‘நெய் மணக்கும் நெய்வேலித் தீர்மானம்’’
என்று கலைஞர் பாராட்டைப் பெற்ற
பொதுக்குழுத் தீர்மானம்!
… கி.வீரமணி …
அமெரிக்க டாக்டர் சோம. இளங்கோவன் மாமனார் திருச்சி மேலகற்கண்டார் கோட்டை அரு.நீலமேகம் பல நாட்களாக உடல்நலிவுற்று திருச்சி சுந்தரம் தனியார் நர்சிங் மருத்துவமனையில் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து வல்லத்திற்கு மேலகற்கண்டார் கோட்டை சென்று, அன்னாருடைய உடலுக்கு மரியாதை செலுத்தினோம். அவருடைய துணைவியார் தங்கப்பொண்ணு அம்மையார், மகன்களான என். சுப்பிரமணியம், என். மோகன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.
திருமருகல் சந்தைப்பேட்டையில் 17.2.2004 அன்று செவ்வாய் மாலை 6:00 மணியளவில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் முன்னணிப் பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினர். இறுதியாக நாம் சிறப்புரையாற்றினோம். கழகப் பொறுப்பாளர்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், இயக்கத்தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் காவேரி இல்லத்தில் 17.2.2004 செவ்வாய் இரவு 8 மணியளவில், நகர திராவிடர் கழகப் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு எஸ்.எஸ். கருப்பையா அவர்கள் (வயது 95) இயற்கை ஏய்தினார். மாவட்டத் தலைவர் உள்ளிட்ட இயக்கத் தோழர்களும், தலைமைக் கழகத்தின் சார்பில் இயக்கத் தோழர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதியாக யாம் அனுப்பிய இரங்கல் செய்தியினை மறைந்தவரின் இல்லத்தார்க்கு வழங்கி துயரத்தைப் பகிர்ந்துகொண்டனர். தந்தை பெரியார் படிப்பகத்திலிருது இறுதி மரியாதை செலுத்திட தோழர்கள் அமைதி ஊர்வலமாய் அணிவகுத்து வந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
தஞ்சை கருணாமூர்த்தி – கலைச்செல்வி இணையரின் உழைப்பில் வங்கி ஊழியர் குடியிருப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இல்லத்தை பிப்ரவரி 20ஆம் தேதி காலை 1-0:00 மணியளவில் திறந்து வைத்தோம். அதையொட்டி நடந்த விழாவில் ஆசிரியர் சி.குழந்தைவேலன், துரை. திருஞானம், கழகத் துணைப்பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு ஆகியோர் உரைக்குப்பின், நிறைவுரையாற்றினோம். கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
காரைக்குடி சா. இராமன் (கோட்டப் பிரச்சாரத்தலைவர்) _ வசந்தாள் (திராவிடர் மகளிர் பாசறைத் தலைவர்) இல்லத் திருமண விழா 22.2.2004 அன்று காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.கே.வி. கல்யாண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு எமது தலைமையில் நடைபெற்றது. மணமகன் இராம. விடுதலை அரசு மணமகள் க. கோமளாநாடி ஆகியோருக்கு வாழ்க்கைத்துணை நல ஒப்பந்த விழா உறுதிமொழியை கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச்செய்து மணவிழாவை நடத்திவைத்துச் சிறப்புரையாற்றினோம்.
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில் குமரி நெல்லை முக்கியச் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கே.டி.ஒ.எஸ். முத்துக்கருப்பன் _ ஏ.பி.ஆர்.எஸ். மணிமாறன் நினைவு பெரியார் படிப்பகத்தை பிப். 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திறந்து வைத்து, பின்னர் நூல் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து நூல் விற்பனையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
பட்டீசுவரம் பெரியார் பெருந்தொண்டர் அய்யாச்சாமி மறைவுக்கு, பிப்ரவரி 23, 2004 அன்று அவரது இல்லம் சென்று குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டபோது பெரியார் படிப்பகத்தில் அமைக்கப்பட்ட கழகக் கொடியினை யாம் ஏற்றிவைத்தோம்.
அதுசமயம், ‘பெரியார் பெருந்தொண்டர் அய்யாச்சாமி நினைவாக” பெரியார் படிப்பகத்தில் அவருடைய படம் வைக்கப்பட வேண்டுமென யாம் அறிவித்தோம். படிப்பகத்தின் முன்பாக அமைக்கப்பட்ட அடிக்கல்லை செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு திறந்து வைத்தார். பின்னர் கும்பகோணம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம்.
