தந்தை பெரியார்
“நமது கேடுகளுக்கு எல்லாம் காரணம் மூடநம்பிக்கைகளும் முயற்சியின்மையுமே ஆகும். இதைப் போக்க ஒரே மருந்து மக்களை பகுத்தறிவாளர்களாக்குவதே. பகுத்தறிவைப் பரப்ப துணிவும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறனும் வேண்டும். எதிர்நீச்சல் பணி இது! எதிலும் பற்றற்றவராகவும், தன்னலமற்றவராகவும், உண்மையாளராகவும் நடந்து, இன்சொல்லால் கழகக் கொள்கைகளை விளக்கி மக்களை ஈர்க்க வேண்டும்.
கழக நூல்களை நன்கு படித்தறிந்து சிந்தித்து- பிறருக்கும் படித்துக்காட்டி விளக்குங்கள்! அறிவுக்கு முதலிடம் அளித்து ஆராய்பவரே பகுத்தறிவுவாதியாக முடியும்; குற்றமற்ற நல்லோருடன் பழகி பிரச்சாரப்பணியை இடையறாது செய்யுங்கள்!”
தோழர்களே! தாய்மார்களே! கழகக் கொள்கைகளை விளக்கி நமது தொண்டினை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை கழகத்தோழர்களுக்கு விளக்கவே இங்கு கூடியிருக்கிறோம். நமது தோழர்கள் இதை நல்ல வண்ணம் பயன்டுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு நமது கொள்கைகளைப் பரப்புவார்கள் என்று நம்புகின்றேன். இன்றிருந்து இம்மாதம் முடிய திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கரூர், பெரம்பலூர், அரியலூர் முதலிய இடங்களில் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் அமைத்துக் கொள்கை விளக்கம் செய்ய இருக்கிறோம்.
நம் கழகக் கொள்கையினை முதலில் அறிந்து கொள்வது அவசியம். நம் கொள்கை என்னவென்றால் மூடநம்பிக்கை உள்ள மக்களை பகுத்தறிவுவாதிகளாக்க வேண்டும். நாம் கடவுள்துறை, மதத்துறைகளில் காட்டுமிராண்டிகளாக இருந்து வருகிறோம். காரணம், நாம் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்காததுதானாகும். நமக்குள்ள கேடுகள் அனைத்திற்கும் ஒரே மருந்து- சர்வநோய்களுக்கும் ஒரே மருந்து- சஞ்சீவி போன்ற பகுத்தறிவுதான்: அறிவைப் பயன்படுத்துவதுதானாகும்.
பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பதை ஒப்புக்கொள்ளவும், அதை மக்களிடம் பிரச்சாரம் மூலம் பரப்பவும் தைரியம் வேண்டும்.
ஒரு பகுத்தறிவுவாதிக்கு எல்லா காரியங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, பகுத்தறிவுப்படி நாட்டைச் சீர்திருத்தி, பலன்பெற வேண்டுமானால் விஷயாதிகளில் எந்தவித பற்றுமிருக்கக்கூடாது. பகுத்தறிவுவாதிக்கு கடவுள் நம்பிக்கை, கடவுள் பற்றிருக்குமானால் அவனால் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கவோ அறியவோ முடியாது. அவனது நம்பிக்கை அவனை வழுவச் செய்துவிடும்.
மதநம்பிக்கை கொண்ட எவனும் பகுத்தறிவுவாதியாக முடியாது. ஜாதி, மதம், கடவுள் சாத்திரம் இவைகளில் எதில் பற்றிருந்தாலும் அவன் பகுத்தறிவுவாதியாக இயலாது. தனது அறிவுக்கு முதலிடம் கொடுத்து அதன்படி ஆராய்ந்து நடப்பவன்தான் பகுத்தறிவுவாதி ஆக முடியும்.
முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் பகுத்தறிவைப் பயன்படுத்தியதால்தான் சமுதாயத்துறை, விஞ்ஞானத்துறை, அறிவுத்துறை முதலிய எல்லாவற்றிலும் முன்னேறியுள்ளனர். பின்னடைந்த நாடுகளிலுள்ள மக்கள் பகுத்தறிவுக்கு முதன்மை கொடுக்காத காரணத்தால்தான் சகலதுறைகளிலும் பின்னடைந்துள்ளனர்.
