-முனைவர் கடவூர் மணிமாறன்
இல்லாத கடவுளரை இருப்பதாக
ஏமாற்றிப் பிழைக்கின்ற எத்தர் கூட்டம்
பொல்லாத கதையளந்து வேதம் என்றும்
பொய்புரட்டு மனுதருமம் என்றும் கூறி
நல்லமனம் தனில்நஞ்சைக் கலந்தார்; நம்மை
நாய்போலும் அவர்பின்னால் அலைய வைத்தார்;
செல்லரித்த ஏடானார் தமிழி னத்தார்!
சீர்திருத்தம் பகுத்தறிவை மறந்தே போனார்!
வெண்தாடிப் பெரியாரோ வெகுண்டெ ழுந்தே
வீழ்ந்திட்ட தமிழினத்தை மீட்க வந்தார்;
உண்மையினை வரலாற்றை உரக்கக் கூறி
உணர்வூட்டி எரிமலையாய்ப் பொங்கச் செய்தார்!
மண்மீதில் பெரும்புரட்சி விளைத்தார்! பொல்லா
மதம்பிடித்தோர் சாதிமத வருணம் என்றே
பண்ணிசைக்க, அறியாமை இருளைப் போக்கப்
பரிதியென வழிகாட்ட அய்யா வாய்த்தார்!
பார்ப்பனர்கள் தாம்பிழைக்க பஞ்சாங் கத்தைப்
பாரென்றார்; திதிகொடுக்க வேண்டு மென்றார்!
ஊர்எங்கும் கோயில்களை எழுப்பச் சொன்னார்!
உலாநடத்தித் தேரினிலே அமர்ந்து கொண்டார்!
நாரனையார் என்றுநமை இழுக்கச் செய்தார்;
நரகமென மோட்சமென நம்ப வைத்தார்!
வேரினிலே வெந்நீரை ஊற்றி நம்மோர்
வீறார்ந்த பண்பாட்டைச் சிதைக்க லானார்!
மடமையிலே மக்கள் தமை அழுத்தி வேண்டா
மடம்நிறுவி அதிபரென மகுடம் பூண்டு
வடமொழியில் தமிழர்தம் குழந்தைக் கெல்லாம்
வாய்நுழையாப் பெயர்சூட்டித் தமிழை மாய்க்கும்
கடனாற்றிக் களிக்கின்ற ஆரி யத்தின்
கயமையினை இன்றளவும் உணர்ந்தோ மில்லை!
இடக்கரெலாம் நடுங்குகிற வைக்கம் வீரர்
இனியவழி தமிழர்நாம் செல்வோம் வெல்வோம்! ♦