என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

2024 கட்டுரைகள் பிப்ரவரி 16-29, 2024 மற்றவர்கள்

ஜனவரி 16-31 இதழ் தொடர்ச்சி…

ஆனால், நிலவு ஆண்டாண்டு காலமாக பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அய்ந்து நாளில் போனால்தான் போக முடியுமா? 50 நாளில் போனால் என்ன, அப்படி நம்மால் போக முடியுமா? என்று பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, பி.எஸ்.எல்.வி.யால் முடியும், என்பது எங்களுக்குத் தெளிவானது. அந்த முடிவான முடிவை வைத்துக்கொண்டு, நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? என்கிற பதிலுக்காக அதை நோக்கிப் போக நாங்கள் முயற்சி செய்தோம்.

முடியும் என்கிற வகையில் பார்க்கின்ற பொழுது, படிப்படியாக, 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22இல் தொடங்கிய பயணம் மெதுவாக மெதுவாக அனுப்பும்பொழுது, பூமியினுடைய ஈர்ப்பு விசையையும், நம்முடைய கலனின் விசையையும் சேர்த்துச் சேர்த்து, மெதுவாக மெதுவாக, நவம்பர் 8ஆம் தேதிவரைக்கும் அது மெதுவாகத்தான் நிலவை அடையும்.
நிலவிற்குப் போய்விட்டோம்; இருந்தாலும், அவர்கள் போன மாதிரியே நாம் போயிருந்தால், அவர்களுக்குக் கிடைத்த விடையே நமக்குக் கிடைக்கலாம் அல்லவா! ஆகவே, நாம் வேறு திசையில் செல்லவேண்டும்.

நிலவு ஒன்றுதான்; பூமி ஒன்றுதான். வேறு திசை அங்கே என்ன இருக்கும் என்று பார்க்கும்பொழுது, சரியாகப் பார்க்கும்பொழுது, வேறு திசை ஒன்று தெரிந்தது. இந்த மேடைக்கு இந்த வழியிலும் வரலாம்; அந்த வழியிலும் வரலாம் அல்லவா! அதேபோன்று, நிலவை இடம் வலமாக குறுக்காகவும் சுற்றலாம்; நெடுக்காகவும் சுற்றலாம். எல்லோரும் நிலவை குறுக்காகச் சுற்றி இறங்கினார்கள்.

ஆக, அவர்கள் இறங்கிய இடம் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், அவர்கள் இறங்காத தென்துருவப் பகுதியில் இதுவரை யாரும் எட்டிப் பார்க்கவில்லை.
ஆகவே, அந்த இடத்திற்கு நாம் எப்படி போவது?

நம்மிடம் இருக்கின்ற பி.எஸ்.எல்.வி.யை வைத்துக்கொண்டு நிலவில் இறங்காமல் பார்க்க முடியுமா? என்று பார்த்தோம். நிலவில் யாரும் இறங்காத இடத்திற்கு நாம் போகிறோம். ஆக, நிலவு அதனுடைய அச்சிலேயே சுற்றுகிறது. உடனே பார்க்கவேண்டிய அவசியமில்லை. இங்கே இருந்து போவதற்கு மூன்று வார காலங்கள் எடுத்துக்கொள்ளலாம். அங்கே போயும்கூட உடனே பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை தன் அச்சில் தானே சுற்றுகிறது நிலவு. அதனுடைய துருவப் பாதையில் மேலிருந்து கீழாகப் போகும்பொழுது, நிலவை ஒவ்வொரு அங்குலமாக நம்மால் பார்க்க முடியும்.

11 கருவிகளை எடுத்துக்கொண்டு போகிற நிலையில், அந்த 11 கருவிகளும் வெவ்வேறு முறையாக நிலவைப் பார்க்கின்றன. அப்படிப் பார்க்கும்பொழுது என்ன தெரிந்தது என்றால், கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.
அது என்ன வித்தியாசம் என்றால், அமெரிக்காவும், ரஷ்யாவும் நிலவில் இறங்கி நீரைத் தேடினார்கள்.
நாம் நீரைத் தேடி நிலவில் இறங்கினோம்.

சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்!

தமிழில் ‘சித்து’ விளையாடலாம் என்று சொல்வார்கள் அல்லவா! அதனுடைய உச்சம்தான் இது.
அதுபோன்று, நீரைத் தேடு – நிலவில் இறங்கு! அந்த வகையில் நாம் சந்திரயான் திட்டத்தில் போனோம். நிலவைச் சுற்றிக்கொண்டே இருந்தோம். நிலவு அதன் அச்சிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. 11 கருவிகளை வைத்துக்கொண்டு பார்க்கிறோம் – 100 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து.
இப்பொழுது என்ன செய்கிறோம், நிலவில் இறங்கவில்லை முதன்முறையாக – இருந்தாலும், நிலவைச் சுற்றிக்கொண்டே இருந்தோம். அதை வைத்துப் பார்க்கும்பொழுது, முழு நிலவையும் பார்த்த முதல் நாடாக இந்தியா வரும் பொழுது, நிலவில் இந்த இந்த இடத்தில் நீர் இருக்கிறது என்ப
தைச் சரியாகச் சொல்ல முடிந்தது.

நிலவின் நீருடைய வரைபடம் – நீல நிறமாக இருப்பதை ஒரு கருவி சொல்கிறது. தென்துருவம், வடதுருவம் இரண்டு பக்கத்திலும் வேறு ஒரு கருவி பார்க்கிறது.
தென்துருவத்தைப் பார்க்கின்றபொழுது, அங்கே நிறைய இடங்களில் பல கோடி ஆண்டுகளாக, சூரியனுடைய ஒளியே படாத இடங்கள் – பெரிய பெரிய பள்ளங்களாக இருக்கும். அந்த இடங்களில் பனி வடிவில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை நம்மால் பார்க்க முடிந்தது.

ஆக, நாம் அவர்கள் சொன்னதை நம்பவில்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் சொன்னது சரியா என்பதைப் பார்க்கத்தான் சென்றோம். அவர்கள் செய்த செலவைவிட, மிகமிகக் குறைவான செலவில் நாம் செய்திருக்கின்றோம்.

99 முறை முயற்சித்து செய்ய முடியாததை, முதன் முயற்சியிலேயே முதல் நாடாக நாம் நிரூபித்திருக்கின்றோம் என்றால், அதற்கான விதை விதைக்கப்பட்டது – பெரியார் சொன்னார் அல்லவா – அந்த விதை சரியாக விதைக்கப்பட்டது என்பதைத்தான் நான் சொல்ல முயற்சி செய்கிறேன்.
இப்பொழுது பாருங்கள், கதை முடியவில்லை- கதையின் ஆரம்பமே அங்கேதான் தொடங்குகிறது.
1970ஆம் ஆண்டுவரைக்கும் பார்த்தீர்களேயானால், 90 முறை நிலவிற்குப் போயிருக்கிறார்கள்.

1980, 1990, 2000ஆம் ஆண்டுகளில் நிலவிற்குப் போகவில்லை.
2008ஆம் ஆண்டு நாம் கண்டுபிடிக்கிறோம். அதற்குப் பிறகு, சீனாவையும் சேர்த்து, திரும்ப ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், ஏன், அரேபிய நாடுகள்கூட போட்டி போட்டுக்கொண்டு போகிறார்கள்.

திரும்ப நிலவுக்கான பந்தயம் வருது இப்பொழுது.
செக்குமாடாக இல்லாத அந்தக் குதிரை, இப்பொழுது பந்தயத் தளத்தையே மாற்றுகிறது. விண்வெளிப் பந்தயம், இப்பொழுது உலகப் பந்தயமாக மாறுகிறது; ஆம்! பந்தயத்தினுடைய தளம் மாறுகிறது. அந்த இடங்களிலும் நம் இந்தியக் கொடிகளோடு போவதற்கான பல முயற்சிகள் இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி சொல்லிக்கொண்டே வந்தாலும், தமிழ், பெரியார் என்று சொல்லிக்கொண்டு வருகிறோம்.

