நூல் குறிப்பு :
நூல் பெயர் : மானம் மானுடம் பெரியார்
ஆசிரியர் : சு. அறிவுக்கரசு
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்
பக்கங்கள் : 440
விலை : ரூ.300/-
பெரியார்! 20ஆம் நூற்றாண்டின் சமூக வரலாற்றின் செம்பகுதியைச் சீர்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்! மூன்றாண்டுகள் மட்டுமே பள்ளிக்குச் சென்று படித்தவர். அறிவியலோ, வரலாறோ, கணிதமோ, சமூக அறிவியலோ, பொருளாதாரமோ படித்தவர் அல்லர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அந்தக் காலத்தில் இவையெல்லாம் ஏது? அவர் கற்றுக்கொண்டதெல்லாம் தமிழில் எழுதவும் படிக்கவும் மட்டுமே! அவர் நூற்றுக்கு நூறு அனுபவ அறிவும் சுயசிந்தனையும் சார்ந்து தம் அறிவை வளர்த்துக்கொண்டு அதன்படி செயல்பட்டவர். பெருவணிகக் குடும்பத்தில் பிறந்து வணிகத்தில் ஈடுபட்டவர். மண்டிக் கடைக்கு வந்துபோகும் பெரியவர்கள், பண்டிதர்கள், மதப்பிரச்சாரகர்கள் (சைவ, வைணவர்கள்)ஆகியோரிடம் பேசி, வாதம் செய்து தம் பட்டறிவைப் பெருக்கிக் கொண்டவர்.
தாம் பிறந்த ஊர் ஈரோட்டின் நகர்மன்றத் தலைவராக இருந்து நிருவாகத் திறமை பெற்றவர், ஏறத்தாழ 29 பொதுநலப் பதவிகளை வகித்துச் சிறப்புச் சேர்த்தவர். அனைத்தையும் ஒரே நாளில் விட்டு விலகி இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்தவர். சமூக விடுதலை இல்லாமல் வெறும் அரசியல் விடுதலை மட்டுமே பலன் தராது என்கிற கொள்கை கொண்டவர். அந்த நாள்களில் புனிதமாகக் கருதப்பட்ட பலவற்றையும் எள்ளி நகையாடியவர். சிவனிய, மாலியச் சமயக் கொள்கைகளைத் தம் பகுத்தறிவால் ஆய்ந்து எதிர்த்தவர். மறுத்தவர். சமூகத்தில் நிலவிவந்த வருணாசிரமப் பாகுபாட்டை எதிர்த்தவர். அதன் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ஜாதி எனும் நிலையை ஏற்க மறுத்தவர். சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று பிரிவினை செய்து பிரமனே படைத்தான் என்று கூறப்பட்டபோது பிரமனை எதிர்த்தவர். கடவுள் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தவர்.
சூத்திரர் என்போரில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தார். தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பாகுபாடுகள் வகுக்கப்பட்டு அவர்களுக்கான சமூகநீதி, சமவாய்ப்பு, சமஉரிமை போன்றவை மறுக்கப்பட்டதைக் கண்டு கொதித்து எழுந்தவர். இந்தப் பாகுபாடுகள் பகவத் கீதையின் படியும் மனுநீதி நூலின்படியும் இராமாயண காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி மறுப்பு கூறியபோது அவற்றை ஏற்க மறுத்தவர். அந்நூல்கள் மானுட தர்மத்திற்கு விரோதமானவை என்றவர். அவற்றைக் கொளுத்த வேண்டும் என்றே பகிரங்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த மாநாடுகளில் முழக்கமிட்டவர்.
முன்னோர்கள் பின்பற்றியது என்பதாலோ, நூற்றாண்டுகளாகப் பழக்கத்தில் இருந்து வருவது என்பதாலோ சமூக சமத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பனவாகிய தத்துவங்களுக்கு எதிரானவை என்பதால் அவை அனைத்தையும் மறுப்பதும் நீக்குவதும் பகுத்தறிவுள்ள எல்லா மக்களின் கடமையாகும் என்றவர். இத்தகைய மறுப்புகள் மனதால், சொல்லால், செயலால் இருக்க வேண்டும் என்றவர். அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற்றவராக மனிதர்களை மாற்ற வேண்டும் என்றவர். மனிதர்க்கு இயல்பாக இருக்கும் பகுத்தறிவு இதுதான் என்றவர். அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள் என்றவர்.
