“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!’’
“சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!’’
பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள்.
“அஷ்டமா சித்துபுரி அய்யனே போற்றி! துஷ்டர் தம் துடுக்கடக்கும் தூயனே போற்றி! கஷ்டங்கள் தீர்த்திடும் எங்கள் கண்கண்ட தெய்வமே போற்றி| போற்றி!!’’
இந்தப் பாடலை சாமியாரின் சிஷ்யன், சம்பந்தம் உரக்கப் பாடினான். சம்பந்தத்தின் முக விகாரங்கள்… தானே வரவழைத்துக் கொண்ட அங்க சேஷ்டைகள்… போற்றிப் பாடலுக்கும் புது மெருகு கொடுத்துப் பக்தர் கூட்டத்தைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தின.
நமப் பார்வதி பதே’’ ஒரே பேரொலி, திடீரென அமைதி. சின்னப்பண்ணை முதலியார் சாமியாரின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு மலர்களைத் தூவினார்; பக்தர்களும்… பண்ணையாரைப் பின்பற்றிப் பாதபூஜை செய்து… மலர்… காசு… பணம்… இவைகளால் அர்ச்சித்து நின்றனர். ‘ஓம் சங்கரா சிவ’ இந்த முணுமுணுப்போடு சங்கிலிச்சாமி தம்மை வணங்கி எழுந்தவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
பக்தர்கள் பலப்பல வகைகள்; கோரிய வரங்கள் பலப்பல ரகங்கள்.
“வழக்கில் வெற்றி பெற வேண்டும்‘‘
“வாதநோய் தீரவேண்டும்‘‘
“பிள்ளையில்லை. அருள் தேவை.’’
“கொள்ளை போய்விட்டது; கள்ளனைக் காட்டுக!’’
எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து… விபூதி; அதைச் சாமியார் தர, பக்தகோடிகள் வாங்கிக்கொண்ட காட்சியில் ஒரே பக்தி வெள்ளம்.
‘சம்பந்தம்!’ என்றார் சாமியார்.
“ஸ்வாமி!’’ என்று அலறி விழுந்தான் சிஷ்யன். அதற்குள் சின்னப்பண்ணை முதலியார் கைகட்டி வாய் புதைத்துக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டார்.
“சங்கரன் உத்தரவிடுகிறான்; இன்றைய அருள் போதுமாம்‘‘ சங்கிலிச் சாமியாரின் இனிப்பான பேச்சு இது!
“அப்படியே, சரி அய்யனே!’’ இது சம்பந்தம்.
“சாமி சயனிக்கப் போகிறது… ஜனங்களெல்லாம் செல்லலாம்‘‘ இது முதலியார்.
“அவரைப் பாரு!… அப்படியே தேவலோகத்திலிருந்து குதிச்சு வந்தவரு மாதிரி இருக்கார்.’’
“செக்கச் செவேர்னு… சிவபெருமான் மாதிரி! அடடா! என்ன அருள்! என்ன அருள்! அந்தக் காவி ஆடைக்கும்… கருணை வழியும் முகத்திற்கும் கைலாசபதி வந்ததுபோல் இருக்கிறதப்பா!’’
“பொம்பளைப் பக்கம் அவரு பார்த்துப் பேசும்போது அவரு வாயெல்லாம் புன்சிரிப்பு! ஆனா… எலுமிச்சம்பழம் மாதிரி, கொழு கொழுன்னு இருக்கார். எல்லாம் தெய்வப் பொறப்புடீ தெய்வப் பொறப்பு!’’
“நம்மாத்துக்காரருந்தான் இருக்கார். நாலு வார்த்தை இப்படி அழகப் பேசுவாரா?
“டேய்… தீராத வினையெல்லாம் இவரு விபூதியினாலே தீருமடா’’
“ஆள் சாமான்யமா? ஆயிரம் ஜனங்களை ஆபத்திலேயிருந்து காப்பாற்றினாரப்பா!’’
“அதென்ன ஆபத்து?’’
“இது தெரியாதா?… இவருக்கு ஏன் சங்கிலிச்சாமின்னு பேரு தெரியுமா?’’
“சங்கிலிக் கருப்பன் பூஜை செய்வார்.’’
“அட மூடம், அதில்லை, ஒரு நாளு மெட்ராஸ் மெயிலு… வெகு வேகமாக மெயில் மாதிரி போச்சாம்.’’
