அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை

கட்டுரைகள் பெரியார் பெரியார் பேசுகிறார்

… தந்தை பெரியார் …

ஜாதி என்பது இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து வருகிற ஒரு மாபெரும் கேடாகும். இது இன்று நேற்றிலிருந்து வரவில்லை. சுமார் 2000, 3000 ஆண்டுகாலம் தொடங்கி இருந்து வருகிறது. நமது நாட்டில் எத்தனையோ முனிவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் யாராலும் ஜாதி ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இனி ஒரு மகான் தோன்றி, ஜாதியை ஒழிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

ஜாதியின் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக உள்ள திராவிட இன மக்கள் கீழானவர்களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கொடுமையை எதிர்த்து அழிக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. எனவே ஜாதி இருக்க வேண்டுமென்று அதன் மூலம் வசதி வாய்ப்புகளை அடையும் 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள்தான் சொல்லுவார்களே ஒழிய, அதனால் பாதிக்கப்பட்டுள்ள 97 பேராக உள்ள நாம் அப்படி நினைக்க முடியாது.

ஆகவே ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்துக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பதில் வேண்டுமானால் உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம்.

இந்த ஜாதிமுறை இத்தனை ஆண்டுகளாக இருப்பதற்குக் காரணம் இதனால் ஏற்படுகிற இழிவு நமக்குத் தெரிந்திருந்துங் கூட அதை எதிர்க்காமல் பலர் தூற்றுவார்களே, சிலருடைய வெறுப்புக்கு ஆளாக நேரிடுமே, பலகாலமாக நாம் கொண்டுவந்துள்ள எண்ணங்கள், கோட்பாடுகள் இவைகளை விட்டுவிட வேண்டுமே என்பதால் தான் அதைப்பற்றிச் சிந்திக்க மற்றவர் பயப்படுகிறார்கள்.

நான் இங்கு உங்களிடையே வந்து எனது கருத்தைக் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திணிக்க வந்திருப்பவன் அல்ல. நீங்கள் அறிவைப் பயன்படுத்தித்தான் எந்தக் காரியத்தையும் வாழ்க்கையில் செய்ய வேண்டும். அது எப்பேர்ப்பட்ட மேலான விஷயமாக
இருந்தாலும் அதற்கு அறிவு , பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும்படியாக இருக்குமேயானால் அது நமக்குத் தேவையில்லை.
அறிவைச் சுதந்திரமாக எப்படியும் உபயோகப்படுத்தலாம் என்பதுதான் முக்கியமாகும்.

மற்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் நாம் அறிவைப் பயன்படுத்த ஆராய்ந்து பகுத்தறிந்து பார்க்கத் தவறுவதேயில்லை. உதாரணமாக ஒரு துணிக்கடைக்குப் போனால் அங்கு நாம் 2 கெஜம் துணி வாங்குவதற்கு முன் அது எப்படிப்பட்டது, தரம் எப்படி, சாயம் எப்படி, விலை எப்படி என்று பார்த்துத்தானே வாங்குகிறோம்? அதுபோலவே உணவிலும் மற்ற மற்ற அன்றாட நிகழ்ச்சிகளிலும் நாம் இருக்கிறோம்.

ஆனால், இது (ஜாதி) 2000, 3000 ஆண்டுகளாக இருந்து வருகிற கொடுமையை எதற்காக என்று சிந்தித்து ஆராய வேண்டுமானால் நாம் தயங்குகின்றோம், பயப்படுகிறோம், என்றால் இது சரியா?

ஜாதி இந்த நாட்டில் இத்தனை காலம் நீடித்து இருப்பதற்குக் காரணமே இந்த மூடநம்பிக்கையான அமைப்பைப்பற்றி ஆராய்ந்து அறிய யாரும் முன்வராததேயாகும்.

