பெரியார் – வாசகர் உறவு
இதழ்களின் ஆதாரமே வாசகர்கள் தான் என்பதனால் இதழாளர்கள் எப்போதும் வாசகர்களுடனான தமது உறவைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதுண்டு. தந்தை பெரியார் மக்களிடம் இயல்பாகவும், எளிமையாகவும் பழகும் பண்புநலன்கள் கொண்டவர் என்பதனால், மக்களுக்கும் பெரியாருக்குமான உறவு என்பது நட்புமுரண் கொண்ட தோழமையாகவே இருந்தது. இதனால் இதழ்கள் தொடங்கியபோதும் அவர் கடைப்பிடித்த எளிமை, வெளிப்படைத்தன்மை போன்றவை வாசகர்களிடையே அவருக்கு ஈர்ப்பானதொரு உறவைக் கட்டமைத்தது எனலாம்.
நடுநிலை நாளேடு, விருப்பு வெறுப்பற்ற இதழ் என்ற முகமூடிகள் எவையுமில்லாமல் நான் பகுத்தறிவாளன், இறை மறுப்பாளன், வைதீக எதிர்ப்பாளன், பிராமண எதிர்ப்பாளன், ஒடுக்கப்பட்டோர் ஆதரவாளன் என்ற சமூக. அரசியல் நிகழ்ச்சிநிரல்களோடு தான் பெரியார் தனது இதழியல் அடையாளத்தை வெளிப்படுத்தினார்.
இதழியல் உலகில் நடுநிலைமை என்ற போர்வையில் அறம்சார் இதழியல் செய்வதாகக் கூறிக்கொள்ளும் பொய்த்தன்மை எதுவும் தந்தை பெரியாரின் இதழியலில் இல்லை. மாறாக ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிக்கத்தால் அழுத்தப்பட்டவர்கள், புறக்கணிக்கப்-பட்டவர்கள் பக்கமே என் இதழியல் எனப் பெரியார் தமது இதழியல் கோட்பாட்டை உருவாக்கிச் செயல்படுத்தியுள்ளார்.
தான் ஏன் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளேன் என்பதற்குப் பெரியார் தரும் விளக்கம் அவரின் கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் எவ்வித ஒளிவு மறைவுமின்றி முன்வைக்கிறது. தனது இதழ் குறித்துப் பேசும் பெரியார், “தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடை உணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவை, தங்களது மனச்சாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொதுஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்கவேண்டுமென்பதே எமது நோக்கம் ‘(குடி அரசு’ – 2.5.1925) என்கிறார்.
தந்தை பெரியார் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில், அதனை எடுத்துரைக்கும் நிலைப்பாட்டில் மிக உறுதியாகச் செயலாற்றி இருப்பதனைக் காண முடிகிறது. தமது சமூக, அரசியல் இயக்கங்களாகட்டும், இதழியல் முயற்சிகள் ஆகட்டும், அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் பெரியார் இயங்கி இருப்பதனைக் காணலாம். தான் ஏன் ‘குடிஅரசு’ என்னும் பெயரில் தனியாக இதழ் ஆரம்பித்தேன், இதனை எவர் வாசிப்பர் என்ற கேள்வியைத் தனக்குத்தானே எழுப்பிக் கொண்டு விடையளிக்கும் பெரியார், அது குறித்து எழுதுகையில்,
“எனக்கு நினைவுதெரிந்த நாள்முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும்வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும். இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்… பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொது வாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன். இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை; எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன். நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.
வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவை சிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன். நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்” என மிக விரிவாகத் தமது இதழியல் நோக்கத்தைத் தமது நிலைப்பாட்டைப் பதிவிட்டுள்ளார்.
போர்க்களத்திலே நிற்கும் கட்டளைத் தளபதிகள் மட்டுமே தமது போர் வீரர்களை ஊக்கப்படுத்தத் தொடர்ந்து தம்மைச் சுயபரிசோதனை செய்து கொண்டும், புதியபுதிய அணுகுமுறைகளைத் திட்டமிட்டும் தமது தொடர் செயற்பாடுகளை வடிவமைத்து வந்துள்ளனர். அதுபோலத்தான் தந்தை பெரியார் ஒவ்வொரு இதழிலும் தமது கொள்கையின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தி, வாசகர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி உள்ளதைக் காணமுடிகிறது. தமது இதழ் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஒளிவுமறைவின்றி 1.11.1925 நாளிட்ட
‘குடிஅரசு’ இதழில் வாசகர்களிடம் பகிரும் பெரியார்,
‘‘நமது குடிஅரசுப் பத்திரிகை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில் ‘குடிஅரசு’ சிறிதுங் கள்ளங்கபடமின்றி, யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது, தனது ஆத்மாவையே படம்பிடித்தாற் போல் தைரியமாய் வெளிப்படுத்தித் தொண்டு செய்து வந்திருக்கின்றது; வரவும் உத்தேசித்திருக்கிறது. ‘குடிஅரசு’ குறிப்பிட்ட கருத்தைக்கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல், வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற்காக கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர்களுக்குப் போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்டகண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும். குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச்செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று.
