சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் உரை
தொகுப்பு: வை.கலையரசன்
“அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகளிர் கருத்தரங்கம்_ சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (11.12.2023) மாலை 6 மணிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.
திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்க, திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தொடக்கவுரையாற்றினார்.
பேராசிரியர் அரங்க மல்லிகா ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்’ ஆசிரியர் எனும் தலைப்பிலும், எழுத்தாளர் ஓவியா (புதியகுரல்) ‘பெண்ணுரிமைப் போராளி’ ஆசிரியர் எனும் தலைப்பிலும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் எனும் தலைப்பிலும் கருத்தரங்கத்தில் உணர்ச்சி பூர்வமாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தைபெரியார் வழியில் கட்டுக் கோப்புடன் இயக்கத்தை வழி நடத்திச் செல்வதையும், கொள்கை வழியில் வீறுநடைபோட்டு வருவதையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்கள்.
மகளிர் அணி சார்பில் தயாரிக்கப்பட்ட “பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரை” சி.வெற்றிச் செல்வி வெளியிட, மருத்துவர் ச.மீனாம்பாள், பசும்பொன், கலைச்செல்வி அமர்சிங், வழக்குரைஞர் வீரமர்த்தினி, வி.வளர்மதி, பூவை செல்வி, விஜயலட்சுமி, க.சுமதி, ம.யுவராணி, மு.ராணி, த.மரகதமணி, தமிழரசி, த.சுகந்தி, உத்ரா பழனிச்சாமி உள்ளிட்ட சென்னை மண்டல மகளிரணி, – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரண்ட கழகப்பொறுப்பாளர்கள், கழக ஆர்வலர்கள் அணி அணியாகச் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், விடுதலை, கழக ஏடுகளுக்கான சந்தாக்கள், நன்கொடைகளை வழங்கியும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மேடை யேறிய பார்வை மாற்றுத்திறனாளியான பெரியார் பெருந் தொண்டருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
விழாவில் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கழகத் தலைவருக்கும், மோகனா
அம்மையாருக்கும் பலத்த கரவொலிகளுக்கிடையே பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது.
விழா முடிவில் திராவிட மகளிர் பாசறை தென் சென்னை மாவட்டத் தலைவர் மு.பவானி நன்றி கூறினார். பேராசிரியர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி இணைப்புரை வழங்கினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஏற்புரை வருமாறு:-_
“பெரியார் அய்யா மறைந்து – 50 ஆண்டுகள் ஆகின்றன. அவர் உடலால் மறைந்தாலும், இன்றும் வாழ்கின்றார். பெரியார் வெறும் உருவமல்ல; பெரியாருக்கு தோற்றம் – மறைவு என்பதெல்லாம் கிடையாது.
உடலால் அவர்கள் மறைந்தது என்பது ஒரு குறிப்புதானே தவிர, வேறொன்றுமில்லை. பெரியார் அவர்கள் மறையவில்லை.
சாக்ரட்டீஸ் மறைந்தாரா? திருவள்ளுவர் மறைந்தாரா? புத்தர் மறைந்தாரா? என்றால், இல்லை. அது ஒரு குறிப்பு நாள்.
தலைவர்கள் தத்துவங்களாகும்போது _ தத்துவங்கள் தலைவர்களாகும்போது அவர்கள் மறைவதில்லை.
நெஞ்சத்தில் நிறைகிறார்கள். நம்முடைய ரத்த ஓட்டத்தோடு அவர்கள் உறைகிறார்கள். உறைந்து போகிறார்கள்.
பெரியார் அவர்கள் நம்மிடம் உறைந்து போயிருக்கிறார் – நிறைந்திருக்கிறார்.
இன்னுங்கேட்டால், பெரியார் ஒரு பேராயுதம் – போராயுதம் என்று நாம் சொல்வது, அவை பெரியாரைப் பெருமைப்படுத்துகின்ற வார்த்தைகள் என்று யாரும் தயவு செய்து நினைத்துவிடவேண்டும்.
இன்றைக்கு (11.12.2003) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி குறித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்தத் தீர்ப்பைப்பற்றி மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவைப்பற்றி பேசுகிறார்கள்.
அப்பொழுது நம்முடைய கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய தி.மு.க.வைச் சேர்ந்த அப்துல்லா என்ற சிறந்த கொள்கையாளர்_தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கக்கூடிய இளைஞர் – திராவிட இயக்கக் கொள்கைகளை அப்பட்டமாகப் பின்பற்றக்கூடிய தெளிவுள்ள ஒரு பெரியாரிஸ்ட் அவர்.
அவர் உரையாற்றும்பொழுது சொன்னார் – ‘‘பெரியார் அனைத்து இனங்களுக்கும் சுய நிர்ண யம் வேண்டும்” என்று அன்றே சொன்னார் என்று, பெரியார் கொள்கையை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (11.12.2023) காலை சுட்டிக்காட்டிப் பேசினார்.
உடனே, அங்கே இருக்கின்ற பி.ஜே.பி.க்காரர்கள் அலறிப் போய், சத்தம் போட்டு, அவையே அமளி துமளியானது. உடனே, பேரவைத் தலைவர், அப்துல்லாவின் உரையை நாங்கள் அவைக் குறிப்பிலிருந்து இருந்து நீக்கிவிடுகிறோம் என்று சொல்கிறார்.
பெரியாரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கலாம்; ஆனால், மக்கள் உள்ளத்திலிருந்து நீக்க முடியுமா?
