தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்த தோழர்களின் பாசம்!
– கி. வீரமணி
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.11.2003 அன்று திங்கள் காலை 10 மணிக்கு எமது தலைமையில் நடைபெற்றது.
8.11.2003 சனியன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றைத் தவிர மற்றத் தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வரவேற்று, கழக அமைப்பில் செய்யப்பட்ட மாறுதல்களையும் ஒருமனதாக ஏற்றுச் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஆசிரியரை வரவேற்று அழைத்துச் செல்லும் தோழர்கள்.
அந்த ஒரு தீர்மானம் என்ன?
இளைஞர்களைத் தலைமைப் பொறுப்புக்குப் பயிற்சி அளிக்கும் உயரிய நோக்கில் பொதுச்செயலாளர் பொறுப்பினை நான் மாற்றி அறிவித்ததுதான்!
அறிவிப்புச்செய்த அடுத்த நொடியே, நமது கழகக் குடும்பத்தவர்களில் மிகப் பலர் கண்ணீரும், கம்பலையுமாக அழுதும், கூச்சலிட்டும் இல்லை, இல்லை நீங்கள்தான் தொடரவேண்டும்¢ நீங்கள் சொல்லும் எல்லா ஆணைகளையும் ஏற்றுக்கொள்ளும் எங்களால் இதை மட்டும் ஏற்க எங்கள் மனம் ஒப்பவில்லை. உங்கள் காலத்தில் நீங்கள்தான் பொதுச் செயலாளராகத் தொடர வேண்டும்’ என்று வற்புறுத்திய வண்ணம் (சுமார் 1 மணிநேரத்திற்குமேல்) இந்தக் காட்சி தொடர்ந்தது.
கழகக் குடும்பங்களின் பாசம் என்னை நெகிழ வைத்தது!
உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது! பெரிதாக நாம் என்ன செய்துவிட்டோம்; இவ்வளவு பாசத்தைக் கொட்டும் நம் கழகக் குடும்பங்களின் நம்பிக்கையை நாம் எவ்வளவு பெரிய வைப்பு நிதியாகப் பெற்றுள்ளோம், என்று எண்ணி எண்ணி உணர்வு அலைகள் என்னுள்ளத்தில் மோதின.
அவர்கள் அன்புக்கு நான் என்றும் ஓர் அடிமைதான்!
தந்தை பெரியார் பணி முடிக்க எள்ளளவும் சபலங்களுக்கும் ஆளாகாது, பழி சுமந்தாலும், பணி முடிப்பதே நம் லட்சியம் என்று உயிரையும், மானத்தையும் (இரண்டையும் முக்கியமாகக் கருதும் சராசரி மனிதர்களைத் தாண்டி) இழக்கவும் தயாரான நிலையில் உள்ள வாழும் ஒரு பெரியார் தொண்டன்தானே நான். வேறு என்ன சிறப்புத் தகுதிகள் எனக்கு உண்டு?
எனது உடல்நிலை மிக நன்றாக உள்ளது உள்ளமும் நாளும் பக்குவப்பட்ட உறுதி மலையாய் வளருகிறது. உழைக்கும் ஆர்வமோ குன்றாதிருக்கிறது. இயக்கமும் சிறந்த கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது. இந்த நிலையில்தான் உங்களுக்குப் பிறகு – யார்?’ என்ற வழமையான ஒரு பொதுக் கேள்விக்கான விடையுடன் என் பணியைத் தொடரவும், ஏராளமான இளைஞர்கள் கூட்டு மனப்பான்மையுடன், கருத்திணக்கத்தின் அடிப்படையில் செயலாற்றத் தயாராகி இதோ பயிற்சிக் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் என்று காட்டுவதற்காகத்தான், இந்த புதிய அறிவிப்பினைச் செய்து _ புதிய மாற்றத்தினை புதிய ஏற்பாட்டைச் செய்தோம்.
நான் செய்தியாளர்களிடம் 8.11.2003 அன்று மாலை திருச்சியில் அளித்த அதே விளக்கத்தினை இவர்களுக்கும் என்னால் முடிந்த அளவுக்குச் சொன்னேன். நாள் முழுவதும் இதிலேயே ஓடிக்கொண்டிருந்தது!