“எந்த ஊருக்கு?’’
“மெட்ராசுக்கப்பா?’’
“உம்; சொல்லு?’’
“நம்ப சாமியும் அதிலே இருந்திருக்கு. சாமி… இருந்தாப்போல இருந்தது…’’
“மறைஞ்சுட்டதா?’’
“இல்லப்பா… ரயிலில் இருக்கிற அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்திருக்கு.’’
“உடனே ரயில் நின்று இருக்குமே!’’
“ஆமாம்; ரயில் நின்றதும்…. கார்டு வந்து ‘யாரப்பா ரயிலை நிறுத்தியது?’ அப்படின்னு கேட்டிருக்காரு.’’
“சாது என்ன சொன்னது?’’
“நான் தானப்பா; தண்டவாளத்தில் ஆபத்தப்பா… உடனே போய்ப் பாரப்பா_ என்று சொல்லியிருக்கு சாமி’’
“ஆஹா ஹா… என்ன சக்தி! என்ன சக்தி!’’
“எல்லோரும் போய் தண்டவாளத்தைக் கவனித்துப் பார்த்தா… தண்டவாளத்தை வெட்டி… ரயிலைக் கவுக்கச் சூழ்ச்சி பண்ணியிருக்கு.’’.
“அடடா!’’
“உடனே ஜனங்களெல்லாம்… சாமி காலில் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் பண்ணி எங்களைக் காப்பாத்தின கடவுளேன்னு கட்டிப்பிடிச்சுகிட்டாங்களாம்.’’
“த்சு! த்சு!… சாட்ஷாத் கடவுளே அவதாரம்!
என்னமோ! இந்தக் கலிகாலத்திலே நமக்கெல்லாம் காணக் கொடுத்து வச்சிருக்கு.’’
“அதிலேருந்துதான் சங்கிலிச்சாமின்னு பேரு! நம்ப சின்னப் பண்ணை முதலியாரும்… அதே ரயிலில் இருந்திருக்காரு. அவருக்குச் சாமி மேலே… ஒரு மோகம் விழுந்துட்டுது.’’
“ஓ… அதான்… முதலியார் இவ்வளவு தடபுடல் பண்றார்!… இல்லேன்னா… இந்தக் கருமி… இப்படிக் காசு செலவு பண்ணமாட்டாரே!’’
சின்னப் பண்ணையின் மேல் மாடியில் பட்டு மெத்தை ஒன்றில் சங்கிலியானந்தசாமி சயனித்திருக்க… சம்பந்தம் அடிவருட… பண்ணைக்
காரர்… ‘பங்கா’ போட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு மெத்தையில் பண்ணைக்காரரின் குச்சுநாய் படுத்துக்கிடந்தது.
‘ஓம்… சங்கராசிவ’ சாமியாரின் வாயிலிருந்து கால்மணி நேரத்துக்கொருமுறை வெளிக்கிளம்பும் வார்த்தைகள் இவை!…
“என்ன முதலியார்! நமது பயணம் விரைவில் நடைபெறவேண்டுமென்று பரமன் ஆணையிடுகிறானே.’’
“ஆண்டவன் ஆணையா?… அவசியம் புறப்பட வேண்டும்‘‘ _சம்பந்தம் துடித்தான்.
முதலியார் எழுந்து நின்று, “ஸ்வாமி நாளைக் காலையில் முழுவதும் வந்துவிடும். பிறகு அவ்விடத்துப் பிரயாணத்தை ஆரம்பித்தால்….’’ என்று முடிப்பதற்குள்.
“ஆகாது… ஆகாது. எம்பெருமான் சாமிகளைக் கோபிப்பார். அற்ப விஷயத்துக்காகச் சாமிக்கும் சாக்ஷாத் பரமேஸ்வரனுக்கும் மனத்தாங்கல் ஏற்படக் கூடாது.’’
சம்பந்தம் தத்தோமென ஆடினான்; அவனைச் சாமியார் கையமர்த்தி, “சம்பந்தம்!… பொறு! முதலியார் நம்பால் காட்டும் அன்புக்கு நான் அவரை ஏமாற்றக்கூடாது. சரி… சங்கரனிடம் ஒரு நாள் தவணை கேட்கிறேன். முதலியாரே! இன்று வரை எவ்வளவு கிடைத்திருக்கிறது?’
