ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2023இல் தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், தேசிய சாதனையைச் சமன் செய்துள்ளார். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இறுதிப்போட்டிக்கு முந்தைய அரையிறுதியில் பி.டி. உஷாவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த வித்யாராம்ராஜ், கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவரின் தந்தை ராம்ராஜ் தாணி(ஆட்டோ) ஓட்டுநர். வித்யாவிற்கு ஒரு சகோதரி உள்ளார். அவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்காவில் 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் கடந்திருந்தார். அப்போது இது இந்திய அளவில் தேசிய சாதனையாகப் பதிவானது. இப்போது 39 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார் வித்யா. இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்று அனைவரின் பாராட்டுகளையும் வித்யா பெற்றுள்ளார்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா முதலில் 4 ஜ் 400 மீட்டர் கலப்புப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அது குழுப் போட்டி என்பதால் எல்லோருடனும் பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், 400 மீட்டர் தடை ஓட்டம் தனி நபர் போட்டி, இதில் வெண்கலத்தை வென்றது அவருக்கும், நம் நாட்டிற்கும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது
வித்யா மட்டுமல்ல, அவரின் தங்கை நித்யாவும் தடகள வீராங்கனைதான். இருவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து
கொண்டுள்ளனர். இருவரும் இரட்டையர்கள். வித்யா 400 மீட்டர் தடை ஓட்டத்திலும், நித்யா 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் பங்கேற்று சிறப்பாக விளையாட்டில் சாதித்து வருகின்றனர். இவர்களின் தந்தை ராம்ராஜ், தாணி ஓட்டுநர் பணியில் இருந்துதான் இருவரையும் படிக்க வைத்துள்ளார். தாய் மீனா இல்லத்தை நிர்வகிக்கிறார். ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த இருவரும் தடகள விளையாட்டில் சாதித்து வருகின்றனர்.
தாய் மீனாதான் விளையாட்டுப் போட்டியில் இருவரும் சாதிக்க வேண்டும் என விரும்பியவர். இவர்கள் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருப்பவரும் இவர்களின் தாய்தான். இதற்கு தந்தை ராம்ராஜ், அக்கா சத்யாவும் மிகப்பெரும் ஊக்கம் அளித்து வருகின்றார்.
வித்யா, நித்யா ஆகிய இருவரின் தேசியப் போட்டிகளின் சாதனையாலேயே அரசுப் பணிக்கும் தேர்வாகினர். இப்போது வித்யா இரயில்வே துறையிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியாற்றுகின்றனர். இரட்டையர்களான வித்யாவும், நித்தியாவும் அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தங்கள் இலக்கு எனக்கூறி, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ♥