தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பரந்த நிலப்பரப்பில் ஆரியர்கள் அண்டிப் பிழைக்க நுழைந்தார்கள். முதலில் தமிழர்களிடம் பிச்சையெடுத்துப் பிழைத்தார்கள். பின் சடங்கு செய்து அதற்குத் தட்சணை பெற்றுப் பிழைத்தார்கள். ஆக, அவர்கள் உழைத்துப் பிழைத்தவர்கள் அல்ல. அதேபோல், தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி, திரித்து, மாற்றி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய இந்தக் கைப்பற்றும் முயற்சி இன்றளவும் நடந்துவருகிறது.
முதலில் தமிழர் நிலத்தைக் கைப்பற்றினர், பின்பு தமிழ் மொழியைக் களவாடிச் சமஸ்கிருதத்தை உருவாக்கினர்; தமிழ்மொழியைச் சிதைத்தனர். அடுத்து நம் மன்னர்களின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினர். தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரிகம் இவற்றைத் தங்கள் சனாதனத்தை நுழைத்து அழித்தனர். தமிழர்களின் காலக்கணக்கீடு, வான்ஆய்வு, கணிதம், மருத்துவம், விழாக்கள் எல்லாவற்றையும் திரித்துத் தமதாக்கிக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாய் தற்போது நம் அறிஞர்களை, தலைவர்களைத் தங்களின் சனாதனப் போர்வைக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். புத்தத்தையும், சமணத்தையும் அன்று ஊடுருவி அழித்தவர்கள், இப்போது வள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் போன்றவர்களையும் தம்மவர் என்று ஆக்கி அழிக்க முற்படுகின்றனர்.
ஹிந்து மதத்தையே வெறுத்து, “ஹிந்துவாகச் சாகமாட்டேன்” என்று கூறி புத்தமதத்தில் பல லட்சம் பேருடன் சேர்ந்த அம்பேத்கரை, “ஹிந்துத்வா அம்பேத்கர்” என்று திரித்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஸனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை ஸனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று காட்டப் பார்க்கின்றனர். வள்ளுவரைக் காவிக்குள் கட்டம் கட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர். முதலில் வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசினர், பின் காவி உடை, பூணூல் அணிவித்தனர். தற்போது வள்ளுவருக்கு பூணூலும் பட்டையும் போட்டு வள்ளுவரை ஒரு ஸனாதன ஹிந்து என்று ஆக்க முயற்சி செய்கின்றனர்.
வள்ளுவர் யார்?
வள்ளுவர் பற்றிய வரலாற்றுத் தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. நமக்குக் குறள் கிடைத்துள்ளது. அந்த குறளிலும் இடைச்செருகல் உள்ளது என்றாலும் இன்றுள்ள 1330 குறட்பாக்களையும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், அவர் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தவொன்றையும் சாராத கொள்கையாளர் என்பது தெளிவாய் விளங்கும். அவர் எந்த ஒரு நாட்டையும், இனத்தையும், மொழியையும், மதத்தையும் சேர்ந்தவராய்த் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை, கருத்தும் கூறவில்லை. உலகு என்ற சொல்லாட்சியே குறளில் உள்ளது. உலகில் அனைவருக்கும் பொதுவான கருத்துகளே அவர் எழுதிய குறள்களில் உள்ளன. எனவே வள்ளுவர் எந்தவொரு நாட்டுக்கும், மொழிக்கும், இனத்திற்கும், மதத்திற்கும் உரியவர் அல்லர். அவர் எழுதிய குறளும் அப்படியே எந்தவொரு சார்பும் உடையது அல்ல.
வள்ளுவர் இந்துவா?
திருக்குறளில் ஆதிபகவன், இறைவன், மூதேவி, இந்திரன், மறை சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவர் ஓர் இந்து என்று காட்ட முற்படுகின்றனர். வள்ளுவரின் திருக்குறளை நுணுகி நோக்கினால், அதில் சமணக் கருத்துகள்தாம் மிகையாகவுள்ளன. அப்படியாயின் அவரைச் சமணர் என்று கூற முடியுமா? அவர் வாழ்ந்த சூழலில் மக்களிடம் நிலவிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர் மக்களுக்கு எளிதில் விளங்கக்கூடிய கருத்துகளைக் கூறியுள்ளார் என்பதே உண்மை. திருக்குறளின் முதல் அதிகாரம் முழுவதும் அருகதேவர் என்று அழைக்கப்படும் சமணரான முதல் தீர்த்தங்கரரைக் குறிப்பதாகவேவுள்ளன. அய்ந்தவித்தான், மலர் மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவை அருகதேவரை மட்டுமே குறிக்கும் சொற்கள்.
எம்மதமும் சாராதவர்!
