ஆறு. கலைச்செல்வன்
மணிவேல் வீடு பரபரப்பானது. பெண் பார்க்க வருமாறு பெண் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததே அதற்குக் காரணம்.
மணிவேலுக்கு மணமுடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் தேடும் படலம் தொடர்ந்தது.
எந்த இடம் வந்தாலும் அது தனக்குப் பிடிக்கவில்லை என்றே சொல்லி வந்தான் மணிவேல். இவனும் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதற்காரணம் தனது ஜாகத்தை யாரிடமும் தரக்கூடாது என தனது தந்தை குப்புசாமியிடமும் தாய் சரோஜாவிடமும் தெளிவாகக் கூறிவிட்டான் மணிவேல்.
இந்தக் காலத்தில் ஜாதகம் இல்லாமல் யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் என குப்புசாமியும் சரோஜாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மணிவேல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“என்னைப் பொருத்தவரை ஜாதியும் பார்க்கவேண்டாம், ஜாதகமும் பார்க்க வேண்டாம்’’, எனத் தெளிவாகக் கூறிவிட்டான் மணிவேல்.
இந்நிலையில் மயிலாடுதுறைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து பெண் பார்க்க வருமாறு அழைப்பு வந்தது. பெண்ணின் பெயர் தமிழரசி. எம்.ஏ., தமிழ் படித்த பெண். இணையத்தில் பார்த்துவிட்டு தகவல் கொடுத்தனர். இணையத்தில் மணிவேலுக்கே தெரியாமல் அவனது விவரங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார் குப்புசாமி.
பெண்ணின் ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு மணிவேலின் தங்கை மணிமேகலையும் ஆர்வமாக இருந்தாள்.
தாய், தந்தையுடன் மணிமேகலையும் இணைந்து பெண் பார்க்க வருமாறு மணிவேலை வற்புறுத்தினர்.
மணிவேல் தன் மனதிற்குள் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தான். அவற்றைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பெண் அமையவேண்டும் என விரும்பினான். அவனது எண்ணங்களை மணிமேகலை நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள்.
“அண்ணா, உன்னோட எதிர்பார்ப்புகளைப் போலவே நீ பார்க்கும் பெண்ணின் மனதிலும் சில எதிர்பார்ப்புகளும் இருக்கும். அதை மறந்து விடாதே’’, என்று ஒரு நாள் மணிவேலிடம் கூறினாள் மணிமேகலை.
மூவரும் வற்புறுத்தவே வேறு வழியின்றி பெண் பார்க்க வருவதற்கு ஒப்புக்கொண்டான். ஆனால், முடிவை நான் மட்டுமே எடுப்பேன் என்றும், தனக்குப் பிடிக்கவில்லையென்றால் வற்புறுத்தக்கூடாது என்றும் மூவரிடமும் தெளிவாகக் கூறிவிட்டான்.
பெண் வீட்டார் வரச்சொன்ன தேதி நல்ல முகூர்த்த நாள். நிறைய திருமணங்கள் நடக்கும் நாள். சென்னையிலிருந்து மயிலாடுதுறை செல்ல தொடர் வண்டியில் முன் பதிவு செய்ய முனைந்தார் குப்புசாமி. ஆனால் இடம் கிடைக்கவில்லை. பேருந்தில் செல்ல முயற்சி செய்தார். அதிலும் இடம் கிடைக்கவில்லை. திருமண நாளாக இருந்ததால் எதிலும் இடம் கிடைக்கவில்லை.
மணிவேலுக்கு எரிச்சலாக வந்தது.
“முகூர்த்த நாளில்தான் செல்ல வேண்டுமா? சாதாரண நாள்களில் செல்லக்கூடாதா? இதற்கும் நாள் பார்க்கவேண்டுமா?’’ என்று சலித்துக் கொண்டான் மணிவேல்.
பிறகு குப்புசாமி எப்படியோ சிதம்பரம் வரை செல்லும் விரைவுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெற்றுவிட்டார். சிதம்பரம் சென்றுவிட்டால் அங்கிருந்து வேறு பேருந்து பிடித்து மயிலாடுதுறை சென்றுவிடலாம் என நினைத்தார்.
