அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு 317

2023 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 16-30,2023

ஆந்திராவில் கோரா நூற்றாண்டு விழா !
 – கி. வீரமணி

தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் விழா 30.10.2003 அன்று மாலை 6:30 மணிக்கு மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 6:30 மணிக்கு கலைச்செல்வம் டி.கே. கலா குழுவினரின் இன்னிசையோடு விழா தொடங்கியது. அடுத்து மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தியபின் சென்னை மனிதநேய நண்பர்கள் குழுத் தலைவர் இரா.செழியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் ஆகியோர் உரைக்குப்பின் மிசோராம் முன்னாள் ஆளுநர் ஏ. பத்மநாபன் அவர்கள் தன் உரையில் நாடாளுமன்றத்தில் பெரியார் படம் வைக்கப்படவேண்டும் என்று கோரினார். இவ்விழாவில் திருச்சி து.மா.பெரியசாமி அவர்களின் உழைப்பால் தயாரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் ஒலிநாடாக்கள் 10அய் எமது முன்னிலையில் ஏ. பத்மநாபன் வெளியிட திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை உள்பட பலரும் பெற்றுக்கொண்டனர். இறுதியாக பெரியாரின் தொண்டுகள் குறித்து உரையாற்றினோம்.

தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் – தந்தை பெரியார் பேச்சுகள் அடங்கிய 10 ஒலிநாடா பேழைகள் வெளியிடப்பட்டன.

கடந்த 30.10.2003 அன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசுக்கென தனித் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் பூமி பூஜை என்ற பெயரில் அசல் இந்துமதப் பார்ப்பனியச் சடங்குகள் நடைபெற்றதைக் கண்டித்தோம். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அடிக்கல் நாட்டுவிழாவை இந்துமதப் பார்ப்பனியச் சடங்காக நடத்துவதா? மதச்சார்பற்ற அணிக்குத் தலைமையேற்று ஆட்சிக்கு வந்த முதல்வர் இப்படி நடத்தலாமா? எனக் கேட்டு அறிக்கை விடுத்தோம்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பாக, தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பாக தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவரும் கூட்டமைப்பு பின் முன்னாள் தலைவருமான வி. நாராயணசாமி அவர்களுக்குப் பாராட்டு
விழாவும் சென்னை தர்மபிரகாஷ் மண்டபத்தில் 2.11.2003 ஞாயிறு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி தலைமையேற்று விழாவின் நோக்கத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பாக சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்தனர். பின்னர் எமது உரையில் தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 17இல் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் 16 வரை நடைபெறும். அதற்குள் நாடாளுமன்றத்தின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தந்தை பெரியார் சிலையை அங்கு நிறுவ முன்வரவேண்டும். அவைக்குள் தந்தை பெரியார் படத்தையும் வைக்க முயற்சி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.

வாடிப்பட்டியில் 7.11.2003 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:50 மணிக்கு தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், பெரியார் பெருந்தொண்டர்கள் நினைவு வீரவணக்கப் பொதுக்கூட்டமும், தந்தை பெரியார் படிப்பகத் திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில் பெரியார் படிப்பத்தைத் திறந்து வைத்தும், பெரியார் பெருந்தொண்டர்களைப் பாராட்டியும் சிறப்புரையாற்றினோம்.

8.11.2003 திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிருவாக குழு கூட்டத்தில் நடைபெற்ற இணையேற்பு விழா.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் வல்லவாரி அஞ்சாப்பலி-மகமாயி ஆகியோரின் மகள் அன்னபூரணம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பெரியாளூர் அடைக்கன்- சின்னபிள்ளை ஆகியோரின் மகன் அ. ஞானசேகரன் ஆகியோருக்கு 8.11.2003 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் மேடையில் இணையேற்பு விழாவை, நடத்தி வைத்து விளக்கவுரையாற்றினோம்.

திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளரும் வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளருமான பொறியாளர் டாக்டர் வ. சுந்தரராசுலு – கண்ணந்திரி ஆகியோரின் மகள் சு. தேவி (பொறியாளர் யு.எஸ்.ஏ.)க்கும் சேலம் தொ. இராமலிங்கம் அவர்களது மகன் இரா. குமரனுக்கும் 5.11.2003 அன்று சென்னையில் மணவிழா நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 8.11.2003 சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை வகித்து மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினோம்.

ஆந்திர மாநிலம் நாத்திகர் கோராவின்
101ஆவது பிறந்தநாள் நாள் விழாவில் ஆசிரியர் பங்கேற்பு.

ஆந்திர மாநில புகழ் பெற்றவராக வாழ்ந்த நாத்திகர் கோராவின் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக 15.11.2003 சனியன்று காலை விஜயவாடா வந்து சேர்ந்த எம்மை கோராவின் மகன் நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் அவர்கள் ரயில் நிலையத்தில் அன்புடன் வரவேற்றார்.
விஜயவாடா பென்ஸ் சர்க்கிள் அருகில் உள்ள கோராவின் நாத்திக மய்யத்துக்கு வந்து சேர்ந்தவுடன் 95 வயதான மூதாட்டி திருமதி. சரசுவதி கோராவைச் சந்தித்து நலம் கேட்டோம்.

முழுமையான சுறுசுறுப்பான (அன்றாடம்) நாத்திக வாழ்வு நடத்தும் சரசுவதி கோரா, தந்தை பெரியாரின் “குளோனிங்’’ போல காணப்படுகிறார் என்று வேடிக்கையாக நகைச்சுவையுடன் பாராட்டினோம். தந்தை பெரியாரின் மனிதநேயப் பணிகள் குறித்து சரசுவதி கோரா எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார் என டாக்டர் விஜயம் அப்போது குறிப்பிட்டார்.

கோராவின் மற்ற பிள்ளைகளான டாக்டர் சமரம், பொறியாளர் (கருவியியல்) நியந்தா, கோராவின் சகோதரி ஆகியோரும் எம்மைச் சந்தித்து தமது மகிழ்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர். விஜயவாடாவைச் சுற்றியுள்ள 100 கிராமங்களில் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரங்களை ஆந்திர மாநில அரசின் கோரிக்கையின் பேரில், தாம் நடத்தி வருவதாக, டாக்டர் விஜயம் நம்மிடம் குறிப்பிட்டார். விஜயவாடா நாத்திக கேந்திரத்தில் வாரந்தோறும் பல்துறை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, நலவாழ்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், சிறீகாகுளம் மாவட்டத்தில், சமரம் தலைமையிலான நாத்திகக் குழுவினர் மூடநம்பிக்கை ஒழிப்பு நலவாழ்வுப் பிரச்சாரங்களை நடத்தியதாகவும் டாக்டர் விஜயம் எடுத்துரைத்தார். மொழிப் பிரச்சினை காரணமாக, ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் நாத்திக மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்கள்பற்றி ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது என்ற கவலையைத் தெரிவித்தோம்.

கோராவின் மகன் சமரத்தின் அறிமுகவுரையுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கோராவின் துணைவியார் சரசுவதி கோரா தலைமை வகித்தார். கோரா குடும்பத்தைச் சேர்ந்த சுபாகோராவின் நாத்திக சிந்தனைப் பாடலுடன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு துவக்கத்தைக் கொடுத்த கோராவின் மகன் டாக்டர் விஜயம், கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட கோரா நூற்றாண்டு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார்.

மறைந்த மக்களவை சபாநாயகர் சி.எம்.சி. பாலயோகி, இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் விஜயவாடா நாத்திக கேந்திரத்தில் பங்கேற்றனர் என்பதோடு விஜயவாடாவைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளிலும் கோரா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட விவரங்களை டாக்டர் விஜயம் எடுத்துரைத்தார்.
காந்தியாரின் சேவா கிராமத்திலும் கோரா நூற்றாண்டு விழாவை இம்மாதம் 17ஆம் தேதி கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாத்திகர் ஒருவருக்கு, அதுவும் சேவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு அங்கே விழா எடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என டாக்டர் விஜயம் பெருமை பொங்கக் குறிப்பிட்டார்.