சமூக சமத்துவம், சம உரிமை, சம வாய்ப்பு என்பவற்றிற்காகக் குரல் எழுப்பியவர். அப்போது அவர் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குறுக்குசால் ஓட்டினர்: “உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்களில்லாமல் சமத்துவக் கொள்கை வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு ஸ்வராஜ்ய ஸ்தாபனமே சரியான உபாயம். ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபைகளில் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாதலால் அந்தச் சபைகளின் மூலமாக இந்தியாவில் முதலாவது ராஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கையை நிறுத்திவிடலாம். பிறகு சமூக வாழ்விலும் அக்கொள்கை தானே பரவிவிடும்” என்றனர். (பாரதியார் கட்டுரைத் தொகுப்பு- பகுதி 4 – பக்கம் 119-121) காங்கிரஸ் மாநாட்டுக்கு 1885இல் சென்னையிலிருந்து சென்ற ஆறுபேரில் அய்ந்து பேர் பார்ப்பனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய காங்கிரசு உறுப்பினர்கள் 15 பேர்களில் 14 பேர் பார்ப்பனர். இந்திய நிருவாகக் குழுவில் இந்திய அதிகாரிகளாக இடம்பெற்ற 9 பேர்களில் 8 பேர் பார்ப்பனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒருவரைத் தவிர மீதி அத்தனைப்பேரும் பார்ப்பனர்களே! “எல்லா ஜாதி மேதாவிகளும் இடம் பெறுவர்” என்றாரே, வரகவி பாரதி! நடந்ததா? இத்தகைய பார்ப்பன ஆதிக்கம் நிலவிய (1912) காலத்தில் 1917இல் தேசியக்கவி இப்படி எழுதினார். இதையெல்லாம் கண்டு கண்டு, சமூக விடுதலைக்கான குரல்கள் காங்கிரஸ் இயக்கத்தில் ஒடுக்கப்படுகின்றன என்றவர் பெரியார். பார்ப்பன மேல் ஜாதியினரின் நலன்களை மட்டுமே கருதிக்கொண்டு, ஏனைய ஜாதியினரைப் புறந்தள்ளுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியவர் பெரியார்.
முரண்பாடுகள் முன்னேற்றத்திற்கோ, மாற்றங்களுக்கோ தடையாக இருந்தால் அவற்றைக் கணக்கில் கொண்டு களையும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே முரண்பாடாக இருப்பதாக காங்கிரஸ் இயக்கத்தினர் கருதினர். பெரியாரோ, நூற்றாண்டுகளாக சமுதாய ஏகாதிபத்தியமாகத் திகழும் நிலையையே முக்கிய முரண்பாடாகக் கருதிச் செயல்பட்டவர். வருணாசிரம தருமம் என்கிற பெயரில் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்த சடங்கியல் தலைமையிடம் தகர்க்கப்பட வேண்டும் என்றவர் பெரியார். வருணாசிரம தருமத்திற்கு 1921இல் அக்டோபர் 6ஆம் நாளிட்ட ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தியார் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அவரோடு முரண்பட்டவர் பெரியார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற குரல் தமிழறிஞர்களால் எழுப்பப்பட்டது. “தமிழ் மொழிக்கென பல்கலைக்கழகம் அமைவது குறுகிய பார்வை” என்று ‘தி இந்து’ பத்திரிகை எழுதியது. அந்த நிலையில் இந்தியாவின் பொதுமொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று எழுதினார் காந்தியார். அதனை எதிர்த்து எழுதியவர் பெரியார். 1938இல் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடந்தது. சிறைப்பட்டவர் பெரியார். அதற்கு
12 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியை எதிர்த்து உரத்த குரல் எழுப்பியவர் பெரியார்.
“ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி”
என்று கேட்டவர்கள் தேசிய இயக்கத்தினர். “ஜாதியை மேல் என்றும் கீழ் என்றும் நாட்டிவிட்டு/பாரதத்தாய் பெற்ற புத்திரர் என்று தினம்பல்லவி பாடிப் பயன் எதுவோ?” என்று பாடியவர் தேசிக விநாயகம் பிள்ளை. முன்னவர் அய்யர். பின்னர் பிள்ளை. முரணுக்கு இதுவே காரணமாக இருக்கலாம். இருவருமே தேசிய இயக்கத்தினரே! ஜாதியை அறவே ஒழிக்க வேண்டும் என்றவர் பெரியார். ஜாதியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தியவர் பெரியார். அதற்காக 3000 தோழர்கள் வரை சிறைக்குள் அடைக்கப்பட்டு 16 பேர் உயிரை இழந்த தியாக வரலாற்றை உருவாக்கியவர் பெரியார்!
தமிழ்நாடு தவிர வேறு எல்லா மாநிலத்தாரும் தம் ஜாதிப் பெயர்களைத் தம் பெயருடன் சேர்த்தே வைத்துள்ளனர். பி.வி. நரசிம்மராவ், மொரார்ஜி தேசாய், தேவகவுடா என்று இந்தியப் பிரதமர்கள். ஜெயில்சிங், பிரணாப் முகர்ஜி என்று குடியரசுத் தலைவர்கள். பூபேஷ் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் என்ற பொது உடைமை அரசியல் தலைவர்கள்!
இந்த நிலை தமிழகத்தில் இல்லை. பொது உடைமையாளர்கள் கூடத் தமிழ்நாட்டில்தான் ஜாதிப் பின்னொட்டு இல்லாமல் உள்ளனர்! இந்த நிலைக்குக் காரணமானவர் பெரியார். பிற மதங்களில் கூட நிலவும் ஜாதிப் பிரிவுகளைக் கண்டித்து இயக்கம் நடத்தியவர் பெரியார். தாழ்த்தப்பட்ட கிறித்துவர்கள் மாநாடு ஒன்றினை 1925இல் திருச்சி மாவட்டம் லால்குடியில் நடத்தியவர் பெரியார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் போராசிரியர்கள் (வெள்ளாள, பார்ப்பனர்கள்) எதிர்ப்பு, தடை முயற்சிகளை மீறி மாநாடு நடத்திட பக்கபலமாக இருந்தவர் பெரியார்.
வர்க்கச் சமன்பாடு ஏற்பட்டுவிட்டால் வருணச் சமன்பாடு வந்துவிடும் என்ற மாயையால் ஆட்கொள்ளப்பட்ட பொது உடைமையாளர்கள் வர்க்கம் பற்றியே பேசினார்கள். சமத்துவமும் சகோதரத்துவமும் அமைந்தால்தான் சுதந்திரம் என்பதன் முழுப்பலனையும் மானுட சமுதாயம் பெற முடியும் என்பதைச் சிந்திக்க மறந்தனர். விளைவு – இந்தியா சுதந்திர தேசமானது என்றாலும் தீண்டாமை தேசமாகவே இருக்கிறது. 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் தமிழ்நாட்டிலேயே நிலவுகின்றனவாம். ஆய்வு நடத்தப்பட்ட 12 மாவட்டங்களில் மட்டும் 213 கிராமங்களில் தீண்டாமை நீடிக்கிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் தமிழ்நாட்டின் நான்கு பக்கங்களிலும் உள்ளவை இந்தக் கிராமங்கள். 142 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயிர் வெட்டக்கூடாது என்கிற கட்டுப்பாடு. 13 கிராமங்களில் தனித்தனி கத்தரி, சீப்பு, கத்தி போன்றவை வைக்கப்பட்டுள்ளன. தனிக்கிணறு, தனிக்கோயில், தனிப்பள்ளிக்கூடம் போல! 25 கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் தரையில் அமர்ந்துதான் மயிர்வெட்டிக் கொள்ள முடியும்.
