அறிவியலின் மகத்தான சாதனையான ஆதித்யா எல் 1 செயற்கைக்
கோள் திட்டத்தின் இயக்குநராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, திருமதி. நிகர்ஷாஜி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும், சூரியக் காற்று போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (I.S.R.O) திட்டமிட்டது. அதன் அடிப்படையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (I.S.R.O) விஞ்ஞானிகளால், (2.9.2023) செப்டம்பர் 2ஆம் தேதி சிறீஅரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆதித்யா (L1) செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிகர்ஷாஜி -தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தை அடுத்த செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தென்காசி, செங்கோட்டையிலுள்ள எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978 – 79ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 433 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். 1981ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1008 மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த நிகர்ஷாஜி, 1986ஆம் ஆண்டு சிறீஅரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பின் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு (I.S.R.O) மாற்றம் செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டார். இவர் சந்திரயான் திட்டங்களிலும் செயலாற்றியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த ஆதித்யா திட்டத்திற்காக அமெரிக்காவில் தேசிய வானூர்தியியல் மற்றும், விண்வெளி நிருவாகத்தில், பயிற்சி பெற்றுள்ளார். இவர் முழுக்க முழுக்க அரசு செலவிலேயே படித்து வந்துள்ளார்.
எட்டு ஆண்டுகளாக ஆதித்யா -L1 திட்டத்தில் பணியாற்றிவரும் விஞ்ஞானி நிகர்ஷாஜி ஆதித்யா – L1 திட்டத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கும் இந்திய ஒன்றியத்திற்கும், பெண்ணினத்திற்கும், பெருமை அளிப்பதாக உள்ளது. மேலும் ஆணாதிக்க ஜாதி, மத, பழமைவாத சிந்தனையால்அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாகவும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை பேணும் திராவிட அரசின் செயல்பாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாயும் அமைந்துள்ளது. ♦