… சிகரம் …
திருவண்ணாமலை என்றாலே ‘தீபம்’ எல்லோர் நினைவிற்கும் வரும்.
அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு.
சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம்.
அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது என்கின்றனர்.
புராணங்களின் நோக்கம் :
நிகழ்விற்கான காரணம் புரியாதவர்கள், மக்களை ஏமாற்ற கற்பனையான காரணங்-களைச் சொல்லிப் புனைந்தவையே புராணங்கள்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இரண்டிற்கும் காரணம் புரியாதவர்கள், திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் கிடைத்தது; இராகும் கேதும் தெரியாமல் உண்டன. அதைச் சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தன. விஷ்ணு இராகு, கேது இருவரையும் தண்டித்தார்.
அதனால் ஆத்திரமுற்ற இராகுவும் கேதுவும் ஆண்டுக்கொருமுறை சந்திரசூரியனோடு சண்டையிடுவதே மேற்கண்ட இரண்டு கிரகணங்கள் என்கிறது புராணம்.
ஆனால், பூமியின் நிழல் சந்திரனில் விழுவது சந்திர கிரகணம், பூமியின் குறுக்கே சந்திரன் வருவது சூரிய கிரகணம் என்பது அறிவியல். அறிவியல் உண்மையைக் கூறிய பின், புராணம் பொய்யானது.
திருவண்ணாமலையில் நிகழ்ந்தது என்ன?
அதுபோல், திருவண்ணாமலையில் நிகழ்ந்த புவியியல் உண்மை தெரியாமல், அதற்குப் புராணம் எழுதினர். அயல்நாடுகளில் அடிக்கடி நிகழும் எரிமலை வெடிப்பு இந்தியாவில் இல்லை. காரணம் இது (தமிழ்நாடு உட்பட இந்தியா) நில மாற்றங்கள் பல நிகழ்ந்து வலுப்பெற்ற கடினப் பாறைகளால் ஆன பீடபூமி. ஆகவேதான் இங்கு நிலநடுக்கமும் அதிகம் இல்லை; எரிமலை வெடிப்பும் இல்லை.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது திருவண்ணாமலை. அறிவியல் ஆய்வுப்படி சொல்லவேண்டுமானால், இமயமலை உருவாவதற்குமுன் உருவான மிகப் பழமையான மலை திருவண்ணாமலை.
விடுதலையில் கட்டுரை
புராணக் கதையின் அடிப்படையை ஆய்வு செய்த நான், சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ஒரு உண்மையை ஊகித்து கவிதையில் சொன்னேன். அக்கவிதை எனது “அர்த்தமற்ற இந்து மதம்” நூலில் பதிவிடப்பட்டது.அதன்பின் ‘விடுதலை’ நாளேட்டில் கட்டுரையாய் எழுதினேன்.
“சிவன் பூமிக்கும் வானுக்கும் நெருப்பாய் நின்றார் என்று புராணம் சொல்வதால், உண்மை நிகழ்வு என்னவாய் இருக்கும் என்று சிந்தித்த எனக்கு, அங்கு மிகப் பெரிய அளவில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். அதன் காரணம் புரியாதவர்கள், கடவுள் சோதியாய் எழுந்ததாய் எண்ணியிருப்பர் என்றும், கனிம வளத்துறை அல்லது, நிலவியல் துறை அறிஞர்கள் ஆய்வு செய்தால் நான் கூறுவது உண்மை என்பது உறுதியாகும்’’ என்று எழுதினேன்.
இதோ அந்தக் கவிதையும், விடுதலைக் கட்டுரையின் பகுதியும்:
“திருவண்ணாமலை
மண்மூட வேண்டிய
கண்மூடி வழக்கங்கள்
விண்முட்டி எரிகின்ற
விபரீத நிலை
விரயத்தின் உலை!
எரிமலை வெடிப்பின்
இயல்பறியா மக்கள்
அரிபிரம்மன் காணா
அரன் (அழல்) வடிவு என்றார்.
அடிக்கடி வெடிக்கும்
அயல் நாட்டிலெல்லாம்
படியளக்கும் பரமனென்று
பக்தி கொள்வதில்லை!
என்று கவிதையிலும்,
“கிரிவல ம(கி)டமை’’ என்னும் தலைப்பில் 17.04.2001 முதல் மூன்று நாள்கள் ‘விடுதலை’ நாளேட்டில் நான் எழுதிய கட்டுரையிலும் கூறியிருந்தேன்..
எரிமலை வெடித்து வான் உயர தீயெழுந்த நிகழ்வு சிவன் நெருப்பாக நின்றார் என்று திரிக்கப்பட்டது; புராணக் கதை புனையப்பட்டது.
மலையிலிருந்து நெருப்பு வெடித்து வெளிவந்ததும் (எரிமலைநெருப்பு வெளிவந்ததும்) இறைவன் ஜோதியாய் நிற்கிறார் என்று வணங்கினர். அதையொட்டி அருணாசல புராணம் எழுதப்பட்டது. ஆனால், திருவண்ணாமலையில் வெடித்து வந்த நெருப்பு எரிமலை நெருப்பு என்பதே அறிவியல் உண்மை!
பெருஞ்சுடராக நெருப்பு வெளிப்பட்டதால், அதைக் கடவுள் வடிவம் என்று எண்ணினர், நம்பினர். அதைக் கொண்டாட மலை உச்சியில் பெரும் தீபம் ஏற்றினர். காரணம், எரிமலை வெடிப்பு மலையுச்சியில் தான் நிகழும்.
திருவண்ணாமலையிலுள்ள பாறைகளை ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படும் என்று அக்கட்டுரையில் எழுதினேன்.
ஆய்வின் முடிவு
அதன்பின் திருவண்ணாமலையில் உள்ள மலையை ஆய்வு செய்த கனிம வளத்துறை ஆய்வாளர்கள், திருவண்ணாமலைப் பாறைகள் எரிமலை வெடிப்பில் உருவானவை என்று உறுதிசெய்துள்ளனர்.
இது இமயமலையைவிட மிகப் பழமையான மலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம் – ‘தினமணி’, 01.08.2012, பக். 7)
பெரியார் தொண்டரின் கணிப்பு பிழையாகாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அருணாஜலம் என்பது அருண + அஜலம் என்று பிரியும். அருண என்றால் நெருப்பு. அஜலம் என்றால் மலை. நெருப்பு மலை (எரிமலை)
என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். புராணம் எழுதித்தான் ஆரியர்கள் உண்மையை மாற்றி, சிவபெருமான் விண்முட்ட நெருப்பாய் நின்றார்
என்று திரித்தனர். அருணகிரி என்றாலும் நெருப்புமலை என்றே பொருள்.
திருவண்ணாமலையின் உச்சியில் பெரிய கொப்பரையில் நூற்றுக்கணக்கான லிட்டர் நெய்யை ஊற்றி, பல மீட்டர் நீளமுள்ள துணியைத் திரியாகப் போட்டு மகாதீபம் ஏற்றுவது எரிமலைத் தீப்பிழம்பின் அடையாளமாகத்தான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
ஆக, திருவண்ணாமலை தீபம் என்பது எரிமலை வெடிப்பின் அடையாள-மேயன்றி அதில் கடவுளைக் கற்பிக்க கடுகளவும் இடமில்லை. எனவே, கிரிவலமும் வேண்டாம், தீபமும் வேண்டாம்.
அண்ணாமலையில் தீபச்சுடர் ஏற்றும் மடமையை மாற்றி, அய்யா பெரியாரின் அறிவுச் சுடரை மக்கள் மத்தியில் ஏற்றுவோம். அதுவே நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும். ♦