– கி. வீரமணி
24.8.2003 கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. தியாகராஜன் தலைமை ஆசிரியை கி. விஜயகுமாரி ஆகியோரின் இளைய மகன் தி. கதிரவனுக்கும் (அன்பு ஆப்செட் உரிமையாளர்) வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற கணக்காளர் சா.நாகராசன் – ராணி ஆகியோரின் மகள் நா. சங்கீதா இவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கே.எம். நடேசா திருமண மண்டபத்தில் 24.8.2003 ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடத்திவைத்து சிறப்புரையாற்றினோம்.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மாநாடு கிருட்டினகிரியில் 24.8.2003 ஞாயிறு மாலை வெகு எழுச்சியுடன் நடைபெற்றது. மாபெரும் பேரணிக்குப்பின் கார்னேசன் திடலில் அனுமந்த நாயுடு நினைவரங்கத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டக் கழகச் செயலாளர் மதிமணியன் வரவேற்புரையாற்றினார். டாக்டர் பிறைநுதல் செல்வி திராவிடர் கழகக் கொடியை ஏற்றி அரியதோர் உரையாற்றினார். உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
மு. தியாகராஜன் – தலைமை ஆசிரியை கி. விஜயகுமாரி ஆகியோரின் இளைய மகன் இணையேற்பு நிகழ்ச்சி
மாநாட்டு மேடையில் தருமபுரி கருவூலக் காலனி மாது- சிலக்கம்மாள் ஆகியோரின் செல்வி மா. அகிலா, தருமபுரி குமாரசாமிப்பேட்டை கந்தசாமி – பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் க. வெங்கடேசன் இருவருக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்து இறுதியாக மாநாட்டு சிறப்புரையாற்றினோம். மாவட்டக் கழக இளைஞரணி துணைத் தலைவர் மு. வேடியப்பன் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோக்கியத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா 25.8.2003 அன்று இரவு 7:00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, பெரியார் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் எழுச்சி மாநாடு
தஞ்சையில் 3.9.2003இல் நடைபெற்ற ‘குடும்ப விளக்கு நலநிதி’யில் ஆண்டு விழாவின்போது நாகலெட்சுமி – இராமச்சந்திரன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
நெய்வேலியில் 3.9.2003 அன்று காலை 8:00 மணிக்கு தங்கஜெயமகால் மண்டபத்தில் பெரிய காப்பான்குளம் ப. கிருட்டினமூர்த்தி _ தங்கம் ஆகியோரின் மகன் கழக இளைஞரணித் தோழர் கி. கோவிந்தராசுக்கும், முத்தாண்டிக்குப்பம்
ம. சக்ரவர்த்தி – தமிழரசி ஆகியோரின் மகள் ச. தவச்செல்வி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவை தலைமை ஏற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
திருச்சியில் 5.9.2003 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விரிவாக்கக் கிளைகளில் ஒன்றான பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி விரிவாக்கக் கிளையை “பெரியார் நூற்றாண்டு வளாகக் கிளை’’ என்ற பெயரில் புதிய வசதிமிக்க கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம்.
சென்னை பாடியில் 7.9.2003 ஞாயிறு அன்று காலை 9:30 மணிக்கு தஞ்சை பூதலூர் இரா. அறிவழகன் – லதாகுமாரி ஆகியோரின் மகள்
அ. பொன்னி, குமாரசாமி_ லோகாம்பாள் ஆகியோரின் மகன் கு. ஆனந்தன் ஆகிய இருவருக்கும் பாடி எம்.டி.எச் சாலையிலுள்ள சீனிவாச கல்யாண மண்டபத்தில் மணவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
தஞ்சை அம்மாப்பேட்டையில் 11.9.2003 அன்று முத்தையா _ இளஞ்சியம் ஆகியோரின் செல்வன் மாரிமுத்து (விப்ஜியார்) பரமசிவம் – மகாலெட்சுமி ஆகியோரின் செல்வி மணிமாலா இருவருக்கும் மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்தோம்.
