கைவல்ய ‘சாமியார்’ (22.8.1877)

2023 ஆகஸ்ட் 16-31,2023 பெட்டி செய்திகள்

மலையாளக் கள்ளிக்கோட்டையில் 22.8.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள்(கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்பு
வரை பள்ளிக்கல்வி பயின்றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்கள் தமது இளமைப் பருவத்தில், அவரது கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர். பிற்காலத்தில் இயக்கத்தின் விலை மதிக்கவொண்ணா உடைமையாய் கைவல்யம் அவர்கள் திகழ்ந்தார்.

கைவல்ய சாமியார், அய்யா அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் தமிழர்களின் அகத்தோடு நிறையப் பேசினார். அய்யா அவர்களின் இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திருமண ஏற்பாட்டின்போது அதை வரவேற்று இவர் எழுதிய கட்டுரை கருத்துக்கினிமை பயப்பதாகும்.

முதுமைத் தளர்ச்சி மிகுந்ததால் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட கைவல்ய சாமியார் தமது பேரறிவுக் கருவூலத்தை சுயமரியாதைக்காரர்தம் சொத்தாக்கிவிட்டு இறுதி விடைபெற்றார்.

வாழ்க கைவல்ய சாமியார் புகழ்!