ஹிந்து மதத்தின் முதன்மை இலக்கு வீடுபேறு (மோட்சம்) அடைவது ஆகும். ஆனால், வள்ளுவர் வீடுபேற்றை அறவே விலக்கிவிட்டு கருத்துகளைக் கூறியுள்ளார். அப்படியென்றால் அவர் எப்படி ஹிந்துவாக இருக்க முடியும்? சமணர்கள் தேனை வெறுப்பவர்கள்; ஆனால், வள்ளுவர் தேன் சுவையைச் சிறப்பித்து எழுதியுள்ளார். எனவே அவரைச் சமணர் என்றும் கூறமுடியாது. அவர் ஏசு, முகமது நபி இவர்கள் பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர். எனவே, அவர் கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருக்க வாய்ப்பே இல்லை!
வள்ளுவர் சனாதனியா?
வள்ளுவர் ஸனாதனக் கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவர். ஸனாதனம் என்பது வருணபேதத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பால் படிநிலை உயர்வு தாழ்வு கூறக்கூடியது. ஆனால், வள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் கொள்கையாளர். சாஸ்திரங்கள் கூறுவதை அப்படியே கேள்வி கேட்காது, சிந்திக்காது ஏற்கவேண்டும் என்கிறது ஸனாதனம். ஆனால், வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாயக் கேட்பினும் அதன் உண்மைப் பொருளைக் கண்டு, சரியானதை மட்டுமே ஏற்க வேண்டும் என்றவர். ஸனாதனம் துறவு வாழ்வை வலியுறுத்தக்கூடியது, காமத்தைத் துறக்கச் சொல்வது. ஆனால், வள்ளுவர் இல்லற வாழ்வையும் காம நுகர்வையும் வலியுறுத்தியவர். வள்ளுவர் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால் ஸனாதனம் பெரும்பான்மை மக்களை கற்கக் கூடாது என்கிறது. உழவுத் தொழிலை வெறுத்தது ஸனாதனம்; உயர்த்திச் சிறப்பித்தவர் வள்ளுவர்.
இந்த வள்ளுவருக்கா காவி?
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”
என்று அழகிய பெண் ஒருத்தி தன் நெஞ்சை வாட்டுவதை, உணர்ந்து உருகிக் கூறும் வள்ளுவருக்கா காவி ஆடை உடுத்திப் பார்க்கிறீர்?
“கடாஅக் களிற்றின்மேல் கட்பாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்”
இளம் பெண்ணின் தளரா முலைகளின்மேல் படிந்துள்ள ஆடை மதங்கொண்ட யானையின் முகபடாம் போன்று புடைத்து நின்று ஈர்ப்புதாகக் கூறும் வள்ளுவருக்காக காவி?
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
மதுவானது உண்டவரையே மயக்கும், ஆனால், பெண்ணோ கண்டாலே மயக்கம் தருகிறாள் என்று பெண்ணிடம் மயங்கிக் கூறும் வள்ளுவருக்கா காவி?
“இடுநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து”
இவளின் ஒரு நோக்கு என்னுள் காமநோயை உண்டு பண்ணுகிறது, அவளின் இன்னொரு நோக்கு அதற்கு மருந்தாகிறது! என்று உணர்ந்து அனுபவித்துக் கூறும் வள்ளுவருக்கா காவி?
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல தரும்”
அவளை நான் பார்க்கும் போது நிலத்தைப் பார்ப்பது போல பாவனை செய்யும் அவள், நான் பார்க்காதபோது கடைக்கண்ணால் என்னைக் கண்டு மெல்லச் சிரிக்கும் கண்ணடிக்கும் அவள் செய்கை என்னை நிலைகுலையச் செய்கிறது என்று உருகும் வள்ளுவருக்கா காவி?
“கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்
என்னு பயனும் இல.”
அவளின் கண்களும் என் கண்களும் நோக்கிய பின் எங்களின் வாய்ச்சொற்கள் பயனற்றவை என்று கண்களால் காதல் பேசும் வள்ளுவருக்கா காவி? நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்”
நெருப்பு நெருங்கினால சுடும்; விலகினால் சூடு தணியும்; ஆனால், இவளோ நெருங்கினால் தண்ணென்றும், விலகினால் சுடுகின்ற விசித்திர நெருப்பை இவள் எங்கிருந்து பெற்றாள் என்று வியந்து பெண்ணின் சுகம் பற்றிக் கூறும் இந்த வள்ளுவருக்கா காவி உடுத்திப் பார்க்கிறீர்கள்?
“உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தினும் இயன்றன தோள்’’
‘‘நான் தழுவி அணைக்கும் போது இணையிலா இன்பந்தரும் இவளின் தோள்கள் அமிழ்தினும் இனியது!’’ என்று அணைப்பின் சுகங்கூறும் வள்ளுவருக்கா காவி?
