நேபாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தைச் சேர்ந்த சோழவரம் கிராமத்தில் வசித்துவரும் கோமதி அவர்கள். இவரின் அம்மா சாவித்திரி, அப்பா முனிசாமி, இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி, ஆனந்தி, கோகிலா மற்றும் கோமதி என நான்கு மகள்கள். கோகிலாவும், கோமதியும் இரட்டை சகோதரிகள். கோமதி இரண்டு வயதாக இருக்கும் போதே இவரின் அப்பா இறந்துவிட்டார். 4 பெண் குழந்தைகளை வளர்க்க இவரின் அம்மா ஒற்றை ஆளாக வேலைக்குச் சென்று தனது குழந்தைகளைக் காப்பாற்றினார்.
குடும்பம் மிகுந்த வறுமையான சூழ்நிலையிலும், பள்ளிக்கூடத்திற்கு தவறாமல் சென்று படிப்பார். பள்ளியில் வழங்கப்படும் மத்திய உணவு மட்டும்தான் இவரின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் வகையில் அமைந்தது. ஆனால் தனது கல்விப் பசியை தனது கடும் முயற்சிகள் மூலம் அடைந்து, ஈட்டி எறிதல் விளையாட்டுப் போட்டியிலும் ஈடுபட்டு கவனமுடன் செயல்பட்டுள்ளார்.
ஓலைக் கொட்டகையில் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்துவரும் இவர், தனது வீட்டின் வறுமை நிலையிலும் குறைந்த பொருளாதாரச் சூழலிலும் இவர் படித்துக்கொண்டும், தீவிர பயிற்சி மேற்கொண்டும் சாதித்து வருகிறார்.
இவர் தங்கள் முயற்சி பற்றிக் கூறுகையில், “பெரிதாகப் படித்துச் சாதிக்க எங்களுக்கு வசதி இல்லை என்பதால் உடற்பயிற்சியால் சாதிக்க நினைத்து, தொடர்ந்து உழைத்தோம். நாங்கள் நால்வரும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு, காவல்துறையில் சேர நினைத்தோம். அதற்காக அம்மாவுடன் இணைந்து நாங்களும் கூலி வேலைக்குப் போனோம். அந்த வருமானத்தில் நான் மட்டும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். மற்ற மூன்று சகோதரிகளும் அஞ்சல் வழியில் பி.ஏ., படித்தார்கள்.
கடும் பயிற்சி பெற்று என் பெரிய அக்கா அஸ்வினி, போலீஸ் ஆகிவிட்டார். அடுத்த அக்காவும் தேர்ச்சி அடைந்துவிட்டார். நானும் கோகிலாவும் பல தேர்வுகளில் கலந்துகொண்டு சில மில்லி மீட்டர்கள் உயரம் குறைந்திருந்ததால் போலீஸ் வேலைக்குச் சேரும் வாய்ப்பை இழந்தோம்.
ஈட்டி எறிதல் விளையாட்டில் தொடர்ந்து கலந்துகொண்டு சர்வதேச அளவில் தங்கம் வென்றுள்ளேன்.
விளையாட்டில் எனக்குப் பயிற்சி கொடுக்க யாருமில்லை. நானே வயற்காட்டில் ஈட்டி எறிந்து, கடும் பயிற்சி செய்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன். போட்டிகளில் கலந்துகொள்ள, தரன் என்ற நண்பர் எனக்குப் பேருதவி புரிந்து வருகிறார். நான் பரிசு பெற்று வந்தபோது ஊரே திரண்டு என்னை வரவேற்றது என்னுடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.” என்கிறார்.
இவர் எடுத்துக்கொண்ட பயிற்சி, விடாமுயற்சி, அதே நேரத்தில் போட்டியிலும், தமக்கு இருப்பது ஒரு வாய்ப்பு என எண்ணி அதைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்தி முதல் முயற்சியிலேயே 48 மீட்டர் 83 சென்டி மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதித்துள்ளார்.
உலகளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வெல்ல வேண்டும். அதற்கான பயிற்சி கொடுப்பதற்கு நல்ல பயிற்சியாளர் தேவை. ஆரோக்கியமான உணவு முறைகள் வேண்டும். தற்போது இவர் தேங்காய் உரிக்கும் கூலி வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையில் உள்ளார்.
“எனக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும் எனும் நம்பிக்கை இருக்கிறது. அரசு எங்களுக்கு ஒரு வேலை கொடுத்து போதிய பயிற்சி அளித்தால்,
உலக அளவில் பல சாதனைகளைப் படைப்பேன்”‘ என்கிறார் வீராங்கனை கோமதி. ♦