13.02.2024 ‘தினமலர்’ இதழில், ‘‘தமிழகத்தில், மத்திய அரசின், ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18-க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது.
இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது, 18. விண்ணப்பம் செய்வோரில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தினமும், 500 ரூபாய் உதவித்தொகை உண்டு.
பயிற்சி முடித்த பின், 15,000 ரூபாய் மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். இறுதியாக, 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கு,
5 சதவீதம் வட்டி. அந்த கடனை, 18 மாதங்களில் திருப்பி செலுத்தலாம்.
இதேபோல பயனாளிகளின் திறனுக்கு ஏற்ப, கூடுதல் பயிற்சி மற்றும் கடன் தொகை வழங்கப்படும்.
விஸ்வகர்மா திட்டம், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல இருப்பதாக கருத்து தெரிவித்து, அத்திட்டத்தை, தமிழகத்தில் அரசு செயல்படுத்தாமல் உள்ளது. திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவையும், தமிழக அரசு நியமித்தது.
அதே சமயம், விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்தின் வயது வரம்பை, 18-க்கு பதில், 35 வயதாக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
குறு, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வயது வரம்பை, 18ஆக நிர்ணயித்தால், படித்து முடித்த உடனே குடும்ப தொழில் செய்ய, குடும்பத்தினர் கட்டாயப்படுத்த வாய்ப்புள்ளது; வயது வரம்பை உயர்த்தினால், வேலை தேடும் இளைஞர்கள், தாங்கள் விரும்பிய வேலை செய்வதை உறுதி செய்ய முடியும்’’ என்று ‘தினமலர்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி உண்மையாக இருக்காது என்று நாம் நினைப்பதோடு, உண்மையாக இருக்கவே கூடாது என்பதையும் வற்புறுத்துகிறோம்.
மீண்டும் குலக்கல்வியைப் புதிய ரூபத்தில் ஜாதி, விஷ உருண்டைக்கு உதவித் தொகை தேன் தடவி, முந்தைய ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டமே, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பா.ஜ.க பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம். ஜாதியை வலியுறுத்தும் இத்திட்டத்தை மறுபடியும் தமிழ்நாட்டில் சில மாற்றம் என்ற புதிய ‘ஒப்பனை’களோடு – 35 வயது நிறைந்தவர்களுக்கு என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது! கூடவே, கூடாது!!
18 வயது என்பது பல்கலைக் கழகத்தினுள் நுழையும் வயது என்பதைவிட, இத்திட்டத்திற்கான முக்கியம் – அதன் மூலவேர் ஜாதி, வர்ண தர்மத்தைக் கட்டிக் காப்பாற்றவே. செருப்புத் தைப்பவர் குடும்பத்தோடு (அப்பா, அம்மா சகிதமாக – படமே போட்டு மோடி அரசு இதை விளக்கியிருக்கிறது) அத்தொழிலை நடத்தினால் பணம், கடன் குறைந்த வட்டிக்கு – தினப்படியோடு சில நூறு என்ற ‘‘தூண்டிலைக்‘’ காட்டி, இழுக்கிறது!
பரம்பரைத் தொழில் செய்கிறார்களா என்பதற்கு வட்டாட்சியர் சான்றளிக்கவேண்டும் என்பது எதைக் காட்டுகிறது? குலத்தொழில்தான் இந்த ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பது இப்பொழுது விளங்கவில்லையா?
தமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக நமது முதலமைச்சர் அவர்களுக்கு சில அதிகாரிகள் தவறான விளக்கம் தந்து இருக்கக் கூடும்.
ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி அவரை ஆட்சியை விட்டு வெளியேறச் செய்த மண் தமிழ்நாடு என்பது வரலாறு!
நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஜாதி ஒழிப்புக்காக, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடு முழுவதும் உருவாக்கி, அதில் பெரும்பாலானவற்றை இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து – சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டான சாதனையைப் படைத்து – இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அமைதியான வழியில் சமூகப் புரட்சியை நிகழ்த்திவரும் மண்!
இந்நிலையில், இத்திட்டம் சிறிய, வயது மாற்றத்தோடு இதே அரசால் நிறைவேற்றப்படுமானால், அது மிகப்பெரிய அரசியல் சமூக பெரும் பிழையாகிவிடும். அரசுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும்.
எந்த மாற்றத்தோடும் இக்கொள்கை தமிழ்நாட்டிற்குள் புகுந்தாலும், அது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் களங்கத்தையே ஏற்படுத்தும்.
இது அதிகாரிகள் யோசனையாக இருந்தாலும் சரி, அல்லது கமிட்டியின் பரிந்துரையாக இருந்தாலும் சரி, எந்த முறையிலும் அது வாசல் வழியே நுழையக் கூடாது; கொல்லைப்புற வழியாகக்கூட நுழையக் கூடாது!
காலணி தொழிற்சாலை, நவீன சலவை – வாஷிங் மிஷின்மூலம் லாண்டரி தொழிற்சாலைகள் வந்த பிறகும், ஏன் இப்படி ஒரு தந்திரமான குலத்தொழில் – கடன் உதவி என்ற பெயரில்?
கல்வி என்பது 18 வயது மட்டுமல்ல; 35 வயதிலும்கூட முதியோர் கல்வி, வாழ்நாள் கற்கும் கல்வி உண்டு என்றெல்லாம் நாமும் பதில் கூறலாம்; அது இப்பொழுது முக்கியம் அல்ல!
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நமது கனிவான வேண்டுகோள் – இந்தியாவில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் திட்டம் எந்த வகையிலும் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவே கூடாது. உடனே மறுப்புச் செய்தி அவசரம், அவசியம் !
சரியான நிலைப்பாட்டினை தமிழ்நாடு அரசு எடுத்து, இதில் சமரசமற்ற உறுதிப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
இது வயதுப் பிரச்சினையால் எதிர்ப்பு அல்ல; சமூக ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கைப் பிரச்சினையாகும்.
இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்றது என்பதுபோன்ற ஒரு விஷமப் பிரச்சாரமே, இதிலும் செய்யப்படுகிறது.
– கி.வீரமணி,
ஆசிரியர்