குறிப்பிட்ட நாளன்று அதிகாலை நால்வரும் சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லும் விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். மணிவேல் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பெண் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொல்வதை அவன் விரும்பவில்லை. அதற்காக விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொள்வதையும் அவன் விரும்பவில்லை. பெற்றோர், தங்கையின் வற்புறுத்தலின் காரணமாகவேதான் வருவதற்கு ஒப்புக்-கொண்டதையும் நினைத்துப் பார்த்தான். இரண்டாண்டுகளாக பெண் பார்த்தாலும் பெண் வீட்டிற்குச் சென்று பெண் பார்ப்பது இதுவே அவனுக்கு முதல் முறையாகும்.
பேருந்து விரைந்து சென்றது. காலை பத்து மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையத்தை அடைந்தது. நால்வரும் இறங்கி ஓர் உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு மயிலாடுதுறை செல்லும் பேருந்தைத் தேடினார்.
அப்போது பேருந்து நிலையத்தில் அதிகக் கூட்டமில்லை. காலையிலேயே எல்லோரும் திருமணங்களுக்குச் சென்றுவிட்டதால் கூட்டம் இல்லை போலும் என நினைத்துக் கொண்டான் மணிவேல்.
தனியார் பேருந்துகள் பல அங்கே நின்று கொண்டிருந்தன. ஒவ்வொரு பேருந்திலும் உச்சகட்ட ஒலியுடன் ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
முதலில் செல்லவேண்டிய பேருந்தின் நடத்துநர் பேருந்தின் முன்னால் நின்று-கொண்டு “மாயவரம், மாயவரம்’’ என்று கூவிக்கொண்டிருந்தார்.
“மாயவரம் போறவங்க வண்டியில ஏறுங்க. மாயவரம் மட்டும் ஏறுங்க. வழியில் வண்டி எங்கும் நிக்காது’’, என்று மீண்டும் மீண்டும் கூவினார் நடத்துநர்.
“சீர்காழி ஏறலாமா?’’, என்று ஒரு பயணி கேட்ட போது நடத்துநர் சலிப்புடன் “எத்தனை தடவை சொல்றது நிக்காது’’, என்று சொன்னபோது மணிவேல் அப்பேருந்தின் அருகே சென்றான்.
சென்றவன் அப்படியே காதுகளைப் பொத்திக் கொண்டான். காரணம் பெரும் ஒலியுடன் பேருந்துக்குள் பல ஒலி பெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. தலைக்கு மேலே, காதுக்கு அருகில், கால்களுக்கு அடியில் என எங்குப் பார்த்தாலும் ஒலி பெருக்கிகள். ஓட்டுநர் தலையை ஆட்டியபடி எதைப் பற்றியும் கவலையில்லாமல் பாட்டை இரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஓட்டுநர் ஓர் இளைஞர். பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு குறிப்பிட்ட சில பாடல்களைப் போடும்படி கேட்டனர்.
சமூகச் சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் இப்படிப்-பட்ட ஈனச் செயல்களை மணிவேல் அறவே வெறுத்தான். அரசு தனியார் பேருந்துகளின் செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அரசுடைமையாக்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.
அந்தப் பேருந்தில் பயணம் செய்ய அவன் விரும்பவில்லை. வேறு பேருந்தில் செல்லலாம் எனக் கூறிவிட்டான்.
பிறகு சற்று நேரத்தில் அரசுப் பேருந்து அங்கு வந்து நின்றது. அதன் நடத்துநரும் “மாயவரம், மாயவரம்’’, எனக் கூவினார்.
பேருந்தில் ஒலிபெருக்கிகள் இல்லை. அமைதியாக இருந்தது. நால்வரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
“மாயவரம் போறவங்க எல்லாம் ஏறுங்க. வண்டி கிளம்பப் போவுது’’, என்று இறுதியாகக் கூறிய நடத்துநர் வண்டிக்குள் ஏறி பயணச்சீட்டு வழங்கும் பணியில் ஈடுபடலானார்.
“மாயவரத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க’’ என்று ஒருவர் கேட்டார்.
மணிவேலுக்கு எரிச்சலாக வந்தது. 1982ஆம் ஆண்டே ‘மாயவரம்’ என்ற பெயர் அழகிய தமிழில் ‘மயிலாடுதுறை’ என்று மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இன்னமும் சிலர் ‘மாயவரம்’ என்றே அழைக்கின்றனரே என ஆதங்கப்பட்டான்.
