“மகிழ்ச்சியாக வாழ்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நாமோ மற்றவர்
களைவிட மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறோம்”, என்கிறது ஒரு பொன்மொழி.
உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடுகளை ஆண்டுதோறும் பட்டியல் இடுவார்கள். இந்த மகிழ்ச்சியை எதன் மூலம் பெறுகிறார்கள் என்பதை அறியவேண்டும். அதே நேரம் இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது.
கல்வி, வறுமை, பிற்போக்குத்தனம் என நம்மால் விமர்சிக்கப்படும் நாடுகள் கூட, நம்மைவிட பல படிகள் முன்னால் இருக்கின்றன.
மகிழ்ச்சி என்பது இருவகைகளில் கிடைக்கும்! ஒன்று, தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் பகுத்தறிவால் பெற்றுக் கொள்வது; மற்றொன்று ஒரு நாடு தம் மக்களுக்குத் தேவையான மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுப்பது!
பல மேலை நாடுகள் தம் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கு உத்திரவாதம் தருகிறது. கல்வி, திறமை, அறிவு குறைவாக இருக்கும் மனிதருக்கும் இது சாத்தியம்! அதையும் கடந்து வசதியாக வாழ்வதற்கே தனித்திறன் வேண்டும்! ஆக அடிப்படை வாழ்வுக்கும், குறைந்தபட்ச மகிழ்வுக்கும் அங்கு தடையே இல்லை!
இதுவே இந்தியாவில் தலைகீழ்! மத வேறுபாடுகள், மதக் கொடுமைகள், எங்குமில்லாத ஜாதி பாகுபாட்டுக் கோரங்கள் நம் புண்ணிய பூமியில் மட்டுமே உள்ளன.
உயர்கல்வி, உயர் பணி, கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் ஜாதியில் கீழிருந்தால் சக மனிதனின் முகச் சுழிப்பில் தம் வாழ்வின் மகிழ்ச்சியையே இழக்கிறான். ஆக ஜாதியும், மதமும் பல கோடி மனிதர்களின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கின்றன.
இதுதவிர இந்த மதக் கருத்துகள் மனிதரின் மூளைக்குள் விலங்கு மாட்டியுள்ளன. அவை பகுத்தறிந்து சிந்திக்கத் தடை விதிக்கின்றன. தன் சொந்தப் பிரச்சினைகளைக் கூட சரி செய்ய முடியாத பலகீனத்தில் வாழ்கிறான். அது தீருமட்டும் மன உளைச்சலில் வாழ்ந்து, ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் இழந்து தவிக்கிறான்.
தமக்கு ஏற்படும் சாதாரண பிரச்சினைகளுக்குக் கூட கடவுளிடம் சரணாகதி அடைவது, பூஜை செய்வது, அர்ச்சகருக்குக் கொட்டிக் கொடுப்பது, ஜாதகம் பார்ப்பது என நாளும் பொழுதும் வீணாகிறதே தவிர, இவர்களுக்கு விடியல் பிறப்பதில்லை. இதற்குக் காரணம் “சிந்திக்க” பழகாததே! இப்படியே தொடர்ந்தால், வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியைப் பெற முடியும்?
“ஆறாவது அறிவு” இருப்பதாலே ஒருவரை மனிதர் என்கிறோம். அந்த அறிவைப் பயன்படுத்தத் தவறினால் மனிதராக எப்படி இருக்கமுடியும், மகிழ்ச்சி எப்படிப் பெறமுடியும்?
குடும்பம், அலுவலகம், தொழில், நண்பர்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் எந்த இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும்! அதுகுறித்துச் சிந்தித்து, பகுத்தறிந்து, நம்மீது சரி, தவறு இருந்தாலும் அப்பிரச்சினைகள் குறித்து மனம்விட்டுப் பேசி, பக்குவமுடன் கையாண்டு, அதைச்
சரிசெய்வதுதான் மனிதருக்கு அழகு!
அப்படிச் செய்கிறபோது நாமும் மகிழ்ச்சி-யடைந்து, பிறரையும் மகிழ்ச்சியடைய வைத்து… “மகிழ்வித்து மகிழ்” என்பார்களே அந்த வாழ்க்கையைப் பெற முடியும்!
திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவருக்கும் ஆண், பெண் இனக் கவர்ச்சி இருக்கும். அது இருவரையும் ஒன்று சேர்க்கும். அதுவே சில ஆண்டுகள் கழிந்தால் கொஞ்சம் மாற்றம் வரும். மாறா எண்ணங்கள் மட்டுமே இரண்டு மனிதர்களை எப்போதும் ஒற்றுமையாக வைத்திருக்காது. புதிய செய்திகள் வேண்டும், புதிய அணுகுமுறைகள் வேண்டும். அப்படி நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் போதுதான் வாழ்விலும் மகிழ்ச்சி தொடரும்!
தான் என்னும் அகந்தை, பிடிவாதம், விட்டுக் கொடுக்க மறுப்பது போன்றவைதாம் மகிழ்ச்சியையும் மனஅமைதியையும் கெடுப்பவை. எனவே, மற்றவர்கள் உணர்வுகளை மதித்து, அவர்களின் விருப்பங்களையும் புரிந்து, நமக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு என்பதை உணர்ந்து நடந்தால் மனநிறைவும், மகிழ்வும் கிடைக்கும். அளவுக்கு மீறிய ஆசை, மேலும் மேலும் பொருள் சேர்க்கும் முனைப்பு போன்றவை மகிழ்ச்சிக்கும் மனஅமைதிக்கும் கேடு தருவன என்பதைப் புரிந்து நடக்கவேண்டும்.
“மகிழ்ச்சி நம் வீட்டுக் கூடத்தில் இருக்கிறது! அதை மற்றவர்கள் தோட்டத்தில் தேடக் கூடாது!”, என்பார்கள்.
ஆக, நாம் மகிழ்ச்சியோடு வாழ்வதும், வாழாததும் நம் அறிவு தொடர்பானது!
(உலக மகிழ்ச்சி நாள் – மார்ச் 20)