வரவேற்றுப் பேசிய டாக்டர் விஜயம், தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஏடுகள், நாத்திகப் பிரச்சாரம் என ஆசிரியர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்று ஆந்திர மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்தினார்.

சாந்தா சின்கா:

ஆந்திர நாத்திகர் கோரா பற்றிய கேசட்டை தமிழர் தலைவர் வெளியிட முதல் பிரதியை அய்தராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தா சின்கா பெற்றுக்கொண்டார்.

அடுத்து அய்தராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், கோரா குடும்பத்தினரின் நண்பருமான சாந்தா சின்கா, கோரா 101ஆம் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கோராவின் நிரந்தரப் போராட்டம், சித்தாந்த நெறிமுறைகள் ஆகியவை, சேவை மனப்பான்மையோடும் சுய ஆலோசனையோடும் இன்றைய தலைமுறையினர் சிந்தித்துச் செயலாற்றப் பெரிதும் உதவுகிறது. நிராசை எனும் கையறு நிலையில் உழலும் தற்போதைய சமுதாயத்துக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக கோராவின் வாழ்க்கை அமைந்துள்ளது. துணைவியார் சரசுவதி கோராவும், இளம் தலைமுறைப் பெண்களுக்கெல்லாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் இன்றளவும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார். தன்னுடைய காலத்துக்கே மற்றவர்களை இட்டுச் செல்லும் ஆற்றல் சரசுவதி கோராவுக்கு உள்ளது என்று பேராசிரியர் சாந்தா சின்கா குறிப்பிட்டார்.

கோரா நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நிறைவுச் சிறப்புச் சொற்பொழிவினை நாம் ஆங்கிலத்தில் ஆற்ற டாக்டர் விஜயம் அந்த உரையினை வெகு சிறப்பாக, தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

நமது உரையில்,

பேராசிரியர் பால் கர்ட்ஸ்

‘‘கோராவும் தந்தை பெரியாரும் மேற்கொண்டது மக்களை முன்னிலைப்படுத்திய பணியாகும். மனித இனத்தின் நலனுக்கு எதிரான கடுமையான கடவுள் மறுப்புப் போராட்டத்தில் இரு தலைவர்களும் அச்சமின்றி ஈடுபட்டனர். அந்த இரு தலைவர்களின் மனிதநேயப் பணிகளை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தவே நாம் இங்குக் கூடியிருக்கிறோம் நாத்திகம் என்பது மக்களுக்கு எதிரானது, சமூக விரோதமானது_ என்பன போன்ற பிரச்சாரங்களெல்லாம் செய்யப்படுகின்றன. ஆனால், மனித நேயத்துக்கு முற்றிலும் உகந்த நிலையே நாத்திகம் என இரு தலைவர்களும் நடைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ளனர் பேராசிரியர் பால்கர்ட்ஸ் அவர்கள் (அமெரிக்க மனித நேய அமைப்பின் தலைவர்) எழுதிய “அறிவியலும்- மதமும்’’ என்ற நூலில், மிகவும் முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்கக்காவில்
கூட, மதத்தை எதிர்ப்பது என்பது எத்துணை ஆபத்தானது, என்பது மிகவும் செப்பமாக விளக்கப்பட்
டுள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட அமெரிக்காவின் நிலையே இப்படித்தான் எனும்போது, இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியும்.

சுனந்தா சேட் அவர்கள் எழுதியுள்ள கோரா வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஆவணப் பதிவாகும். மனித நேயத்துடனான வாழ்க்கை முறையை இரு தலைவர்களுமே பிரச்சாரம் செய்ததோடு நில்லாமல், தாமே அதன்படி நடந்து காட்டி முன்னுதாரணமாகச் செயல்பட்டனர்.

பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர் அறிவியல் ரீதியாக கிரகணம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிய அடுத்த கட்டத்திலேயே, கடலில் போய் முழுக்குப் போடும் சடங்காச்சாரங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஆனால், தாவரவியல் பேராசிரியராகத் திகழ்ந்த கோரா, நடைமுறை வாழ்க்கையிலும் அறிவியல் மனப்பான்மையோடு நடந்து காட்டியதுடன், தன் மனைவி, மக்களையும்; நாத்திக வாழ்வுக்குத் தயார்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.

நமது அரசியல் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவு, மக்களிடையே அறிவியல் உணர்வை வளர்க்க வலியுறுத்துகிறது. ஆனால், அரசியல் சட்டப்படி நடப்பேன் என் உறுதி ஏற்று பொறுப்பு ஏற்கும் அரசியல்வாதிகளோ, தாம் ஏற்றுக்கொண்ட வாக்குக்கு முற்றிலும் விரோதமாக, நல்ல நேரம் பார்த்துப் பதவியேற்பது போன்ற மூடநம்பிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அடிப்படை உரிமைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்களே தவிர, அடிப்படைக் கடமைகள் என அரசியல் சட்டத்தின் தரப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை முற்றிலும் மறந்தே முரணாகவே, செயல்படுகின்றனர்.

அதுபோல அறிவியல் கண்டுபிடிப்புகளான தொலைக்காட்சி, கணினி போன்றவையும் மூடநம்பிக்கைகளை மக்களிடையே மீண்டும் மீண்டும் நிலைநிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் இரவு பத்து மணியானால் பேய்க் கதைகள், கணினி ஜாதகங்கள் போன்றவை பரப்பப்படுகின்றன. அறிவியல் கருவிகளின் உருவாக்கத்தின் நோக்கமே சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோராவின் பகுத்தறிவு _ நாத்திகச் சிந்தனைகள் தமிழ்நாட்டில் அவர் பணியாற்றிய போதுதான் உருப்பெற்று, வலுப்பெற்றன. அதற்கு முன் அவர் நம்பிக்கைவாதியாகத் திகழ்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய போது 13 அறைகள் கொண்ட பேய் வீட்டை, துணிந்து (குறைந்த) வாடகைக்கு எடுத்து, அங்கேயே நிறை வாழ்வு வாழ்ந்து காட்டியவர்தான் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் கோரா அவர்கள்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தில்கூட, தந்தை பெரியாரின் கொள்கை நெறிகளைப் பின்பற்றி, பேய் -_ ஆவி வீடுகளை விளம்பரம் தந்து விலைக்கு வாங்கி, இயக்கப் பணிக்கு அவற்றைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தந்தை பெரியார்- கோரா ஆகிய இரண்டு நாத்திகத் தலைவர்களின் சிந்தனையும் செயலாக்கமும் ஒரே நிலையில் பயணம் செய்திருப்பதை நாம் காணமுடியும். சரஸ்வதி கோரா இலங்கையில் இருந்தபோது கிரகணம் ஏற்பட்டது. கருவுற்ற பெண்கள் சூரிய வெளிச்சத்தில் வரக்கூடாது, குழந்தை ஊனமுற்றுப் பிறக்கும் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது வெற்று வாதமே, மூடநம்பிக்கையே என்பதை நிரூபிக்கும் வகையில், கிரகணத்தின் போது, வீட்டுக்கு வெளியே வந்து சூரியனைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்து, கிரகண மூடநம்பிக்கையைத் தூள் தூளாகத் தகர்த்தெறிந்தவர்தான் சரசுவதி கோரா அம்மையார் அவர்கள். அந்தக் குழந்தைதான் கோராவின் மூத்தமகள் மனோரமா. பெரியார் சொன்னார் பெண்கள் விடுதலை, பெண்ணுக்கு அதிகாரம், சம வாய்ப்புத் தேவை என்று. தன் கைகளில், கால்களில், கண்களில் ஒன்று மட்டும் இயங்கினால் போதுமா?

