“பெரியார் அறிவுச்சுவடி” விந்தனின் நூல் வெளியீடு!
– கி.வீரமணி
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பூ.லெட்சுமணன் _ தனிக்கொடி ஆகியோரின் மகன் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் லெ. அர்ச்சுனனுக்கும், கடலூர் மாவட்டம் தெற்கு இருப்பு கோபால்சாமி_ மங்கையர்க்கரசி ஆகியோரின் மகள் கோ. சற்குணாம்பிகைக்கும் 6.6.2004 அன்று காலை 10:30 மணியளவில் ஜெயங்கொண்டம், கே.டி.வி. திருமண மன்றத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது.
மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து, திருமணத்தை நடத்தி வைத்தோம்.
லெ.அர்ச்சுனன் – கோ.சற்குணாம்பிகை இணையேற்பு நிகழ்வை நடத்தி வைக்கும் ஆசிரியர்
சிதம்பரம் வட்டம், சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள நார்த்தங்குடி கிராமம் இரா. பசுபதி_ பாரதி ஆகியோரின் மகன் டாக்டர் ப. இளவரசனுக்கும், பூந்தோட்டம் கிராமம், துரை. இராதாகிருட்டினன் _ எழிலரசி ஆகியோரின் மகள் இரா.சுதாராணிக்கும் 9.6.2004 புதன்கிழமை காலை 11 மணியளவில் சேத்தியாத்தோப்பில் இணையேற்பு விழாவுக்கு நாம் தலைமையேற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து நடத்தி வைத்து சுமார் 50 நிமிடம் சுயமரியாதைத் திருமணம் துவங்கிய வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கிப் பேசினோம். டாக்டர் க. சம்பந்தம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் துரை. இராதாகிருட்டினன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்த்தி துணைப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, பிரச்சார செயலாளர் துரை. சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் வாழ்த்திப் பேசினார்கள். தலைமை ஆசிரியர் க. இளங்கோவன் நன்றி கூறினார்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திராவிடர் கழக திருச்சி மாவட்ட மேனாள் செயலாளருமான மேட்டுப்பாளையம் தன்னாசி 11.6.2004 அன்று தமது 72ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்தினோம். நீண்ட நாள் கழகத் தோழர்_ இயக்கப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தகவல் அறிந்து அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பினோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தன்னாசி
தஞ்சை மாவட்டம் திருவையாத்துக் குடியைச் சேர்ந்த நினைவில் வாழும் கே. சதாசிவம் _ சந்திரா ஆகியோரின் மகன் சற்குணத்திற்கும் வலங்கைமான் வே. கோவிந்தன்_ கோ. பஞ்சுரம் ஆகியோரின் மகள் சமரசத்திற்கும் 22.06.2004 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்களும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித்தலைவர் பேராசிரியர் அ. இறையன் அவர்களும் வாழ்த்திப் பேசினர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பொதுக்குழு உறுப்பினர் இராங்கியம் இராமதிராசன் _ இரா. சரசுவதி ஆகியோரின் மகன் இரா. மலர் மன்னனுக்கும், திருச்சி மாவட்டம் துறையூர் தி. தேவராஜ் _ தே. ரத்தினம். ஆகியோரின் மகள் தே. விஜயலட்சுமிக்கும் 27.6.2004 ஞாயிற்றுக்கிழமையன்று மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தோம்.
முன்னதாக மணமகன் தந்தை இராமதி ராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தி.க. இளைஞரணி அமைப்பாளர் இரா. இளஞ்செழியன் நன்றி கூறினார்.
