குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

2023 அக்டோபர் 16-31, 2023 தொடர்கள்
சென்ற இதழ் தொடர்ச்சி…
விதி 12
1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு.
2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம்.
3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்காக சட்டபூர்வமாக மட்டுமே விதிக்கப்படலாம். இந்த உடன்படிக்கையில் காணப்படும் பிற உரிமைகளுக்கு இசைவாக அவை அமைய வேண்டும்.
4. ஒருவர் தாயகத்துக்குள் நுழைவதை யாரும் சட்டவிரோதமாகத் தடுக்கக் கூடாது.
விதி 14
1. நீதிமன்றங்கள் முன்பும் தீர்ப்பாயங்கள் முன்பும் அனைவரும் சமம். ஒருவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பற்றியோ, அவரது உரிமைகள்- _ கடமைகள் பற்றிய வழக்கிலோ, நேர்மையான வெளிப்படையான விசாரணை என்பது அனைவருக்கும் உரியதாகும். அந்த விசாரணை சட்டப்படி உருவான சுயேச்சையான, பாரபட்சமற்ற நீதிமன்றத்தால் நடத்தப்பட வேண்டும்.
2. குற்றம் சாட்டப்படும் எவரும் சட்டபூர்வமாக அக்குற்றம் நிறுவப்படும் வரை நிரபராதி என்றே கருதப்பட உரிமையுள்ளவர் ஆவார்.
3. குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்-பெற்ற ஒருவருக்கு வேறு யாருக்கும் சமமாக, கீழ்க்கண்ட குறைந்தபட்ச உத்தரவாதங்களுக்கு உரிமையுண்டு:-_
அ. அவர் மீதான குற்றச்சாட்டின் இயல்பு, அது சுமத்தப்படுவதன் காரணமும், அவருக்குப் புரிகிற மொழியில் விரிவாகவும் விரைவாகவும் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆ. தனக்குப் பிடித்த வழக்குரைஞரைக் கலந்துகொள்ளவும், தனது வாதங்களைத் தொகுத்துக் கூற போதிய நேரமும் வாய்ப்பும் பெறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
இ. விரைவான விசாரணை.
ஈ.  விசாரணை அவர் முன்னிலையில் நடக்க வேண்டும்; தானே நேராகவோ தான் விரும்பும் வழக்குரைஞர் மூலமோ அவர் வாதிக்கலாம்.
எ. யாரும் தனக்கே விரோதமாகச் சான்றளிக்-குமாறோ, குற்ற அங்கீகாரம் தருமாறோ கட்டாயப்படுத்தப்படக்கூடாது.
4. சிறுவர்களென்றால், அவரது வயது, அவரைச் சீரமைத்து புனர்வாழ்வளித்தலின் அவசியம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டே நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
விதி 16
சட்டத்தின்முன் ஒரு மனிதராக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உரியது.
விதி 17
1. எவரது தனிமையும், குடும்பமும், வீடும், கடிதங்களும் குறுக்கீடுகளுக்கு இடமாகக் கூடாது. எவரது பெருமையும் மரியாதையும் சட்டவிரோதப் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது.
2. அத்தகைய மீறல்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிரான பாதுகாப்பு எல்லாருக்கும் உரிய உரிமையாகும்.
விதி 18
1. எல்லாருக்கும் சிந்தனை சுதந்திர உரிமையும், மத உரிமையும் மனச்சான்று உரிமையும் உண்டு; தான் விரும்பும் மதம் அல்லது தர்மத்தைத் தொடரவோ, ஏற்றுக்கொள்ளவோ உள்ள உரிமையும் தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ, தனியிடத்திலோ_ பொதுவிலோ, தனது நம்பிக்கையையோ மதத்தையோ கடைப்பிடித்தல், தொழுதல், வாழ்தல் கற்பித்தல் ஆகிய உரிமைகளும் அடங்கும்.
2. தனது மதம், நம்பிக்கை இவற்றில் ஒருவர் கொண்டுள்ள உறுதியை மாற்றிக்கொள்ள எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
3. தன் மதம் பற்றியோ நம்பிக்கைகள் பற்றியும் பேசும் உரிமை , பொதுப் பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம், நியமங்கள் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள்_ சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்கிறபோது மட்டுமே, அதுவும் சட்டம் கூறுகிற வகையில் மட்டுமே கட்டுப்படுத்தப்படலாம்.
4. தத்தம் நம்பிக்கைகளுக்கேற்ற மதக் கல்வி, தார்மீகக் கல்வி தம் குழந்தைகளுக்குக் கிடைக்க உறுதியாக வழிசெய்துகொள்ள பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உள்ள உரிமையை மதிப்போமென்று இவ்வுடன்படிக்கையினை ஏற்கும் அரசுகள் உறுதியளிக்கின்றன.
விதி 19
1. ஒவ்வொருவரும் எதைப்பற்றியும், குறுக்கீடுகளின்றி தனக்கென்று கருத்துகள் கொண்டிருப்பதற்கு உரிமை உண்டு.
2. கருத்து வெளியிடும் உரிமையும் அனைவருக்கும் உண்டு. அதிலேயே எல்லாவிதச் செய்திகளையும் கருத்துகளையும் தேடிச் செல்லவும், பெறவும் பரப்பவும், எல்லை தொடர்பான தடைகளின்றி, பேச்சு, எழுத்து, கலைகள் உள்ளிட்ட விரும்பும் எந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உள்ள உரிமையும் அடங்கும்.