திராவிடர் கழகத்தின் மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சி. நடேசனார் 26.2.2004 காலை 11 மணியளவில் தனது 110ஆம் வயதில் மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து வருந்துகிறோம். கடந்த 24.2.2004 அன்றுதான் அவரை ஈரோட்டில் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தேன். என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த வரைக் கடைசியாக நான் பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகச் செயலாளரும், சிறந்த மாட்டு வண்டிப் பந்தய வீரருமான அரியக்குடி வீர. சுப்பையா_ அருண்மொழி ஆகியோரின் மகள் சுப. பவளத்திற்கும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மல்லையன் _ கருப்பாயி ஆகியோரின் மகனும் போடி நகர தி.க. இளைஞரணி செயலாளருமான ம. முனியாண்டிக்கும் பிப்ரவரி 22ஆம் நாள் காலை 10:30 மணிக்கு அரியக்குடி பார்ப்பன அக்ரகாரம் தெருவிலுள்ள எஸ்.வி.எம் திருமண மன்றத்தில் இணையேற்பு எமது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து சிறப்புரையாற்றினோம்.
மதுரை பாண்டி – ரெங்கம்மாள் ஆகியோரின் மகன் பா. நடராசனுக்கும், துரைராஜ் _ இராஜேஸ்வரி ஆகியோரின் மகள் து. நாகேஸ்வரிக்கும் நடைபெற்று முடிந்த திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு விழா மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் திருவள்ளுவர் அரங்கில் பிப்ரவரி 22ஆம் நாள் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திருமண வரவேற்பு வாழ்த்தரங்கத்தில், மணமக்களை யாம் பாராட்டி வாழ்த்தினோம். மணமக்கள் சார்பில் ‘விடுதலை’ ஓராண்டு சந்தா ரூ.1000 எம்மிடம் வழங்கினர்.
திருக்குவளை திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான ஏ.சாமிநாதன் அவர்கள் 24.2.2004 அன்று மாலை 7.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இரங்கல் தந்தி அனுப்பினோம்.
அரியலூர் நகர திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான ஏ. துரைக்கண்ணு அவர்கள் தமது 80ஆம் வயதில் 23.3.2004 அன்று காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் யாம் இரங்கல் தந்தி அனுப்பினோம்.
மன்னார்குடி சுயமரியாதை வீரர் வேணுகோபால் (வயது 86) அவர்கள் 29.2.2004 அன்று மாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்தவரின் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தியை யாம் அனுப்பினோம்.
‘மலர்மாமணி’ புலவர் இளஞ்செழியன் இலக்கியப் பணிக்கு பொன்விழா, புலவர் இளஞ்செழியன் _ மனைமாமணி விஜயலட்சுமி மணி விழா _ 40 ஆண்டு நிறைவு மணவிழா முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழ் ஒப்புரவாளர் கழகம், பதிப்பகச் செம்மல் க. கணபதி அறக்கட்டளை இணைந்து பிப்ரவரி 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை, மயிலாப்பூர், டாக்டர் இராதாகிருட்டினன் சாலை நியூ உட்லண்டஸ் உணவக சொற்பொழிவு அரங்கில் காலை 10 மணியளவில் தொடங்கியது விழாவுக்கு மனிதநேய நண்பர்கள் குழு மாநிலத் தலைவர் இரா. செழியன் தலைமை வகித்தார்.
‘இளஞ்செழியன் கவிதைகள்” (“2 ஆம் தொகுதி) எனும் நூலை இரா. செழியன், “விழித்தெழுவோம்” நூலினை டாக்டர் அண்ணா பரிமளம், “சிறுவர் சிந்தனைக் கதைகள்” நூலை தென்கச்சி கோ. சாமிநாதன் ஆகியோர் வெளியிட்டதை டாக்டர் புரட்சிதாசன், நல்லாசிரியர் எம்.ஏ. செல்வராசு, கவிஞர் ஆ. திருவாசகம் ஆகியோர் முதற்படிகளைப் பெற்றார்கள். விழா மலரினை யாம் வெளியிட டாக்டர் புரட்சிதாசன், சந்திரிகா ராஜமோகன் உள்ளிட்ட தோழர்கள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கவிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் முக்கியமானவகள் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிப்ரவரி 28ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் பிறந்தநாள் விழா, “ஹென்ஸ் அரங்க”த்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சமூகநீதி மய்யத்தின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்திஜித் யாதவ் அவர்கள் தலைமை தாங்கினார்.
