நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

2024 Uncategorized கட்டுரைகள் பெரியார் ஜனவரி 1-15, 2024

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார்_ “இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன” என்று. நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய் போடுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளைக் குப்பையில் எறிந்து விடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.

புத்தகங்கள், அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு, இலக்கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாக சில ஆதாரங்கள் இருந்திருக்கும். அவை அவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமானவைகளாக இருந்திருக்காது. இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்து விடுவான். அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத்திற்கும், நவராத்திரியின்போது குப்பை மேட்டுக்கும் போய்ச் சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக்கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவதாக தோழர் உ.வே. சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அச்சாகி வெளி வந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும் அய்யர் இஷ்டப்பட்டதுமாகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக்குமா என்று பாருங்கள். இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய் விட்டன. பண்டிதர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தில் ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி, தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழிபெயர்த்து தங்களுடையது போல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களையும், கடவுள்களையும், பழக்க வழக்கங்களையும், தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டன என்று பொருள்பட துணிவுடன் எழுதி இருக்கிறார்.

மற்றும், இன்றைய பலஆராய்ச்சியாளரும், இன்று தமிழரிடையுள்ள சமயம், இலக்கியம், இதிகாசம் என்பவை ஆரியர்களுடையன என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டவை என்றும் விளக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் இவைகள் தெரிந்த பின்பும் சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு தீண்டாத மக்களாய்க் கருதப்பட்ட பின்பும் அவைகளைக் கொண்டாடலாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம்கூட ஆரிய பிரச்சாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும். அதுவும் பல நமது இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன. ஆரிய மதத்தையும் ஆரியக் கொள்கைகளையும் பின்பற்றும்படியும் வலியுறுத்துகின்றன.

நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வர்ணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவிடர்கள், தமிழர்கள் என்றும், நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்பந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு; அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றால்தான் நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக்கின்றதே ஒழிய, மற்றபடி நாம் ஆரியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்வித பொறுப்பும் வேலையும் முயற்சியும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம். இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழ கொழா வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது. ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில் அய்ரோப்பியர் ஆட்சியில்கூட திராவிடன் ஆரியருக்கு “இழிபிறப்பாக” இருக்கிறான்.

சர்வத்திலும் விடுபட வேண்டும்

யாரோ இரண்டொருவர் அடிகளாகவும், சுவாமிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும், பெரியாராகவும், ராஜாவாகவும், மந்திரியாகவும், சர் ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட்டாள்தனமேயாகும். எப்படி ஓர் ஒழுக்கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ்பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படுகிறான்.

ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப்பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும், ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும். ஏன் நான் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் சில விஷயங்களில் மாத்திரம் தங்களைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக்கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்-கெட்ட இழிநிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப் பண்டிகைகளைப்பற்றியும், ஆரியக் கடவுள் தத்துவங்களைப்பற்றியும், அவைகள் சம்மந்தப்-பட்ட ஆதாரங்கள்பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.

***

விக்கிரக ஆராதனை, கோவில்

திராவிடனுக்கு விக்கிரக ஆராதனை என்னும் உருவ வழிபாடும் ஆலயங்கள் என்னும் கோவில்களும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே இன்று ஆரியர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்தச் சமயத்துக்கும் மதத்துக்கும் சேர்ந்த கடவுள்களுக்கு எனக்குத் தெரிந்தவரை உருவம், பெண்டு பிள்ளைகள், பந்துமித்திரர்கள், உற்சவங்கள் கிடையவே கிடையாது. அதிலும் திராவிடனுக்கு இருந்த-தாகச் சொல்லவே முடியாது. திராவிடர்களுக்குக் கோவில்களே கிடையாது என்று பந்தயங்கட்டிக் கூறுவேன். ஆரிய செல்வாக்குப் பெற்ற தொல்காப்பியத்தில்கூட இந்தக் கோவில்கள் இல்லை என்றால் வேறு எதில் இருந்திருக்க முடியும்?
ஆலயம் என்பதற்குத் தமிழில் வார்த்தையே இல்லை. கோவில் என்றால் அரண்மனையே ஒழிய. ஆலயம் அல்ல. மலையாளத்தில் கோயில் என்பது அரண்மனைக்குத்தான் சொல்லப்படுகிறது. அங்கு அம்பலம் என்று சொல்லப்பட்டாலும், அம்பலம் என்பதற்கு வெளியிடம் என்றுதான் பொருளே ஒழிய. உள் இடம் அல்ல. வடமொழியில் உள்ள ஆலயம் என்பதுகூட கடவுள் வசிக்குமிடம் என்றோ, கடவுள் இருக்குமிடம் என்றோ பொருள் கொண்டது அல்ல. ஆலயம் என்பது கடவுள் இருக்குமிடமானால் தேவாலயம் என்று சொல்ல வேண்டியதில்லை. வடமொழியில் தேவஸ்தானம் என்று சொல்லப்படும் வார்த்தையும் இரட்டை வார்த்தையே ஒழிய ஒற்றை வார்த்தையல்ல. ஆகவே நமக்கு, கோவில்கள் கிடையவே கிடையாது என்பதோடு, கடவுள் இருக்கும் வீடு என்பதற்கு வார்த்தையும் கிடையாது.
அன்பும் ஒழுக்கமும் தொண்டும் கடவுள் தன்மை என்று சொல்லப்படுமானால் கல்_- உலோகம்_ – மரம்_ – சித்திரம் ரூபமாக கடவுள் இருக்க முடியுமா? இப்படி உள்ள கடவுள் தன்மையில் மேற்கண்ட உயரிய குணங்கள் இருக்குமா? உண்டாகுமா? என்று பாருங்கள்.