ஜாதியைக் கடவுள்தான் ஏற்படுத்தினார் என்று சிலர் சொல்லுகிறார்கள்! உலகத்திற்-கெல்லாம் ஒரே கடவுள்தான் என்றால் மற்ற நாடுகளில் உள்ள மக்களை எல்லோரும் சமத்துவமாக இருக்கும்படி செய்துவிட்டு நம் ஒரு நாட்டின் மக்களை மாத்திரம் சிலரை உயர்ந்த ஜாதிக்காரராகவும், சிலரைத் தாழ்ந்த ஜாதிக்காரராகவும் உண்டாக்கியிருப்பார் என்று சொல்லமுடியுமா? அப்படிக் கடவுள் செய்திருப்பாரா? செய்திருக்க முடியுமா என்பதுபற்றி நீங்கள் யோசிக்க வேண்டாமா?

ஜாதியை உண்டாக்கியது மதம்தான் என்று சொல்லுவோமேயானால் உலகில் எத்தனையோ மதங்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் இருக்கின்றனவே; அவைகள் மேல் ஜாதியையும், கீழ்ஜாதிகளையும் ஏன் உண்டாக்கவில்லை என்று நீங்கள் யோசிக்க வேண்டாமா?

ஆகவே மதமோ, கடவுளோ ஜாதியை உண்டாக்கி இருக்க முடியுமா வென்பது பற்றியும், உண்டாக்கியிருக்கின்றன வென்றால், அப்படிப்பட்ட மதம், கடவுள் சமுதாயத்திற்குத் தேவையா? என்பது பற்றியும் நீங்கள் ஆராயவேண்டியது அவசியம்.

ஜாதியை ஏற்படுத்தாத கடவுளையும், மதங்களையும், கொண்டுள்ள வேறு நாட்டுக்காரர்கள் எல்லாம் இன்று அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். தலைகீழ் மாற்றம் அடைந்து விட்டார்கள். நேற்று இருந்ததைவிட இன்று எவ்வளவோ பெரிய மாறுதல் என்று சொல்லும் வண்ணம் வேகமாக வளர்ந்து கொண்டே செல்லுகிறார்கள் – விஞ்ஞானத் துறைகளிலும் மற்றத் துறைகளிலும்!

சக்கிமுக்கிக் கல்லை உரசி அதன் மூலம் நெருப்பு உண்டாக்கிய மனிதன், இன்று படிப்படியாக, கைவிளக்கு, அரிக்கேன் விளக்கு, காஸ் விளக்கு, மின்சார விளக்கு, என்று படிப்படியாக உயர்ந்த நிலையில் ஆக்கப்பட்டிருக்கின்றான். 100 சிறி, 1000 சிறி இலட்சம், மிலியன் கேண்டல் பவர், பத்து மில்லியன் கேண்டல் பவர் போன்ற விளக்குகள் எரிகின்றன. எங்கிருந்தோ ஒரு பொத்தானை அழுத்தினால் அது இப்படி ஆயிரக்கணக்கான விளக்கு வெளிச்சத்தைத் தருகின்றது.

இந்த அறிவு வளர்ச்சி காரணமாக உலகம் கூப்பிடு தூரத்தில் வந்துவிட்டது. இங்கிருந்து டெலிஃபோனை எடுத்து ‘அலோ’ என்றால், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவிலிருந்து ஏன்? என்று கேட்கிறான்.

கட்டை வண்டியில் மாடுகளையும், எருமைகளையும் கட்டிக் கொண்டு, மணிக்கு 3 மைல் வீதம் பிரயாணம் செய்துகொண்டிருந்த மனிதனுடைய அறிவு, படிப்படியாக வளர்ந்ததன் காரணமாகக் கட்டை வண்டியிலிருந்து இரயில்! இரயிலிலிருந்து மோட்டார் கார்! மோட்டார் காரிலிருந்து மணிக்கு 300, 400 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய ஆகாயக் கப்பல்! இப்படிப் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து இன்றைக்கு அறிவுத் திறமை காரணமாகப் பற்பல அதிசயங்களையெல்லாம் செய்யக் கூடிய அளவு மனித அறிவு வளர்ந்து இருக்கிறது.