புதுவை மாநிலம் காரைக்கால் நகர் ஆ. சண்முகவேல் (சிங்கப்பூர்)_ தீனரட்சகி ஆகியோரின் மகன் எல். சக்திவேலுவுக்கும், காரைக்கால் ப. ஜீவானந்தம் _ பாக்கியலட்சுமி ஆகியோரின் மகள் செல்வி. ஜே. பிருந்தாவுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா 28.6.2004 திங்கட்கிழமை 9 மணியளவில் ஓம்சக்தி திருமண மண்டபத்தில் தலைமையில் நடைபெற்றது.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். உரத்தநாடு இரா. குணசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்தார். நாகூர் சி. பெரியார்செல்வன் நன்றி கூறினார். மணவிழாவிற்கு இயக்கத் தோழர்களும் பல்வேறு இயக்கங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிதம்பரம் ச.மெய்யப்பன்
தமிழறிஞரும், புகழ்பெற்ற பதிப்பாளருமான சிதம்பரம் ச.மெய்யப்பன், 28.6.2004 அன்று இயற்கை எய்தினார் என்பதை அறிந்து
வருந்தினோம். அன்னாருக்கு வயது 72. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்ப் பேராசிரியரும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளருமான அவர்
தரமான நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அவரே ஒரு நல்ல நூலாசிரியர், தாகூரைப் பற்றி அவர் எழுதிய நூல்களுக்குத் தமிழ்நாடு அரசு விருது அளித்தது.
பிரபல புரட்சி எழுத்தாளர் ‘விந்தன்’ அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் விந்தன் அறக்கட்டளை நிருவாகக் குழுவினரால் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், 30.6.2004 அன்று மாலை 7 மணிக்கு வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
விந்தன் அவர்களின் நெருங்கிய நண்பர் செ.து. சஞ்சீவி தொடக்க உரையாற்றினார். எப்படிப்பட்ட நிலையில், எத்தகைய கொள்கையை மனதில் ஏற்று வாழ்ந்தார் என்பதையும் நாத்திக, பொதுவுடைமைக் கொள்கைதான் அவரது இறுதி மூச்சுவரை இலட்சியமாக இருந்தது என்பதையும் எடுத்துக் கூறினார்.
விந்தன் அவர்களின் “பெரியார் அறிவுச்சுவடி” நூலை அனைவருடைய கரவொலிக்கிடையே நாம் வெளியிட, முதல் நூலைத் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் இந்நூல் வழங்கப்பட்டது.
விந்தன் அவர்களின் ‘‘பெரியார் அரிச்சுவடி’’ நூலை ஆசிரியர் வெளியிட, பொருளாளர் கோ.சாமிதுரை பெற்றுக்கொள்கிறார்.
அடுத்து பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பேராசிரியர் அ. இறையன் விந்தன் அவர்கள் திரைப்படத் துறையில் எழுதிய பாடல்களான ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா! இன்னலைத் தீர்க்க வா!” என்ற பாடலையும் “இதய வானில் உதயநிலவே, எங்கே போகிறாய்” என்ற பாடலையும் “சரியா, தப்பா?” என்ற பாடலையும் இசையுடன் பாடி, அவரது சமுதாய நோக்குடைய இலக்கியங்களைப் பற்றியும், அவர் மேல் தட்டு மக்களுக்காகச் சிந்திக்கவில்லை; அடித்தளத்து மக்களையே சிந்தித்தவர் என்பதையும் விளக்கினார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் விந்தன் அவர்களுடைய எழுத்தாற்றலைப் பாராட்டினார். விந்தன் அவர்கள் “பெரியார்
அறிவுச் சுவடி”யில்,
ஒதுங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்,
ஓதுவோரெல்லாம் உயர்ந்தோரே ஆகார்,
கடவுள் என்பது கயவர்கள் கற்பனை,
காசிக்குப் போவது காசுக்கு நட்டமே,
கீதை உன்னைக் கீழ் மகன் ஆக்கும்,
திராவிடர்க் கில்லை திதியும் திவசமும்,
தொட்டால் தீட்டெனில், தொடாமல் விடாதே” என்ற கவிதை வரிகளை எடுத்துக் கூறி விளக்கமளித்தார்.
