குழந்தைப் பருவத்தில் எந்தச் சூழலில் வளர்கின்றோமோ, அதைப் போலவே எதிர்காலம் அமையும். வளரும் சூழ்நிலைதான் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், கற்கும் பள்ளிச் சூழல், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்று பல காரணங்கள் ஒருவரது ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. தன் தாத்தா பாட்டி இருவரும் சிலம்பாட்ட பயிற்சி எடுப்பதைப் பார்த்த இளம் வீராங்கனை நட்சத்திராவுக்கு சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் நட்சத்திரா குறித்து அவரின் தாய் நர்மதா,
“என் அப்பா மதுரையில் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா குடும்பத் தலைவி. இருவருமே சிலம்பாட்டப் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சொந்த ஊர் மதுரை. அப்பா அங்குதான் பிறந்து வளர்ந்தார். என் அப்பாவுக்கு எழுபது வயதாகிறது. என் அப்பா மதுரை திருநகரில் வசித்த போது அவரின் பத்து வயதிலிருந்தே முறையாக குருவிடம் சிலம்பாட்டம் பயிற்சி பெற்றவர். வீட்டில் நாள்தோறும் பயிற்சி எடுப்பதைப் பார்த்து அந்த விளையாட்டின் மேல் அம்மாவிற்கு ஈடுபாடு ஏற்பட்டது.
அதனால் என் அம்மா, அப்பாவிடம் சிலம்பம் கற்றுக்கொண்டார். இப்போது என் அப்பா அம்மா இருவரும் எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் தினமும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்கள் பயிற்சி எடுப்பதை என் மகள் நட்சத்திரா நடக்கப் பழகிய காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்து வந்தாள். என் மகளுக்கு மூன்று வயது இருக்கும் போதே வீட்டிலுள்ள கம்புகளை எடுத்துச் சுழற்றுவாள். அதைப் பார்த்த பிறகுதான், அவளுக்கும் சிலம்பத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்டோம். அதன் பிறகு மதுரையில் உள்ள ‘சிலம்பு ஆசான்’ பாண்டியராஜன் அவர்களின் சிலம்பாட்டம் பள்ளியில் சேர்ந்து முறைப்படி சிலம்பம் கற்றுக்கொண்டாள். ஒரே ஆண்டில் சிலம்பாட்டத்தை முழுமையாகக் கற்றுக்கொண்டாள். பள்ளியில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளும் பெற்றாள்.
அய்ந்து வயதாக இருந்தாலும் சிலம்பாட்டத்தை நுட்பமாகக் கற்று பல போட்டிகளில் பரிசுகளை வென்று குவித்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான, மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் அய்ந்து வயதுப் பிரிவு சிறுமிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று விருதுக் கோப்பைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். அய்ந்து வயதிலேயே இவர் அடைந்துள்ள இந்த வெற்றி அவர் மென்மேலும் சிலம்பாட்டத்தில் சாதிக்கும் நம்பிக்கையையும் வலிமையையும் தந்துள்ளது’’ என்று பெருமையுடன் கூறுகிறார்.