உடல்மீது மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். ஆலடி அருணா துணைவியார் கமலா அம்மாள் மகன்கள் மதிவாணன், தமிழ்வாணன், மகன்கள் அமுதவாணன், அன்புவாணன், எழில்வாணன், மகள் பூங்கோதை ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் (Periyar international Centre) தலைவர் டாக்டர் சோம .இளங்கோவன் (சிகாகோ, அமெரிக்கா), டாக்டர் சரோஜா இளங்கோவன், செயலாளர் முனைவர் பொறியாளர் இலக்குவன் தமிழ் (இலினாய்ஸ், அமெரிக்கா) ஆகியோருக்குப் பாராட்டு விழா மனித நேய நண்பர்கள் குழுவின் சார்பில் சென்னை அண்ணாசாலை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் 2.1.2005 ஞாயிறு மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

பாராட்டு விழாவுக்கு நிதி அறிஞர் ச. இராசரத்தினம் தலைமை வகித்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் பேராசிரியர் ஞான. அய்யாசாமி, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் ஏ. இராசசேகரன், பேராசிரியர் மு. தவமணி, தஞ்சை வழக்குரைஞர் இராமமூர்த்தி, பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, மனிதநேய நண்பர்கள் குழுவின் தலைவர் இரா. செழியன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
நாம் உரையாற்றுகையில்,

இது ஒரு குடும்ப விழா- உலகளாவிய குடும்ப விழா! இவர்களைப் பாராட்ட எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், நான் இங்கு பாராட்ட வரவில்லை. நன்றி கூற வந்திருக்கிறேன்.

நானும், என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். என் குடும்பம் என்று சொல்லும்பொழுது இயக்கக் குடும்பத்தையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். நான் இவ்வளவுகாலம் உயிர் வாழ்வதற்குக் காரணமாக இருக்கக் கூடியவர் நண்பர் டாக்டர் இளங்கோவன் ஆவார்கள். எனது அறுவைச் சிகிச்சைக்கும் மருத்துவ உதவிகளுக்கும் மிக முக்கிய காரணமாக இருந்தவர் அவர்தான்.

அதேபோல, பொறியாளர் டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் நான் எவ்வளவோ தடுத்தும் என் பெயரால் “சமூகநீதி விருது” ஒன்றை அறிவித்து ஆண்டுதோறும் சமூகநீதிக்காகப் பாடுபடும் ஒருவரைத் தேர்வு செய்து விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் நிதியையும் வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அத்தனை பேருக்கும் விருந்தினர் மாளிகையே டாக்டர் இளங்கோவன் வீடுதான்.

டாக்டர் சோம.இளங்கோவன் பாராட்டப்படுகிறார். நல்ல சாதனைகளைச் செய்கிறார் என்றால் அதற்கு உற்ற துணையாக இருக்கக் கூடியவர் அவரின் இணையர் டாக்டர் சரோஜா ஆவார்கள். அவர் ஏராளமாகப் படிக்கக் கூடியவர். பிள்ளைகளை ஆளாக்குவது, வருபவர்களை உபசரிப்பது இவற்றில் எல்லாம் ஒரு நல் ஆசானாக இருக்கக்கூடியவர். டாக்டர் இளங்கோவன் ஓர் அஷ்டாவதானி. அதற்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் படைத்தவர் டாக்டர் சரோஜா ஆவார்கள்.
இதற்கு முன் இல்லறத்தில் திளைத்த இவர்கள், இப்பொழுது தொண்டறத்தில் திளைத்துக் கொண்டுள்ளனர்.

பொறியாளர் டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் அமெரிக்க அரசு பாதுகாப்புத்துறைக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்தவர்- அந்தப் பணியிலும் இருந்திருக்கிறார். இவர்களைப் பாராட்டுவது நமக்கு மகிழ்ச்சி தருவதாகும்” என்று குறிப்பிட்டோம்.

( நினைவுகள் நீளும் …)