“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
காற்று இடையில் நுழைந்து செல்லாதபடி இருவரும் இறுகத் தழுவும் தழுவலை இன்பத்தின் உச்சமாக உணர்ந்து, உணர்த்திய வள்ளுவருக்கா காவி அணிவிக்கிறீர்கள்?
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்
நுசுப்பிற்கு நல் படாஅ பறை”
மிகவும் மென்மையானது அனிச்சமலர். அப்படிப்பட்ட மென்மையான மலரின் காம்புகளை நீக்காமல் தலையில் அவள் சூடிக் கொண்டதால் அந்த எடைதாங்காமல் அவள் மெல்லிடை ஒடிய அவள் வீழ்ந்து சாவாள் என்று பெண்ணின் இடை மெலிவை
மிகப்படுத்திக் கூறிய வள்ளுவருக்கா காவி?
“பாலோடு தேன்கலந் தற்றே பனிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.”
பெண்ணின் வாயில் ஊறும் உமிழ்நீரானது பாலில் தேன்கலந்தது போல் மிகச் சுவையுடையது என்று மூத்த சுகத்தில் திளைத்துக் கூறும் வள்ளுவருக்கா காவி கட்டிப் பார்க்கிறீர்கள்? பாவிகளா?
அவளோடு எனக்குள்ள உறவு உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு என்று இரண்டறக் கலந்த இயல்பை அறிந்து கூறும் வள்ளுவருக்கா காவி உடுத்துகிறீர்?
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து”
என் காதலர் என் உள்ளத்தில் இருப்பதால், சூடான உணவு உண்டால் அவரைச் சுட்டு விடுமோ என்று அஞ்சி, சூடான உணவைத் தவிர்க்கிறேன் என்று எழுதிய வள்ளுவருக்கா காவி?
“காமம் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்”
காமம் என்னும் பெருவெள்ளத்தில் சிக்கி கரையேற
முடியாமல் தவிக்கிறேன். நள்ளிரவில் உற்றத்துணை
யின்றி உழல்கின்றேன் என்று காமத்தால் தவிக்கும் வள்ளுவருக்கு காவி உடுத்தலாமா?
‘‘இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”
முன்பெல்லாம் எம்துணையைக் கண்களில் காண்பதே தழுவல் இன்பம் தந்தது. ஆனால், இப்போது அவரை உண்மையில் தழுவும்போது அவரை பிரிந்துவிடுவோமோ என்ற எண்ணம் எழுந்து துன்பம் வருத்துகிறது என்று பிரிவு ஆற்றாமையை உய்த்துணர்ந்து உரைக்கும் வள்ளுவரா காவிக்கு உரியவர்?
“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.”
முன்னர் இன்னும் என் துணைவர் வரவில்லையே என்று கண்கள் உறங்காதிருந்தன. இப்போதோ அவர் வந்ததால் உறங்காமல் இருக்கின்றன. இந்தத் தவிப்பு காதலர்க்கே உரித்தானது போலும் என்று காதலால் தவிக்கும் வள்ளுவருக்கா காவி?
“விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.”
நாம் வேறு வேறு அல்லர். இருவரும் ஒருவரே என்றவர் இப்போது பிரிந்து சென்றதால் என்னுயிர் மெல்ல மெல்ல விலகுவதாய் உணர்கிறேன். நனவினன் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
பிரிந்து சென்ற அவர் கனவிலாவது வந்து காட்சித் தருவதால்தான் என்னுயிர் இன்னும் நீங்காமலிருக்கிறது என்று பிரிவாற்றமையைப் பேசும் வள்ளுவருக்குக் காவி உடுத்துவது கயமைச் செயல் அல்லவா?
“முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்”
இருவரும் இறுகத் தழுவியிருக்கையில்; இடையில் காற்று நுழைந்ததால் அது தங்களைப் பிரித்துவிட்டதாய் எண்ணி வருந்துவர்.
“ஒரு நாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு”
காலரின் ஒருநாள் பிரிவுகூட ஒரு யுகம் போல் தோன்றும் என்று காதலர் பரிவாற்றாமையை நுணுகி உய்த்துணர்ந்து உரைக்கும் வள்ளுவருக்கே காவியுடுத்தும் உங்களுக்கு உளச்சான்று என்று ஒன்று உண்டா! என்று உலகோர் பழிக்கமாட்டார்களா?
“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
இருவருக்கும் இடையே அடிக்கடி ஊடல் ஏற்படுவதுதான் காதலுக்கு இன்பம் கூட்டும். அந்த ஊடல் பிரிவிற்குப்பின் கூடுதல் அதனின்றும் இன்பம் தரும் என்று இல்வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அணுஅணுவாய் நுணுகி உணர்ந்து உரைத்த வள்ளுவருக்குக் காவி உடுத்துவதைப் போன்ற கயமைத்தனம் வேறு இருக்கமுடியுமா? ♦