இந்தக் கோவில்கள், இந்த உருவங்கள் ஆகியவைகளில் திராவிடனுக்கு லாபமா? ஆரியனுக்கு லாபமா? இவற்றால் திராவிடன் செலவு செய்துவிட்டு இழிவையும் அடைகிறான். ஆரியன் லாபமும் பெற்றுவிட்டு மேன்மையையும் அடைகிறான்.

இதைச் சொன்னால் நமது பண்டிதர்கள் கடவுள் போச்சு, கோவில் போச்சு, கலைகள் போச்சு என்று மாய்மால அழுகை அழுகிறார்கள். இந்தப் பண்டிதர்களைவிட ஆரியர்கள் ஆயிரம் பங்கு மேல் என்று சொல்லலாம். நமது கோவில்கள் என்பவைகள் எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்குமுன் ஏற்பட்டவைகள் அல்ல. இன்றுள்ள திராவிடர் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிட பட்டம், பதவி வேட்டைகாரர்கள் பலர் எப்படி தன்மானமற்று ஆரியர்களுக்கு உதவியாகவும் உளவாளிகளாகவும் இருந்து வருகிறார்களோ, எப்படி ஆரியர்களுக்கு கோவிலும் சத்திரமும் வேதபாடசாலையும் தர்மப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல்தான் திராவிட மன்னர்கள், திராவிட செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமை
யாகி அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அநேக காரியங்களைச் செய்தார்கள்.

இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்குக் கூலியாளாக இருந்துகொண்டு கொஞ்சம் நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங்களைக்கூட ஆரியமயமாக்க உடந்தையாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக்கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ அது போலவேதான் அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அநேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றிவிட்டுப் போய் விட்டார்கள். இவற்றை அடியோடு அழித்துத்தான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, பழுதுபார்த்துச் சரி செய்யக் கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. உருவ வணக்கம் முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டும். கோவில் உற்சவம் முதலியவைகளுக்கு உள்ள ஆதிக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

அறிவுள்ள திராவிட மக்களையும் ஆரியத்திற்கு நிரந்தர அடிமைப்படுத்தினது சைவமும் வைணவமும் தானே ஒழிய வேறல்ல. ஏனெனில், திராவிடர்கள் வேதத்தையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் ஒழிக்கச் சம்மதித்தாலும் சைவ, வைணவ புராண சமயத்தையும் புராண மரியாதையையும் ஒழிக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள் போல் காணப்படுகிறது.

இராமாயணம், பாரதம், பாகவதம், பக்த விஜயம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலாகியவைகளை நீக்கி விட்டால்

திராவிடர்களுக்கு இப்படிப்பட்ட உருவக் கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத திராவிட மக்களுக்கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது. திராவிட நாட்டில் 100-க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களும் நாமும் ஒன்று என்று எண்ணிக்கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய் நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்துவர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகி இருக்கிறோம். அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.

நமது பண்டிதர்கள் இதற்காக என்னவாவது செய்கிறார்களா? ஸ்தல புராணங்கள் விற்கவும், புராண இதிகாசங்களுக்குப் புதிய தத்துவார்த்தம் எழுதி அவைகளை நிலைக்க வைக்கவும், அவைகளைக்கொண்டு புண்ணிய காலட்சேபம் பண்ணவும் இவைகளை உபயோகித்துக் கொள்கிறார்களே தவிர, கண்டித்துப் பேசி மக்களுக்கு அறிவூட்டுகிறார்களா? இப்படியே இருந்தால் என்று திராவிடனின் விடுதலை நாள் வரக் கூடும்?

(13.10.1940 அன்று சென்னை சவுந்தர்ய மஹாலில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 27.10.1940