28ஆம் தேதி 12 மணியளவில் தொடங்கிய விழாவில் கொல்கத்தா சமூகநீதி மய்யத்தின் செயலாளர் திரு.கே.சி. கப்பாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள்.
அதன்பின் சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்கள் பெரியாரின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது “ராமசாமி பெரியார் கி
ஜெ!”, “ராமசாமி பெரியார் கி ஜிந்தாபாத்” என வந்திருந்த அனைவரும் அரங்கமே அதிரும் வகையில் முழக்கம் செய்தார்கள்.
சந்திரஜித் யாதவைத் தொடர்ந்து, அய்யா படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அதன்பின் இருபதுக்கும் மேற்பட்ட பெரு மக்கள் ஒவ்வொருவராக வந்து பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சந்திஜித் யாதவ் அவர்கள் தலைமையுரையாற்றினார். அப்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்றார். அய்யா அவர்களின் வைக்கம் போராட்டத்தை விளக்கிக் கூறினார். “யுனெஸ்கோ” நிறுவனம் அய்யா அவர்களுக்கு அளித்த பாராட்டுகளை விளக்கினார். சுதந்திரப் போராட்டத்தில் அய்யா அவர்களின் பங்களிப்பும் பல போராட்டங்களில் பங்கு பெற்றுச் சிறை சென்றதையும் கூறினார். “அம்பேத்கரும், அய்யாவும்” ஒருவரை ஒருவர் நட்புடன் நேசித்ததைக் கூறினார்.
தமிழ்நாட்டில் பரவியிருந்த பெரியாரின் கொள்கைகளை அகில உலகமெங்கும் எடுத்துச் செல்கிறார் பெரியாரின் வாரிசு வீரமணி அவர்கள் என்று மிகுந்த கரவொலிக்கிடையே கூறினார்.
அடுத்து சிறப்புரையாற்றுகையில், கடந்த மில்லேனியம் ஆண்டில் தலைசிறந்த 100 இந்தியர்களில் அய்யா அவர்களின் படமும், குறிப்பும் இடம்பெற்றுள்ள “இந்தியன் எக்ஸ்பிரஸ்” மில்லேனியம் ஆண்டு புத்தகத்தைக் காட்டி, விளக்கி, மேலும், பல்வேறு ஆதாரங்களைக் காட்டி இறுதியாக நாங்கள் பெரியாரை மதிப்பதோடு, பெரியாரை மதிப்பவர்களையும் மதிக்கிறோம் என்று கூறினோம்.
மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சக்தியான பி.ஜே.பி.யை அதன் அணியை எதிர்க்கும் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அணிக்கே திராவிடர் கழகத்தின் ஆதரவு கீழ்க்கண்ட காரணங்களுக்கே என்று 2.3.2004 அன்று காலை நெய்வேலியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு முடிவு செய்து அறிவித்தது.
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரம் என்பது திராவிடர் இயக்கக் கொள்கை கோட்பாடுகளுக்கு முற்றிலும் வேறுபட்டது. பார்ப்பனிய வர்ணாசிரம முறையைப் பாதுகாப்பதும் அதன் மனுதர்ம பாதுகாப்பிலும் மாறாத பிடிப்புள்ள ஓர் அமைப்பு. ‘இந்து ராஷ்டிரம்’, ‘இந்துத்துவா’ என்ற பார்ப்பனிய மேலாண்மையைப் பாதுகாக்கும் ஆட்சியை நாட்டில் உருவாக்கி இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்றான மதச்சார்பற்ற (Secular) தன்மையை அகற்றிடுவதே அதன் முழு நோக்கம் ஆகும். அதனுடைய அரசியல் பதிப்பே பி.ஜே.பி. என்ற பாரதிய ஜனதா கட்சி ஆகும். ஆர்.எஸ்.எஸ். பிடியிலிருந்து என்றும் மீளமுடியாத ஓர் அரசியல் கட்சி பி.ஜே.பி. சமூக நீதியை நேர்மையாக எதிர்க்காமல் மறைமுகமாக ஒழிப்பதிலும், பொருளாதார அளவுகோல் மூலமும், பொதுத்துறை நிறுவனங்களை அதிவேகமாக தனியாருக்கு விற்று சமூகநீதிக்கும், ஏழை, எளிய, வேளாண்மை, தொழிலாளிகளான பாட்டாளி மக்களின் பொருளாதார நீதிக்கும் கேடு செய்வதும், வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்து தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிடும் விரும்பத்தகாத நிலைதான் கடந்த 4, 5 ஆண்டுகால பி.ஜே.பி. தலைமை தாங்கிய தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியின் வேதனை தரும் சாதனையாகும்.