நடத்துநர் அவன் அருகில் வந்ததும் “மயிலாடுதுறைக்கு நான்கு பயணச்சீட்டு கொடுங்கள்’’, என்று உரக்கக் கேட்டான் மணிவேல்.
நடத்துநர் புன்னகையுடன் பயணச்சீட்டுகளைக் கொடுத்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தான் மணிவேல்.
“மயிலாடுதுறையை ஏன் மாயவரம் என்று சொல்றீங்க. மாயவரம் மயிலாடுதுறையாகி எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டனவே’’, என்றான் மணிவேல்.
“நீங்க சொல்றது உண்மைதான். மக்களும் அதை உணரவேணும். அவங்களுக்குப் புரியறாப்
போல நாங்களும் நடந்துக்க வேண்டியிருக்கு’’, என்றார் நடத்துநர்.
“நீங்க சொல்றது தவறுன்னு நெனைக்கிறேன். நீங்க மயிலாடுதுறை என்று சொல்லலாமே. உங்களால்தான் மக்கள் மனதில் மயிலாடு-துறைன்னு பதிய வைக்க முடியும்’’, என்றான் மணிவேல்.
“சரி, இனிமேல் அப்படியே சொல்கிறேன்’’, என்று கூறினார் நடத்துநர். அடுத்து, பக்கத்தில் இருந்த ஒருவர் இருவர் உரையாடலையும் கேட்டபின்
“மயிலாடுதுறைக்கு ஒரு டிக்கெட்’’, என்று கேட்டார்.
மணிவேலுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் மணிவேலின் பெற்றோர்களும் மணிமேகலையும் பதற்றத்துடன் காணப்-பட்டனர்.பெண் பார்க்கப்போகும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என நினைத்தனர். ஏதேனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் என்னாவது என்பதே அவர்களுக்குள்ள பயம்.
பேருந்து விரைந்து சென்று கொண்டிருந்தது. மணிவேல் சிந்தனையில் ஆழ்ந்தான். தில்லையாடி வள்ளியம்மையும், 150 ஆண்டுகள் பழைமையான நகராட்சிப் பள்ளிக்கூடமும், மூவலூர் ராமாமிர்தம் பெயரும் அவன் நினைவுக்கு வந்தன. அப்படியே சிறிது நேரம் கண்ணயர்ந்தான். கண்விழித்தபோது மயிலாடுதுறை வந்துவிட்டது.
பேருந்திலிருந்து இறங்கிய அவர்கள் வாடகைக் கார் வைத்துக்கொண்டு கிராமத்திற்குப் புறப்பட்டனர்.
பெண் வீட்டை அடைந்ததும் அவர்களை பெண் வீட்டார் உற்சாகமாக வரவேற்றனர்.
குப்புசாமியும் மணிவேலும் கூடத்தில் இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
சரோஜாவும் மணிமேகலையும் உள்ளே சென்று தமிழரசியைப் பார்த்தனர்.
மணிவேல் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த படங்களையெல்லாம் பார்த்தான். குடும்பப் படங்களோடு பாரதியார், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது படங்களும் மாட்டப்பட்டிருந்தன. பெண், தமிழ் படித்த காரணத்தால் கவி பாடிய இவர்கள் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன போலும் என நினைத்தான் மணிவேல். இருப்பினும் குயில்பாட்டு பாடி, குடும்ப விளக்கான புரட்சிக் கவிஞர் படம் இல்லையே என ஆதங்கப்பட்டான்.
இந்நிலையில் சரோஜாவும், மணிமேகலையும் சற்று நேரத்தில் கூடத்திற்கு வந்தனர். அவர்கள் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தாண்டவமாடியது அவர்களுக்கு பெண்ணைப் பிடித்துவிட்டது என்பதை உணர்ந்தான் மணிவேல்.
சற்று நேரத்தில் கையில் பலகாரத் தட்டுடன் வெளிப்பட்டாள் தமிழரசி. பலகாரங்களை அனைவரும் எடுத்துக்கொண்டனர். மணிவேலும் எடுத்துக்கொண்டான். புறஅழகோடு மட்டுமல்லாது அக அழகும் அவசியம் என நினைத்தான் மணிவேல் அதுபோல் தன்னைப் பற்றியும் தமிழரசி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என விரும்பினான் மணிவேல்.
அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் அவர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்தனர். ஆனால், மணிவேல் தனிமையில் பேச ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோரும் இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டான். இருப்பினும் தமிழரசியின் பெற்றோர்களும், மணிவேலின் பெற்றோர்களும் சற்று ஓரமாக உட்கார்ந்தனர். மணிமேகலையும் அங்கேயே இருக்கலாமென கூறினான் மணிவேல்.
மணிவேலும் தமிழரசியும் எதிரெதிரே அமர்ந்தனர். முதலில் தமிழரசி அமர மறுத்துவிட்டாள். ஆனால் மணிவேல் உட்கார்ந்துதான் பேச வேண்டும் என வற்புறுத்தியதால் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று உட்கார்ந்தாள்.
“நீங்க தமிழ் படிச்சது எதற்காக? வேறு பாடங்களில் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தமிழ் படிச்சீங்களா?’’ என எடுத்தவுடனே கேட்டான் மணிவேல்.
இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை தமிழரசி. இப்படி இடக்கு முடக்காக கேள்வி கேட்ட அண்ணனைப் பார்த்து முறைத்தாள் மணிமேகலை. அவனை தன் பக்கம் ஈரக்க தொண்டையைக் கனைத்தாள். உடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் மணிவேல். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டாம் என குறிப்பால் உணர்த்தினாள் அவள். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் பதிலை எதிர்பார்த்தான் மணிவேல்.
“விருப்பப்பட்டுதான் தமிழ் படித்தேன்’’ என்றாள் தமிழரசி.
“தமிழில் உங்களுக்குப் பிடித்தமான பாடங்கள் எவை?’’ என்று கேட்டான் மணிவேல்.
“தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கம்பராமாயணம், மகாபாரதம்’’, என அடுக்கினாள் தமிழரசி.
“அவற்றால் தமிழ் வளர்ச்சியடைந்ததா? பக்தி வளர்ச்சியடைந்ததா? மக்களுக்கு அறிவுதான் வளர்ச்சியடைந்ததா?’’
“பக்தி வளர்ச்சியடைந்ததே! தமிழும் வளர்ந்ததே’’ என்றாள்.
“பக்தி வளர்ச்சியடையவில்லை. மூடநம்பிக்கைதான் வளர்ச்சியடைந்தது. கண்ணப்பனும், சிறுத்தொண்டனும் செய்த செயல்கள் கேடானவை அல்லவா? “தத்தா இவர் நமர்’’ எனக் கூறி முட்டாள்தனமாக சடைமுடி தரித்து திருநீறு பூசி தன்னை வாளால் குத்திய முத்தநாதனை போகச் சொன்ன மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் படிப்பதால் என்ன பயன்? இளைஞர்களுக்கு அறிவு வளருமா? கண்ணப்பர் கதையைவிட மோசமானது சிறுத்தொண்டர் கதை. பசுவிற்காக பெற்ற மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் வரலாறு நமக்குத் தேவையா?’’
இப்படியெல்லாம் இவன் பேசியதைக் கேட்டதும் இருவீட்டினரும் நம்பிக்கை இழந்தனர். தொலைக்காட்சி விவாதம் போல் இருக்கிறதே என எண்ணி ஆதங்கப்பட்டனர். மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது.
மணிவேல் மீண்டும் தமிழரசியிடம் பேசினான். “திருக்குறள், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு பற்றி ஏதும் கூறவில்லையே!’’
“அவை எனக்கு மிகவும் பிடிக்கும்’’ என்றாள் தமிழரசி.
“முதலில் அவற்றை அல்லவா சொல்லி-யிருக்க வேண்டும்? தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழியாகவே வைத்திருக்கக்கூடாது. அறிவியல் மொழியாக உயர்த்தி தமிழின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கு பக்தி இலக்கியங்கள் உதவாது என்பதை உணர வேண்டும். குயில் பாட்டும், குடும்ப விளக்குமே தமிழனின் பெருமைகளை உயர்த்தும் இலக்கியங்கள்.’’
தமிழரசி அவன் கூறியதை ஆமோதிப்பது-போல் தலையசைத்தாள்.