முதலியாரின் முகத்தில் களை உதயமாகிறது.
“ஸ்வாமி…. ஆயிர ரூபாய் எடைதான் வெள்ளி கிடைத்திருக்கிறது. காலையில் ஆயிர ரூபாய் எடை வரும்.’’
“சந்தோஷம், மொத்தம் இரண்டாயிர ரூபாய் எடை எல்லாவற்றையும் தங்கமாக்கிவிட்டால்… போதுமல்லவா?’’
முதலியார் தோளைச் சொறிந்துகொண்டே தலையசைத்துப் பல் இளித்தார்.
சாமியாரின் நெற்றியில் சில சுருக்கங்கள் மின்னி மறைந்தன.
“சம்பந்தம்!’’
“ஸ்வாமி!’’
“நாளைக் காலை பூஜை முடிந்ததும் யாரும் மேல் மாடிக்கு வரக்கூடாது.’’
“உத்தரவு.’’
“நீயுந்தான்.’’
“ஆகட்டும்.’’
“இரவு முழுவதும் நான் தனித்திருந்து சிவ பூஜை செய்ய வேண்டும்.’’
“ஆக்ஞை ஸ்வாமி’’
“முதலியார்…’’
“ஸ்வாமி…’’
“தெரிந்ததா?’’
“ஆஹா…’’
“இரவு பூஜை முடிந்து _ மறுநாள் உதயமானதும்… நீர் மாடிக்கு வரவேண்டும்… உமது விருப்பம் நிறைவேறியிருக்கும். நீர் கேட்பது தங்கம்தானே?’’
“ஆமாம்… அதைவிட உயர்ந்ததாய் ஆக்க முடிந்தாலும்…!’’
“கவனிப்போம்… வைரப் பாளமாகக்கூட ஆக்க முடியும்: சிவனருள் எப்படி இருக்கிறதோ…!’’
முதலியார் ஒரு கிண்ணம் பாலை சாமியிடம் நீட்டினார். அதைச் சிஷ்யன் சம்பந்தம் வாங்கிச் சாமியின் உதட்டில் வைத்தான்…
மறுநாள் காலையில் வழக்கம்போல் பூசையெல்லாம் முடிந்து வெள்ளிக் கட்டிகளும் வந்து சேர்ந்தன. சாமியார் அந்த வெள்ளிப் பாளங்களைக் கண்குளிரப் பார்த்து,
“மூடாத்மா ஞானாத்மாவாக மாறுவது போல் _ நாஸ்திகன் ஆஸ்திகனாய் மாறுவது போல் ‘ஏ’ வெள்ளியே! நீ தங்கமாகப் போகிறாய்!’’
இதைச் சாமியார் சொல்லும்பொழுது சம்பந்தம் தலையாட்ட முதலியார் முகமும் அகமும் மலர்ந்த காட்சி வெகு ரம்மியமாயிருந்தது.
சாமியார் பூஜை செய்ய உட்கார்ந்தார். சாம்பிராணிப் புகைச்சல், ஊதுவத்திகளின் மணம், அரைத்த சந்தனத்தின் வாடை… மல்லிகை மாலைகள் தந்த குளிர்ந்த வாசனை…
“மாடியில் ஒரு சொர்க்கலோகத்தையே சாமி உண்டாக்கிவிட்டது’’ என்றான் சம்பந்தம்.
“சொர்க்கலோகம் இருந்தால்தானே சொக்கநாதன் வருவான்’’ என்றார் முதலியார்.
முதலியாருக்கு இரவெல்லாம் ஒரே கனவு. தங்கமாக மாறிய வெள்ளிக்கட்டிகளின் பிரகாசம், அந்தத் தங்கக்கட்டிகளை உடைத்து வெளியூர் சென்று வியாபாரம் செய்வது, நல்ல விலைக்கு விற்றபிறகு… பெரிய குபேரனாவது, குபேரன் ஆனதும் உள்ளூர்ப் பெரியபண்ணையை ஏளனம் செய்வது இந்தக் கனவுகளில் புரண்டு கொண்டிருந்தார். தங்கத்தை வியாபாரம் செய்யப் போன இடத்தில்…. போலீஸ்காரர் கையில் சிக்கி விட்டதாக ஒரு பயங்கரக் கனவால்… பண்ணையார் பதறியடித்து எழுந்தார். கண்களை நம்ப முடியாமல் கசக்கிக் கொண்டார். பொழுது விடிந்தது. தங்கத்தைப் பார்ப்பதற்காக சம்பந்தத்தையும் அழைத்துக்கொண்டு மேல் மாடிக்கு ஓடினார்.
