முனைவர் கடவூர் மணிமாறன்
ஆரியக் குறும்பர் ஆணவப் போக்கால்
நேரிய வாழ்வில் நெருப்பை மூட்டினர்.
புராண, வேத, மனுதர் மத்தால்
திராவிட இனத்தவர் தேய்ந்திடச் செய்தனர்.
மூடச் சேற்றினுள் மூழ்கிட வைத்தே
கேடுகள் விளைத்தனர்; கீழ்மை விதைத்தனர்.
தமிழினச் சிறப்பைத் தகர்க்கும் விழாவால்
நிமிர்ந்தோர் குனிந்திடும் நிலையைத் தந்தனர்.
மெச்சும் திருநாள் “தீபா வளியென
நச்சுக் கருத்தை நம்முள் பாய்ச்சினர்.
”’தமிழர் திருநாள் பொங்கல்” என்பதே
தமிழினத் தார்க்குத் தக்கதாம்: சிறப்பாம்!
வன்மம் மிக்கோர் வாயுரம் தன்னால்
புன்மை விளைத்தே பொய்யில் புரண்டனர்.
அய்யா பெரியார் அறிந்தே உரைத்தார்
மெய்யாய்த் தமிழர் மேன்மை நாடியும்
விழித்தெழ நாளும் வீறுரை ஆற்றியும்
எழுச்சி, புரட்சி இனமா னத்தின்
மாண்பை விளக்கியும் மயக்கம் களைந்தார்
தூண்போல் குமுகம் தன்னைத் தாங்கினார்!
நற்றமிழ் இனத்தரை நரகா சுரனெனக்
குற்றுமி அனையார் கூறியே இகழ்வர்!
மதத்தால் சாதியால் மாறப் பகையால்
பதரென இருப்போர் பண்பா டழித்தே
வெந்துயர் இழைப்பர்; வெண்மை கருப்பென
மந்திரப் புளுகால் மருளச் செய்தனர்!
மாசினை அழுக்கு மனத்தில் சுமப்போர்
காசினைக் கரியென ஆக்கும் தீபா
வளியெனும் இதனை வசையென இகழ்வோம்!
களிப்புறத் திருநாள் பொங்கலை ஏற்போம்! ♦