என்றும் துணையாய் இருப்பது தி.மு.க.தான்!
1. கே: பி.ஜே.பி., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய காரணத்தால், இஸ்லாமியர், கிறித்துவர்கள் வாக்குகள் அதற்குக் கிடைக்கும் என்ற கருத்து சரியா-?
– காந்தி, திருச்செந்தூர்.
ப : இக்கருத்தில் எதிர்பார்ப்பு அம்சத்தைவிட, யதார்த்தமாகப் பார்க்கையில், அ.தி.மு.கவுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிறுபான்மை-யினருக்கு அன்றும், இன்றும், என்றும் துணையாக இருப்பது தி.மு.க. கூட்டணியே என்கிற உண்மை கல்வெட்டுப் போன்றதாகும்.
2. கே: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
– வனிதா, ஆவடி.
ப : இத்தகைய ஆளுநர்களை கூடிய விரைவில் வீட்டுக்கனுப்ப வேண்டும்; அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு அரசியல் ரீதியாக அது நடப்பது உறுதி!
3. கே: அய்ந்து மாநிலத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக ஊடகங்கள் கட்டமைக்கின்ற நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் முடிந்தவரை தங்கள் ஒத்துழைப்பை ஒருவருக்கொருவர் கொடுக்கலாம் அல்லவா?
– செந்தில்நாதன், கும்பகோணம்
ப : நிச்சயம் கொடுப்பார்கள்; கவலை வேண்டாம்!
4. கே: நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் 12,000 கோடி ரூபாய் முறைகேடு பற்றி ஏன் ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற ராகுல்காந்தி
யின் கேள்விக்குப் பதில் கூறாத பா.ஜ.க. பற்றி தங்கள் கருத்து என்ன?
– வெங்கட்பிரபு, கோயம்புத்தூர்.
ப : ‘மவுனம் சம்மதத்துக்கு ஒப்பானது’ என்பது பழிமொழி. பதில் கூறுவதற்கு, வழியில்லையே! திருடனைத் தேள்கொட்டியது போன்ற ‘தம்’ பிடித்த அமைதி!
5. கே: சனாதனம் பற்றிய வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அளித்துள்ள பிரமாண வாக்குமூலம் அவரின் துணிவு, கொள்கைப் பிடிப்பு, போராட்டக் குணம் இவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாமா? –
புவனா, ஆரணி.
ப : பாராட்டப்பட வேண்டிய முதிர்ச்சி நிறைந்த இளந்தலைவர் உதயநிதி என்று விவரம் அறிந்தோர் புரிந்து மகிழ்கின்றனரே!
6. கே: நீட் தேர்வு ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கம் நீட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமல்லவா?
– காயத்ரி, இராமநாதபுரம்.
ப : நிச்சயமாக. போராட்டத்தில் பல வடிவங்கள் உண்டு; அதில் இது ஒருவகை அறப்போர்!
7. கே: நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காது என்று முன்கூட்டியே பி.ஜே.பி. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குற்றச் செயல் அல்லவா?
– ராணி, அரக்கோணம்.
ப : எப்போது அவர் இந்த விசித்திர அதிகாரத்தைப் பெற்றார்? புரியவில்லை! நீதிமன்றங்கள் இவரது பையிலோ, கையிலோ இல்லை. ஆணவத்தின் உச்சம்; அரைவேக்காட்டின் எச்சம்!
8. கே: ரூபாய் 12 ஆயிரம் கோடி ரயில்வே நிலத்தைச் சூறையாட மோடி அரசு முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளை இந்திய முழுக்க ஏன்
மக்கள் மத்தியில் தீவிரமாய் பிரச்சாரம் செய்யக்கூடாது?
– ராமன், மேட்டூர்.
ப: நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஊடக வெளிச்சம் பாயவில்லை!
9. கே: தன் பாலின ஈர்ப்பாளர் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– சின்னப்பொண்ணு, செங்கல்பட்டு.
ப : முற்போக்காளரும் நீதித்துறையில் இருப்பது ஒரு நல்ல திருப்பம். இது வளர வேண்டியது அவசியம் – அவசரம். ♣