சாம்பிராணி வாடை நிரந்தரமாகப் பரவி… முதலியாருக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுத்தபடி இருந்தது. மாடியில் நுழைந்த முதலியார் ‘சாமி… சாமி’…. என்று கத்தினார். அவ்வளவுதான்; மூர்ச்சையாகிவிட்டார்.
சம்பந்தம் முதலியாரைத் தூக்கித் தேற்ற ஆரம்பித்தான். மாடியிலிருந்து தோட்டத்துப் பக்கம் தொங்கிக் கொண்டிருந்த அழுத்தமான கயிறு காற்றில் அசைந்தது. முதலியார் மூர்ச்சை தெளிந்து சம்பந்தத்தை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில்
“ஹே சம்பந்தம்! இரண்டாயிர ரூபாய் எடை
வெள்ளி போச்சே!’’ என்ற சோகம் பிரதிபலித்தது.
“பேராசை பெருநஷ்டம் ‘‘ என்பது போலிருந்தது சம்பந்தத்தின் பதில் பார்வை.
“சம்பந்தம்! கருவாடு களவு கொடுத்த பாப்பாத்தி கதையாக அல்லவா என் கதை முடிந்துவிட்டது?’’
“ஆமாம்… வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.’’
“ஜெயிலுக்குப் போகவேண்டுமப்பா.’’ உம்… இந்தச் சண்டாளன் இப்படிப் பண்ணி விட்டானே!’’
“சம்பந்தம்… நீயும் இந்தச் சதிகாரனுக்கு உடந்தையா?’’
“முதலியார்!… என்னை மன்னித்துவிடுங்கள். நானும் உடந்தையாகத் தானிருந்தேன். அந்தப் படுபாவி என்னையும் ஏமாற்றிவிட்டான்.’’
“பரம பக்தர்கள் போல் நடித்தீர்களே!’’
“நடிக்காவிட்டால் நீங்கள் நம்புவீர்களா?’’
“அட பாவி… ரயிலில் அவனைப் பார்த்தது முதல் என்னைச் சனியன் பிடித்துக்கொண்டதே.’’
“சனியனல்ல! சரியான ஆசை பிடித்துக் கொண்டது. முதலியாரே! ஆசையால் விளைவதுதானே ஆபத்துகள்?’’
“போதும்பா வேதாந்தம். உங்கள் வேதாந்தத்-தைக் கேட்டுத்தான் இவ்வளவு விபரீதம்.’’
“இனி நான் வேதாந்தம் பேசமாட்டேன். அந்தச் சூதனைத் தொலைக்க வழி தேடுவேன்.’’
“கடலில் போன என் சொத்து இனிக் கரையேறுமா?’’
“சம்பந்தத்தின் கப்பல் ஒரு துரும்புவிடாமல் அரித்துக் கொண்டு வந்துவிடும். கலங்காதீர் முதலியாரே!’’
“வெள்ளிக் கட்டிகளப்பா வெள்ளிக் கட்டிகள்!’’
“வைரக் கட்டிகளாகத் தருகிறேன் வியாகூலப்படாதீர்.’’
“ஏன்… உனக்கு ஏதாவது தங்கக் கட்டி வேண்டுமோ?’’
“தவறாக என்னை மதிக்காதீர்… முதலியாரே!… என் கதையைக் கேட்டால் என் மீது பரிதாபப்படுவீர்.’’
“எந்த இழவையாவது சொல்லித் தொலை.’’
“நான் ஒரு சாதாரண மனிதன்.’’
“அதுதான் தெரியுமே…’’
“சங்கிலிச் சாமியும் ஒரு சாதாரண மனிதன்…’’
“யார் இல்லையென்றது?’’
“ரயில் விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி-னாரே…’’
“அதில்தானே நானும் மயங்கிவிட்டது!’’
“ஜால வித்தைக்காரன், என்னமோ மந்திரம் பண்ணி மயக்கி விட்டான்.’’
“மந்திரமல்ல… மகா பெரிய தந்திரம்.’’
“தந்திரமா?’’
