சனாதன எதிர்ப்பு இந்துக்களுக்கு எதிரானது அல்ல!
1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர ஒன்றிய அரசு சட்டம் செய்தால் அதை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்து நிறுத்த முடியுமா?
– கார்த்திக், வேப்பம்பட்டு.
ப: சட்டப் போராட்டத்திற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும். – பல அரசியல் சட்டத்திருத்தங்களுக்குப் பிறகே இது நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்தால் அதில் சட்டப் பிரச்சினைகள் வரக்கூடும்.
உச்சநீதிமன்றம், நீதிமன்றங்கள் எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் என்பது வழக்கின் தன்மையைப் பொறுத்தே அமையும்.
2. கே: திராவிட ஒழிப்பு மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் நம் எதிர்வினைகள் எப்படியிருக்க வேண்டும்?
– சரோஜா, கோடம்பாக்கம்.
ப: தத்துவரீதியில் அமைந்த தொடர் பிரச்சாரம் தேவை.
சும்மா விளம்பரம் பெறவே இப்படி வித்தை. நல்ல லாபம் தரும் அரசியல் பின்னணி இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்!
3. கே: இந்துமதம் சில மதங்களின் தொகுப்பு. அதில் ஆரிய சனாதனமும் ஒன்று. அப்படியிருக்க சனாதன எதிர்ப்பை இந்துக்களுக்கான எதிர்நிலையாகக் கொள்வதும் பிரச்சாரம் செய்வதும் பித்தலாட்டம் அல்லவா?
– மணிமேகலை, தருமபுரி.
ப: சரியான கருத்து. – இப்பிரச்சாரம் கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
4. கே: சனாதனம் என்றால் என்ன? அதன் மனித விரோத கொள்கைகள் என்ன? என்பதை முழுமையாய்த் தொகுத்து, உடனடியாக ஒரு சிறு நூல் வெளியிடுவீர்களா? அதன் ஆங்கில, ஹிந்தி பெயர்ப்புகளையும் உடன் வெளியிட்டால் இந்தியா அளவில் விழிப்பு ஏற்படும் அல்லவா?
– பானுமதி, ஆரணி.
ப: விரைவில் வெளிவரும்.
5. கே: ஓர் இந்துவிற்கு சனாதன மதத்தில் ஏற்படும் கேடுகளைக் கண்டிக்க – களைய உரிமை உண்டு அல்லவா? அப்படியிருக்க அக்கண்டனத்திற்கு எதிராய் பிரதமரின் அறிவுறுத்தல் அபத்தம் தானே?
– வேலவன், குரோம்பேட்டை.
ப: அவரது குரல் (பிரதமரின்) எப்போதும் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ ஆர்.எஸ்.எஸ்’ ஆணைப்படியே!
6. கே: உயர்நீதிமன்ற நீதிபதி மறுஆய்வுக்கு உட்படுத்தும் வழக்குகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டாமா?
– பாஸ்கர், கூடுவாஞ்சேரி.
ப: எல்லாம் அடுத்தடுத்த மேல்முறையீடுகள் – விசாரணை மூலம் தெரியவரக்கூடும்.
7. கே: சனாதனத்தால் பாதிக்கப் படும் ஓர் இந்து, அதை ஒழிக்க வேண்டும் என்பது எப்படி குற்றவியல் வழக்கிற்குரியதாகும்? நீதிமன்றங்களிலும், ஆளுநரிடமும் குற்றச்செயலாக முறையிடுவது எப்படிச் சரியாகும்?
– கண்ணகி, குடியாத்தம்.
ப: நெற்றியடிக் கேள்வி! -நீதிமன்றத்தில் சரியான வாதங்களை வைத்தால் இந்த அநியாயம் அம்பலப்படும்.
8. கே: கொலை செய்யத் தூண்டும் சாமியார்கள்மீது இதுவரை காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சட்டப்படி காரணங்கள்
உண்டா? அல்லது சட்டம் சாமியாருக்குச் சாதகமாக உறங்குகிறதா?
– சங்கர், வேலூர்
ப: சட்டம் குறட்டை விடுவதாக மக்கள் கருதுவர். ஜெயலலிதா பாணி நடவடிக்கையே சரியானது. ♦