பிரதி வாரமும் ‘குடிஅரசு’ ஆத்மாவை வெளிப்படுத்தும்போது கண்ணீர் சொட்டாமலிருக்க முடிவதேயில்லை. இதன்பலனாக உயர்ந்தோரென்று சொல்லிக்கொள்ளு
வோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர்களென்று சொல்லிக்கொள்ளுவோர்களாகிய பல ராஜதந்திரிகளுக்கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிப் பிரச்சாரங்களுக்கு நமது ‘குடிஅரசு’ ஆளாக வேண்டியதாகவும் ஏற்பட்டிருக்கிறது” (‘குடிஅரசு’, 1.11.1925) என உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளார்.
தனது இதழியல் முயற்சியும், கொள்கையும் வெற்றியடைய வேண்டுமென மக்களிடம் நிதிகேட்டு வாசகர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் பெரியார் கொடுத்ததில்லை. அதனைத் தமது இதழில் குறிப்பிடும் பெரியார்.
‘‘அதுவும் ‘குடிஅரசு’வின் கொள்கைக்கு ‘குடிஅரசு’வைவிட வேறு உதவிப் பத்திரிகை இல்லை என்கின்ற நிலையில் தன்னந்தனியாக இருந்து இவ்வளவு காரியமும் செய்துவந்திருக்கிறது. இவ்வளவு காரியத்துக்கும் ‘குடிஅரசு’ ஆனது இந்த 11 வருஷகாலமாய் எவ்வளவோ கஷ்டமும் பொருளாதார நஷ்டமும் அடைந்து வந்திருந்தாலும், ஒரு ஒத்தைச் சல்லியாவது பொதுஜனங்களிடமிருந்து வரியோ, உதவித்தொகையோ கேட்காமலும் எதிர்பாராமலும் இருந்துகொண்டே இந்தக் காரியங்களைச் செய்துவந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இவ்வளவு பெரிய காரியங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை செய்வதற்கும் அதன் கொள்கைகளைப் பரப்ப பிரச்சாரத்துக்கும் உதவிசெய்து வந்த தோழர்கள் சிலர் உண்டு என்பதோடு அதனை ஆதரித்துவந்த வாசகர்களையும் நாம் மறந்து விடவில்லை. அவர்களுக்கு ‘குடிஅரசு’ நன்றி செலுத்த கடமைப்பட்டதேயாகும்.” (‘குடிஅரசு’, 16.8.1936) என்கிறார்.
தாம் மேற்கொண்ட இதழியல் பணிக்கு உற்ற துணையாக நின்ற வசசகர்களிடம் தந்தை பெரியார் ஒளிவுமறைவின்றி இதழ்களின் வளர்ச்சி குறித்து உரையாடினார். அன்றைய இதழ்கள் குறித்தும் தமது கொள்கை குறித்தும் எவ்வித ஊசலாட்டமும் இல்லாமல் தம்முடைய நிலையில் எவ்விதத் தொய்வுமின்றித் தமது இதழ்ப் பணியை இடைவிடாது பெரியார் தொடர்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. அவர் சந்தா சேர்ப்பதில், உடல் தலத்தில் எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்கொண்டார் என்பதனை 8.5.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்திலிருந்து அறியமுடிகிறது.
அத்தலையங்கத்தின் ஒரு பகுதி: ‘‘உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு, தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரணக் குறைவால் மார்புவலி, பல்வலி, சிறிது காதிலும் தொல்லை. குடல்வாதம், அதிக வேலை செய்யக்கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்பான அபிப்பிராயம் முதலிய நெருக்கடியான கஷ்டத்தில் இருக்கின்றது. தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத்தக்க வண்ணம் புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டுவரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை. இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும். இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்குச் சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்” என அமைந்திருக்கிறது.
பெரியார் நிதிச்சுமை, உடல்நலன் இரண்டையும் மிகமிக வெளிப்படையாகத் தமது இதழ்களிலேயே பதிவிட்டு வாசகர்களிடம் பகிர்ந்துகொண்ட வெளிப்படைத் தன்மை அன்றைய இதழியல் உலகம் மட்டுமல்ல இன்றைய ஊடக உலகமும் காணாத அணுகுமுறை ஆகும். “நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்கு சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லை” (குடி அரசு, 5.5.1929) என்னும் உறுதித்தன்மை பெரியாரின் பெரும் பலமாக வாசகர்களால் பார்க்கப்பட்டது. பெரியாரின் ஒளிவுமறைவற்ற இவ்வணுகுமுறைதான் மக்களிடம் அவருக்கெனத் தனித்ததொரு செல்வாக்கையும் ஈர்ப்பையும் உருவாக்கியது.
பெரியார் வெளிப்படையாகவும் மிகைப்படுத்தல் எதுவுமின்றி வாசகர்களிடம் நிகழ்த்திய உரையாடல் என்பது நம்பிக்கை என்னும் மாபெரும் கட்டமைப்பை உருவாக்கியது. நம்பிக்கை என்னும் இக்கட்டமைப்பு தான் பெரியாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருத்துருவாக்கத் தலைவர்களை உருவாக்கியது. இந்தக் கருத்துப்பரவல் படிநிலை அடுத்தடுத்த அடுக்குகளாக மக்கள் மன்றத்தில் ஊடுருவிச் சென்றது. ♦