மருத்துவம் – ஆவியோடு பேசமுடியுமா?

2023 ஏப்ரல் 1-15,2023 மற்றவர்கள்

மருத்துவர் இரா. கவுதமன்

சூத்திரர்களாக்கப்பட்டு, கல்வி மறுக்கப்-பட்ட பாமர மக்களிடம் பேய், ஆவிகள் என்ற நம்பிக்கையை விதைத்த அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், அவர்கள் வசிக்கும் “அக்ரகார’’ வீடுகளிலோ, அக்ரகாரத் தெருக்களிலோ அவை இருப்பதாக கூறிக் கேட்டதுண்டா? அல்லது அவர்கள் மேல் பேய் வந்து யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமோ?

ஆவியும் பேய்களும் மரணமடைந்தவர்களின் தொடர்ச்சி எனும்போது அக்ரகாரத்தில் மட்டும் அவை இல்லாதது ஏன்? அனைத்து மதங்களிலும் ஆவிகள் உள்ளன. செமிட்டிக் மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, ஆ(இ)ப்ரகாம் காலத்திற்கு முன்பே, ஆதாம், ஏவாள் காலத்திலேயே, ஏடன் தோட்டத்தில் “சாத்தானி’’ன் சேட்டைகள் ஆரம்பமாகிவிட்டன என்று யூதர்களின் வேதமான “தோரா’’, கிறிஸ்துவர்கள் வேதமான ‘பைபிள்’’, முஸ்லிம்களின் வேதமான ‘குர்ஆன்’’ ஆகியவை குறிப்பிட்டுள்ளன.

ஆனால், எந்த இந்து மத வேதங்களிலும் (ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில்) குறிப்பிடப்பட்டுள்ளதா?’’ அரக்கர்கள்’’, “ராட்சர்கள்’’, “தஸ்யூக்கள்’’ என்றும், ‘’சூத்திரர்கள்’’ என்றும், மக்களின் பெரும் பகுதியை இந்த வேதங்கள் குறிப்பிட்டுள்ளனவே!

பேய்கள், ஆவிகள் பற்றி குறிப்பு உள்ளதா? நம்மை எல்லாம் மூடநம்பிக்கையில் மூழ்கவிட்டு, மதவாதிகள் அதையே மூலதனமாக்கி, பாமர மக்களிடம் பணம் பறிக்க

ஓர் எளிய வழியாக ஆவிகளாகவும், பேய்களாகவும் மாற்றிவிட்டனர்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார்; மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் எங்கே போனார்? என்ன செய்தார்? அதன்பின் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் எந்தப் பாதிரியாரோ, கிறிஸ்துவ மதத் தலைவர்களோ, கிறிஸ்துவ மதத்தாரோ இன்று வரை பதில் கூறியதுண்டா? நிறைவேறாத ஆசைகளுடன் மரணமடைந்தவர்கள் ஆவியாக அலைவதாகாவும், அவர்கள் ஆன்மா சாந்தியடையாமல் பேயாக உலவுவதாகவும் கூறுகிறார்கள்.

அதேபோல் தற்கொலை செய்துகொண்டவர்கள், விபத்துகளில் இறந்தவர்கள், சிறிய வயதானவர்கள் ஆவியாகவும், பேயாகவும் அலைவதாகவும், அவர்கள் இறந்த இடத்திலேயே அவை இருப்பதாகவும், இரவு நேரத்தில் அந்தப் பக்கம் போனால் போனவர்களை பிடித்துக்கொள்ளும் என்ற மூடநம்பிக்கையும், பயமும் பரவலாக மக்களிடம் காண்கிறோம். நிறைவேறாத ஆசையுடன் மரணமடைந்தவர்கள், ஆன்மா சாந்தியடைந்தவுடன் அவை மற்றவர்களைத் தொல்லை செய்யாதாம். அதனால் பூசாரிகளும், பாதிரிகளும் முல்லாக்களும் பரிகாரம் செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் பறிப்பதையும், மக்கள் பயத்தால் அவர்கள் பொருளிழப்புக்கு ஆளாகி, சங்கடப்படுவதையும் காண்கிறோம்.

திடீரென மரணமடைந்தவர்கள்தான் ஆவியாகவோ பேயாகவோ அலைகிறார்கள் என்றால், இயற்கை மரணமடைகிறவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள் ஆவியாவதில்லையா? அவர்கள் ஆன்மா என்ன ஆகிறது? நம்மை
விட்டு மறைந்த, நமக்கு வழிகாட்டிய பெரியவர்களது ஆன்மா நம்மைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை உண்மையா? பொய்யா? இது போன்ற நம்பிக்கைகள் மூலம் பயந்து, நோய்வாய்ப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த மூடநம்பிக்கைகள் பலர் மரணமடையக்கூட காரணமாகிவிடுகின்றனவே!