வெளிநாடுகள், உள்நாட்டுத் தொலைபேசி அழைப்புகள் இதே பாணியில் எனக்கு வந்த வண்ணம் இருந்தன.
அங்கிருந்த உணர்வுபூர்வமான, நெகிழ்வான, பாசச் சூழலில் விரிவான விளக்கம் அளிக்க இயலாத நிலையில் 10.11.2003 ‘விடுதலை’யில்,
“இந்தப் புதிய ஏற்பாடு என்பது எந்த வகையிலும் நான் ஒதுங்கிக்கொள்ளவோ, தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளவோ செய்யப்பட்டதல்ல!
என் மூச்சு அடங்கும்வரை என்னுடைய இயக்கப் பணிகளை, தந்தை பெரியார் கொள்கைகளை அகிலம் முழுவதிலும் கொண்டு செல்லுவதுதான் என் பணி; என்னை அதிலிருந்து மாற்றிட, நிறுத்திட எவராலும் முடியுமா?
இளைஞர்களை நாம் வாழும்போதே பொறுப்புகளில் அமர்த்தி, நாமும் உடன் பணி செய்து, கூட்டுப் பணியைத் தொடங்கி நடத்திவிட்டால், நம் இயக்கம் இதன்மூலம் மேலும் பலமாகும் என்பதால்தான் இதைச் செய்துள்ளோம்.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், வாழும் காலத்திலேயே, இப்படி இரண்டாவது தலைமுறையை உருவாக்கி இயக்கத்தவர்களுக்கும், நாட்டிற்கும் அவர்களை அறிமுகப்படுத்திட, இது ஒரு பயிற்சிப் பட்டறை போன்றதே! சிங்கப்பூர் நாட்டின் லீ குவான் யூ, போல் அண்மைக்கால உதாரண மாமனிதர்கள் பொது வாழ்வில் உண்டு.
நிருவாகத் திறமை பெற புதியவர்களுக்கு வாய்ப்புத் தருவதற்கான இந்த ஏற்பாடுபற்றி நான் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிந்தித்து வந்தேன்.
இதுபற்றி நான் மற்றவர்களிடம் கலக்கவில்லை என்பது உண்மை. ஏன் நான் பொதுச்செயலாளராக துரை. சக்கரவர்த்தியை அறிவிக்கும் நிமிடம்வரை அவர்களுக்கே கூடத் தெரியாது. அதற்காக தோழர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
தலைவராகத் தேர்வானமைக்கு வாழ்த்து
தலைமை என்பது நம் இயக்கத்தில் ‘பதவி நாற்காலி’ அல்ல; பொறுப்புகளைச் சுமக்கும் சுமைதாங்கி. ‘பழி’யேற்கத் தயாராக இருக்கும் பொறுப்புதான் இது! மாறாகஅலங்காரம் – அதிகாரம் கொண்ட அணிமணியல்ல!
இளைஞர்கள் ஏராளமாக இயக்கத்தினை நோக்கி வருகின்றார்களே அது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், பக்குவப்படுத்தப்பட்ட, நம் உலையில் அவர்கள் பழுக்கக் காய்ச்சப்பட்டு பதப்படுத்தப்பட வேண்டாமா? அந்த எண்ணத்தினால் விளைந்ததே இந்த ஏற்பாடு’’ என்று அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தேன்.
அதன்பிறகுதான், 17.11.2003 அன்று தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி எம்மை கழகக் குடும்பத்தினர் மட்டுமன்றி. கழக நலன், பொதுநலன் இவற்றில் அக்கறை கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், பொதுப்பணிகளில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெருமக்கள், தமிழகம் தழுவிய அளவில் மட்டுமல்லாது, பல நாடுகளைச் சேர்ந்த பெருமை வாய்ந்த தமிழின உணர்வாளர்கள் ஆகியோர்களின் ஆலோசனை நல்லெண்ண வற்புறுத்தல் அடிப்படையிலும், கழகப் பொறுப்பாளர்கள், கழகக் குடும்பத்தினர்களின் கனிவான தொடர் வேண்டுகோளின் அடிப்படையிலும், வலிமை வாய்ந்த தலைமை இயக்கத்திற்கு மிகமிகத் தேவை என்கிற காலகட்டத்திலும், திராவிடர் கழகத்திற்குத் தலைவர் என்கிற பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவது மிகமிக அவசியம் என்று கருதி, எம்மை திராவிடர் கழகத்தின் தலைவர் என்கிற பொறுப்பினை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமை செயற்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானித்து நிறைவேற்றி திராவிடர் கழகத் தலைவர் பொறுப்பினை ஏற்கும் கட்டாயம் நிகழ்ந்தது.