3. இதற்கு முந்தைய பத்தியில் கூறப்பெறும் உரிமைகளை அனுபவிப்பதில் சில குறிப்பான கடமைகள்_ பொறுப்புகள் ஆகியவையும் இருக்கின்றன. எனவே அவற்றுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அக்கட்டுப்பாடுகள்
அ. மற்றவர்களின் உரிமைகளுக்கும் மரியாதைக்கும் தேவையானவையாகவும்,
ஆ. தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் தேவையான அளவு மட்டுமே அதுவும் சட்டத்தின் மூலமாக மட்டுமே விதிக்கப்படலாம்.
விதி 20
1. போர்ப் பிரச்சாரம் யாவும் சட்டப்படி தடுக்கப்படும்.
2. பாரபட்சம், பகை, வன்முறை ஆகியவற்றைத் தூண்டக் கூடியதாக அமையும் தேசிய வெறுப்பு. இனவெறுப்பு, மதவெறுப்பு ஆகியவற்றுக்கான ஆதரவுப் பிரச்சாரம் சட்டப்படி தடுக்கப்படும்.
விதி 21
அமைதியாகக் கூடிப் பேசும் உரிமை அங்கீகரிக்கப்படும். ஒரு ஜனநாயக சமுதாயத்தில் தேசியப் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இதமாக எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் அதுவும் சட்டத்துக்கு இசைந்து இவ்வுரிமை கட்டுப்படுத்தப்படலாம்.
விதி 22
1. தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவர்களோடு சேர்ந்து தொழிற்சங்கம் உள்பட எவ்வித சங்கமும் அமைக்கும் உரிமை அனைவருக்குமுண்டு.
விதி 23
1. குடும்பமே இயல்பான, அடிப்படையான சமூக உறுப்பாகும். அதற்கு சமூகம், அரசு ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உரிமை உண்டு.
2. மண வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மணம் புரியவும் குடும்பம் நிறுவவும் உள்ள உரிமை அங்கீகரிக்கப்படும்.
3. மணந்துகொள்வோரின் சுயேச்சையான முழுச் சம்மதமின்றி ஒரு திருமணமும் நடைபெற இயலாது.
4. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் தம்பதிகளுக்குச் சமமான உரிமைகளும் கடமைகளும் திருமணம் செய்து கொள்வதிலும் மணவாழ்விலும் மணவிலக்குப் பெறுவதிலும் கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்.
விதி 24
1. இன, நிற, மத, பால், மொழி, தேசிய வம்சாவழி, சமூகவம்சாவழி காரணமான எவ்வித பேதமுமின்றி, ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தை என்ற நிலையில் தேவைப்படும் பாதுகாப்பு உரிமைக்கான செயல்களைக் குடும்பம், சமூகம், அரசு ஆகியவற்றிடமிருந்து பெறும் உரிமை இருப்பது அங்கீகரிக்கப்படும்.
2. ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெயர் இருக்கும்.
3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தேசிய சார்புக்கான உரிமை உண்டு.
விதி 25
விதி2இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித பேதமுமின்றியும், நியாயமற்ற எவ்வித நிபந்தனைகளுமின்றியும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கீழ்க்கண்ட உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.
அ. பொது நிருவாகப் பணிகளில் நேரடியாகவோ, சுயேச்சையாகத் தேர்ந்தெடுத்த பிரதிநிதிமூலமோ _ பங்கெடுத்துக் கொள்ளுதல்;
ஆ. குறிப்பிட்ட காலப்படி நிகழும் மெய்யான தேர்தல்களில் நிற்கவும் வாக்களிக்கவும் அனைவருடைய சமஉரிமைகளுக்கும் அத்தேர்தல்கள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் நடைபெறும். அதில் வாக்காளருக்கு தன் விருப்பத்தைச் சுதந்திரமாக வெளியிட உத்தரவாதம் உண்டு.
இ. தன்நாட்டு அரசுப் பணிகளில், பொதுவாக சமமான உரிமைப்படி, சேரும் வாய்ப்பு.
விதி 26
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; எந்தப் பேதமுமின்றி சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்கும். அந்த வகையில் சட்டமே சகலவித பேதங்களையும் நிராகரிக்கும். இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, பிற கொள்கைகள், தேசிய வம்சாவழி, சமூக வம்சாவழி, சொத்து, பிறப்பு, அல்லது வேறு நிலை என்ற எந்த அடிப்படையில் பேதம் காட்டப்படுவதிலிருந்தும் எல்லாருக்கும் சமமான பாதுகாப்புக்குச் சட்டம் உத்தரவாதம் தரும்.
விதி 27
மதம், மொழி, கலாச்சாரம் என்பனவற்றில் எந்த அடிப்படையிலேனும் சிறுபான்மையோரையும் கொண்ட நாடுகளில், அவ்வகை சிறுபான்மையினருக்கும் தம்மைச் சார்ந்த மற்றவர்களுடன்கூட, தமது கலாச்சாரத்தை ரசிக்கவும், தமது மதத்தைக் கடைப்பிடிக்கவும் சார்ந்தொழுகவும், தம் மொழியைப் பயன்படுத்தவும் உள்ள உரிமை மறுக்கப்படாது.
பகுதி 4
விதி 40
1. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் இதில் கூறப்பெறும் உரிமைகள் இடம்பெற தாம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றை அனுபவிப்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் அறிக்கைகள் அளிக்கவும் உத்தரவாதம் தருகின்றன. ♦