நெய்வேலி ப. கிருட்டினமூர்த்தி – தங்கம் ஆகியோரின்
மகன் திருமண நிகழ்ச்சி
இங்கிலாந்தில் இயங்கிவரும் ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம் தமிழ்ப் பண்பாட்டைப் பரப்புவதோடு, தமிழர்களுக்கு எதிராய் உலகெங்கும் நடைபெறும் வன்முறைகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு 2002ஆம் ஆண்டிலிருந்து முதல் இயங்கி வருகிறது. அச்சங்கத்தின் சார்பில் 18.1.2003இல் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆக்ஸ்போர்டு தமிழ் விருது (ளிஜ்யீஷீக்ஷீபீ ஜிணீனீவீறீ கிஷ்ணீக்ஷீபீ) எமக்கு அளித்துச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதுக்கான சான்றிதழை இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் என். சீனிவாசன் 10.09.2003 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வந்து எம்மை நேரில் சந்தித்து அளித்து, பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில் 11.9.2003 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு திருவையாறு வட்டம் இராஜேந்திரம் எம்.எஸ். கலியபெருமாள் – இலட்சுமி ஆகியோரின் மகன் க. திராவிடமணிக்கும் அம்மாப்பேட்டை த. கோவிந்தராசு – வசந்தா ஆகியோரின் மகள்கோ. புவனேஸ்வரிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
மாலை 5:00 மணிக்கு அம்மாப்பேட்டையில் விளத்தூர் தாலுகா லாந்திரி கிராமம் கோ. முத்தையா – மு. இளஞ்சியம்
ஆகியோரின் செல்வன் மு. மாரிமுத்து, திண்டுக்கல் மாவட்டம் க.தருமத்துப்பட்டி அ. பரமசிவம் – வி.மகாலட்சுமி ஆகியோரின் செல்வி வி.மணிமாலா ஆகிய இருவருக்கும் தனலட்சுமி திருமண மண்டபத்தில் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
நோக்கியத்தில் (திருப்பதூர்) 25.8.2003 அன்று நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி
குஜராத் மாநில முதலமைச்சர் மீது உச்சநீதிமன்றம் கடுமையான வாசகங்களில் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து 13.9.2003 அன்று அறிக்கை விடுத்தோம். குஜராத் ‘பெஸ்ட் பேக்கரி’ படுகொலை வழக்கில் முதலமைச்சர்மீது உச்சநீதிமன்றம் கண்டனம்! முதலமைச்சர் மோடி பதவி விலக வேண்டும். இல்லையேல் 5 மாநிலத் தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு வழங்குவர் எனத் தெரிவித்தோம்.
மன்னார்குடியில் 12.9.2003 அன்று காலை 10:00 மணிக்கு லட்சுமி திருமண அரங்கத்தில் இராயபுரம் மேலத்தெரு கு. அய்னு_ குஞ்சம்மாள்
ஆகியோரின் மகன் அ. மகாலிங்கம்பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் வீ. சுவாமிநாதன் – வனரோஜா ஆகியோரின் மகள்
சு. உமாதேவி இருவருக்கும் மணவிழாவை தலைமையேற்று நடத்திவைத்து சிறப்புரையாற்றினோம்.
சென்னை பாடியில் அ. பொன்னி – கு. ஆனந்தன் ஆகியோரின் மணவிழா
தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2003 அடன்று காலை 9:00 மணிக்கு பெரியார் மய்யத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்கிற முறையில் அனைவரையும் வரவேற்றுப் பேசினோம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஈ. பத்மநாபன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். தந்தை பெரியார் சிறப்புஅஞ்சல் உறையை தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மத்திய இணையமைச்சர் சு. திருநாவுக்கரசர் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஈ. பத்மநாபன், நீதித்துறை நிபுணர் ச. ராஜரத்தினம் உள்பட பலர் பெற்றுக்கொண்டனர்.
