முனைவர் கடவூர் மணிமாறன்
எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! நம்கா லத்தில்
இணையற்ற பாவியத்தைப் படைத்த நல்லார்;
பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை
பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்;
குழந்தையிவர் பெயரில்தான்; சீர்தி ருத்தக்
கொள்கையுரம் வாய்ந்தஇவர் தமிழின் ஆழி;
முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின்
முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்!
இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக
ஏற்றமுடன் விளக்குகிற பாவி யத்தை
உலகெங்கும் வாழ்தமிழர் உவகை கொள்ள
ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்!
சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர்
சிறுமதியோர் தடையகற்றிப் புகழைச் சேர்த்தார்!
பலநூல்கள் யாத்தஇவர் ஞாலம் போற்றும்
பகுத்தறிவை, தன்மதிப்பைப் பதியம் இட்டார்!
விந்தியமாம் குன்றமுதல் குமரி ஈறாய்
விரிந்திருந்த தமிழ்நிலத்தில் வாழ்ந்த மக்கள்
முந்துபுகழ்ச் சிறப்புகளை முழுதும் நூலில்
முற்றாகப் படம்பிடித்தார்! மடமை என்னும்
கந்தலினைக் கிழித்தெறிந்தார்! தொன்று தொட்டுக்
கனிந்துவந்த வரலாறு நிலைக்கச் செய்தார்!
வந்தேறிக் கூட்டத்தார் வஞ்சம், பொய்யை
வரிப்புலியாய்க் கனன்றெழுந்து சாட லானார்!
ஆரியர்தம் மூடநெறி, அவர்க ளாலே
அணுகிவந்த துன்பங்கள் தமிழர்க் கான
சீரியதோர் நாகரிகம், பிற்றை நாளில்
சிதைவுண்ட கலை,ஒழுக்கம் தம்மை யெல்லாம்
வீரியமாய், விதந்துரைத்தார்! தன்மா னத்தின்
வீறார்ந்த சுவடுகளைப் பதித்தார்; நம்மோர்
பேரிழிவைத் தடுத்திடவும் மேன்மை யாவும்
பெருகிடவும் முரசறைந்தார் புகழும் வாழ்க! ♦