அரசாங்கமே தீண்டாமை 384 கிராமங்களில் நிலவுவதாக 2009இல் கூறியது. மறு ஆண்டில் 174 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை இருப்பதாகக் கூறுகிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டது என இந்திய அரசமைப்புச் சட்டம் 17ஆம் பிரிவு கூறுகிறது. தீண்டாமை இருக்கும் கிராமம் அமைந்துள்ள மாவட்ட கலெக்டரும் காவல் கண்காணிப்பாளரும் சஸ்பென்ட் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் ஒன்றும் பயனில்லை.
வர்க்கத்திற்கும் வருணத்திற்குமான உறவை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டவர் பெரியார். வர்க்க பேதத்தைவிட வருணபேதம் கடுமையானது, கொடுமையானது எனக் கண்டவர் பெரியார். கீழவெண்மணியில் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது நில உடைமை வர்க்கப் பண்ணையாரால்! விவசாயக் கூலிகள் என்பதால் மட்டுமா அவர்கள் கொளுத்தப்பட்டார்கள்? அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள்- தீண்டத்தகாதவர்கள் அதனாலேயே கொளுத்தப்பட்டார்கள். வர்க்கத்தைக் கணக்கில் எடுத்தவர்கள் வருணத்தை (ஜாதியை) கணக்கில் கொள்ளாதுதான் சறுக்கல். இன்னமும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று முன்னணி வைத்துள்ளவர்கள், ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசவே மாட்டார்கள். பணவசதி, நிலவசதி போன்றவை பெற்றிருக்கிற காரணத்தால் வசதியற்றவர்களை ஒடுக்கும் நிலையை எதிர்ப்பது வர்க்க உணர்வு. இதே மாதிரியான ஒடுக்குமுறையை வர்ணத்தின் பெயரால் கையாள்வதை எதிர்ப்பது பெரியாரின் உணர்வு. பூர்ஷ்வா என்போரும் பார்ப்பனர் என்போரும் ஒடுக்கு முறையைக் கைக்கொள்வதில் ஒன்றே! இதை விளக்கியவர் பெரியார்.
புத்தகங்களைப் படித்து எதையும் கற்றுக் கொண்டவர் அல்லர் பெரியார். நிகழ்வுகளைப் பார்த்துப் பகுத்தறிந்து பாடம் கற்றுக்கொண்டவர் பெரியார். அவர் கற்றதைப் பரப்பினார். கையாண்டார். மக்களைச் சிந்திக்கச் சொன்னார். மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
1944 டிசம்பரில் நடந்த அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பேசியபோது “ஜாதியின் ஆணிவேர் இந்துமதம், இந்துமத சாத்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவை. ஆகவே ஜாதி ஒழிய வேண்டுமானால், ஜாதிக்கு ஆதாரமான இந்து மதம், இந்து மதக் கடவுள்கள், இந்துமத சாத்திரவேத இதிகாசப் புராணங்கள், இந்துமதப் பழக்கவழக்கங்கள் ஒழிய வேண்டும்” என்றவர் பெரியார். இராமாயணக் கதையின் தன்மையை விளக்கி, வால்மீகி இராமாயணத்தின் கதையை விளக்கி, வடநாட்டில் கான்பூர், ஜான்சி, லக்னோ, தில்லை, பம்பாய், அலிகார் முதலிய ஊர்களில் அறிவுப் பரப்புரை செய்தவர் பெரியார். உணர்ச்சிப் பிழம்பான வடபுலத்து மக்கள் இராவணாகி ஜே! சம்புகிகி ஜே! ராமா நாஸ்தி! சீதே நாஸ்தி என்று முழக்கம் செய்தனர். 1958இல் லக்னோ பல்கலைக்கழகத்தில் ராமாயணம் பற்றிப் பெரியார் பேசியது கேட்ட “சரிகா” எனும் ஏட்டின் ஆசிரியர் “ராமாயண கதாபாத்திரங்கள்” என்ற பெரியாரின் நூலை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். “சச்சிராமாயண்” என்ற நூல் வெளிவந்ததும் படித்த உத்தரப்பிரதேச அரசு அதனைத் தடை செய்தது. நூலின் பதிப்பாளர் வழக்கு மன்றம் சென்றார். தடை விதித்தது செல்லாது என அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை ஏற்காத அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் தடை போட்டது செல்லாது எனத் தீர்ப்பு. ஆக பெரியாரின் கருத்துகள் சரியானவை என இந்திய உச்சநீதிமன்றமே சான்றிதழ் வழங்கியுள்ளது. என்றால் இலக்கியத்தை ஆய்வு செய்வதில் சிறந்தவர் பெரியார்.