புரட்சி எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் கூட்டத்தில் உரையாற்றும் எழுத்தாளர் த.ஜெயகாந்தன்
அடுத்து பிரபல எழுத்தாளர் த. ஜெயகாந்தன் பேசுகையில்,
“இது எனக்கு ஒரு தலைசிறந்த மகிழ்ச்சி தரும் இடமும், நாளும் ஆகும். விந்தன் அவர்களுக்கு 41 வயது. எனக்கோ 20 வயது. அந்த நிலையில், அவர் என்னைச் சமமாக மதித்து அதிக மரியாதை காட்டினார். அவரும் ஓர் அச்சுத் தொழிலாளி; நானும் ஓர் அச்சுத் தொழிலாளி. அப்பொழுதெல்லாம் கம்போசிங் சிஸ்டம்தான் எங்களுக்குப் பழக்கம். விந்தன் அவர்கள் கோபமாகப் பேசமாட்டார். குத்தலாகப் பேசுவார். 1954லிருந்து 1960வரை அவருடன் நெருக்கமாகப் பழகியவன். ‘புத்தகப் பூங்கா’ என்ற பிரசுரத்தை ஆரம்பித்தார். என்னுடைய முதல் நூல் ‘உதயம்’ என்பதை அவர்தான் வெளியிட்டார்.
அவருடைய நட்பை மறக்க முடியுமா? 1954-இல் ‘கல்கி’யில் பணிபுரிந்தார். 1956இல் சினிமாத்துறையில் நுழைந்தார். பிறகு ‘தினமணி’யில் அவரை ஆசிரியர் பகுதி குழுவில்கூட அவர்கள் அனுமதிக்க அன்றைக்குத் தயாராக இல்லை. பிழை திருத்தும் பணியிலே வைத்திருந்தார்கள். ‘எழுத வந்தவனுக்கு இழிதொழில்’ என்பது என்றைக்கும் இல்லை.
சமுதாயத்தில் வேற்றுமை அகலவேண்டும் என்பதை விரும்பினார். மக்களை அறிவாளிகளாக ஆக்கவேண்டும் என்று செயல்பட்டார். அவர் ஏழை மக்களையே பார்த்தார். “மனிதம்” என்ற பத்திரிகையை நடத்தினார். அந்தப் பத்திரிகையை அவர் என்னிடமே ஒப்படைத்தார். அவர் எழுதியது கொஞ்சம்தான். தலையங்கத்தை நான்தான் எழுதுவேன் அவற்றை எல்லாம் படித்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
ஜீவா அவர்களிடம் சிவப்பும் இருந்தது; கருப்பும் இருந்தது. அதுபோல விந்தன் அவர்களுடைய உள்ளத்தில் கருப்பும் இருந்தது; சிவப்பும் இருந்தது.
அதேபோல, இன்றைக்கு நான் எந்த அளவிற்கு உள்ளேன். நான் கருப்பா? சிவப்பா? என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
பார்ப்பனியத்தின் மீதும், முதலாளித்துவத்தின் மீதும் நாம்தான் சவாரி செய்ய வேண்டும். எனக்குக் கண் கொடுத்தவர் எனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் விந்தன்! என்று கூறி உரையாற்றினார்.
நிறைவாக, எமது உரையில், இந்தப் பணி எனக்கு ஒரு நிறைவான பணியாகும். அதைவிட மற்றொரு முக்கியமான செய்தி என்னுடைய வகுப்புத் தோழர் ஜெயகாந்தன் அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாகக் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது போன்றதாகும். அவர் பல கருத்துகளை மனம் திறந்து கூறியிருக்கின்றார்.
விந்தன் அவர்கள் பெரியவர்களுக்குக் கருத்துகளை எடுத்துச் சொல்வதைவிட, குழந்தைகள் மனதில் பதியக் கூடிய எதிர்கால சந்ததியினர் சிறந்த கருத்துகளைத் தெரிந்துகொள்ள மிகச் சிறப்பான அளவுக்குப் ‘பெரியார் அறிவுச் சுவடி’யை எழுதியிருக்கின்றார்.
அவரை நான் ஓரிரு முறைதான் சந்தித்திருக்கின்றேன். இந்த விழாவைப் பொறுத்தவரையிலே விந்தன் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், ‘செத்தும் கொடுத்த சீதக்காதியாக’ அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். அவர் ஓர் அமைதிப் புரட்சியை இரத்தம் சிந்தாமல் தனது பேனா மையைச் சிந்தி உருவாக்கியிருக்கின்றார்.