பேய்கள் இருப்பதாக நம்புகிறவர்களை ஏமாற்ற பலவிதமான கட்டுக்கதைகள் அவிழ்த்து-விடப்படுகின்றன. இரவு, நடுசாமத்தில், 12:00 மணிக்குத்தான் பேய்கள் “வாக்கிங் போகும் நேரம் என்றும் பேய்களுக்கும், ஆவிகளுக்கும் கால்கள் கிடையாது என்றும், நம்மூர் பேய்கள் வெள்ளை உடையில் இருக்கும்; மேலை நாட்டுப் பேய்கள் கருப்பு உடையில் இருக்கும் என்றும், இளம் வயதில் இறந்த பெண்கள் “மோகினிப் பேய்களாக மாறி, இளைஞர்களைப் பிடித்துக்கொள்ளும்; அவர்களைக் கட்டியணைத்து அவர்கள் இரத்தத்தை அப்படியே உறிஞ்சிக் கொன்றுவிடும் என்றும் பயமுறுத்தி வருகிறார்கள். கிறித்துவப் பேய்களுக்கு சிலுவையைக் கண்டால் பயம்; இந்துப் பேய்களுக்கு ஆத்தாவைக் கண்டால் பயம்; பேய்கள் செருப்புகள், துடைப்பம் இருந்தால் கிட்டே வராது என்று நம்பி, வீட்டின் முகப்பில் இவற்றைக் கட்டி வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

தொலைக்காட்சிகள், சினிமா போன்றவை பேய்க் கதைகளைச் சொல்லி, மக்களை ஏய்ப்பது இன்று அதிகமாகிவிட்டது. சமூக வலைதளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அண்மையில் ஒரு வலைதளத்தில் ஒரு காட்சி: மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவரை மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள். ஆழ்மயக்கத்தில் (COMA) இருக்கும் அவருக்கு இதயம் நின்றுவிடுகிறது. இதயம் நின்றுவிட்டாலும் மூளைச்சாவு நிகழ சில மணி நேரமாகிறது. . அதற்குள் மருத்துவர்கள் போராடி, அவரைக் காப்பாற்றி அவர் இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கின்றனர். மெல்ல, மெல்ல உணர்வுக்கு வருகிறார். அவரிடம் ஒரு மருத்துவர் பேட்டி எடுக்கிறார். இதயம் நின்றதும் அவர் “ஆன்மா’’ உடலை விட்டு வெளியேறி அந்த அறையில் நிகழ்ந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாம்! அதனால் பேச முடியவில்லையாம்! மீண்டும் இதயத் துடிப்பு திரும்பியதும் ஆன்மா உடலுக்குத் திரும்பிவிட்டதாம்! இப்படி கதை கட்டி ஆன்மா என்பது உண்மை என்று அறிவியல் சாதனங்கள் மூலம் பரப்புரை!

இந்த நிகழ்ச்சி உண்மை என்பதை மெய்ப்பிக்க யாரோ ஒரு வெள்ளைக்காரரது ஒளிப்படத்தையும் (Photo) போட்டு, அவர் ஒரு பெரிய மருத்துவர் என்று புனைவு! இப்படிச் செய்துதான் பாமர மக்களை நம்பவைத்தும், ஏமாற்றியும் வருகிறார்கள்.

இதுபோன்று இன்னொரு வகை ஏமாற்று வேலை என்னவென்றால், ஆவிகளை அழைத்துப் பேச வைக்கிறோம் என்கிற புரட்டு. ஒரு குடும்பத்தின் மரணமடைந்த பெரியவர்களை அழைத்து வழிகாட்டக் கேட்பார்களாம்; அதற்கு அந்த ஆவி வந்து வழி சொல்லுமாம்!

ஒரு புறம் திடீரென மரணமடைந்தவர்கள்தான் ஆவியாக அலைவதாகப் புரளி; மறுபுறம் வீட்டின் பெரியவர்கள் ஆவியாக வந்து வழிகாட்டுவதாக ஏமாற்று. ஆவிகள் நம்மிடம் நேரடியாகப் பேசாதாம்! ஆவிகளுக்கும், நமக்கும் இடையே ஓர் இடைத்தரகர் மூலம்தான் நாம் ஆவிகளுடன் பேச முடியுமாம்! இந்த மூட நம்பிக்கை நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லை. எல்லா நாடுகளிலும் ஆவியுடன் பேச வேண்டும் என்கிற ஆர்வமுடையவர்களும் அவர்களை ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர்.

மேலை நாடுகளில் மக்களை ஏமாற்று-பவர்கள் சில ஏமாற்று வித்தைகளைப் பயன்படுத்துகின்றனர். “ஓயிஜா’’(Oyija) என்று ஒரு பலகை இருக்கிறதாம்! இதைப் பயன்படுத்தி, ஆவிகளுடன் பேச முடியுமாம்! ஆவிகளுடன் பேச வைக்கிறோம் என்றும், அவற்றோடு தொடர்புகொண்டு பேச ஒரு சாதனம் வேண்டும் என்று கூறி, சில ஏமாற்றுக்காரர்களால் உருவாக்கப்பட்டதே இந்தப் பலகை. 1886ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் அறிமுகமானது. இதைப் பயன்படுத்தி, இறந்தவர்களுடன் பேச முடியும் என்று கூறி, பல ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்
பட்டனர்.