மகளிருக்கான சட்டமன்ற_ நாடாளுமன்ற இடஒதுக்கீடு மசோதாவைக் கிடப்பில் போட்டும், ‘சமஸ்கிருத ஆண்டு என்று 1999ஆம் ஆண்டை யாரையும் கேட்காமல் அறிவித்ததும், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க இன்றுவரை மறுத்து பிடிவாதம் காட்டிவருவதும், கல்வித்துறை, வரலாற்றுத்துறை, முதலிய பல்வேறு துறைகளை பகிரங்கமாய் ‘காவிமயமாக்கி’ வருவதும்,
சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்தி பிரதமர் முதல் (கோவாவில் அவர் ஆற்றிய உரை) கடைசி ஆர்.எஸ்.எஸ்.காரர்வரை ஆட்சி பெரும்பான்மையான இந்துக்களுக்கே என்பதுபோல எண்ணி நடந்து வருவதும், வெளியில் பேசுவது ஒன்று, (Open agenda) மறைமுகமாக மற்றொரு திட்டத்தை (Hidden agenda) பேசியும், எழுதியும் வருவதும் வாக்காளர் பெருமக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்
தனது ஆட்சி அதிகாரத்தை வைத்துதான் தேர்தலை முன்கூட்டியே தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது. ஆயிரம் கோடிக்கு அரசு வரிப்பணத்தில் விளம்பரம் செய்து அடாவடித்தனம் செய்தது. ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே கவர்னர்களாகவும் பல்கலைக்கழக மான்யக்குழு, துணைவேந்தர்கள், மற்றும் பெரிய அதிகாரிகளாகவும் பகிரங்கமாக நியமித்தும் தனது எதேச்சாதிகாரத்தை ஜனநாயக வேடம் பூண்டே லாவகமாகச் செய்து வருகின்றது.
“பி.ஜே.பி.யுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி சேரமாட்டோம்” என்று சென்னைக் கடற்கரையில் பிரகடனப்படுத்திய அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை இப்போது மீண்டும் கூட்டணி சேர்ந்து கொண்டது ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிய துரோகச் செயலாகும் என்பதை இக்கமிட்டி தயங்காது சுட்டிக்காட்டுவதோடு, தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறான இந்த பி.ஜே.பி., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை திராவிடர் கழகம் ஆதரிக்காது; எதிர்த்து வாக்களிக்கும் _ தேர்தலில் வாக்களிக்கும் கடமை நமக்கும் உள்ளது என்பதால். தமிழ்நாட்டு மக்களும் இதுபோல பி.ஜே.பி., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கின்றது.
எனவே பி.ஜே.பி. அணியினை (இது நாடாளுமன்றத் தேர்தல் ஆதலால் பி.ஜே.பி.தான் இந்த அணியில் உண்மையான தலைமைக் கட்சியாகும்) தமிழ்நாட்டில் தோற்கடிக்கக் கூடிய வாய்ப்பு, பலம் ஆகியவைகளைப் பெற்றுள்ள தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற அணியான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே’ உண்டு என்பதால் அந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறது” என்ற தீர்மானத்தை நாம் முன்மொழிந்தோம்.
திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வழிமொழிந்து இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
நெய்வேலி தீர்மான பற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்:
நெய்வேலி தீர்மானத்திற்காக இக்கடித வாயிலாக இளவல் வீரமணி அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்பவில்லை நன்றி கூறுவது தேவையுமில்லை. திராவிடர் இயக்க உணர்வுகள் பட்டுப்
போகாமல் காப்பாற்றிட என்ன செய்ய வேண்டுமோ; அதனை அந்த உணர்வுக்கு உரியவர்களில் ஒருவர் தமது தாய்க்கழகமான திராவிடர் கழகச் சார்பில் ஆக்கபூர்வமாகச் செய்திட
முன்வந்துள்ள நிலையில் நாம் ஒருவருக்கொருவர் நன்றி கூறிக்கொள்வது என்பது வெறும் சம்பிரதாயமாகத்தானே ஆகிவிடும்.
