நூல்: ‘வரலாற்று வழியில்…’
நூலாசிரியர்: ச.கமலக்கண்ணன்
விலை: ரூ.250; பக்கங்கள்: 160
முகவரி: “படிமம்” 2/203 அண்ணா நகர்,
காவேரிபட்டணம் – 635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்.
செல்: +91 6374230985
வரலாற்றுப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்தை விட விறுவிறுப்பானவை! பரபரப்பானவை! அடுத்து என்ன? அடுத்து என்ன? என்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை அப்படி ஒரு நூலைப் படைத்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ச.கமலக்கண்ணன். நூல் தலைப்பு – ‘’வரலாற்று வழியில்’’.
தமிழ்நாட்டில் பிறந்து ஜப்பானில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கமலக்கண்ணன் இதுவரையில் பயணம் மேற்கொண்ட இடங்கள், அதன் காரணமாகக் கிடைத்த தகவல்கள் மற்றும் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வரலாறே இந்நூல்!
இந்தப் பகிர்வு, பயணக் காலத்தில் சுகானுபவங்களாக இல்லை; தங்கத்தை வெட்டி எடுப்பது மாதிரி தகவல்களை வெட்டி எடுத்துத் தருகிறார். வியர்வை சொட்டுகிறது ஒவ்வொரு எழுத்திலும்! சில எழுத்துகளில் ரத்தம் கொட்டுகிறது! குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசுவது பற்றி முடிவெடுத்த வரலாறு!
அவசர அவசரமாக அணுகுண்டுகளைச் செய்து முடித்த வரலாறு எந்த நகரங்களின் மீது அணுகுண்டை வீசுவது என்று ஆய்வு மேற்கொண்ட வரலாறு! அமெரிக்கப் பாலைவனத்தில் அணுகுண்டு அளவுள்ள பூசணிக்காயை வீசிப் பார்த்து விமானிகள் பயிற்சி பெற்ற வரலாறு _ இறுதியில் அணுகுண்டு வீச்சினால் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு மடிந்த வரலாறு _ படிக்கப் படிக்க நெஞ்சு பதைபதைக்கிறது. அணுகுண்டு போடுவதற்காக முதலில் ஹிரோஷிமா நகரை ஏன் தேர்ந்தெடுத்திருந்தார்கள் தெரியுமா? அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அது என்பதால்தானாம்.
அவ்வளவு வக்கிரம், அவர்கள் மூளையில் மலம் போலக் குவிந்திருக்கிறது. கொத்துக் கொத்துக்காகக் கொன்று குவிக்க மக்கள் என்ன புழு பூச்சிகளா? அப்படி நினைத்துதான் 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவில் ‘‘முதல் அணுகுண்டு’’ வீசப்பட்டது!
அந்தக் கொடுமைக்குப் பலியான மக்களை உடனே கணக்கிட முடியவில்லை. அணுகுண்டு வீசப்பட்ட இரண்டாவது நொடியிலேயே மனிதர்கள் இருந்த அடையாளங்களே அற்றுப் போயிருந்தன. கொஞ்ச நஞ்சம் மிஞ்சி இருந்தவர்களின் குரோமோசோம்கள் அணுக்கதிரினால் வெட்டப்பட்டு இடம் மாறி உடல் உறுப்புகளில் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. வேறொரு குரோமோசோமுடன் ஒட்ட வாய்ப்பு இல்லாததால் அவை அழிந்து போய் புற்றுநோய் உண்டாகி இறந்தவர்கள் பல லட்சம்.
புற்றுநோய் இப்படியென்றால் நேற்று வரை மக்கள் குதித்து விளையாடிய இரு ஆறுகள் ,இரத்த வாய்க்கால்களாய் மாறிப் போனது அவலத்தினும் அவலம் !
அணுகுண்டின் 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் பரவிக் கொண்டிருந்த நிலையில் மனிதர்கள் உடலில் தீப்பற்றி இரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்கின்றன. சதைகள் பிய்ந்து தொங்க ஆரம்பித்தன. அந்த ஆறுகளில் குதித்து வெப்பத்தைத் தணித்துக் கொள்ள மக்கள் முயன்றனர். ஆறுகளும் வெப்ப நீராய் மாறிவிட்டிருந்தது சோகத்தினும் சோகம்.
மனித நாகரிகத்திற்கும் மாண்புகளுக்கும் எதிராக இவ்வளவு கொடுஞ்செயல் புரிந்தும் ஆபத்துகள் தெரிந்தும் அடுத்த மூன்று நாளில் நாகசாகி நகரத்தின் மீதும் அணுகுண்டு வீசுமாறு உத்தரவிட்ட அமெரிக்காவை என்னவென்று சொல்வது? கொடூரத்தின் மிச்சம் _ குரூரத்தின் உச்சம் அது!
இரண்டாம் உலகப் போர் முடிந்து போன நிலையிலும் ஜப்பானின் முக்கியத் தீவான ஒக்கினாவாவில் அமெரிக்கா தனது ராணுவத்தை நிறுத்திக் கொள்ள ஜப்பான் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டுகிறார் கமலக்கண்ணன். அப்படி அனுமதி அளித்ததன் காரணமாக வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா, தனது படைகளை அங்கு நிறுத்தி வியட்நாம் மீது தாக்குதல் நடத்த முடிந்தது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார். அதைக் கண்டித்து ஜப்பானியர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதன் காரணமாக, அமெரிக்கா வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடியது தனி வரலாறு.
அதேபோல (ஜப்பான்) நாட்டின் கமகுரா நகரில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை பற்றியும் சொல்கிறார். 13.35 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலையின் எடை 121 டன்கள். சூரிய ஒளி, சுனாமி, மழைப் பொழிவு இப்படி எதனாலும் பாதிக்கப்படாத சிலை இது. காரணம் புத்தராம்! பலர் இப்படி வாயால் சொல்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கை என்னவோ சிலரிடம் தான்! அறிவியல் பெருகப் பெருக ஜப்பானில் கடவுள் மீதான கேள்வி பெருகி உள்ளது!
ஜப்பானியர்களுக்கு மத சுதந்திரம் இருக்கிறது. தான் எந்த மதத்தையும் சார்ந்து இருக்கப் போவதில்லை என்றும் அறிவித்துக் கொள்ளலாம். கல்வி மற்றும் வேலைக்கான விண்ணப்பப் படிவங்களில் ‘மதம்’ என்ற இடத்தில் ‘ஏதும் இல்லை’ என்று குறிப்பிடலாம் என்பதைப் படிக்கும் போது, இந்தியா இப்படி இருந்தால் அனைத்து மதங்களும் சிறுபான்மை மதங்கள் ஆகிவிடும்…. அரசியல்வாதிகள் மதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் குறையும். இந்தியா உண்மையான மதச்சார்பற்ற நாடாகிவிடும்!
நூலைப் படித்து முடிக்கும் போது மனிதகுல வரலாற்றின் வழியில் இத்தனை போராட்டங்களா? என்ற மலைப்பு தோன்றுகிறது!
உழைக்கும் மனிதருக்கும் ஆதிக்க வெறியருக்கும் இடையிலான வரலாறு, போராட்டங்களின் வரலாறு தானே? அந்த வரலாற்று வழியிலான கமலக்கண்ணனின் பயணம் பல உண்மைகளை வெளிப்படையாக விரித்துக் காட்டுகிறது. பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்தால் _ படித்தால் – _ இந்நூல் ஓர் அனுபவப் பனுவல்!
– பாலு மணிவண்ணன்