திராவிடர் கழகத்தினருக்கு முதன்மையாகக் கடவுள் நம்பிக்கை கூடாது. அதுபோல்தான் ஜாதி, மதம், சாத்திரம், பழக்க வழக்கம், பெரியவர்கள் சொன்னது என்பதெல்லாம் அவனவன் அறிவுக்கு வசதிக்குத் தக்கபடி கற்பித்துக்கொண்டவையே கடவுள், மதம் என்பதெல்லாமாகும். இவை நாட்டுக்கு நாடு மாறுபட்டே காணப்படுகின்றன. இதில் உண்மையிருக்குமானால் சூரியன் இருக்கிறது. அது எங்கும் ஒரே தன்மையாகத்தான் இருக்கிறது .அதில் ஒன்றும் மாறுபாடு, விவகாரம் கிடையாது. எல்லா நாட்டுக்கும் எல்லா மதத்திற்கும் ஒரே தன்மையானதேயாகும்.
உண்மையில்லாததில்தான் விவகாரம்; மாறுபாடு இருக்கின்றன.
உண்மைக்கும் உண்மையில்லாததற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய தொண்டு பொதுத் தொண்டு. நம்முடைய தொண்டிலிருந்து நாம் ஒரு பயனையும் எதிர்பார்ப்பதில்லை. உலகத்திலேயே நாம்தான் நம் தொண்டின் மூலம் எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கிறோம். அதனால்தான் நம்மால் பகுத்தறிவுவாதியாக இருக்க முடிகிறது.
நாம் சிந்திக்க, அதன்படி நடக்க, அதை மக்களிடம் பரப்ப துணிவுடன் முன்வரவேண்டும். இதை வளர்க்கவே இந்தப் பயிற்சி முகாமாகும். இதன் பொருட்டு இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மனமார வரவேற்பதோடு நீங்கள் அனைவரும் நான் சொல்லும் கருத்துகளைக் கவனமாகக் கேட்டு, அவைகளை உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து, உங்களுக்குச் சரியென்று பட்டவைகளை மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும் என்பதே எனது ஆசையாகும்.
நம் தொண்டு நாட்டு மக்களை பகுத்தறிவுவாதிகளாகத் திருத்த வேண்டும், பகுத்தறிவைப் பரப்ப வேண்டும் என்பதாகும். நமக்கு எதிரிகளாக உள்ளவர்களுக்கு நாட்டில் பல வசதிகள் இருக்கின்றன. அவர்களுக்கு மூடநம்பிக்கையை வளர்க்க கோயில்கள், உற்சவங்கள், கதாகாலட்சேபங்கள் இவைகள் துணையாக இருப்பதோடு, இதற்கு ஆதாரங்களாக பல புராணங்கள், இதிகாசங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நாட்டிலுள்ள பத்திரிகைகளில் 100ல் 99 ஆதரவாக இருக்கின்றன. நமக்கு உள்ளது ஒரே பத்திரிகைதான். அதையும் நம் தோழர்களே சரியாகப் படிப்பதில்லை. நம் கழகக் கொள்கை விளக்கப் புத்தகங்களை மக்களிடம் பரப்பவேண்டும்.
