பிச்சாண்டார் கோயிலில் 31.12.2002 அன்று காலை 10:00 மணிக்கு பெரியார் படிப்பகம் திறப்பு விழா, பெரியார் பெருந்தொண்டர் பி.வி. இராமச்சந்திரன் அவர்களுக்கு 80ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. விழாக்களில் கலந்துகொண்டு, பி.வி. இராமச்சந்திரன் மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து சிறப்புரையாற்றினோம்.
பெரியார் படிப்பகத்திற்கு பி.வி. இராமச்சந்திரன் அவர்களிடம் புத்தகங்கள் வழங்கும் ஆசிரியர் மற்றும் சோம. இளங்கோவன்
திருச்சியில் 31.12.2002 அன்று முற்பகல் 11:00 மணிக்கு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விரிவாக்கக் கிளைக்கான அடிக்கல் நாட்டு கல்வெட்டினை சிகோகா டாக்டர் சரோஜா இளங்கோவன் திறந்து வைத்தார். இவ்விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன், மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் வீர. வீரசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிறைவாக நாம் சிறப்புரையாற்றுகையில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தொண்டுகளைப் பாராட்டிப் பேசினோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும் நமது இயக்கத்திற்கும் உள்ள பாசப் பிணைப்பினையும் எடுத்துக்கூறினோம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை கட்டிட அடிக்கல் நாட்டு கல்வெட்டு திறப்பு.
உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் 31.12.2002 அன்று மாலை 5:00 மணிக்கு சாவடி எதிரில் சுயமரியாதை வீரர் மன்னை
ப. நாராயணசாமி நினைவு பெரியார் படிப்பகம் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டார். இவ்விழாவிற்கு உரத்தநாடு இரா. குணசேகரன், கிங்ஸ் பொறியியற் கல்லூரி முதல்வர் பேராசிரியர் வ. பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் இராயபுரம் இரா. கோபால், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் கோபு.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படிப்பகத்தைத் திறந்து வைத்து மன்னை. ப.நாராயணசாமி அவர்களின் சிறப்புகளை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினோம்.
திண்டிவனத்தில் 4.1.2003 சனி முற்பகல் 11:00 மணிக்கு வேதவல்லி அம்மாள் திருமண மண்டபத்தில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் திண்டிவனம் து. வாசுதேவன் நினைவு போற்றும் நிகழ்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட தி.க. செயலாளர் க.மு. தாஸ் தலைமை வகிக்க, வேதவல்லி அம்மாள் அறக்கட்டளைத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்ற, மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்டக் காப்பாளர் இரா. கஜேந்திரன், மத்திய நிருவாகக்குழு உறுப்பினர் வ.சு. சம்பந்தம், அன்புக்கரங்கள் நிருவாகி கலை வீரமணி, மாவட்ட தி.க. துணைத்தலைவர் வே. மணி, நகரத் தலைவர் பொன். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகிக்க, து. வாசுதேவன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது பொதுநலத் தொண்டினை விளக்கி நினைவுரையாற்றினோம்.
கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராசரின்நூற்றாண்டு விழா சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் திருவள்ளுவர் மன்றத்தில், 7.1.2003 அன்று காலை 9:30 மணியளவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழிசை செவியையும், உள்ளத்தையும் மகிழ்விக்க வெகுசிறப்புடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ப. இரா. அரங்கசாமி விழாவுக்குத் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் நா. செயப்பிரகாசு வரவேற்புரையாற்றினார்.
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் அன்புமணி, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் நிறுவனம் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன்- சமூகநீதிக் கட்சியின் தலைவர் கா.ஜெ-கவீரபாண்டியன், காமராசரின் அண்ணன் மருமகள் சுலோச்சனா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக நாம் சிறப்புரையாற்றுகையில், காமராசரின் கல்வித் தொண்டு பற்றியும், தமிழர்கள் கல்லூரிக் கல்வி பெற்றனர் என்றால் அதற்குக் காரணம் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியும், சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும்தான் என்றும் நன்றியுணர்வுடன் குறிப்பிட்டோம்.