எனவே, நம் இயக்கக் குடும்பத்தவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள் என்னவென்றால், இயக்கப் பணிகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துங்கள்.
1948இல் இயக்கத்தின் பெட்டிச் சாவியை அண்ணாவிடம் தருகின்ற மாநாடு என்று பேசிய நம் தலைவர் தந்தை பெரியார், ஈரோடு (ஸ்பெஷல்) மாநாட்டின் தலைவரான அண்ணாவை ஒரு திறந்த காரில் அமர்த்தி, அவர் நடந்து வந்ததை அருகில் இருந்து பார்த்து, உரையைக் கேட்டு பயிற்சி பெற்றேன். பெரியார் தந்த புத்தியைத்தானே இதிலும் பயன்படுத்தியுள்ளேன்?
நம் பிரச்சாரம் நம் ஏடுகள்; நம் நூல்கள் – நம் கொள்கைகள் பரவுவதை மேலும் தீவிரப்படுத்துவதற்கு உங்கள் பங்கையும், பணியையும் ஆற்றுவதற்கு, புதியவர்களுக்கு ஊக்கம் தந்து, இயக்கத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பான பொன்னேட்டை இணையுங்கள்.
வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டும்தான் முடியும் என்று தன்னம்பிக்கையின் தள நாயகர்களாக வீறுநடை போடுங்கள்; வெற்றிகளைக் குவியுங்கள்!’’ என்று கேட்டுக்கொண்டேன்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுடைய தந்தையார் சுயமரியாதை வீரர் மானமிகு மா.கந்தசாமி (வயது94) அவர்கள் 20.11.2003 முற்பகல் 11:30 மணியளவில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
பெரியவர் கந்தசாமி அவர்கள். தமிழரசு கழகத்திற்கு மயிலாடுதுறை நகர தலைவராக இருந்தவர். அங்குள்ள திருவள்ளுவர் நகர படிப்பகத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக தலைவராக இருந்தவர்.
திருத்தணியில் நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் (சிங்கப்பூரில்) 1944இல் சேர்ந்து பணியாற்றிய வீரர். எல்லைப் போராட்ட “தியாகிகளுக்கான’’ அரசு உதவிப் பணம் பெற்று வந்தவர்.
தந்தை பெரியார்,
மா.கந்தசாமி அய்யா
அன்னை மணியம்மையார் மற்றும் எமது பேரன்பிற்குப் பாத்திரமானவர்.தனது இறுதி மூச்சு அடங்குகிறவரை தீவிர பகுத்தறிவாளராக வாழ்ந்தவர்.
மறைந்த பெரியவர் மா. கந்தசாமி அவர்களுக்கு தனம் (வயது 84) என்ற துணைவியார், க. நாகராசன்,க.கிருஷ்ணமூர்த்தி, க.பூங்குன்றன்,
க.இராசேந்திரன், க.தமிழரசி, க.சுசீலா, க.கலைச்செல்வி, க.தமிழ்ச்செல்வி ஆகியோர் அவர்களுடைய செல்வங்களாகும்
செய்தியை அறிந்ததும் அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினோம்.
திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் 27.11.2003 காலை 10:00 மணிக்கு தஞ்சாவூர் கவிதா மன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைபெற்றது. ராசகிரி கோ. தங்கராசு தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் 17.11.2003 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்களுக்கு ஏற்பளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயற்குழுவின் தீர்மானம் வலியுறுத்தியபடி நான் திராவிடர் கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டமைக்கு தலைமைச் செயற்குழுக் கூட்டம் தனது நன்றியினைத் தெரிவித்தது.
