… தாமோதர், ஹைதராபாத் …
மடமையின் மறுபெயர் மதம். மடமை என்பது அறிவின் இயல்பான ஓட்டத்திற்குத் தடை இடுவது என்று பொருள். மனிதர்கள் பிறப்பால் தடையற்ற, மடையற்ற சிந்தனை ஓட்டம் உடையவர்கள். பிறந்த குழந்தை பேசத் தொடங்கியதும் இயல்பாய் தடையின்றிச் சிந்திக்கிறது. தனக்கு எற்படும் அய்யங்களை அறிய வேண்டியவற்றை வினாக்கள் எழுப்பி தெளிவு பெறவும், விளக்கம் பெறவும் முயற்சிக்கிறது. இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பிற்கு மடைபோடுகிறது மதம்.
கேள்வி கேட்காதே! சிந்திக்காதே! அப்படியே நம்பு, அப்படியே பின்பற்று, எல்லாம் கடவுள் செய்வார், அதைச் செய்தால் புண்ணியம்; இதைச் செய்தால் பலன் கிடைக்கும், பாதுகாப்பு கிடைக்கும், வளர்ச்சி வரும் என்று மூளையில் மூடக்கருத்துகளை ஏற்றிப் பின்பற்றச் செய்கின்றனர்.
மக்களும் அவற்றையே கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றனர். பெரியவர்கள், ஞானிகள் சொல்லிவிட்டார்கள், சரியாகத்தான் இருக்கும் _ அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று பின்பற்றி நடக்கின்றனர்.
சடங்குகள், சம்பிரதாயங்கள், பூசைகள், விழாக்கள் என்று பலவற்றையும் சிந்திக்காமலே செய்து வருகின்றனர். இன்றைக்கு மதம் அரசியல் மயமாக்கப்பட்டு, வாக்கு வங்கிகளை உருவாக்க மத நிகழ்வுகள் பெரிய அளவில் செய்யப்படும் அவலம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
வினாயகர் சிலைகளின் ஊர்வலங்களும், தீபாவளிப் பண்டிகையும், ஆயுதபூஜையும் அதற்கு எடுத்துக்காட்டுகள்.
ஆயுதபூஜை வந்தால் டன் கணக்கில் பூசணிக்காய்களும், தேங்காய்களும் நடுச்சாலையில் உடைத்து நாசமாக்கப்படுகின்றன. உடலுக்குப் பெருமளவிற்கு நலம் பயக்கும் இந்த இரண்டு பொருள்களும் சாலையில் சிதறி, நசுங்கி நாசமாகின்றன. இதனால் ஏற்படும் சாலை விபத்துகளும், உயிர் இழப்பும் ஏராளம்.
தீபாவளி வந்தால் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து காற்று மண்டலத்தையே சுவாசிக்கத் தகுதியற்ற மாசு மண்டலமாக்கிவிடுகின்றனர். காதைச் செவிடாக்கும், பாதிக்கும் ஒலி எழுவதால் ஒலிமாசும் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். வெடிப்பதால் வரும் மாசு மட்டுமல்லாது, வெடித்துச் சிதறும் குப்பைகள் இந்தியா முழுக்க எத்தனை கோடி டன்கள்! அந்தக் குப்பைகள் மட்க வைக்கப்படுவதில்லை;கொளுத்தப்படுகின்றன அதனால் மீண்டும் காற்று மாசு.
அடுத்து வினாயகர் சிலைகளின் ஊர்வலம். வடமாநிலங்களில் ஓரிரு இடங்களில் செய்யப்பட்ட இந்த ஊர்வலம் இன்றைக்கு இந்தியா முழுவதும் அரசியல் காரணங்களுக்காக, எல்லையற்ற தொல்லை தரும் நிகழ்வாக மாறி சீரழிவின் சிகரம் தொட்டு நிற்கிறது.
கோடிக்கணக்கான ரூபாயில் வினாயகர் சிலைகள் லட்சக்கணக்கில் செய்யப்படுகின்றன. அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வதில் மத மோதல்கள் உயிர்ப்பலிகள். பின் அவற்றைக் கடலில் கரைப்பதில் பெரும் சிக்கல், கடற்கரை முழுவதும் உடைபாடுகள், குப்பைக் கூளங்களாக நிரம்பிக் கிடக்கும் நிலை, ஆயிரக்கணக்கான காவலர்களுக்குப் பணிச்சுமை, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை.
இவை மட்டுமா? இதோ “டெக்கான் கிரானிக்கல்” என்ற நாளேடு 30.9.2023 அன்று இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியைப் பாருங்கள். ஹைதராபாத்திற்கு அருகில் இப்ராஹிம் பட்டணத்தில், வினாயகர் சிலையை ஏரியில் கரைக்கச் சென்ற நான்கு இளைஞர்கள் லாரியில் கொண்டு சென்றபோது, தவறிவிழுந்து மரணம். 4 வயது பையன் முதல் 14, 17, 21 வயதுடைய இளைய பிள்ளைகள் இறந்து போனவர்களில் அடக்கம்.
உயிர்ப்பலி மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய அந்த ஏரியில், நூற்றுக்கணக்கான வினாயகர் சிலைகள்
அடித்து நொறுக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதால் ஏரியே தூர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஏரியை மீண்டும் சுத்தமாக்க 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர் என்றால் இது எப்படிப்பட்ட அவலம்? சுமார் 8,424 டன் எடையுள்ள உடைப்புத் துண்டுகளை அவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
அறிவியல் உச்சத்தில் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்ட மடமைச் செயல்கள், சமூக நலனுக்குக் கேடாய் நடப்பது சரியா? இவை ஒழிக்கப்பட வேண்டாமா? அரசு முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் சிந்தித்து உரிய தீர்வு காண வேண்டியது கட்டாயக் கடமையாகும்.♦