“ஆமாம், தண்டவாளத்தைப் பெயர்த்து வைத்தது யார் தெரியுமா?’’
“அந்தத் தடியன் தானா?’’
“இல்லை… நான்தான் முதலியாரே! இரவெல்லாம் கஷ்டப்பட்டுத் தண்டவாளத்தை உடைத்தேன். அவன் சங்கிலியைப் பிடித்து இழுத்துச் சாமியாராகிவிட்டான்.’’
“பிழைப்பதற்கு வழி… பிரமாதமாகத்தான் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.’’
“வழி பிரமாதந்தான்! அந்த வஞ்சகப் பயல் என் வாயிலும் மண்ணைப் போட்டுவிட்டானே!’’
“சம்பந்தம் பேச நேரமில்லை, அவனைப் பழிவாங்க வேண்டும். என்ன யோசனை?’’
“முதலியார்…! அருமையான யோசனை இப்-பொழுதே மேல் மாடிக் கதவை மூடிவிடுங்கள்.’’
“ஏன்?’’
“ஜனங்கள் வந்து… சாமியார் எங்கே என்பார்கள். சாமி மேல் மாடியில் யோகானந்தம் புரிகிறது. கடவுளோடு பேசுகிறது, கதவைத் திறக்க முடியாது என்று கூறிவிடுவோம்!’’
“வெள்ளியாலேயே நீர் வீடு கட்ட நான் வழி செய்கிறேன். நான் சொல்வதை முதலில் கேட்க வேண்டும்.’’
“சரி… கேட்கிறேன்.’’
“நீ எங்கே போகிறாய் சம்பந்தம்?’’
“நான் போகுமிடம் எனக்கே தெரியாது. ஒரு வாரத்தில் உமக்கு ஒரு பார்சல் வரும். அதை யாருக்கும் தெரியாமல் மேல் மாடியில் கொண்டுபோய் உடைத்துப் பாரும்.’’
“நான் இழந்த வெள்ளிக் கட்டிகளின் பார்சலா?’’
“ஆமாம். நான் வருகிறேன். பார்சல் வரும் வரையில் மேல் மாடி திறக்கப்படக் கூடாது.’’
சம்பந்தம் மறைந்து விடுகிறான். முதலியார் முகத்தில் சிந்தனைக் கீறல்கள்! சங்கிலிச்சாமியார் நிஷ்டையில் இருப்பது ஊரெங்கும் பரவிவிட்டது.
“சாமி கடவுளோடு பேசுகிறது.’’
“ஒரு வேளை சொர்க்கத்துக்குப் போனாலும் போய்விடும்!’’
“சிவனோடு பேசுகிறாரோ? விஷ்ணுவோடு பேசுகிறாரோ? யார் கண்டது?’’
“சக்தி பூஜைக்காரரப்பா! தேவியோடுதான் பேசுவார்’’
சின்னப் பண்ணை முதலியாருக்கு ஒருநாள் ரயில்வே பார்சலில் ஒரு பெட்டி வந்துவிட்டது.
முதலியார் ஆவலோடு பெட்டியை வீட்டில் இறக்கச் சொன்னார்.பெட்டியின் மேல் ‘வாசனைப் பொருள்’ என்ற எழுத்துக்கள் தீட்டப்பட்டிருந்தன.
இரவு எப்பொழுது வரும் என்று முதலியார் ஏங்கிக் கிடந்தார்.சில மணி நேரங்களில் இரவும் வந்துவிட்டது.வேலைக்காரர்கள் எல்லோரும் அன்று சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.பார்சலில் இருந்து ‘கமகம’வென்று வாசனை வந்து கொண்டிருந்தது.
திடீரென்று சம்பந்தமும் வந்து சேர்ந்தான்.
“சம்பந்தம்! எல்லாம் வெள்ளிக் கட்டிதானே!’’ என்றார் ஆவலாக முதலியார்.
சம்பந்தம் தலையாட்டிக் கொண்டே “ஆமாம் தூக்குங்கள்’’ என்று கூறினான் ஆணையிடும் தோரணையில்.
இருவரும் பார்சலைத் தூக்கினார்கள். உழைப்பு என்பது என்னவென்று தெரியாத முதலியார்… பெட்டியின் கனத்திலிருந்து ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார். வியர்வைத் துளிகள் சொட்டச் சொட்ட மேல்முச்சு வாங்க… ‘அப்பாடா’ என்று பார்சலை மாடியில் இறக்கினார். “வேலையின் கஷ்டம் தெரிகிறது’’ என்றான் சம்பந்தம் கிண்டலாக.