உங்களால் பெரியாரை எங்கே இருந்து நீக்க முடியும்? உங்கள் குறிப்பிலிருந்துதான் நீக்க முடியுமே தவிர, கோடானு கோடி மக்கள் இந்த உலகம் முழுவதும் வாழ்கிறார்களே, அவர்களுடைய உள்ளத்திலிருந்து, அவர்களுடைய ரத்தத்திலிருந்து உங்களால் நீக்க முடியுமா?
இதுதான் பெரியார் வாழ்கிறார் என்பதற்கு அடையாளம்.
50 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரியாரைக் கண்டால் மிரளுகிறார்கள்.
பெரியார் என்கிற வார்த்தையை சொல்வதற்குக் கூட அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ரத கஜ துரக பதாதிகள் இருக்கின்றனர்; அம்பறாத் தூணி எடுத்த ராமருக்குப் புதிதாகக் கோவிலைக் கட்டும் அளவிற்கு படை பலங்கள் அவர்களிடம் இருக்கிறது. ஆனால், பெரியார் என்ற ஒரு சொல்லைக் கேட்டவுடன், அவர்கள் அலறுகிறார்கள்.
ஆகவேதான், பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பெரியாரை இனிமேல் பரப்பவேண்டிய அவசியம் கிடையாது.
பெரியாரைச் சுவாசிக்கவேண்டும். இளைஞர்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய பொதுவாழ்க்கை என்பதே இந்தக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டும்.
மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும்விட, இந்த நிகழ்ச்சி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
எப்படி தந்தை பெரியார் அவர்களுக்கு, 1938 ஆம் ஆண்டு ‘‘பெரியார்” என்ற பட்டத்தை அளித்து, பெண்கள் மாநாட்டினை இதே சென்னையில் நடத்தினார்களோ, அதுபோல, இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.
நிகழ்ச்சி சிறியதாக இருக்கலாம்; ஆனால், இது வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
அதேபோல, என்னுடைய வாழ்விணையர் அவர்களை அழைத்து நீங்கள் பாராட்டி, சிறப்புச் செய்தீர்கள் அல்லவா!
தயவுசெய்து ஏதோ ஒரு குடும்பத்திற்கு இதைச் செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். இனிமேல் எந்த இயக்க நிகழ்ச்சிகள் நடந்தாலும், முதலில் மகளிரை அழைத்துப் பாராட்டுங்கள்; அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். அவர் களைப் பாராட்டவேண்டும். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
முதலில் அவர்கள் வருவதற்குக் கூச்சப்படு வார்கள்; சங்கடப்படுவார்கள். வற்புறுத்தி நீங்கள் வரவழைக்கவேண்டும். என்னுடைய துணைவியார் அவர்கள் வரமாட்டார்கள்.
யாரும் சாதிக்க முடியாததை, இன்றைக்கு மகளிர் சாதித்திருக்கிறீர்கள். நான் தோற்றுப் போன இடத்தில், நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்; அதற்காக உங்களுக்கு வாழ்த்துகள்!
தோல்வியிலும் மகிழ்ச்சி இருக்கிறது; வெற்றியிலும் மகிழ்ச்சி இருக்கிறது.
இங்கே வெளியிடப்பட்ட மலரை என்னிடம்கொடுத்தார்கள். அதில், என்னுடைய வாழ்விணை
யரின் பேட்டியும் வெளிவந்திருக்கிறது என்று சொன்னார்கள்.
அடித்தளமே முக்கியம்!
எப்பொழுதும் கட்டடங்களுடைய அடித்தளம் மண்ணில் புதைந்துதான் இருக்கும். இதுவரையில் கோபுரங்களையே வர்ணித்துத்தான் நாம் பழக்கப்பட்டு இருக்கிறோமே தவிர, கோபுரத்தில் உள்ள சிலைகள், கோபுரங்களைப்பற்றி சொல்லியிருக்கிறோமே தவிர, புயல் வரும்பொழுது, அந்தக் கோபுரம் நிலைத்து நிற்கிறது என்று சொன்னால், அதற்கு எது காரணம்?
மேலே இருக்கின்ற கட்டுமானமா என்றால், அல்ல; – புதைந்திருக்கின்ற அஸ்திவாரம் அடிக்கட்டுமானம்தான் தோழர்களே!
ஆசிரியருக்கும்- ஆசிரியருடைய வாழ்விணை யருக்கு மட்டும்தான் பாராட்டென்பது உரியது என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ் விணையரை அழைத்து வாருங்கள். கமிட்டி என்றாலும், பொதுக்கூட்டம் என்றாலும், வாழ்விணையரைப் பாராட்டுங்கள்.
முதலில் அவர்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். தொடங்கும்பொழுது கடினமாக இருக்கும். ஆனால், அதை நீங்கள் கண்டிப்பாகச் கடைப்பிடிக்கவேண்டும். அதற்குப் பிறகு இது நடைமுறையாக வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், அன்னை மணியம்மையாரை அழைக்கும்
பொழுது, ‘‘அம்மா” என்று அழைப்பார். அவர்கள் என்னுடைய தாய்க்குமேல் என்று சொல்வார் தந்தை பெரியார் அவர்கள். அன்பானவர்களின்மீது உரிமை எடுத்துக்கொண்டு சில நேரங்களில் ‘‘அவன்” என்ற ஒருமை வார்த்தையைப் பயன்படுத்துவார்.
‘‘நான் சொல்வதைவிட, அந்த அம்மா சொன்னால்தான் அவன் கேட்பான்” என்று சொல்வார்.
அவ்வளவு தூரம் அவர்கள்மீது ஈர்ப்புக் கொள்வதற்குக் காரணம் என்ன? என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறதே, அவருடைய பழக்கம், அவருடைய சிந்தனைதான்.
நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னீர்களே, எது செய்வதென்றாலும், எங்களுக்குக் கடினம் இல்லை என்றார். ♦