கசாப்புக் கடைக்காரனுக்கு ஷீவகாருண்ய விருது!
1. கே: ஒன்றிய அரசின் பழிவாங்கும், அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதால், அனைத்துக் கட்சிகளும் பொது மக்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டியது கட்டாயம்தானே?
– ரமணி, காஞ்சிபுரம்.
ப : பொதுத் தேர்தல் விரைவில் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் வருமோ என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து ஆயத்தமாகி வரும் நிலையில், அதற்குரிய காலம் கனிகிறபோது மக்கள் தெருவுக்கு வரும் நிலையும் வருவது உறுதி!
2. கே: அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஒபாமா இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் சார்ந்து விடுத்துள்ள செய்தியைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– சாந்தி, குடியாத்தம்.
ப : யதார்த்தத்தைப் புரிந்துள்ளார் ஒபாமா! எனவே உண்மைக்காக வாதாடுகிறார்!
3. கே : கீதா பதிப்பகத்திற்கு ‘காந்தி அமைதி விருது’ அளிப்பது, காந்தியை இன்னொரு முறை கொல்வதாகாதா?
– பிருந்தா, வண்ணாரப்பேட்டை.
ப : இது, கசாப்புக் கடைக்காரருக்கு ஜீவகாருண்ய விருது அளித்து பட்டமளிப்பது போன்ற ஒன்றாகும்!
4. கே: பழனி கோயிலுக்குள் பிற மதத்தவர் வரக்கூடாது என்பது சட்டப்படி சரியா? அப்படியானால் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற வழிபாட்டிடங்களுக்கு இந்துக்கள் எப்படிச் செல்கிறார்கள்?
– வெங்கடேசன், ஆரணி.
ப : பழனி கோயில் பற்றி ஈரோடு பெரும் புலவர், ஆய்வாளர் செ. ராசு அவர்கள் எழுதியுள்ளது ‘விடுதலை’யில் வெளிவந்துள்ளது.அதுவே இதற்கு ஆதாரப்பூர்வவிடையாகும்!
5. கே: இந்தியாவில் ஜாதிமத பாகுபாட்டிற்கு இடமே இல்லை என்று மோடி அமெரிக்காவில் கூறியுள்ளது சரியா?
– கோவர்தன், வையாவூர்.
ப : குடியரசுத் தலைவர்கள் இருவரும் பட்டியல் ஜாதி என்பதால் ஒரிசா கோயிலுக்குள் போகவிடாமல் முன்னால் நிறுத்தப்பட்டதே பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிரான சான்று ஆகும். உண்மையே உன் கதி இப்படியா?
6. கே: தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை! முதல்வர் இருக்கையில் இருக்கவே அசிங்கமாக இருக்கிறது என்று பி.ஜே.பி. நெருக்கடி குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ராஜேந்திரன், சேலம்.
ப : ‘பட்டபின் புலம்பல்; கெட்டபின் ஞானம்’‘கூடா நட்பு கேடாய் முடியும்’ பாடம் கற்பாரா முதல்வர் ரங்கசாமியார்!
7. கே: தெற்கு ரயில்வே மண்டலத்தில்கூட இரயில்வே அவசர அழைப்பு எண்ணான 139-க்கு இந்தியிலேயே பதில் வருவது ‘அவசர’ அழைப்பை கேலிக்கூத்தாக்குவதல்லவா? மாநில மொழிகளில் பதில் தர என்ன செய்யவேண்டும்?
– இன்பமணி, பட்டாபிராம்.
ப : இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
8. கே: ஆளுநர் மீண்டும் மீண்டும் தேசியக் கல்விக் கொள்கை பற்றியே பேசுகிறாரே மாநிலக் கல்விக் கொள்கை என்னாவது?
– க. கார்த்திகேயன், கோவர்த்தனகிரி.
ப : அவரது எஜமானர் குரல் – ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் -எஜமானர் விசுவாசம் அந்த ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு அதிகம் என்று தெரிகிறது.
அரசியல் சட்டத்தை அவர் மதிக்கவில்லை.
9. கே: ஆளுநர் வருவதால் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பு உடைக்கு தடை விதித்திருப்பது ஏற்புடையதா? சட்டப்படியானதா?
– ரா.முருகேசன், கோயில்பதாகை.
ப : ‘விடுதலை’யின் கண்டனத்தால் அது குப்பைக்கூடைக்குப் போய்விட்டதே அடுத்த நாளே! செய்தி படிக்கவில்லையா? ♦