“வெள்ளியின் கஷ்டமப்பா!’’ என்று முதலியார் முணுமுணுத்துக் கொண்டார்.
சம்பந்தம் பார்சலை உடைக்க ஆரம்பித்தான். அவசரந் தாங்காத முதலியார், “அப்பா சம்பந்தம்! அது வெள்ளிதானே?’’ என்று துடித்தார்.
“ஆமாம்‘‘ சம்பந்தம் பெட்டியை உடைத்து விட்டான். முதலியார் மூர்ச்சை போட்டு விழுந்து
விட்டார். பிறகு எழுந்தார். அவர் அலறிவிடாமல் வாயைப் பொத்திவிட்டான் சம்பந்தம்.
பெட்டிக்குள் புழுப்போலச் சுருண்டு கிடந்தது ஒரு மனித உருவம்!
ஆமாம் சங்கிலிச் சாமியாரின் சடலந்தான் அது!
“என்னடா சம்பந்தம்?’’ முதலியார் பதை
பதைத்துத் துடித்தார். “என் வெள்ளியும் போனது மல்லாமல் என்னையும் கொலைகாரனாக்கி விட்டாயே… அய்யய்யோ!’’
சம்பந்தம் இதைச் சொல்லிக் கொண்டே சங்கிலிச் சாமியின் பிணத்தை எடுத்து நிஷ்டையில் இருப்பதுபோல் நீட்டி மடக்கி வைத்தான். பக்கத்திலிருந்த விளக்கை ஏற்றி வைத்தான். முதலியாரை இழுத்துக்கொண்டு வெளியே வந்து மாடிக் கதவையும் மூடினான். முதலியார் மிரள மிரள விழித்தார்.
சம்பந்தம் பொதுவாகச் சொன்னான்:
“முதலியாரே! அஞ்சாதீர் இரண்டாயிர ரூபாய் எடை வெள்ளியை நீர் இழந்தீர். இருபதாயிர ரூபாய் எடை நான் தருகிறேன்.’’
காலை மலர்ந்தது. சாமியார் நிஷ்டை கலையப் போகிறதாம். கதவைத் திறக்கப் போகிறார்களாம். கனவில் பண்ணை முதலியாரிடம் கதவு திறக்க உத்தரவாகிவிட்டதாம். இந்த விளம்பரத்தையொட்டி முதலியார் வீட்டின்முன் ஒரே ஜனத்திரள்! கதவு திறக்கப்பட்டது. எல்லோரும் மேல் மாடிக்குச் சென்றார்கள். சம்பந்தம் கோவெனக் கதறினான். முதலியாரும் அழுதார்… இருவரும் நாடகத்தைத் திறம்பட நடித்தார்கள்.
அங்கே ஒரு கடிதம் கிடைத்தது. அதில்,
“நாம் இனி இந்த நாற்ற உடலுடன் வாழ விரும்பவில்லை. ஆவியாக இருந்து அருள் புரிவோம். மக்கள் என் சமாதியை வழிபட்டுச் ககல சம்பத்தும் பெறுவார்களாக!
இங்ஙனம்,சங்கிலிச்சாமி’’
என்று எழுதியிருந்தது. சம்பந்தம் அதைப் படித்துக் காட்டினான்.
ஏக ஆடம்பரமாக சங்கிலிச்சாமியின் சமாதி விழா நடைபெற்றது. சமாதியில் மக்கள் இறைத்த பணம் அன்றைக்கே ஆயிரம் ரூபாய்! அடுத்த ஆண்டு சங்கிலியானந்த சாமி குருபூஜை!
சாமிகளுக்கு மாபெரும் மடம், சம்பந்தம் மடத்தின் சாமி! முதலியார் மடத்தின் சொந்தக் காரர்! இரண்டாயிர ரூபாய் வெள்ளிக்கட்டி நஷ்டம்!
ஆனால்… இருபதாயிரம் ரூபாய் எடை வெள்ளிக்கட்டி லாபம்! அதுவும் வளர்கிற லாபம்… மக்களின் மடமை இருக்கும் வரை அந்த லாபம் குறையாது. ♦