மன்னை ப. நாராயணசாமி நினைவகத்தில் படிப்பக திறப்பு விழா
தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்களை வெளியிடும் நிகழ்வு பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி சார்பில் கோவையில் 11.1.2003 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தந்தை பெரியாரின் ‘வால்மீகி இராமாயண சம்பாஷணை’ என்னும் நூலினையும் ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ – வரலாற்று சுவடுகள்’ என்னும் நூலினையும் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினேன்.
வல்லம் பொறியியல் கல்லூரியில் திருச்சி மண்டல தேசிய மாணவர் படையின் மூன்றாவது தேசிய ஒருமைப்பாடு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் 14 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 500 பேரும் மாணவிகள் 250 பேரும் கலந்துகொண்டனர். முகாமின் நிறைவு விழா 19.1.2003 அன்று முற்பகல் 11:00 மணியளவில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிங்கப்பூரில் 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயமாக இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று சட்டம் இருப்பதுபோல் நம் நாட்டிலும் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ஏழாம் ஆண்டு நிறைவையொட்டி 20.1.2003 அன்று மாலை இயல் இசை விழா நடைபெற்றது. இன்னமும் இசை தமிழர்கள் கைக்கு வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ச. ஜெகதீசன் கூறினார். இசை அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதும், அவர்களால்தான் முடியும் என்ற நிலையும் ஓரளவிற்கு மாறியிருக்கிறது. என்றுதான் சொல்லலாமேயொழிய, அவர்களுடைய ஆதிக்கப் பிடியிலிருந்து இசை நம் கைக்கு மாறவில்லை, அதை மாறவும் விட மாட்டார்கள் என்று நீதிபதி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார். எமது உரையில் இசைப் பேரறிஞர் காஞ்சி விநாயக முதலியார், முனைவர் வேலுச்சாமி, பயணி தவறவிட்ட பெருந்தொகையை அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் வே. மனோகரன் ஆகியோரை இந்த விழாவில் பாராட்டி பெரியார் விருது அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இசைக்கடல் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களது படத்தை இசைப் பேரறிஞர் காஞ்சி விநாயக முதலியார் திறந்து வைத்தார். திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களது படத்தை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இரா. அரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார். திருக்குறளார் மிகுந்த நகைச்சுவையுடன் பேசக்கூடியவர். திருக்குறள் இலக்கியத்தை இவ்வளவு அற்புதமாகப் பிரச்சாரம் செய்தவர்கள் வேறு யாரும் இல்லை. அரசாங்கம் தக்க இடத்திலே அவருக்குரிய நினைவுச் சின்னம் எழுப்புவது மிக மிக அவசியமாகும் என்றும் குறிப்பிட்டோம். உயர்நீதிமன்ற நீதியரசர் ச. ஜெகதீசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து, பகுத்தறிவு நூல்களை வழங்கினோம்.
மன்னை ப.நாராயணசாமி நினைவு பெரியார் படிப்பகத்தில் கையொப்பமிடும் ஆசிரியர், சோம.இளங்கோவன்
மறுநாள் 21.3.2003 அன்று இரவு 7:00 மணிக்கு நாடகக் கலைவிழா மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை ந. கிருஷ்ணன், சி. செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்டார்டிகா ஆராய்ச்சியாளர் எஸ். ஸ்டெல்லா அவர்களுக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த பெரியார் விருது வழங்கினோம். தமிழ்நாட்டிலேயே சிறந்த பொறியியற் கல்லூரி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி முதல்வர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களுக்கும் சிறந்த பாலிடெக்னிக் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வர் ச. இராசசேகரன் அவர்களுக்கும் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பச்சையப்பன் கல்லூரியில் காமராசர் நூற்றாண்டு விழா
சிறந்த பேராசிரியைகளாகத் தேர்வு செய்யப்பட்ட உ. பர்வீன், ச. உமாதேவி, பி.கே. சிறீவித்யா, காந்தி(என்.எஸ்.எஸ்) ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டி உரையாற்றினோம்.23.01.2003 அன்று இரவு 10:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மியான்மருக்கு எமது வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் புறப்பட்டுச் சென்றேன்.