இந்தியப் பகுத்தறிவாளர் கழகங்களின் கட்டடமைப்பின்(ஃபிரா) செயற்குழுக் கூட்டமும் அதையடுத்து தென்மண்டல பகுத்தறிவாளர்கள் கருத்தரங்கமும் 19.9.2003 அன்று பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றன. காலையில் தொடங்கி மதியம் வரை இந்நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பின்பு மாலை 6:20 மணிக்குத் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு எமது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து டாக்டர் விஜயம், விஜயவாடா எம். சுப்பாராவ், அய்தராபாத் ஜெயராமரெட்டி, அனந்தபூர் சுவாமி மானவதவாதி, குருசேத்திரம் சுகுமாறன் போன்றோர் கலந்துகொண்டனர். 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக நாம் சிறப்புரையாற்ற கருத்தரங்கு சிறப்பாக நிறைவுற்றது.
மகாத்மா ஜோதிபா புலே சமூகநீதி மய்யத்தின் சார்பில் 21.9.2003 அன்று அய்தராபாத்தில் அய்ம்பெரும் விழாவாக நடைபெற்றது. தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் விழா; சிறீநாராயணகுரு 149ஆம் பிறந்த நாள் விழா; பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கு; பேராசிரியர் என். வேலுச்சாமி தமிழில் எழுதிய “சமூக விஞ்ஞானி பெரியார்’’ தெலுங்குப் புத்தக வெளீயிடு; ஆந்திர இளநிலை சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சித் தொடக்கவிழா என அய்ந்து விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராக நாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம். பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மகாத்மா ஜோதிபா புலே சமூகநீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற அய்திராபாத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா.
நாடாளுமன்ற வளாகத்தில் தந்தை பெரியார் சிலை. சிலையை வழங்க முன்வந்துள்ள தமிழக அரசினைப் பாராட்டி 22.09.2003 அன்று அறிக்கை வெளியிட்டோம். தந்தை பெரியாரின் வாழ்க்கை, பொருள் அனைத்தும் மக்களுக்கே தமிழ்நாடு அரசின் முயற்சியைக் கோடானுகோடி மக்கள் போற்றுவர். நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என அந்த அறிக்கையில் தெரிவித்தோம்.
‘இந்தியா டுடே’ இதழுக்கு நான் அளித்த பேட்டி 24.09.2003 ‘இந்தியா டுடே’ இதழில் வெளிவந்துள்ளது.
‘இந்தியா டுடே’ இதழின் இணை ஆசிரியர் ஆனந்த் நடராஜனும், முதுநிலை செய்தியாளர் கவிதா முரளிதரனும் திராவிடக் கட்சிகள் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்வது பற்றி கேள்விகளை எழுப்புகையில், திராவிட இயக்கம் நீர்த்துப் போய்விட்டதா? என்று கேட்டனர்.
‘‘இயக்கம் என்பது வேறு; அரசியல் கட்சி என்பது வேறு. திராவிடர் கழகம் ஓர் இயக்கம். அது என்றும் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதில்லை. இயக்கக் கொள்கைகளை அது முழுமையாகப் பின்பற்றுகிறது. எனவே, திராவிடர் இயக்கம் நீர்த்துப் போகவில்லை. திராவிடர் இயக்கத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வாக்கு அரசியலுக்காக சில சமரசங்களைச் செய்துகொள்கின்றன. அதை திராவிடர் கழகம் கண்டித்தே வருகிறது’’ என்று பதில் அளித்தோம்.
தஞ்சை அம்மாபேட்டை மாரிமுத்து (விப்ஜியார்) பரமசிவம் – மகாலட்சுமி
திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி.
அடுத்து, இளைஞர்கள் பெரியார் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்கிறார்களா? என்ற அவர்களின் கேள்விக்கு,
‘‘பெரியார் காலத்தைவிட பெருமளவிற்கு இன்றைக்கு இளைஞர்கள் பெரியார் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். பதவி, பணம், செல்வாக்கு என்று எதையும் எதிர்பாராத இயக்கத்தை ஏராளமான இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான இளைஞர்கள் பெரியார் பின் அணிவகுத்து நிற்பர்’’ என்று பதில் அளித்தோம்.
