— முனைவர் கடவூர் மணிமாறன் —
தகைசான்ற புகழார்ந்த தமிழீர்! நந்தம்
தன்மானம் இனமானம் இனிதே காப்பீர்!
நகைப்புக்கே இடமின்றி நமது மூச்சாம்
நற்றமிழ்க்குக் கேடுசெய்யும் நாட்டம் வேண்டா!
பகைவர்க்கே பாய்விரித்தல் தமிழர் பண்போ?
பண்பாட்டை நாமிழத்தல் அறிவோ? சால்போ?
வகைமறந்து நம்முடைய குழந்தைக் கெல்லாம்
வண்டமிழில் பெயர்சூட்ட மறுத்தல் ஏனோ?
கனியிருக்கக் காய்கவர்தல் நன்றோ சொல்வீர்!
கசப்பினையே சுவைப்போரும் உளரோ? தேனாய்
இனிக்கின்ற தமிழிருக்க நம்மைச் சாடும்
இழிவான அயற்சொற்கள் ஏற்று நாமும்
நனிபுகழைத் தொலைப்பதுவோ? இனிமே லேனும்
நறுந்தமிழில் பிள்ளைகட்குப் பெயர்கள் வைப்போம்!
பனித்துளிகள் பருகுதற்கே இயலு மாமோ?
பார்வியக்கும் செம்மாந்த மரபைக் காப்போம்!
அங்காடி நிறுவனங்கள் எழுத்தில் பேச்சில்
அருந்தமிழை மறந்தோராய் ஆகி விட்டோம்!
மங்காத மாத்தமிழ்க்கே களங்கம் சேர்த்தல்
மாண்பினையே துடைத்தெறிதல் ஏனோ சொல்வீர்?
எங்கும்வாழ் தமிழர்தம் அடையா ளத்தை
ஏற்றுள்ள பெயர்தானே பிறர்க்குக் காட்டும்!
வெங்கொடுமை செய்வார்முன் வீழ்தல் என்றும்
வீறார்ந்த தமிழர்க்கோ மானக் கேடாம்!
அன்பழகன் அறிவரசன் அருளன் வாணன்
அன்பரசன் தமிழ்ச்சேரன் செழியன் செம்மல்
இன்னமிழ்தன் எழிலரசன் இளங்கோ பாரி
இளம்பரிதி நற்கிள்ளி வளவன் நன்னன்
அன்பரசி தமிழ்ப்பாவை அல்லி முல்லை
அழகுநிலா கயற்கண்ணி தென்றல் பொன்னி
என்றெல்லாம் இனியதமிழ்ப் பெயர்கள் சூட்டி
எழிற்றமிழ்க்கு முடிசூட்ட எண்ணு வோமே! ♦