சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

2023 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் டிசம்பர் 16-31, 2023

பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்!

நூல் குறிப்பு :
நூல் பெயர் : மரபுகளை உடைப்பவள்
ஆசிரியர் : கௌதமி தமிழரசன்
வெளியீடு : கலப்பை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.200/-

மேலோர் கீழோரும் உண்டோ?
உயர்வும், தாழ்வும் பிறப்பினாலோ?
குணமது குற்றமானால் கீழோர்_ இங்கே
குடியதும் ஒன்றே… அது மானுட இனமே!
வாழும் உரிமையும் அனைவர்க்கும் சமமே!

கருவறை தொழில் மட்டும் போதும்
என்றே திரிகின்ற பேதைகள் அல்லர் நாங்கள்!
உரிமையை மீட்கும் பெண்கள்
ஆதிக்கத் திற்கெதிராய் கேள்விகள் விதைக்கும் பெண்கள்!
ஆண்டவன் என்றாலும் எதிர்க்கும்
தளராத கொள்கைப் பெண்கள்
பெரியார் கண்ட “சுயமரியாதைப் பெண்கள்” நாங்கள்!

பல்லாங்குழி, கில்லி விளையாடும்
பட்டாம் பூச்சிகள் அல்லர் நாங்கள்!
பள்ளங்கள் நிரப்பும், இனப் பகைவரை விரட்டும்
வீர உள்ளங்கள் கொண்டோர் நாங்கள்!
பிஞ்சினும் உயரிய “பெரியார் பிஞ்சுகள்” நாங்கள்!

அறிவு விதை விதைத்த பெரியார் ஒருவர்
வாழும் முறை புகன்ற பெரியவர் இருவர்
அமைத்த கோட்டையின் தூண்கள் நாங்கள்!

எங்கும் வீழோம்!
எதற்கும் அஞ்சோம்!
கடவுளைப் புதைப்போம்!
சாதியை எரிப்போம்!
இன உணர்வினை மீட்போம்!
மனிதம் காப்போம்!
பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள்
நாங்கள்!
ஆம்! பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்!
பெண்ணாகிய நான்
சாதிகள் அனைத்திலும் கீழ்சாதி நான்
என் சாதனை அளவு ‘பிள்ளைப் பேறு’
வர்க்கத்தில் கடைநிலை வர்க்கம் நான்
இன்னும் கையேந்தும் நிலைதான்

எண்ணிக்கையில் பாதி என் இனம்
எண்ணங்கள் அனைத்தும் ‘மவுன விரதம்’
இழவு, தீட்டு என் வசம்
இதயம் முழுக்க அன்பின் வசம்
அதிகாரம், தோரணை வீதியோடு
அலுவலக நிர்வாகி நாளின் பாதி
சமையல்காரி
சலவைத் தொழிலாளி
தூப்புக்காரி
நாளின் மீதி
நிலைமை மாறுமோ? நீதியும் வருமோ?

புரிந்தும் புரியாமலும்
நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்
மறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ?

சரியும் தவறும் மாறும் கோணங்களாய்
விருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்
திருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு…
திடீரென வரும் திருப்பத்தில் இலக்கின் ‘திசைகாட்டி’
அறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்
எட்டிய அறிவும் ‘கிட்டாக் கனியாய்’
எட்டா அறிவும் ‘உலக மாயையாய்’
உள்ளது இல்லை
இல்லாதது உள்ளது
மாறுபடும் மனங்கள்…

யார் கொடுத்த வாழ்க்கை
யாருக்கும் தெரியாது…
கொடுத்ததை எடுத்தவன்
எனதென்றான்….
பைத்தியக்காரன் தெளிவாய்ச் சிரிக்கிறான்
சிந்திக்கும் மனிதன் பைத்தியம் ஆகிறான்.
நான் கடவுள்
இன்று எனக்கு விஷேச பூசையாம்
விளக்குகள் பல ஏற்றி
பாலும் நெய்யும் சிந்தி
பக்தர்கள் பலர் என் முன்…
ஆயிரக்கணக்கானோர் என் ஆலயம் தேடி…
விழிமூடி வழிபடும் அழகைக் காண்கிறேன்…

