மாநில உரிமை  – இறுதிப் பேருரையின் மய்யப் புள்ளி

2023 கட்டுரைகள் மற்றவர்கள்
– வெற்றிச்செல்வன் 
தந்தை பெரியார் 19.12.1973 அன்று ஆற்றிய இறுதிப் பேருரை அவரது மரண சாசனமாகக் கருதப்படுகிறது. சென்னை தியாகராய நகரில் நடந்த தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின் தீர்மானத்தை விளக்குவதற்கான கூட்டத்தில் இவ்வுரை ஆற்றப்பட்டது.
தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்றது. மேற்படி மாநாட்டின் தீர்மானங்கள் 09.12.1973 நாளிட்ட ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. “தமிழர் சமுதாய இழிவை ஒழித்திட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்”, “டில்லி அரசு மறுக்குமானால் இந்த ஆட்சியின்கீழ் நாங்கள் குடிமகனாக இருக்கமாட்டோம்’’ என்ற தலைப்புகளுடன் மாநாட்டின் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
இந்தத் தீர்மானங்களில் முதன்மையாகப் பேசப்பட்டிருப்பது ஜாதி, மதத்தைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதே.
இம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் பின்வருமாறு:
“இந்தியா சுதந்திரம், சுயராஜ்யம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட நாள்முதல் இன்றுவரை ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்ற ஆட்சித் தலைவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவும் அன்றி வடநாட்டார்களாகவுமே இருக்கிறார்கள்.
தற்போதுள்ள பார்லிமென்ட் அமைப்பில் வடநாட்டு உத்தரப்பிரதேச இந்தியாளர்கள்தான் பிரதமர்களாக வாய்ப்பு இருக்கிறது. இதனை மாற்றி தேச நிருவாகத் தலைமை ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்”.
தந்தை பெரியார் இறந்து அய்ம்பது ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நிலைமை மாறவில்லை. தென்னாட்டில் இருந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் யாரும் இதுவரை பிரதமராகவில்லை. தென்னிந்தியா முழுவதிலும் வாக்களிக்காவிட்டாலும், வடமாநிலங்களில் பெறும் வாக்குகளைக் கொண்டே ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியும். இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? இதிலிருந்தே பெரியார் கேட்ட கேள்வியின் நியாயம் விளங்குகிறது அல்லவா? இந்தத் தீர்மானத்தின் பல்வேறு அம்சங்கள் பெரியாரின் இறுதிப் பேருரையில் வெளிப்படுகின்றன என்பது அவ்வுரையை ஊன்றிப் படிப்பவர்களுக்குப் புரியும்.
”நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறாய்; உன் பேச்சு எனக்குப் புரியாது; என் பேச்சு உனக்குப் புரியாது. உன் பழக்கம் வேறே, உன் வழக்கம் வேறே என்னத்துக்காக இவ்வளவு தூரத்திலே இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லா
விட்டால் எங்களுக்கு என்ன நஷ்டம்?” என்று தனது இறுதி உரையில் கேட்டவர் பெரியார்.
பெரியாரின் ஒவ்வொரு சொல்லிலும் வடவர் ஆதிக்க எதிர்ப்பு வெளிப்படுகிறது. மாநிலத்திற்கான உரிமைக் கோரிக்கை புலப்படுகிறது.
கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் சூத்திரன் என்ற இழிவு நம் மீது சுமத்தப்பட்டதை பல இடங்களில் வலியுறுத்திக் கூறும் பெரியார், ஜாதியை ஒழிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளும் சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டு விடுகிறதே என்றார். அதனால்தான், தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலே, ”அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்ற திருத்தம் கொண்டு வரவேண்டும் என்கிறார்.
அப்போது கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தைப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தி விட்டதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பெரியார், சாஸ்திரத்தின் பேரால், இந்து என்கிற மதத்தின் பெயரால், கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை நிறுத்தி விட்டார்கள் என்கிறார். அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியையும் மதத்தையும் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
அரசியல் அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருக்கும் வரையில்_ ஒன்றிய அரசு ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கும் வரையில்_ இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துமா? அதனால்தான் எங்களைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். இன்று கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ‘நீட்’ தேர்வு நுழைக்கப்படுவதில் இருந்து, தமிழர்களின் வேலைவாய்ப்பு வடவர்களால் பறிக்கப்படுவது வரை அனைத்தும் எதன் பெயரால் நடக்கிறது? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது எதனால் தடுக்கப்படுகிறது? அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகள் இடம்பெற்றிருப்பதால்தானே? ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் அளவு கடந்த அதிகாரத்தினால்தானே? அந்த அதிகாரத்தைக் கேள்வி கேட்பதுதானே சரியான பாதை.
அந்தப் பாதையை, நாம் செல்ல வேண்டிய திசைவழியைக் காட்டிச் சென்றவர் பெரியார். அவ்வழியில் நாம் அனைவரும் நடப்பதே பெரியார் நமக்கு இட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவதற்கான வழிமுறை. ♦