1. கே: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறாமல் தலைவர்களை ஓரணியில் சேர்க்க, தமிழகத் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டால் என்ன? கர்நாடகத் தேர்தல் தென்னிந்தியாவில் முக்கியம் அல்லவா?
– விநோத், அம்பத்தூர்
ப: உங்கள் ஆசை, நல்லெண்ணத்துக்கு நன்றி. நம்மால் முடிந்ததைச் செய்வோம் – நம் உயரம் நமக்குத் தெரிந்த காரணத்தாலும் – யதார்த்த நிலையிலும்.
2. கே: தமிழ்நாட்டிற்குள் நின்றுவிடாமல் தேசிய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற திருமாவின் வேண்டுகோள் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– அபி, விருகம்பாக்கம்.
ப: வரவேற்க வேண்டிய, ஆக்கப்பூர்வ வேண்டுகோள்.
3. தங்களின் பரப்புரைப் பயணம் ஒரு வெற்றிகரமான தொடக்கம். நீங்கள் தொடங்கி வைத்த பரப்புரை இரண்டாம் கட்ட பொறுப்பாளர்களால், கூட்டணிக் கட்சியினரால், இலக்கை எட்டும்வரை தொடரப்பட வேண்டும் என்பதால், அதற்கான திட்டம் வகுப்பீர்களா?
– ஆகாஷ், கள்ளக்குறிச்சி.
ப: மத்திய கமிட்டி ஈரோட்டில் 29.4.2023இல் நடைபெறுவதில் முக்கிய அஜெண்டா தலைப்புக்குள் இந்த ஆக்கப்பணியும் அடக்கம்தான்
4. ‘‘தமிழகத்தில் ஜாதிய படுகொலையைத் தடுக்கவேண்டும்’’ என்று மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டதா?
– அருந்ததி, மதுரை.
ப: அவர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அமைச்சர் பதவிக்கு ஏற்ப – ஏதோ தன் பங்குக்கு அவர் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் கனவில் பேசியிருக்கிறார். யாரும் பொருட்படுத்தப் போவதில்லை; காரணம், உண்மையில்லை.
5. பெரியார் – அம்பேத்கர், ஃபுலே படிப்பு வட்டங்கள் இந்தியா முழுக்க அமைக்கப்பட வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலை, உடன் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?
– புஷ்பா, தங்கச்சிமடம்.
ப: நிச்சயம் தொடரும், மும்பையில் மாணவர்கள் அமைப்பில் நாள் 6ஆம் தேதி கலந்துகொண்டு பேசினேன்.
6. நாட்டில் எவ்வளவு வன்முறை, ஊழல், பொருளாதாரச் சீரழிவுகள் நடந்தாலும் பிரதமர் மோடி வாய் திறவாமல் இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ஜெகன், பெரம்பூர்
ப: யானைக்கு கரும்பு கொடுத்து மகிழ்வது முக்கியமல்லவா? அதைவிடவா நீங்கள் கேட்பது முக்கியம்?
7. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும், கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திய ஆளுநரின் அண்மை உரை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
– சாந்தி, வண்டலூர்.
ப: ஏற்கெனவே 7.4.2023 விடுதலையில் வெளிவந்த எனது அறிக்கையைப் படியுங்கள்.
8. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியை தடுக்க செயல்திட்டம் வகுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவீர்களா?
– அய்யம்பெருமாள், தஞ்சாவூர்.
ப: அதற்கு கிளர்ச்சி அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, தஞ்சையில் கூடிய கூட்டத்தைப் பற்றி படித்தீர்களானால் புரிந்துகொள்வீர்கள்.
9. ஆர்.எஸ்.எஸ். பற்றுடைய மதுரை உயர்நீதிமன்ற (கிளை) நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். ஆட்களுடன் மதச் சார்புடைய நிகழ்வில் பங்கேற்று, திராவிட இயக்கத் தலைவர்களை, திராவிட மாடல் ஆட்சியைக் கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– சந்தோஷ், வல்லம்.
ப: தனியே கண்டனக் கூட்டம் நடைபெறும். நாளை எதிர் பாருங்கள்.