பாராட்டத்தக்க முதல்வரின் பதிலடி!
1: கே: அறஉணர்வு அறவே அற்ற ஆட்களையே பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஆளுநராக அமர்த்துவதற்கு ஒரு முடிவு கட்ட அரசியல் சாசனம்தான் திருத்தப்பட வேண்டுமா? வேறு வழியுண்டா? – எல். கவி, திருச்சி.
ப : அறிஞர் அண்ணா சொன்னபடி, ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒரு பதவி. ஒன்றிய அரசின் உளவு அதிகாரியாகவே துவங்கி, இப்போதெல்லாம் (ஏட்டிக்குப்) போட்டி அரசு நடத்தி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசுக்கு முட்டுக்கட்டை போடவும், எதிர்வினையாற்றுவதற்காகவும் மாறிவிட்ட பதவி எதற்கு?காலம் இதற்கு விடை காணும். மக்களுக்காகத்தான் ஆட்சியும், சட்டங்களும், அவை உருவாக்கிய பதவிகளும்! மறு சிந்தனை தேவைப்படும்போது திருத்தப்பட்டாக வேண்டும். இது காலம் இடும் கட்டளை!
2 கே : அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற ஓர் ஒடுக்கப்பட்ட மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதித்திருப்பது தகுதி – திறமை, பிறப்பால் என்னும் பித்தலாட்டப் பேர்வழிகளுக்குச் சம்மட்டியடியல்லவா? சரித்திர சாதனை அல்லவா?.
– கா. மதியழகன், பொள்ளாச்சி.
ப : பாராட்டி மகிழ்வோம்; தகுதி – திறமை உயர்ஜாதியினரின் உடைமையல்ல என்பது நிரூபணமாகி
விட்டது _ அம்மாணவியின் கடும் உழைப்பால்!
3. கே: காலாவதியான சனாதனக் கும்பல் திராவிடத்தை காலாவதியானதாகக் கூறுவது பற்றி, முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலடியைக் கேட்டு பெரியார் உயிருடன் இருந்தால் எப்படி பூரித்திருப்பார்?. – எஸ். அதியமான், காட்டாங்குளத்தூர்.
ப : உண்மை! உண்மை!! பாராட்டி மகிழ்வர்! இப்போதும் பெரியார் மறையவில்லை; உயிர்ப்புடன்தானே உலவி வருகிறார்! சந்தேகமிருந்தால் காவிகளைக் கேட்டுப் பாருங்கள்!
4கே: 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பெரியார் சிலையைப் பரிசளித்த அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களது முதிர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. – ஆ. ராஜேஷ், சென்னை.
மாணவிக்கு பெரியார் சிலையைப் பரிசளித்த அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
ப : பாராட்ட வேண்டிய செயல்திறன். இளைஞர் அணிக்குக் கிடைத்த அரிய தலைமை!
5 கே : மம்தா பானர்ஜி சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துச் செயல்படுகிறார்;. கருத்துக்களை முன்வைக்கிறார்; நல்ல மாற்றம் என்று கொள்ளலாமா? – மா, ஆனந்தி, அம்பத்தூர்.
ப : பொறுத்திருந்து பார்ப்போம்!
6கே: எதிர்த்து விரட்டப்பட்ட ‘‘ஆகாஷ்வாணி’’யை மீண்டும் நுழைப்பது என்பது அடுத்தடுத்த திணிப்பு முயற்சிகளின் ஆரம்பம் என்பதால், தொடக்கத்திலேயே முறியடிக்க என்ன செய்யவேண்டும்?. – எல். மகேஷ், பெரம்பூர்.
ப : எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!
7 கே: ஒன்றிய ஆட்சியில் மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் தீர்வு என்ற கட்டாயத்தில் 2024 தேர்தல் கவனத்துடன், ஒற்றுமையுடன், சிதறாமல் எதிர்கொள்ளப்பட வேண்டியது என்பதால், ஒருங்கிணைப்பு முயற்சி முதல் தேவையல்லவா? கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்குப்பின் எதிர்கட்சித் தலைவர்கள் கலந்தாய்வு கட்டாயமல்லவா? – கரிகாலன், தஞ்சாவூர்.
ப : உங்கள் விருப்பம் – விழைவு செயலாக மாறிடும், நிச்சயமாக. கவலை வேண்டாம்!