மேலும் நான், கழகத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்று கழகத்தை வழிநடத்த வேண்டுமாய் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அப்பொதுக்குழுவில் நான் உரையாற்றுகையில்,
“கட்டளையிடுங்கள், கட்டளையிடுங்கள் என்று இதுவரை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். நான் கட்டளை இட்டேனா இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கழகத் தோழர்களாகிய நீங்கள் கட்டளையிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் இட்ட கட்டளைக்கு நான் அடிபணிந்திருக்கின்றேன்.
பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பல பொறுப்புகளில் பல பேரை அமர்த்துகின்றோம்.
அப்படிப்பட்ட நிலையிலே மேலும் இந்தப் பிரச்சாரங்கள் ஒருங்கிணைந்து நடைபெறவேண்டும் என்ற எண்ணத்தோடு 52 மாவட்டங்களை உள்ளடக்கிய நிலையிலே தமிழ்நாடு அய்ந்து கோட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. இது ஒரு புதிய அறிவிப்பு. (பொறுப்பாளர்கள் _ இதற்குரிய கோட்ட அமைப்பு ஏற்கனவே ‘விடுதலை’யில் வெளியிடப்பட்டுள்ளன). இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் அனைவரும் இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பார்கள்.
பொறுப்புகள், மாற்றங்கள் என்பது ஒரு பெரிய முக்கியமான காரியமல்ல. செயல் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றங்கள்.
பெரியார் தொண்டர்களுக்கு நான் தொண்டன். நீங்கள் என்னதான் வேண்டுமானாலும் என்னை அழைத்தாலும் நான் பெரியாருக்குத் தொண்டன். அன்றும், இன்றும், என்றும் நான் பெரியாருடைய தொண்டன்தான். பெரியார் தொண்டன் மட்டுமல்ல. ‘பெரியார் தொண்டர்களுடைய தொண்டனுக்கும் தொண்டன் நான்_
அன்றும், இன்றும், என்றும்.எனவே, என்னைப் பொருத்தவரையிலே எனது இறுதி முச்சு இருக்கிறவரை அந்த மனநிலையிலிருந்து என்னால் விடுபட முடியாது.
நான் தெளிவாகச் சொல்லுகின்றேன். நான் இயக்கத்தை விட்டு போய்விடப் போகிறேன்; மற்றவர்கள் அந்தப் பொறுப்பை பார்த்துக் கொள்வார்கள் என்று நான் 8-ஆம் தேதி சொல்லவில்லை.
இன்னும் கேட்டால் ஓய்வாக இருக்கப் போகிறீர்களா? என்றும் பல நண்பர்கள் கேட்டார்கள். நான் ஓய்வாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்தப் பணிமாற்றம் செய்யவில்லை. இந்த பணி இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டும். அதிகமாக உழைப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்தோம்.
அதுமட்டுமல்ல- ஒரு தவறான நிலை என்னவென்று சொன்னால், ஒரு தலைமைப் பொறுப்பிலே இருக்கக் கூடியவர்கள் அவர்கள் காலத்தில் அடுத்தவர்களை அறிமுகப்படுத்துவது என்பதைச் செய்தால், ஏதோ ஒரு மிகப்பெரிய வரலாற்றுக் குற்றம் செய்துவிட்டதைப் போல ஒரு கருத்து நம்முடைய நாட்டிலே சரியாகவோ, தவறாகவோ உள்ளே நுழைந்துவிட்டது.
தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர் கி. வீரமணி நூலகம் திறப்பு விழா.
எனவே, அப்படிப்பட்ட கருத்தின் அடிப்படையில் கொஞ்சம் மாறும் பொழுது, எல்லாத் தோழர்களுக்கும் ஒரு வகையான அதிர்ச்சியும் சங்கடமும் ஏற்படுகின்றது.
நம்முடைய மனநிலையைப் பொருத்தவரையிலே முன்பு எந்த மனநிலையோடு பணியாற்றினோமோ, அதே மனநிலையில்தான் இப்பொழுது, எப்பொழுதும் இருப்போம் என்று நாம் நினைத்துக் கொள்கின்றோம்.
இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லுகின்ற பொழுது நீங்கள் ஆற்றவேண்டிய பங்கு என்ன? பணி என்ன என்பதை ஒவ்வொருவரும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பல மடங்கு வேகமாகப் பணி செய்ய வேண்டும். அதுதானே நம்முடைய நோக்கம்.
ஆகவே, அந்தப் பணியினை நீங்கள் அருள்கூர்ந்து செய்ய வேண்டும். உறுதியாகப் பணி செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய வேண்டுகோள்.’’ என்று நெகிழ்வோடு உரையை நிறைவு செய்தேன்.
வேலூர் சத்துவாச்சாரியில் தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 11.12.2003 சிறப்புடன் நடைபெற்றது.விழாவையொட்டி ஊரெங்கும் கழகக் கொடித் தோரணங்கள் காட்சி அளித்தன.
விழாவிற்கு நகர திராவிடர் கழகத் தலைவர் ச.கி. செல்வநாதன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் இரா. கணேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் வி. சடகோபன், செயலாளர் பெருமாள், திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.கே.சி. எழிலரசன், சென்னை மாவட்ட பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், மாநில கலைத்துறை அமைப்பாளர் இனமான நடிகர் மு.அ. கிரிதரன், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி ஆகியோர் உரையாற்றியபின், நாம் நிறைவுரையாற்றினோம்.
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில் பெரியார் படிப்பகத்தை திறந்து வைத்தேன். 28.11.2003 அன்று மாலை 5:00 மணியளவில் பாப்பாநாடு எஸ்.பி. பாஸ்கரின் பல்சுவை நிகழ்ச்சியோடு விழா சிறப்பாக தொடங்கியது.
கண்ணந்தங்குடி கீழையூர் இரா. ஜோதி ஆம்பலாம்பட்டு அ. வீரசக்தி ஆகியோரின் இணையேற்பு விழா
தந்தை பெரியார் படிப்பகத்தினையும், மார்பளவு தந்தை பெரியார் சிலையினையும் அனைவரின் பலத்த கரவொலிக்கிடையில் நாமும் “தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகத்தை’’ நீதியரசர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களும் திறந்துவைத்தோம்.
இந்த நிகழ்வில் அன்றைய திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களின் சகோதரி ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி கீழையூர் இரா.ஜோதி ஆம்பலாப்பட்டு அ.வீரசக்தி ஆகியோர் மணவிழா தலைமையேற்று நடத்தி வைத்தேன்.
பெரம்பலூர் ஆர். நாராயணசாமி _ சந்திரா ஆகியோரின் செல்வன் என். பிரகாஷ், கோவில்பட்டி ஏ. இராமசுப்பு – விஜயலட்சுமி ஆகியோரின் செல்வி ஆர்.இந்திரா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த நிகழ்வை 30.11.2003 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
பெரியார் நகர்வு மருத்துவமனை தொடக்க விழா
மகளிர் மேம்பாட்டு மற்றும் மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்) மற்றும் புற்றுநோய் தடுப்பிற்கான பெரியார் அமைப்பின் சார்பில் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பெரியார் நகர்வு மருத்துவமனை தொடக்கவிழா உரத்தநாட்டில் 8.12.2003 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.
கனடா நாட்டைச் சேர்ந்த நியூ ஃபவுண்ட்லாண்ட் மாநில துணைக் கல்வி அமைச்சர் கேதரைன் கோகன், பேராசிரியை பமீலா வால்ஷ், பன்னாட்டு உறவு அதிகாரி திருமதி.லாரா கோவான், பேராசிரியர் மெர்வின் ஜே. மெக்கின்டையர் ஆகியோர் சென்னை பெரியார் திடலுக்கு 10.12.2003 அன்று வருகை தந்தனர். அவர்களை அங்குள்ள மருத்துவமனையைப் பார்வையிடச் செய்தோம். அதன்பின் அவர்கள் தந்தை பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.
(நினைவுகள் நீளும்)