ராமாயணக் கதையின் நாயகன் ‘ராமன்’ கடவுளாக்கப்பட்டு வணங்கப்படும் நிலை. 24.1.1971இல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் தொடர்பாக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பங்கேற்றவர் பெரியார். அவருக்குக் கருப்புக் கொடி காட்டப்போகிறோம் என்று வந்த ஜனசங் கட்சியினர் (இப்போதைய பாரதிய ஜனதாக் கட்சி) செருப்பை எடுத்து வீசிக் லித்தனம் செய்தனர். பெரியாரின் தொண்டர்கள் அதே செருப்பால் ஊர்வலத்தில் இடம் பெற்றிருந்த ராமன் படத்தை அடித்தனர். இச்சம்பவம் அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இடம் பெற்று ராமன் யோக்கியதை பங்கப்பட்டது. இந்நிலையை உருவாக்கியவர் பெரியார்.
1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி 1914 வரை பிரிட்டிஷ் அரசர்க்கு விசுவாசம் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல் தீர்மானமாக நிறைவேற்றி வந்தது. அதுபோலவே கடவுள் வாழ்த்து என்பது எல்லா நிகழ்ச்சிகளிலும் கட்டாயமாக இருந்தது. எந்தப் பொதுக்கூட்டத்திலும் தொடக்கத்திலாவது முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவை செய்யும் செயலை விட்டுவிட வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் பெரியார்.
“வளர்பார்தனிலே யாரும்/பகவான் பெற்ற பேரே எனில்/பகைமையொடு பாகுபாட்டைப் படைத்தவர் யாரே?/கோடானு கோடி உயிர்க்கொரு தந்தை என்றாலே/சிலர் கோட்டையில் பலர் குடிசையில் குடியிருப்பாதெதாலோ?/இது யார் செயல்/விதியா? வினையா? அறிந்து சொல்வீரே!” என்று கடவுள் எழுதிய எழுத்து எனம் தலைவிதித் தத்துவத்தைக் கண்டனம் செய்யும் அறிவுத் துணிச்சலைத் தந்தவர் பெரியார்.
நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை கிடைக்குமா? பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? இவை ஒரு வேளை நடந்துவிட்டாலும் கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்று ஆணாக இருந்தும் பெண் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர் பெரியார். மணவிலக்கு பெறும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று புரட்சிகரத் தீர்மானம் போட்டவர் பெரியார்.
பார்ப்பனர்களின் மனுசாத்திரம் பைசாசம், ராட்சசம் போன்ற எட்டுவகை மணங்களைக் கூறும். பெண்ணை பண்டமாகக் கருதித் தானம் தரும் கருத்தில் கன்னிகாதானம், பண்டத்தைக் கைகழுவித் தந்துவிடல் எனும் கருத்தில் தாராமுகூர்த்தம், சிறு குழந்தையாக இருக்கும்போதே, தோளில் தூக்கிவைத்துத் திருமணம் செய்துவைக்கும் விவாஹம் போன்ற மணமுறைகளுக்கு மாற்றாக, ஆணும் பெண்ணும் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்தவர்களாக இணையும் வாழ்க்கைத் துணை நலம் எனும் முறையை 28.5.1928இல் அருப்புக்கோட்டை, சுக்கில நத்தம் எனும் ஊரில் நடத்தி வைத்தவர் பெரியார். இந்த வகையான திருமணங்கள் சட்டப்படி செல்லாதவை எனத் தீர்ப்பு 1953இல் வழங்கப்பட்டது. என்றாலும் பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற சமூகப் புரட்சியைச் செய்தவர் பெரியார்.
தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே 1921இல் நீதிக்கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு 1950இல் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி பறிக்கப்பட்ட நிலையில் 14.8.1950இல் மாபெரும் போராட்டம் நடத்தியவர் பெரியார். முதன்முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும்படி செய்தவர் பெரியார். இட ஒதுக்கீடுக்காகச் சட்டம் திருத்தப்பட்டு 18.6.1951இல் சென்னை அரசு இடஒதுக்கீடு செய்து ஆணை வழங்கக் காரணகர்த்தர் பெரியார்.
ஆயிரக்கணக்கில் பள்ளிகளை மூடியும் பாதி நேரம் படிப்பு மீதி நேரத்தில் குலத்தொழில் செய்தல் என்ற வகையில் புதிய குலக் கல்விக் கொள்கையை ராஜகோபாலாச்சாரியார் புகுத்தியதை 1953இல் எதிர்த்துப் போராடி ஒழித்துக் கட்டியவர் பெரியார்.
மலேயா, சிங்கப்பூர், எகிப்து, கிரீஸ், சோவியத் நாடு, ஜெர்மனி, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், இலங்கை, பர்மா (1954) முதலிய நாடுகளுக்கு 1929, 1931, 1932 ஆண்டுகளில் பயணம் செய்து பட்டறிவைப் பெருக்கிக் கொண்டவர் பெரியார். சோவியத் பிரதமர் காலினினுடன் மே தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பெருமை பெற்றவர் பெரியார். 13.12.1931இல் அய்ரோப்பிய பயணத்திற்கு முன்பே 1929ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கையை இந்திய மொழிகளில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டுப் பெருமை பெற்றவர் பெரியார். 1931 மே நாளைக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தவர் பெரியார். இரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தந்து பெரிதும் ஒத்துழைத்த சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பெரியார். பகத்சிங்கின் போராட்ட முறை அகிம்சைக்கு எதிரானது எனக் கூறி அவரை மறுதலித்தவர் காந்தியார். பகத்சிங்குக்காகப் பரிந்து பேசாமல் இருந்தார் காந்தியார். ஆனால், பகத்சிங் தூக்கில் போடப்பட்டபோது இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது தமது பலமான கருத்து என்றவர் பெரியார். பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்றவர் பெரியார்.
மனித உரிமைப் போர் என்றும் முதல் சத்யாக்கிரகம் என்றும் போற்றப்படும் வைக்கம் நகரின் தெருக்களில் தீண்டத்தகாதோர் எனப்பட்ட மக்கள் நடக்கும் உரிமைக்காகக் கேரளா சென்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் வீரர் பெரியார். காந்தியோ, நேருவோ, ராஜாஜியோ, பட்டேலோ மற்றவர்களோ பொது வாழ்க்கையில் ஈடுபட்டபோது அவர்தம் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமையல் செய்துகொண்டிருந்தனர். ஆனால் 1922இல் கள்ளுக்கடை மறியல், 1924இல் வைக்கம் போராட்டம் போன்றவற்றில் தாம் கலந்துகொண்டபோது தம் துணைவியார், சகோதரி போன்றவர்களையும் கலந்து கொள்ளச் செய்தவர் பெரியார்.
