– தந்தைபெரியார்
கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே “கடவுள் தத்துவத்திற்கு’’ ஏற்ப கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரச்சாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்ளுபவன், அல்லது கடவுளுக்காக என்று கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள், மற்றும் அதற்காக கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காக என்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாண யத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத் தையோ ஆதாரமாக வைத்து கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவதில்லை.
“கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை’’ என்று ஆரம்பித்து, “கடவுள் சர்வ வல்லமை உடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர், “கருணையே வடிவானவர்’’, “அன்பு மயமானவர்’’, “அவரின்றி அணுவும் அசையாது’’ என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுள்களுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்துவிட்டு, இந்தக் குணங்களுக்கும், தன்மைகளுக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு, பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன்மூலம் கடவுளைப் பரப்புவதென்றால், இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கின்றேன்.
இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் -_ ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா?
இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பெருமைக்காக, தங்கள் வாழ்க்கை நலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகின்றார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்?
இன்று, இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துகள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து, கூட்டத்தைக் கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல இலட்சம் ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும், அதுபோலவே, மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு, கோடிக்கணக்கான மக்களை இழிஜாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர்.
“அன்பும், கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்’’ யுத்தம் செய்ததாகவும், கோடிக்கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக் கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்தி சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விபசாரம் செய்ததாகவும் நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு, இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக, மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கின்றேன்.
இப்படி கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர்களாகின்றார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்கவேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால், சுமார் 40 கோடி மக்களும், இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர், எம்.ஏ., பி.ஏ., படித்த மக்களும், புலவர்கள், வித்துவான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும் _ கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் காரணம் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பி வருகின்றவர்களும், இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும், இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி, உருவம், உற்சவம், நடப்பு, தேர்த்திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?
இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண், பெண் கடவுள்களைக் கற்பித்து, அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களைக்) கற்பித்துப் பரப்புகின்றார்கள் என்றால், இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும் என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகின்றேன்.
இப்படி நான் எழுதுவதில் சிலர் “மனம் புண்படாதா?’’ என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால், ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.
“கோவில்கள் கள்ளர் குகை’’ என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும், இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடி மக்கள் “கடவுளுக்கு’’ மேலாகக் கருதுகின்றார்கள்.
“கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள், மடையர்கள்’’ என்று கூறிய முகமது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும், இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாகக் கருதுகின்றார்கள். இவ்வளவு ஏன்?
நம் கண் முன்னால் “கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி’’ என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உள்பட ஏராளமான மக்கள் “மகாத்மா’’ என்கின்றார்கள்.
உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக் கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்துவர இடம் ஏற்பட்டதே தவிர, வேறு காரணம் என்ன?
சிந்தியுங்கள்!
மற்றும் இந்தப்படியான நம்மை உலகம்-_ அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள்!
எவ்வளவோ பொறுமைக்கும் மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கின்றேன்
– தந்தை பெரியார்
(உண்மை, 14.3.1970 தலையங்கம்)