அந்தத் துறையில் மாறுதல் ஏற்பட்டிருக்-கும்போது மனப்பான்மை, கோட்பாடுகள் எல்லாம் 300 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளவைதான் இன்றும் இருக்கின்றன என்றால், இது எவ்வாறு பொருந்தும்? இன்றுள்ளவை ஜாதி போன்ற அமைப்பு நம்மை முன்னேறச் செய்வதற்குப் பதில் 3000 வருஷத்திற்கு முந்திய காலத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்லுகின்றனவேயொழிய முன்னேற்றத்துக்கு உதவி செய்யவில்லை.

உலகத்திலுள்ள பல மக்கள் இன்றைய தினம் முன்னேற்றம் அடைந்திருப்பவர்கள் பலரும் ஒரு காலத்தில் இன்று நாம் இருப்பதைவிட- இழிவான கேவலமான நிலையில் இருந்தவர்கள். ஆனால் அங்கெல்லாம் சீர்திருத்தவாதிகள் தோன்றி அறிவை ஊட்டியவுடன் அதை ஏற்றுத் திருந்திவிட்டார்கள். இங்கு இருப்பதைப்போல இந்த இழிவின் மூலமே, இந்தக் கீழ்ஜாதி, மேல்ஜாதிப் பிரிவை வைத்துப் பயன் பெற்று அதன் மூலம் பயன் அடைந்த ஒரு கூட்டம் இல்லாததனால், அது அங்கு சாத்தியமாயிற்று.

ஆனால், இங்கு இதன் மூலம் தங்களது வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழுபவர்களுக்கு இது ஒழியக் கூடாது என்று எண்ணி, அதைப் பாதுகாக்கவும் இன்னும் பலமாகவும் முயற்சிகள் செய்கிறார்கள்.

ஜாதியால் பயனடைந்து சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மேல் ஜாதிக்காரர்களைப் பார்த்து ஜாதி ஒழிய வேண்டாமா என்று நாம் கேட்கவில்லை. ஜாதியால் கீழான மக்களாக்கப்பட்டுப் பிறவிலேயே தாழ்ந்த மக்களாகி உள்ள, அதனால் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உழன்று கொண்டுள்ள பெரும்பாலான மக்களைப் பார்த்துத்தான் ஜாதி ஒழியவேண்டாமா என்று நாம் கேட்கிறோம்.

ஜாதி காரணமாகப் பயனடைந்து வசதி வாய்ப்புகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வாழுபவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால்,
ஜாதியால் பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு இதனால் ஏற்படுகிற நஷ்டம் (இழப்பு) எவ்வளவு என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஜாதியை ஒழிப்பதற்கு முன்பெல்லாம் இருந்ததைவிட இப்போது ஏற்ற சூழ்நிலை இருக்கின்றது. வயதானவர்கள் என்பவர்களால் இதில் ஒன்றும் செய்யமுடியாது. இளைஞர்-களாகிய உங்களுக்கு உணர்ச்சி வரவேண்டும். நீங்கள்தான் இந்தக் காரியத்தை எடுத்து அதில் தீவிர கவனம் செலுத்தி இந்த மாபெரும் கேடான ஜாதியை ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும். இந்த வேலையைச் செய்ய இன்றைக்கு இந் நாட்டில் ஒருவரும் இல்லை. இந்தப் பணி முழுக்க முழுக்க நமது தலைமீதுதான் விழுந்திருக்கிறது.

ஆகவே, நீங்கள் உங்களுடைய அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து, எதையும் அறிவை உபயோகப்படுத்திச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்கும் உணர்ச்சியைப் பெறவேண்டும்.

நான் சொன்னவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது. உங்கள் அறிவைப் பயன்படுத்தி அவை உங்களுக்குச் சரி என்று தோன்றுமேயானால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையாய் இருந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்டதற்கு எனது அன்பான நன்றியை உங்களுக்கும், பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கும், இங்குக் கூடியுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(11.2.1959 அன்று லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)
– ‘விடுதலை’, 20.2.1959