– வழக்குரைஞர் பூவை புலிகேசி
தந்தை பெரியார் ஒரு பிறவிச் சிந்தனையாளர். ஆனால், தந்தை பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றும் நாத்திகர் என்றும் எதிர்மறை அடையாளமே அதிகம் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், பெரியார் ஓர் அறிவியல் பார்வை கொண்ட மனித சமத்துவ சிந்தனையாளர். அதற்கான களப் போராளி.
மனித சமத்துவத்திற்குத் தடையாக இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ்மண்ணில் ‘ஜாதி’ என்னும் கொடிய நோய் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றின் பேரால் நியாயம் என்று கற்பிக்கப்பட்டு நிறுவன மயமாக்கப்பட்டுள்ளது. இதனைச் சரியாகக் கண்டுணர்ந்த “சமுதாய விஞ்ஞானி”
தந்தை பெரியார் இந்த ‘ஜாதி’ என்ற கொடூரத்தை முற்றாக அழித்தொழிக்க இரண்டு தளங்களில் களமாடினார். ஆம் “ஜாதி” இயல்பானது என்றும் அதன் கொடூரம் கடவுளால் விதிக்கப்பட்டது என்றும், அதனால் பாதிப்புக்குள்ளான மக்களையே நம்பவைத்த, கருத்தியல் தளத்திலும், ‘‘ஜாதி’’யின் விளைவுகளை எதிர்த்து அறப்போராட்டம் என்ற போராட்டத் தளத்திலும் தொண்டாற்றினார்.
தந்தை பெரியார் ‘ஜாதி ஒழிப்பை” வெறும் பேச்சாக இல்லாமல் செயல்தளத்திலும் செயல்படுத்தினார். தம் ரத்தத்தோடு கலந்தது ஜாதி ஒழிப்பு பெரியாருக்கு. ஆம். பெரியார்தான் காங்கிரசில் சேருவதற்கு முன்பாகவே 1917இல் ஈரோடு நகரமன்றத் தலைவராக இருந்த பொழுது”கொங்குப் பறத்தெரு” என்று இருந்ததை ”திருவள்ளுவர் தெரு” என்று மாற்றம் செய்தார்.
1922இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார்,
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்’
என்பதற்கேற்ப ஜாதியின் ஊற்றுக்கண்ணான ‘மனுதர்மத்தையும்’ அதனை மக்கள் மூளை நிலை நிறுத்தி நியாயப்படுத்தும் “இராமாயணத்தையும்” நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும் என்று பொங்கியெழுந்தார்.
1924இல் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவ சமுதாய மக்கள் நடக்க அனுமதி மறுத்த சனாதனத்தை எதிர்த்து, கேரள மாநிலத் தலைவர்களின் அழைப்பின் பேரில் போராட்டத்தில் இறங்கினார். பெரியார் தலைமையேற்றதற்குப் பிறகே இப்போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றம் பெற்றது. வைக்கம் போராட்டத்தில் இருமுறை கைது செய்யப்பட்ட தலைவர் தந்தை பெரியார் மட்டுமே இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட்டமான இப்போராட்டத்தில் தந்தை பெரியார் 74 நாள்கள் சிறைக் கொடுமைக்காளாகி, வைக்கம் தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கான உரிமையைப் பெற்று தந்து ”வைக்கம் வீரர்” என்று வையகம் அழைக்கலானார்.
1925இல் சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் சனாதனத்தின் பேரால் பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப் பந்தி, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனிப் பந்தி என்ற கொடுமை கண்டு கொதித்தெழுந்து, பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்ற பிரச்சினையை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக அடிகோலியவர் தந்தை பெரியார்.
1926இல் காரைக்குடி சிராவயலில் ‘காந்தி கிணறு’ திறப்பு விழாவில் “ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமம் என்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதிதிராவிடர்கள் நம்மைவிட தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் பார்ப்பனர்கள் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும்.” என்று அம்மக்களிடையே கண்டித்து உரையாற்றினார் தந்தை பெரியார்.
1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டில், “மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு பொதுஜனங்களைக் கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றினார் என்பதை எண்ணுகின்றபோது, வியப்பு மேலிட்டு ஜாதி ஒழிப்பில் பெரியாருக்கிருந்த உள்ளார்ந்த பெருவெறுப்பு புலப்படுகின்றது அதனாலன்றோ இன்று இந்தியாவில் பெயருக்குப் பின்னாலிருந்த ஜாதி ஒட்டுகளைத் தூக்கியெறிந்த மாநிலமாக தமிழ்நாடு தனித்து திகழ்கிறது.
அதனைத் தொடர்ந்து அனைத்து ஜாதியினருக்கும் கோயில் வழிபாட்டில் சமத்துவம் கேட்டார். அவரது சுயமரியாதை இயக்க தளபதிகள் ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் 1937 ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றில் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அது ஜாதி இந்துக்களான பண்ணையார்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அதனால், அவர்கள் இழுத்து வரப்பட்டு, கட்டிவைத்து அடித்து, சாணிப்பால் குடிக்க வைத்து, மொட்டை அடித்து ஊர்வலமாக நடத்தியுள்ளனர். இக்கொடுமையைக் கேட்ட பெரியார் இதனை தனது விடுதலை ஏட்டில் செய்தியாக அம்பலப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்களை நடத்தி தாக்கப்பட்ட தோழர்களைத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய வைத்து, நடந்த கொடுமைகளை நேரடியாக விளக்க வைத்தார்.
இரயில் நிலையங்களில் இருந்த பிராமணாள், இதராள் பிரிவினை தந்தை பெரியார் முயற்சியால் 1941இல் ஒழிக்கப்பட்டது.
தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பின் ஒரு திட்டமாக 5.5.1957 முதல் பார்ப்பனர் உணவு விடுதிகளில் பெயர்ப் பலகையில் இடம்பெறும் ஜாதி உயர்வைக் காட்டும் ‘‘பிராமணாள்’’ எனும் பெயர் அழிக்கும் போராட்டத்தினை நடத்தினார்.
ஜாதி ஒழிப்பின் உச்சமாக 26.11.1957 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடே ஏன் இந்தியாவே திகைத்தது. சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று அதுவரை சட்டத்தில் இல்லை.
சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பதற்கு அன்றைய சென்னை மாகாண அரசு தேசிய அவமதிப்பு சட்டம் 1957 (THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR BILL 1957) என்ற சட்ட மசோதாவை நிறைவேற்றினார்கள். பெரியார் முன்கூட்டியே கைது செய்யப்பட்டும் எத்தனையோ அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் 1957 நவம்பர் 26 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைத் தீயிட்டு எரித்தனர்.
ஜாதி ஒழிப்புக்கான தந்தை பெரியாரின் போர் இறுதிநாள் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.
தந்தை பெரியாரின் அயராத தொடர் பணிகளுக்குப் பிறகும் இன்று மீண்டும் “ஜாதியை” நிலை நாட்ட சனாதன சக்திகள் சதிராடுகின்றன. ‘ஜாதி’யை நியாயம் என்னும் சனாதனத்தை ஒழித்து சமத்துவத்தை நிர்மாணிக்க உறுதியேற்போம்.
வாழ்க பெரியார்! ♦