முணுமுணுப்பும் சலசலப்பும்
எல்லோர் மனதிலும்…
எம்.பி.பி.எஸ் சீட் வேணுமாம்
எந்நாளும் டிவியே கதியாய்க் கிடக்கும்
பன்னிரண்டாம் வகுப்பு பையனுக்கு…

இருபது வயதில் இப்படி ஓர் பக்தியா?
அசந்து போய்ப் பார்த்தேன் அவளை…
மணமுடிக்க ஆசையாம் மற்றொருத்தி மணாளனை

பச்சை கலர் டி.ஷர்ட் டும் ஜீன்ஸ் பேண்டும்
என்னிடம் வேண்டுவதென்ன? பக்கத்தில் போய்க் கேட்டேன்
அய்ம்பதாயிரமாய் சம்பளம் உயரவேண்டுமாம்
பணியமர்ந்த அய்ந்தே மாதத்தில்…

ஆஹா!! நெற்றி நிறைய விபூதி
யார் அவன்-? என்ன வேண்டும் அவனுக்கு?
ஆராய்ந்து பார்த்தால் வழிப்பறிக் கொள்ளையன்…

தள்ளாத வயதில் தாவி வரும் இளைஞரைக் கண்டேன்…
மனம் மகிழ்ந்தேன்…

அவருக்கும் 3 ஏக்கர் நிலத்தில்
30 ஏக்கர் பலன் வேண்டுமாம்…
நான் கேட்டேன்… எனக்கொரு பக்தன் வேண்டும்
ஒழுக்கமானவனாய்…
உழைப்பாளியாய்…
அதிகம் ஆசைப் படாதவனாய்…
நேர்மையானவனாய்…
பொது நலக்காரனாய்…
ஆசை இல்லா யாரும் வருவதில்லை
ஆலயம் தேடி…
நான் என்ன தரகரா?
உண்டியல் என்ன ஊழல் பெட்டியா?
கோபத்துடன் கோவில் விட்டு
வெளியேறினேன்!

எதில் கண்டாய் சாதி?
ஓடும் ரத்தத்தில் கண்டாயோ சாதி…
அவசரப் பிரிவில் கேட்பாயோ சாதி ரத்தம்?
குணத்தில் சாதியா…
மரபணு மாற்றம் செய்
உயர் பயிராய் மனிதம் செய்
சாதிக் கலப்படம் செய்
சாதியின் குணம் தீர்க்கும்…
பாட்டன் முப்பாட்டன்
வழி தொடரல் இது
பழமை மறப்பேனோ?
பஞ்சாங்கம் பாடினால்
போய் பனையேறு
சவரம் செய்
மலம் சலம் அள்ளு
குலத்தொழில் செய்…

சாதிகள் இல்லையடி பாப்பா என்பார்
காதல் கனவில் சாதி பார்ப்பார்
இது கைகூடா மணம் என்பார்
தோழமையில் சாதி இல்லை
தின்கிற சோற்றில் சாதி இல்லை
உடுத்தும் உடையில் சாதி இல்லை
மணத்தில் மட்டும் உன் மனம் மாறுமோ…
சாதி அதைத் தேடுமோ?
அது உன் குலப் பராமரிப்போ?
உன் குல நீட்சியோ?
உன் மூளைக் கொழுப்பு முடமாக்கும் உன்னை…

மனித முகத்திற்குள்
ஊரின் பேருக்குள்
முப்பாட்டன் பேருக்குள்
சாதியைத் தேடாதே…
உண்மையில் சாதி எங்கும் இல்லை…
மூட மனதின் ஊனம் சாதி

மனு தர்மம் பேசி
மனித தர்மம் வழுவாதே…
பிறப்பின் இழிவு பேசாதிரு…
சாதிய அடுக்கு ‘அண்டியவன் சதி’ உணர்ந்து கொள்!

நாயிலும் சாதி உண்டே என்றால்
நாதிகள் இல்லை உனக்கு… குணம் மாற்று!

சாதி ஒரு சகதி
சாதி ஒரு முட்டுக்கட்டை
சாதிக்கு மாரடிக்காதே
சாதிக்கக் கொஞ்சம் யோசி…
உடலின் கூறுகளும்,
உடல் இயங்கும்
முறைகளும்
உனக்கும், எனக்கும்
ஒருமித்து இருக்க

நீ எதில் கண்டாய் சாதி? ♦