எப்படி யோசிக்கவேண்டும் என்று சொன்னவர், வாழ்க்கையில் பந்தயக் குதிரை போன்று ஓடவேண்டும் என்று சொன்னவர், மொழியைப்பற்றி என்ன சொல்கிறார் பெரியார்?
நம்முடைய மொழி மிகமிகப் பழைமையான மொழியாகும். இருந்தாலும், காலத்திற்கேற்ற மாறுதல் வேண்டும் என்கிறார்.
ஏனென்றால், நிலவு மிகமிகப் பழையதுதான். இருந்தாலும், காலத்திற்கேற்ற நம்முடைய கண்டுபிடிப்புகளை வைத்துக்கொண்டு, நாம் திரும்பத் திரும்பப் பார்த்ததனால், நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல, நம்முடைய மொழியும்கூட, அதுபோன்ற ஒரு மாறுதல்களுக்கு உட்படுத்தவேண்டும். மொழி என்பது, உலகப் போட்டி போராட்டத்திற்கான ஒரு போர்க் கருவி.
ஏனென்றால், மனிதன் தன்னை வெளிப்படுத்துவதற்கும் சரி, மனிதன் மற்றவர்களுக்கு சொல்வ
தற்கும் சரி, மொழி என்பது மிகவும் முக்கியம்.

மொழி பேசுவதாக இருக்கலாம்; எழுத்தாக இருக்கலாம். அதுதான் உண்மையான போர்க் கருவி என்று சொல்கிறார். அது காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படவேண்டும்.
ஆக, இந்த இடத்தில் மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது என்னவென்றால், தமிழ் மேடைகளில் பழைமைகளைப்பற்றி பேசி, பெருமைப்பட்டு, பெருமைப்பட்டுப் பேசுவது பயனில்லை. புதுமையை நோக்கிப் போகவேண்டும்.

அப்படி புதுமையை நோக்கிப் போகவேண்டும் என்றால், நேற்றைக்கு நடந்தது; இன்றைக்கு நம்முடைய மொழியில் வந்தாலொழிய, நாளைக்கான போராட்டத்தில் நாம் இருக்க முடியாது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆக, அந்த வேகத்தில், பந்தயக் குதிரை என்பது எல்லா இடத்திலும் இருக்கவேண்டும். மொழிக்கும் பந்தயக் குதிரை என்பது உதாரணம் – செக்கு மாடு போன்று திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி, நாம் திரும்பத் திரும்ப பழைசையே சொல்லிக் கொண்டிருந்தோம் என்றால், சரியாக வராது என்று சொல்கிறார்.
ஆக, பந்தயக் குதிரையாகப் போகவேண்டும் என்று சொன்னால், அன்றைக்கு ஓடியாகவேண்டும்; நேற்றுவரை பயிற்சி பெற்றது போதாது; அன்றைக்கு ஓடவேண்டும்; அந்த இடத்தில் வேகம் இருக்கவேண்டும்; விவேகம் இருக்கவேண்டும் – எல்லாமும் இருக்கவேண்டும்.

ஆக, இதுவரை பார்த்தீர்களேயானால், பல நாடுகள் செய்ய முடியாததை நாம் செய்தோம். செய்தது மட்டுமல்ல, ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிடுவது – ஆங்கிலத்தில் கருத்தரங்குகளில் சொல்வது என்பதுபோல் எந்தவித குறையும் இல்லாமல், தமிழில் நாம் அதைக் கொண்டு வந்தோம் – கொண்டு வருகிறோம்.
அது நிலவிற்குப் போனதாக இருந்தாலும் சரி, அதற்குப் பிறகு செவ்வாய்க்குப் போனதாக இருந்தாலும் சரி. இன்னும் இன்னும் எல்லாவற்றையும் நாம் தமிழில் கொண்டு வந்தோம்.

(தொடரும்)