நாம் எதிர்நீச்சல்காரர்களாக இருக்கிறோம். நாம் சிறிது ஓய்ந்தாலும் நம் கருத்து மிக மிக பின்னோக்கிச் சென்றுவிடும். நம் தோழர்கள் தங்களிடம் மற்றவர்கள் குறை காண முடியாத அளவிற்கு நடந்து கொள்வதோடு, இதனால் பிழைக்கிறோம்- வயிறு வளர்க்கிறோம் என்று கருதாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
எதிர்கட்சிக்காரர்களில் 1000இல் 999 பேர்கள் அயோக்கியர்களேயாவர். அவர்கள் அதன்மூலம் செல்வாக்கடைந்து வயிறு வளர்க்கின்றனர் என்றாலும் மக்கள் அதைக் கருதுவதில்லை. யாரோ செய்துவைத்த பிரச்சாரத்தால் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாம் அப்படியல்ல, ஒரு சிறு குறைகூட மற்றவர்கள் சொல்லமுடியாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத் தொண்டாற்றுகிறவர்கள் தனது நேரத்தைப் பாழாக்கிக்கொண்டு தொண்டாற்றுகிறான். எந்த லாபத்தையும் கருதாமல் தொண்டாற்றுகிறான், தன் பொருளைச் செலவு செய்து தொண்டாற்றுகிறான், என்று பொதுமக்கள் கருதும் வண்ணம் தொண்டாற்ற வேண்டும் என்பதோடு, நம் கழகத்தோழர்கள் உண்மையாகத் தொண்டாற்றவேண்டும்.
நாட்டில் நம் கழகத்திற்குச் செல்வாக்கிருக்கிற தென்றால் அது நாம் எந்த சுயநலத்தையும் லாபத்தையும் கருதாமல் தொண்டாற்றுவதாலும் நாம் எவரிடத்திலும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் எங்கு சென்றாலும் நம் கொள்கைகளை வலியுறுத்துவதாலுமேயாகும்.
நாம் சொல்வது உண்மை. மனதில் பட்டதை மறைவில்லாமல் கூறுவதால்தான் நாம் நிமிர்ந்து நிற்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் துணிவாகக் கண்டிக்கிறோம். அவர்களும் நமக்கு அஞ்சுகின்றனர். நமது கொள்கை தீவிரமாக இருப்பதாலும், மக்கள் கருதி வருவதற்கு மாறுபாடாக இருப்பதாலும் நாம் மிக ஜாக்கிரதையாக இருந்து தொண்டாற்ற வேண்டும்.
பொது மக்களுக்குக் கோபம் வராத வகையில் அவர்களின் மூடநம்பிக்கையையும் அவர்களை மற்றவர்கள் தங்களின் லாபத்திற்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்து விளக்கவேண்டும். நான் தீவிரப் பிரச்சாரம் செய்கிறேனென்றால் நான் பல காலமாய் இதைப்பற்றிப் பிரச்சாரம் செய்து வருவதோடு, வயதானவன் என்ற காரணத்தால் மக்கள் என்மேல் ஆத்திரப்படுவதில்லை. ஏதோ பேசுகிறான் என்று எண்ணிச்சென்றுவிடுவர். சிந்திப்பவர்கள் நான் ஆத்திரப்படுவதன் காரணத்தை உணர்ந்து கொள்வர்.
நம் தோழர்கள் தவறாது ‘விடுதலை’ படிக்கவேண்டும். கழகக் கொள்கைகளை விளக்கியும் மூடநம்பிக்கைக் கருத்துகளையும் புராண ஆபாசங்கள் சாத்திரக்கேடுகள் முதலியனவற்றை விளக்கியும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
அவைகளை நம் தோழர்கள் படிப்பதோடு பொது மக்களிடம் இவைகளை விளக்கி அவர்களின் மூடநம்பிக்கையை அகற்ற முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோல் நம் மதம், சாத்திரம், புராணம் இவைகளைத் தாக்கி கிறிஸ்தவர்கள் முகமதியர்கள் எழுதிய புத்தகங்கள் யாவும் பயனற்றுப்போனதோடு அவர்களும் தற்போது அந்த முயற்சியினைக் கைவிட்டுவிட்டனர். நாம் தான் தொடர்ந்து இவைகளை மக்களிடம் விளக்கி வருகிறோமென்றால் அது மக்கள் நம்மிடம் வைத்துள்ள மரியாதையின் காரணமேயாகும்.
நாம் குற்றமில்லாதவர்களாக நடந்துகொள்வதோடு குற்றமுள்ளவர்களுடன் பழகாமலும் இருக்கவேண்டும்.
(18.6.1965 அன்று லால்குடி அருகில் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தந்தை பெரியார் ‘பகுத்தறிவு’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை.)