நம் எல்லோருக்கும்; ஆம். இந்தப் போர்க்களத்தில் நிற்கும் நாம் விழுப்புண்களைத் தாங்கி வெற்றிப் புன்னகை புரிந்து மதநல்லிணக்க வரலாறு படைப்பதிலும், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்பதிலும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முனைப்போடு ஆற்றும் பணிக்கு எதிர்காலத் தமிழகமே நன்றி கூறக் காத்திருக்கும்போது நமக்குள் எதற்காக நன்றிப் பரிமாற்றம்? தேவையில்லை!
எப்படியோ நெய்வேலித் தீர்மானம் என்பது
நெய் மணக்கும் தீர்மானம் என நெஞ்சுக்கு இதமான சொல்லாரமாக அமைகிறது.” என்று கலைஞர் எழுதியுள்ளார்.”
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 3.3.2004 அன்று பாலன் இல்லத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்,
“”நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அ.தி.அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கண்டித்தும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் நெய்வேலியில் நடைபெற திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தின் இத்தீர்மானத்தை இந்தய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர். நல்லகண்ணு வரவேற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் நமக்கு எழுதிய கடிதத்தில்,
பேரன்புக்கும் பெருமதிக்கும் உரியீர்!
இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.
“நாடு எதிர்பார்த்த நற்செய்தி” என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
திராவிடர் கழகத்தின் கட்டுப்பாடு மிக்க தொண்டரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதுநிலை ஓட்டுநருமான
நா. பாவேந்தர் விரும்பி நெய்வேலி முதலாம் இளநிலை நிருவாக அதிகாரி த. விசயலட்சுமி இணையரின் தமிழ்பொன்னியின் “தந்தை பெரியார் இல்லத்தை” மார்ச் 2 செவ்வாய் மாலை 6:00 மணியளவில் திறந்து வைத்தோம். பாவேந்தர் விரும்பியின் தாயார் லட்சுமி நாராயணசாமி அனைவருக்கும் நன்றி கூறினார். புதிய வீட்டில் கழகக் கொடியை திராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஏற்றி வைத்தார்.
திருச்சி மாநகர மாவட்ட தலைவர், போட்டோ மு. பாலு அவர்கள் உடல்நலக்குறைவேற்பட்டு திருச்சி விசுவநாதன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். செய்தியறிந்து 3.3.2004 அன்று மருத்துவமனைக்குச் சென்று போட்டோ மு.பாலு அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தோம்.
திருவெறும்பூர் தி.மு.க. சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், ஒன்றியப் பெருந்தலைவரும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆகியோருடன் பல ஆண்டு காலம் பாசமோடு இருந்த வருமான கே.எஸ். முருகேசன் அவர்கள் கடந்த பிப்ரவரி 3ஆம் நாள் காலமானார்.
மார்ச் 3ஆம் நாள் திருவெறும்பூர் “பெல்” ஆலையின் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, அன்னாரது இல்லம் சென்று மறைந்த பகுத்தறிவாளர் கே.எஸ். முருகேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். பின்னர் அவரது துணைவியார் திருமதி மனோரஞ்சிதம் அம்மையார், சகோதரர் கே.எஸ். கலியபெருமாள், மகன்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, இளஞ்செழியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.
திருச்சி தொழிலதிபர் வீகேயென் கண்ணப்பன், திருவெறும்பூர் எம்.எல்.ஏ., கே.என். சேரன், க. இராமதாஸ், செயலவைத் தலைவர் இராசகிரி, கோ. தங்கராசு, துணைப் பொதுச் செயலாளர்கள் கலி. பூங்குன்றன், இரா. குணசேகரன், பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியம், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் மு. சேகர், மாவட்டச் செயலாளர் மு. இளவரி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
திருச்சி திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தில் தமிழரல்லாதார் (வடநாட்டுக்காரர்கள்) ஆதிக்கத்தை எதிர்த்து எமது தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிக் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஏராளமான இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
(நினைவுகள் நீளும்)