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் 1925இல் ஈடுபட்ட போது பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும்போதே முடிவு காணப்பட வேண்டும்; இல்லையேல் பார்ப்பனரின் கொடுங்கோன்மையான பிராமினோக்ரசிதான் டெமாக்ரசிக்குப் பதில் காணப்படும் என்றவர் பெரியார். இங்கிலீஷ் மொழிக்கு Brahminocracy என்ற புதிய சொல்லை உருவாக்கித் தந்தவர் பெரியார். ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் நிலையில் தமிழும் தமிழரும் மட்டுமே 1922 முதலே எதிர்க்கக் காரணமானவர் பெரியார். நேரடியாகச் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடியாத ஆரியப் பார்ப்பனர்கள் இந்தி மொழியைப் படிக்கச் செய்கிறார்கள் என்று இந்தியின் ரகசியத்தை அம்பலப்படுத்தியவர் பெரியார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டினார் என்பதற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்றவர் பெரியார். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தமிழ்நாட்டில்; இந்திக்கு இடம் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கக் காரணி பெரியார். இந்தியால் தமிழ் அழிக்கப்படாமல் இன்றளவும் படிப்பு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருப்பதற்கே காரணமானவர் பெரியார். அவருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு நாடுகளிலும் ஆட்சி மொழிகளிலும் இடம் பெற்றிடும் பெருமையைப் பெற்றவர் பெரியார்.
இன்றைய அறிவியல் யுகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்மொழி பயன்படவில்லை எனக் கண்டவர் பெரியார். “தமிழில் வானநூல் இல்லை. நில நூல் இல்லை. காற்று நூல் இல்லை. உடல் நூல் இல்லை. ஊர்திகள் நூல் இல்லை. பொதுவாக இயந்திர நூல்களே கிடையாது விவசாய நூலும் இல்லை. இன்றைய நிலைக்கு ஏற்ற வைத்திய நூலும் இல்லை. கல்வி முறைக்காவது ஏதாவது நூல் இருக்கின்றதா என்றால் அதுவும் கிடையாது. பிள்ளைப் பேற்றுக்கு நூல் இல்லை. பிள்ளை வளர்ப்பு நூல் இல்லை. உணவுக்கு நூல் இல்லை. உணவு சத்துக்கு நூல் இல்லை. இவற்றுக்கு ஏதாவது நூல்கள் இருக்கின்றன என்று வாதாடப்படுமானால் அவை பெரிதும் கொங்கணர், கோரக்கர், போகர், வள்ளுவர், அகத்தியர் முதலிய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மற்றும் சிவன், நந்தி என்கின்ற தெய்வங்கள் முதலியவர்களால் உண்டாக்கப்பட்டவை,சொல்லப்பட்டவை என்பதல்லாமல் வேறு ஆதாரங்கள் கிடையாது” என்று உண்மை நிலையை உரைத்தார். தமிழில் பக்தியைப் பரப்பிடும் நூல்கள் தவிர அறிவை வளர்த்திடும் நூல்கள் காணோமே எனக் கவலைப்பட்டவர் பெரியார்.
பலவகைகளிலும், நசுக்கப்பட்டு, ஒடுக்கப் பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டுப் புன்மைத் தேரைகளாய்ப் பொட்டுப் பூச்சிகளாய் ஆக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சாஸ்திரப்படியும் சட்டப்படியும் வகைப்படுத்தப்பட்டு வதைந்து வந்தனர். அவர்களுக்கு வாழ்வு அளித்திட இயக்கம் ஏதும் இல்லை. எல்லாமே அரசியல் இயக்கங்களாக இருந்தன. பதவிமோகம் பிடித்து அலைந்து கொண்டிருந்த நிலை. ஆதிக்கம் செலுத்துவோரைத் திருத்திடவும் அநீதி இழைப்போரை அழித்திடவும் தாழ்ந்து கிடப்போரைக் கைதூக்கி விடவும் எவரும் இல்லாத நிலை, எவரும் முன்வராத நிலை, பெரியார் முன் வந்தார் இப்பணி மிகவும் இடர்தரும் பணி என்றாலும் இதனைச் செய்திட எவரும் இல்லாத நிலையில் பெரியார் முன்வந்தார். சுயமரியாதை இயக்கம் கண்டார், 1925இல்! திராவிடர் கழகம் கண்டார், 1944இல்! l