தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்!
1. கே: மகளிர் உரிமைத் தொகை சரியான தகுதிகளின் அடிப்படையில் தர உறுதியளிக்கப்பட்ட நிலையில், எல்லா குடும்ப அட்டைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களுக்கு எதிரானதுதானே? நிரந்தர மாத வருவாய் உள்ளவர்களுக்கும், வசதியானவர்களுக்கும் இத்தொகை கொடுக்க வேண்டும் என்பது தப்பு அல்லவா? – க. பன்னீர்செல்வம், பொதட்டூர்.
ப: அடாவடித்தனம்; எதைச்செய்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஏதாவது குறை சொல்லும் குள்ளமதியினரின் குறுக்குச்சாலைப் பொருட்படுத்தாதீர்!
பெர்னாட்ஷா சொன்னார்:“செய்ய முடிந்தவர் சாதிக்கிறார்! செய்ய முடியாதோர் போதிக்கிறார்!’’ அவ்வகையே இது!
2. கே: அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் படம் நீதிமன்றங்களில் கட்டாயம் இருக்க, சட்டப்படி நிரந்தரத் தீர்வு என்ன? – சே. கோபால், காட்டூர்.
ப: ஏற்கெனவே ஆணை உள்ளது; செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. செயல்படுத்தாதது அலட்சியம். கண்டிக்க, தண்டிக்க முன்வரவேண்டும்.
3. கே: நாடு தழுவிய விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசுதானே பொறுப்பு? அப்படியிருக்க இயன்ற அளவு விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டம் நகைப்பிற்குரியதல்லவா? – வெ. மாரிமுத்து, திண்டிவனம்.
ப: அரைவேக்காடு அண்ணாமலைகளுக்கும் அவர்களது தாசானுதாச கூட்டணி அடிமைகளுக்கும் இந்தக் கேள்வி அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.
4. கே: சிறுகுறு தொழில்களைப் பாதிக்காத வகையில் மின்கட்டண உயர்வை நிர்ணயிக்க தாங்கள் அரசை வலியுறுத்துவீர்களா?
– எஸ். பார்த்தசாரதி, அம்பத்தூர்.
ப: நிச்சயம்; முதலமைச்சரும் மின்துறை அமைச்சரும் இதில் கவனம் செலுத்துவது சமூகநீதி மட்டுமல்ல; தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் முக்கியத் தேவையாகும்.
5. கே: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு புதுச்சேரி மாநிலத்தில் 10 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் 10 சதவிகிதம் ஆக உயர்த்துவதுதானே சரியானதாக இருக்கும்? – பி. முரளி, திண்டுக்கல்.
ப: ஏற்கனவே அ.தி.மு.க. அரசு நியமித்து அறிக்கை தந்த ஜஸ்டீஸ் கலையரசன் குழுவின் பரிந்துரையும் அதுவே! செய்யலாம்; செய்யவேண்டும்.
6. கே: தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் மின்சாரம், பாலம், சாலை வசதிகள் ஆகியவை இல்லாமல் இருப்பதை முதலில் சரிசெய்ய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டியதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவீர்களா? – வை. பார்த்திபன், தருமபுரி.
ப: உடனடியாக “அற்புதங்கள்’’ செய்துவிட அலாவுதீனின் அற்புத விளக்கு தமிழ்நாடு அரசிடம் இல்லை. நிதி நெருக்கடி நிலையில், மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாகச் செய்யும் திராவிட மாடல் அரசான மு. க.ஸ்டாலின் அரசு.
7. கே: அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை சிலர் கண்டிக்கிறார்கள். இது குறித்து தங்கள் கருத்து என்ன? – எஸ். வைத்தியலிங்கம், திருத்தணி.
ப: நோயாளிகளின் விருப்பமும், சிலருக்கு ஏற்கெனவே பழக்கமான மருத்துவமனை, தொடர் சிகிச்சைஅளிக்க ஏற்கெனவே அவரை அறிந்த மருத்துவர்கள் என, பலவும் தேவைப்படலாம்; இதனை வற்புறுத்த முடியாது; அந்த அத்தனை வசதிகளும் அரசு மருத்துவமனையிலும் வரவேண்டும்; என்று விரும்புவது தேவை!
8. கே: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அளவற்ற கட்டணக் கொள்ளை; அதனால் நூற்றுக்கணக்கில் நிரப்பப்படாத காலியிடங்கள்; மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ இடங்களைக் கைப்பற்றுதல், நுழைவுத் தேர்வு முறைகேடுகள் இவற்றைக் காரணங்காட்டி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா? – கே. கண்ணன், ஆத்தூர்.
ப: மக்கள் மன்றத்தின் எழுச்சிதான் இறுதித் தீர்வுக்கான சரியான முறை. உச்ச நீதிமன்றம் எப்படித் தீர்ப்பளிக்கிறது என்பது அய்யத்திற்
குரியது. இந்த ஒற்றைத் தேர்வை உறுதிப்படுத்தி நடத்த அந்த நீதிமன்றம்தானே இன்னமும் இதைக் காக்கிறது! எனவே, ஏமாற்றம் மறுபடியும் ஏற்படக்கூடாதல்லவா? ♦