‘மனிதம்’ என்ற தலைப்பிலே ஒரு சுயமரியாதை ஏட்டை நடத்தினார். சுயமரியாதைத் தத்துவக் கருத்துகளைப் பரப்பினார். அடித்தளத்து மக்கள் வாழவேண்டும் என்ற உணர்வோடு சிறுகதைகள், புதினங்களை எழுதியிருக்கின்றார்.
அன்புதான் ஆளவேண்டும். சட்டம் போட்டு ஆள முடியாது. அது மாமியார் _ மருமகளிடத்திலிருந்து தொடங்கவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.
யார் சமுதாயத்திற்காகப் பாடுபடு-கிறார்களோ அவர்களை மறைக்க முடியாது. தந்தை பெரியார் என்ற மலையை மறைத்துவிடலாம் என்று சில அறிவிலிகள் நினைக்கிறார்கள். அது முடியாது; நடக்காது.
‘பெரியார் அறிவுச் சுவடி’யில் விந்தன் சொல்லுகின்றார்:
“மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை;
மானம் போகும் மக்கள் மிகப்பெறின்.
(அதிகம் பிள்ளை பெற்றால் பொருளாதாரப் பாதிப்புகூட பிறகு முதலில் மானம் போகும் என்று விந்தன் சொல்லுகின்றார்.)
“மிச்சம் பிடித்து வாழ் மீளாக் கடன் இரா.
மீசை வைக்க ஆசை கொள் தமிழா!
முக்தியால் வளர்வது மூடத்தனம்
மூர்க்கனே மேல் முட்டாளைக் காட்டிலும்!
மென்மையின் பேரால் பெண்மை இழந்தது
உண்மையே ஆகும்.
மேட்டுக்குடியெல்லாம் மேற்குடி ஆகா.
மொட்டையும், கொட்டையும்
மோட்சத்தைக் காட்டா!
மோட்சத்தைப் போலொரு மோசடி
இல்லை.
யக்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே!
யாதும் ஊரென வாழ்ந்தது போதும்.
யுக்தி என்பது குயுக்தியேயாகும்.
யூகங்களெல்லாம் உண்மைகள் ஆகா.
போன்ற மிகச் சிறப்பான கருத்துகளை எல்லாம் விந்தன் அவர்கள் சொல்லியிருக்கின்றார்.
விந்தன் அவர்களுடைய கருத்துகள், எழுத்துகள் காலத்தை வென்றவை! எந்த வகைகளில் எல்லாம் அவருடைய எழுத்துகளையும், நூலையும் பயன்படுத்திக் கொள்கின்றோமோ அந்த வகைகளில் எல்லாம் திராவிடர் கழகம் பயன்படுத்திக் கொள்ளும் என்று குறிப்பிட்டோம். விந்தனின் மூத்த மகன் கோ. வரதராஜன் இறுதியாக நன்றி கூறினார்.
தஞ்சாவூரில் 5.7.2004 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் எமது தலைமையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் ஆண்களும், பெண்களுமாக இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையை ஆர்ப்பாட்டத்தின்போது கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் படித்தார்.
—-அந்தக் கவிதை வருமாறு:
ஆதரவு என்றும் உண்டு!
“ஜாதி மத பேதங்கள் மூட வழக்கங்கள்
ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம்” எனப்
போர் முரசு கொட்டினார் புரட்சிக் கவிஞர்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பால பாடமே போதித்தார் பாரதிப் புலவர்.
ஆத்திரங் கொண்டு சாதி பேதச் சழக்குகளை
சாத்திரக் குப்பையென்று சாற்றியவர்
வடலூர் வள்ளல் இராமலிங்கனார்!
வள்ளுவரும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென
வழங்கினார் சமத்துவத்தைத் திருக்குறளில்!
தயங்கினார் அதைப் பின்பற்ற அக்குறள் கற்றோரே!
புத்தர், மகாவீரர், தொடர்ந்து வந்த
சித்தர்கள் எல்லோரும் ஒரு குரலில்;
பித்தர்கள் என்றனர் சாதி பேதச் சனியர்களை
எத்தர்கள் பிழைப்பதற்கே சாதி பேத மோசடியாம்
இத்தரையில் அம்மோசடியை இல்லாதொழிக்க,
பத்தரை மாற்றுப் பகுத்தறிவுத் தங்கம்_
ஈரோடு தந்த வள்ளல் பெரியார் எனும் சிங்கம்
இன முழக்கம் எழுச்சி முழக்கம் செய்தார் இங்கே!