“தமிழ்மண் யாருடைய மண் என்று நினைக்கிறீர்கள்?’’ என்று மீண்டும் கேட்டான் மணிவேல்.
“இது வீரம் செறிந்த இராஜராஜசோழன், இராஜேந்திரன் மண்’’, என்றாள் தமிழரசி.
“எப்படி?’’ எனக் கேட்டான் மணிவேல்.
“அவர்களது வீரத்தைப் பார்த்து உலகமே வியக்கிறது. கங்கை வரை படையெடுத்து வென்றான் இராசேந்திரன். இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, ஒரிசா போன்ற அனைத்து நாடுகளையும் வென்றான் இராஜராஜசோழன்’’
“ஓ! அப்படியா? இராஜராஜசோழனின் இயற்பெயர் அருள் மொழித்தேவன். அந்தந் தமிழ்ப் பெயரை மாற்றி சமஸ்கிருதப் பெயரைச் சூட்டிக்கொண்டவன் அவன். அவன் எத்தனை பள்ளிக்கூடங்களை நிறுவி மக்களுக்குக் கல்வி கொடுத்தான்? அவன் மக்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தானா? தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்களுக்கு சரியான தண்டனை கொடுக்காமல் ஜாதிக்கொரு நீதியைப் பின்பற்றியவன் இராஜராஜன். மக்களின் நிலங்களைப் பிடுங்கி பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தவன் அவன். வேத பாடசாலைகளைத்தானே அவன் நிறுவினான்? சமூக நீதிக்காக எந்த மன்னனும் எதுவும் செய்யவில்லையே! எனவே, இது மன்னர்களின் மண்ணோ, நாயன்மார்களின் மண்ணோ அல்ல.’’
இவ்வாறு கூறியபின் தமிழரசியின் முகத்தை உற்றுப் பார்த்தான் மணிவேல். அவள் இவனது பேச்சை ஆர்வமாகக் கேட்பதை உணர்ந்தான்.
“இது சமூக நீதியை நிலை நாட்டி, மூடப் பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகளைச் சாடிய தலைவர்களின் மண். பெரியாரின் மண்’’, என்று பேசி முடித்தான் மணிவேல். இவர்களது பேச்சை ஓரளவு காது கொடுத்துக் கேட்ட பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். மணிமேகலையும் “இது தேறாத கேஸ்’’ என்று தீர்மானம் செய்துவிட்டாள். மணிவேலின் பெற்றோர்கள் புறப்படவும் தயாராகிவிட்டனர்.
அப்போது தமிழரசி மணிவேலைப் பார்த்துக் கேட்டாள்,
“எனக்கும் உங்களைவிட தமிழ்மீது ஆர்வம் அதிகம். தமிழ் வளரவேண்டும்.’’
“மகிழ்ச்சி. அதற்கு ஒரே வழி தமிழ் அறிவியல் மொழியாக வளர்ச்சியடைய வேண்டும். பக்தி இலக்கியங்களைப் புறக்கணிக்கவேண்டும். அதில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சாடவேண்டும்.’’
“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பக்தியை என்னால் விட முடியாதே’’, என்றாள் தமிழரசி.
தமிழரசியும் முற்போக்கான கருத்துகளை உள்வாங்குவதில் தயக்கம் காட்டாதவள் என்பதை உணர்ந்தான் மணிவேல். அறிவு வளர்ச்சியடையும் போது பக்தி மறையும் என்றும் அவன் நம்பினான்.
குப்புசாமியும் சரோஜாவும் நம்பிக்கை இழந்து “நாங்க கிளம்புறோம்’’ என்று கூறி கிளம்பத் தயாராயினர்.
அப்போது தமிழரசி மணிவேலைப் பார்த்து “நாம் இணைந்தே தமிழை அறிவியல் மொழியாக்கி வளர்க்கலாமே’’, என்றாள். மணிவேல் முகம் மலர்ந்தது. அந்த முகமலர்ச்சியுடன் பெற்றோர்களைப் பார்த்தான் மணிவேல்.
நம்பிக்கை இழந்த அவர்கள் முகங்களில் நம்பிக்கை ஒளி படரவும், எழுந்த அவர்கள் மீண்டும் உட்கார்ந்தனர். மணிமேகலையும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.