… தந்தை பெரியார் …
பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன்படியோ வணங்குவதே இல்லை. மற்றெப்படியென்றால், “கடவுளை” மனிதனாகவே கருதிக்கொண்டு, மனித குணங்களையே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்துகொண்டான், தான் எப்படி நடந்து கொள்கிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பனவாகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர்நிலையே வேண்டுமென்கிற பேராசையுடனுந்தான் கடவுளை வணங்குகின்றான்.
இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும், அறிவாளி என்று சொல்ல முடியுமா?
இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்லவேண்டுமே ஒழிய, யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான, யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்கமுடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடு, வாசல், சொத்துகளாவது, மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? இது பொது விளக்கமாகும்.
இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன்மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப்பற்றி விளக்குகிறேன்.
நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன்,
ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும் மிக மிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால், ஒரு தலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை, ஆயிரம் தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை- _ மனிதன்; உடல் _ மிருகம், தலை மிருகம்; உடல் மனிதன் முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகிறான் என்பதே.
கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப் பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள், காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்றுதான் கேட்கிறேன்.
மற்றும் கடவுளுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூஜை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதலி என்றெல்லாம் கதை கட்டி, அதை திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.
மற்றும் பலர் ஒருவேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறு வேளை பொங்கல் அக்காரவடிசில் முதலியன படைத்தல்; பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால் – இந்த முட்டாள்தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் மற்ற யாருக்கும் (முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா என்று
கேட்கிறேன்.
மேலும், இதற்காக ஏற்படும் பொருள் செலவு, நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறம் இருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.
– தந்தை பெரியார்
(உண்மை, 14.5.1970 தலையங்கம்)