வைக்கத்தில் வரிந்து கட்டிப் போரிட்டு
“வை கத்தி; வருணாஸ்ரமக் கழுத்தில்!” என்றுரைத்து
வாய்மை நிறை மனம் படைத்தோர்
வாழ்த்துகளைப் பெற்ற வரலாற்று நாயகரின்
வழித் தோன்றல்கள் நாம் “சாதி பேதத்தின்
விழி பிதுங்க விரட்டியடிப்போம்” இன்று!
ஆண்டவன் முன்னே அனைவரும் சமம்தானே?
அப்படியென்றால் அனைத்து சாதியினர்க்கும்
அர்ச்சகராகும் உரிமை மறுப்பது என்பது
ஆண்டவனுக்கே அடுக்காத வீண் பிடிவாதம்தானே?
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஓராம் ஆண்டே
ஆட்சியிலிருந்த நான் அர்ச்சகர் சட்டம் இயற்றியவன்.
அடுத்து வந்த எம்ஜி.ஆர். ஆட்சி அதற்குத் துணை நின்றும்
அய்தீகமே வென்று சாதி வைதீகமே நிலைத்ததந்தோ!
அனைத்து வகுப்பினர்க்கும் இந்த நாட்டில்
அமைச்சராகவும், அதிபர் ஆகவும்
உரிமை நன்கு உண்டென்கின்ற போது,
அர்ச்சகராகும் உரிமைக்கு மட்டும்
அணை கட்டிச் சமத்துவத்தைத் தடுப்பது ஏன்?
அறிவியக்கம் திராவிடர் கழகம் எழுப்பும் இம்முழக்கம்
மனித நேயக் கொள்கையாளர் அனைவருக்கும் ஏற்கும்.
புனிதமன்றோ கெட்டு விடுமென்போர் வாதம் தோற்கும்!
கண்ணப்பன் எனும் வேடன் கால் செருப்பை;
கடவுள் சிலைக் கண்களிலே அழுத்திக் கொண்டு,
பூஜித்தான் என்று எழுதிய கதையைப்
புராணம் என்கின்றீரே; போற்றுகின்றீரே;
அந்தக் கண்ணப்பன் வழி செல்லாமல்
அய்யா கற்பித்த அறவழியில் உரிமை கோரல்
ஆண்டவனும் ஒப்புகின்ற அருஞ்செயல்தான்
ஆள்பவரும் இதனை ஆதரிக்க முன்வரவேண்டும்.
அனைத்து வகுப்பினரும் அர்ச்சகராகும் உரிமைக்கு
அறப்போர் அடையாளப் போர் அமைதி வழி அறிவுப் போர்
ஆருயிர் இளவல் வீரமணி தலைமையிலே ஆரம்பமானதற்கு
அண்ணாவின் தம்பிகளாம் நமது ஆதரவு என்றும் உண்டு.
என்று கலைஞர் அவர்கள் தம் கவிதையில் தம் ஆதரவை உளப்பூர்வமாக, உணர்வுப்பூர்மாகத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து எமது உரையில், “இந்தப் போராட்டத்தில் வெற்றி ஈட்டும்வரை எங்கள் பணிகள் தொடரும்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிடக் கோரி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
உரையாற்றும் ஆசிரியர்
ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்தப்படும். சிறை நிரப்பும் போராட்டமாகக் கழகம் நடத்தும் என்றோம்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு நின்று ஆதரவு தெரிவித்தனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தி 5.7.2004 அன்று காலை சென்னை பாரிமுனை கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ஆர்ப்பாட்டம் (சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)
வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், மாவட்ட திராவிடர் கழகத் தோழர், தோழியர்கள் இப்போராட்டத்தில் கொளுத்தும் வெயிலில் உற்சாகத்துடன் பங்கேற்று உரிமை முழக்கமிட்டனர்.
(நினைவுகள் நீளும்…)