ஒரே கொள்கையில் இருப்பார்கள், சுமூகமான நட்பு இருக்காது. மாறுபட்ட கொள்கையில் இருப்பார்கள், நல்ல நட்பு இருக்கும்! இங்கு பிரச்சினை கொள்கையல்ல; அணுகுமுறை தான்!
சிலர் தீவிரமாகக் கொள்கையைப் பேசி, கடுமையாக விவாதம் செய்து, அதை வாக்குவாதமாக மாற்றி கொள்கையில் வெற்றி பெற்றுவிடுவார்கள்; ஆனால் நண்பர்களை இழந்துவிடுவார்கள்! வேறு சிலரோ கொள்கையிலும் வென்று, நண்பர்களையும் தக்க வைத்துக் கொள்வார்கள்! காரணம் சிறப்பான அணுகுமுறை!
பெரியாரை நுணுக்கமாக அணுகினால் அவர் பல முனைவர் பட்டங்களையும், மனித குலத்தின் மொத்த மனோதத்துவங்களையும் பட்டறிவால் கற்றுத் தேர்ந்தவர் என்பதை அறியலாம். அதனால் தான் மனிதரில் அவர் பெரியார்!
கொள்கைகள் பேசி அவர் நிறைய வென்றுள்ளார்! பேசாமலும் அவர் வென்ற இடங்கள் அதிகம். இடங்கள் என்பதை “மனங்கள்” என்றும் கொள்ளலாம்! காரணம் பெரியாரின் ஈடுஇணையற்ற அணுகுமுறை தான்!
“ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்” என்பார்கள். பெரியாரின் வார்த்தைகள் எப்போதும் வென்றவைதான்! எதிரிகளின் மனதைக் கூட கொன்றவை அல்ல! பல்லாயிரம் ஆண்டு கால பார்ப்பனியச் சித்தாந்தங்களைச் சிதறடித்தவர். ஆனால், எந்த ஒரு பார்ப்பன மனிதருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காதவர்!
பெரியாரைக் கடுமையாக வெறுக்கும் எவரும், ஒருமுறை நேரில் சந்தித்துவிட்டால் “காரணம் இன்றி வெறுத்துவிட்டோம்”, என்கிற குற்ற உணர்வுக்கு ஆளாவார்கள். இதற்கான சான்றுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிரிகளாக இருந்தாலும் எழுந்து மரியாதை செய்வது, வாங்க, போங்க என அழைப்பது, தத்துவங்கள் தவிர தனி மனிதர்கள் மேல் கோபம் கொள்ளாதது என முழுமையான மனிதராக வாழ்ந்தவர் பெரியார்!
ஒழுக்கம் முக்கியமா? கொள்கை முக்கியமா? என்றபோது, ஒழுக்கமே முக்கியம் என்றவர் பெரியார். எங்கள் கொள்கையில் கூட இல்லாமல் போகட்டும்; ஆனால் ஒழுக்கம் முக்கியம் என்றார்.
“கடவுள் இல்லை என்கிறீர்கள்; திடீரென கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?”,
எனக் கேட்கிறார்கள். எதிர்பாராத கேள்வி, ஒரு விநாடி தடுமாற வைக்கும் கேள்வி. ஆனால் பெரியார் அசரவில்லை! கடவுள் வந்தால் “இருக்கிறார்” என்று சொல்வேன். எனக்கு எந்தநட்டமும் இல்லை என்றார். பெரியாரைக் கோபப்படுத்த எவ்வளவோ கேள்விகள் கேட்கப்பட்டன. பெரியார் திருப்பி கோபப்பட்டதே கிடையாது. மாறாக, சிந்திக்க வைத்ததுதான் அவரின் அணுகுமுறை!
படிப்பு முக்கியமா? இயக்கம் முக்கியமா? என்ற போது படிப்புதான் முக்கியம்
என்றார். நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த இயக்கமே பாடுபடுகிறது என்றார். ஜாதி, மத அமைப்புகள் தங்களை நாடி வரும் மக்களை இப்படி இணைத்துக் கொள்ளாமல் நல்வழி காட்டிய வரலாறு உண்டா? திராவிடர் கழகத்திற்கு உண்டு; பெரியாருக்கு உண்டு!
வருமானம் முக்கியமா? கொள்கை முக்கியமா? என்ற போது கூட பொருளாதாரத்திற்கு முதலிடம் தந்தார் பெரியார். ஒரு கொள்கையாளர் என்பவர் கல்வி கற்று, பொருளியல் ஈட்டி, ஒழுக்கமுடன் வாழ்வதே முழு வாழ்வு என்றார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் அதற்குப் பெயரிட்டார்!
ஏதோ தம் கொள்கைக்கு ஒரு “கூட்டம்” வேண்டும் என்று கருதியவர் இல்லை அவர்! ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும், மானமும் அறிவும் கொண்ட வாழ்க்கை வாழவேண்டும், சமூகத்திற்காய் பாடுபட வேண்டும் என விரும்பினார். அதனால் தான் நான் சொல்வதை நம்பாதீர்கள்; சிந்தியுங்கள் என்றார்! இப்படி சொன்ன தலைவரை உலகில் பார்க்கமுடியுமா?
பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் ஆண்கள், பெண்கள் அனைவரையும் ஒன்றாய் அமர வைத்து ஆரோக்கிய சமூகம் படைத்தவர் அவர். இதுவரை ஒரு தவறை விரல் நீட்டி யாரும் சொல்லிவிட முடியுமா? பெண்ணுரிமை குறித்துப் பேசிய போது, ஆண்கள் அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை. அமைதியாகப் பதில் கொடுத்தார் பெரியார். நான் பெண்ணுரிமை பற்றிப் பேசும்போது உனது தாயாரை, தங்கையை, இணையரை, மகளை நினைத்துக் கொள் என்றார்.
பெரியாரைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இருக்கக்கூடும்; ஆனால், அவர் கருத்துகளை மறுப்பார் யாருமிலர்! கடுமையாகப் பாதிக்கப்பட்ட பார்ப்பனர் வீட்டுப் பெண்களுக்கும் பெரியார் கருத்து தானே “விடுதலை” கொடுத்தது!
பார்ப்பனியக் கருத்துகளைப் பெரியார் எதிர்த்தார். ஆனால் பார்ப்பனர்கள் நன்றாக வாழக் கூடாது, பொருளீட்டக் கூடாது என்றெல்லாம் அவர் எண்ணியதே இல்லை.
கடவுள் இல்லை என்றவரை, கடவுளைப் படைத்தவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்றெல்லாம் சொன்னவரை, ஆன்மிகவாதிகளும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
அவரின் அணுகுமுறை தான்!
அவரின் நேர்மை தான்!! ♦