மனித உடலிலேயே இடதுபுற அவயவங்களை பாரபட்சமாக நோக்கும் முறை நம்மிடையே இன்றும் நிலவுகிறது. புகுந்த வீட்டுக்கு வரும் மருமகளை வலது காலை எடுத்து வைத்து வா என்று வலியுறுத்தும் வழமை உள்ளது. இது மிகவும் மூடத்தனமான செய்கையாகும்.

மேலும், உலக நாடுகளில், இந்தியாவில் மட்டும்தான், தந்தை பெரியாருக்கும், கோரா
வுக்கும் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்-பட்டுள்ளன. இரு தலைவர்களின் நாத்திக நெறிமுறை வாழ்க்கைக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் இதனைக் கருத வேண்டும்- இவ்வாறு எமது சிறப்புரையில் குறிப்பிட்டோம்.

அதிகாரி ரகு:

அடுத்து, நெல்லூரு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி ரகு என்பவர் தயாரித்துள்ள ‘கோரா’ பற்றிய பாடல் ஒலிநாடாவை, டாக்டர் விஜயம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வெளியிட்டோம். முதல் நாடாவை பேராசிரியர் சாந்தா சின்கா பெற்றுக்கொண்டார். ரகு, நெல்லூரில், ஜாதி மறுப்பு திருமண ஏற்பாட்டு அமைப்பு ஒன்றை நடத்தி வருவதாக டாக்டர் விஜயம் குறிப்பிட்டார்.

கமல்தாவூர்

இந்திய அரசின் திட்டக்குழு ஆலோசகர் டாக்டர் கமல் தாவூர் தனது வாழ்த்துரையில், ‘‘தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் சிறப்புரை, தனக்கு மிகச் சிறந்த தெளிவுரையாக அமைந்திருந்தது. தந்தை பெரியாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நமக்குத் தருகிறது. தந்தை பெரியார்  – கோரா ஆகிய நாத்திகத் தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு, நாமனைவரும் இணைந்து செயல்படவேண்டும். முழு ஈடுபாட்டோடு பாடுபட்டால், எந்தத் துறையிலும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று கமல் தாவூர் சுட்டிக்காட்டினார்.

ராகவாச்சாரி:

சி.பி.அய். தெலுங்கு நாளேடான ‘விசாலாந்திரா’வின் முன்னாள் ஆசிரியரான தோழர் ராகவாச்சாரி, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், ஆந்திரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், காந்தியாரையும் கடவுளாக்கி விட்டனர் என்றும் குறிப்பிட்டார். காரல் மார்க்ஸோடு முடிந்துபோனது மார்க்சிசம் என்று சொல்லப்படுவது போல, காந்தியாரோடு காந்தியிசம் மறைந்துவிட்டது. ஆனால், பயம்தான் பக்திக்கு அடிப்படை என்ற தந்தை பெரியார், கோரா ஆகியோரின் நாத்திகம், அவர்களது மனிதநேயச் செயல்பாடுகளால் நிலைத்து நிற்கிறது. எனவே, அறிவியல் மனப்பான்மை பரவவேண்டும் என இயற்றப்படும் சட்டங்களைக் காட்டிலும், இதற்குண்டான மனித மனங்களைப் பக்குவப்படுத்தும் நடவடிக்கைகள்தான் இன்றைய தேவையும், வலுமிக்கதுமாகும். எனவே, மனிதனை முழுமைப்படுத்திய கோராவின் முயற்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறிவுக்கரசு:

இறுதியாக, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள் 32 ஆண்டுகளுக்கு முன்னதாக, தந்தை பெரியார் கோரா ஆகியோரை ஒரே மேடையில் கண்டு, அவர்களது உரையைக் கேட்டதை நினைவு கூர்ந்தார்.

தலைமை உரை:

சரசுவதி கோரா அவர்கள் தனது தலைமை உரையில், தந்தை பெரியார், கோரா என இரு தலைவர்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்ட நிகழ்வுகள் தமக்கு நெகிழ்ச்சியூட்டின என்றும், ஆண்-பெண் வேறுபாடுகளை நீக்க காந்தியார் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

(நினைவுகள் நீளும்)