‘‘பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர் என்று கூறப்படும் கருத்து பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்று அவர்கள் இன்னொரு கேள்வியை எழுப்பினர். அதற்கு,
‘‘அரைவேக்காடு சிந்தனையாளர்கள் அப்படி நினைக்கிறார்கள். வரலாற்றை அவர்கள் முழுமையாகப் படிப்பதில்லை; படித்ததுமில்லை. அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் பெரியார். அவர் பெயரைச் சொல்லிக்கொள்ளும் சிலர், மலிவு விளம்பரங்களுக்காக இப்படி குறுக்கு வழியில் விமர்சனம் செய்கிறார்கள். தலித்துகளுக்குப் பெரியார் செய்த பணிகள், தலித் விடுதலையில், வளர்ச்சியில் பெரியார் காட்டிய அக்கறை அளவற்றது. அவற்றிற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்படிப்பட்ட தப்பான கருத்துப் பரப்பல்கள் காலத்தால் அழியும்’’ என்று விடையளித்தோம்.
திருவாரூரில் நடைபெற்ற இராசலெட்சுமி திருமண அரங்கம் திறப்பு விழா
தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் என். வேலுச்சாமி அவர்கள் எழுதிய ‘சமுதாய விஞ்ஞானி பெரியார்’ நூல் வெளியீட்டு விழாவும் லோகியா சமதா வித்யாலயா சார்பில் பெங்களூர் சேசாத்திரிபுரம் கல்லூரி அரங்கில் 28.9.2003 ஞாயிறு காலை 10:30 மணிக்குத் தொடங்கியது, விழா ஏற்பாடு செய்த பேராசிரியர் இரவிவர்மகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கருநாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமான வழக்குரைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், ஏராளமான கருஞ்சட்டைக் குடும்பங்கள் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்டு நிறைவாக நாம் சிறப்புரையாற்றினோம்.
ஈரோடு லோகநாதபுரத்தில் 2.10.2008 அன்று மாலை 5:00 மணிக்கு ‘தந்தை பெரியார் படிப்பகத் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு படிப்பகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம்.
சென்னை பெரியார் திடலில் 3.10.2003 அன்று முற்றிலும் பெரியார் பிஞ்சுகள் பங்கேற்ற பெரியார் விழா மகிழ்ச்சி கூட்டும் வெற்றி விழாவாக நடந்தேறியது. திராவிடர் கழக மகளிரணியினர் திட்டமிட்டு அமைத்த இவ்விழா தமிழகத்தின் வருங்காலம் பற்றிப் பெருநம்பிக்கையூட்டிய திருவிழாவாக ஒளிவீசியது. பிஞ்சுகளோடு நாம் பங்கேற்று மகிழ்ந்தோம்.
பா.ஜ.க. அரசின் பசுவதைத் தடைச்சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியரசுக் கட்சி, சென்னை மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் கண்டன மாநாடு 8.10.2003 அன்று இரவு சென்னை தியாகராஜ நகர் கவிஞர் கண்ணதாசன் சிலையருகில் உள்ள சர். பிட்டிதியாகராய கலை அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் நாம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினோம்.
தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் அஞ்சல் தலை வெளியீட்டு விழா
தந்தை பெரியார் அவர்களுடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் 5.10.2003 அன்று காலை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள ஏராளமானோர் ரூ.10 செலுத்தி பதிவு செய்துகொண்டனர். பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் தொடக்கவிழா தொடங்கியது. பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. மீனாம்பாள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இம்முகாம் ஆலோசகர் ஒருங்கிணைப்பாளர் அகில இந்திய சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் ஏ.இராஜசேகரன் அறிமுக உரையாற்றினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் வரவேற்புரையாற்றினோம். இறுதியாக சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் தியாகராசன் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோது “நான் நெடுமரம் என்ற சிறிய கிராமத்திலிருந்து வந்தவன். இன்று துணைவேந்தராகி உள்ளேன் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்றும் பெரியாரின் சமூக தொண்டால்தான் எல்லோரும் கல்வி பெற முடிந்தது’’ என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் “பெரியார் உடலுறுப்புக் கொடை கழகம்’’ ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தோம். நிறைவாக கவிஞர்
கலி. பூங்குன்றன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். பெரியார் அவர்களின் 125ஆம் பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் குடும்ப விழாவாக சிறப்புற பல இடங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
தஞ்சாவூரின் 7.10.2003 செவ்வாய் அன்று காலை 9:30 மணிக்கு ஓரியண்டல் டவர்ஸ் திருமண அரங்கத்தில் தஞ்சை கட்டுமானப் பொறியாளர்கள் எழிற்கலை வல்லுநர்கள் கூட்டமைப்பும் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் செங்கல், கான்கிரீட் கட்டுமானம், மின்இணைப்பு மற்றும் குழாய் இணைப்பு பற்றிய மாநில அளவிலான ஒருநாள் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினோம். கனடா நாட்டுப் பேராசிரியர்கள் மெர்வின் மெக்கின் டயர், லாரா மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருவாரூரில் இராசலெட்சுமி திருமண அரங்கம் திறப்பு விழா, ஜாதி மறுப்புத் திருமணம், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். மணியம் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழாவாக 11.10.2003 அன்று நடைபெற்றது. அதில் நாம் கலந்துகொண்டு திருமண அரங்கத்தைத் திறந்து வைத்தபின், திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் செகநாதன்_ சரோஜா ஆகியோரின் மகள் சரிதாவுக்கும் திருச்சி மாவட்டம் மணப்பாறை தங்கவேல்- லட்சுமி ஆகியோரின் மகன் திருக்குமாருக்கும் ஜாதி மறுப்பு, சுயமரியாதை வாழ்க்கைத்துணை ஒப்பந்த விழாவினையும் நடத்தி வைத்தோம். அடுத்து மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். மணியம் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருக்குச் சால்வை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம். எம்மைத் தொடர்ந்து எமது வாழ்விணையர் மோகனா அவர்களும் மற்றும் கழகத் தோழர்களும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினர்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவர முயற்சிப்பதைக் கண்டித்தும் தனியார்துறைகளில் இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோரியும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் 17.10.2003 அன்று நடைபெற்றது. சென்னையில் தபால்தந்தி அலுவலகம் எதிரில் எம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னுரையாற்றினார். இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ., சமூக நீதிக்கட்சித் தலைவர் கா. ஜெகவீரபாண்டியன், அய்க்கிய சிறுபான்மை அமைப்பின் தலைவர் பேராசிரியர் மரியநல்லு ஆகியோர் எமக்கு சால்வை அணிவித்துப் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினர். இறுதியாக இடஒதுக்கீட்டு நன்மைகள், அதை நாம் போராடிப் பெற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கவுரையாற்றினோம்.
கும்பகோணம் ஆர்.பி.எஸ். ஸ்டாலின்- இந்திரா ஆகியோரின் மகன் அருண் (எ) எஸ். மோகனசுந்தரத்துக்கும் தஞ்சாவூர் ஆர். கோபால்சாமி_ வனிதா ஆகியோரின் மகள் ஜி. சிவகாமசுந்தரிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 19.10.2003 அன்று காலை 10:30 மணியளவில் கும்பகோணம் சிறீ காஞ்சி சங்கரா திருமண மகாலில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒப்பந்த உறுதிமொழியினை ஏற்கச் செய்து மணவிழாவினை சிறப்புற நடத்தி வைத்து உரையாற்றினோம்.
அம்மாப்பேட்டையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமான திராவிடர் கழகக் கட்டடத்தில் 21.10.2003 அன்று காலை 10:30 மணியளவில் பெரியார் படிப்பகத் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாநகர மாவட்டத் தலைவர் கே.சிவக்குமார் தலைமை வகித்தார். சேலம் புறநகர் மாவட்ட தலைவர் பழனி புள்ளையண்ணன் வரவேற்றுப் பேசினார். மாநகர் மாவட்டப் பொருளாளர் கே. ஜவகர் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்டத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், துணைப்பொதுச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக நாம் படிப்பகத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.
நினைவுகள் நீளும்…