மியான்மர் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 26.1.2003 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு யாங்கோன் மாநகரில் அமைந்துள்ள சென்ட்ரல் ஓட்டலில் அகில மியான்மர் இந்து மகா சபையின் புரவலர் உயர்திரு ஜி.எஸ். சர்மா (G.S. Sharma B.A., B.L., Patron All Miyanmar Hindu Central Board) தலைமை வகித்து பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளை வெகுவாகப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.
மியான்மர் முதுபெரும் அறிஞரும் பன்மொழிப் புலவருமான உயர்திரு சயாஜி பாரகு – (P.Sayagyi Paragu, Writer- Scholoar, Myanmar Pali Sanskrit- Hindi) அவர்களும் நேபாள இந்து சபையின் தலைவர் திரு. ஊச்சோலே (Ukyawlay President Nepali Hindu Gorka Association),இந்து சோஷியல் கிளப்_ இந்துமத சங்கத் தலைவர் திரு.எஸ். கருப்பையா (கோவை), திருமதி ஜி.எஸ். சர்மா ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். விழாத் துணைச் செயலாளர் ஆர்.ஏ. செல்வக்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார். விழாச் செயலாளர் பி. ஸ்ரீதர் பி.காம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவேற்புரையாற்றினார்.
புத்தக அறிமுக விழா – கோவை
பெரியார் சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வீரா. முனுசாமி அவர்கள் எமக்கு பொன்னாடை அணிவித்து மியான்மர் தமிழ் மக்கள் சார்பாக ‘பேரறிவாளர்’ என்னும் விருதினை வழங்கி சிறப்பித்துப் பேசினார்.
தேசிய மாணவர் படையின் மூன்றாவது தேசிய ஒருமைப்பாடு முகாம்.
மியான்மர் நாட்டில் பன்னெடுங்காலமாக பெரியார் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பிப் பணியாற்றிவரும் பெருந்தொண்டர்
வீரா. முனுசாமி அவர்களுக்கு நாம் பொன்னாடை அணிவித்து பெரியார் விருது நினைவுச் சின்னம் வழங்கினோம். தலைமை வகித்த பெரியவர் ஜி.எஸ். சர்மா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பெரியார் விருது- _ நினைவுச் சின்னம் வழங்கி ஏற்புரையாற்றுகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி நீண்ட உரையாற்றினோம். எமது வாழ்விணையர் மோகனா அம்மையார் அவர்களுக்கு ஜி.எஸ். சர்மா அவர்களின் துணைவியார் திருமதி. பார்வதி அவர்கள் மலர் மாலை அணிவித்து சிறப்புச் செய்தார்.
பெரியார் விருது வழங்கல்
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. விழாச் செயலாளர் ஆர்.ஏ. செல்வக்குமார் நன்றியுரை கூற மாலை 6:00 மணிக்கு விழா இனிது நிறைவுற்றது.
இசை அறிஞர் விநாயக முதலியார்
27.1.2003 பகல் 12.00 மணிக்கு தூவண்ணா நகரில் வசிக்கும் தொழிலதிபர் சிறீதரன் அவர்கள், தமது இல்லத்தில் எங்களுக்கு உணவளித்தார். இவ்விருந்தில் சுயமரியாதை இயக்கத் தலைவர் வீரா. முனுசாமி, பொருளாளர் இரா. தங்கராசன், ஆ. சுப்பையா, ரெ.சு. முத்தையா, திராவிடமணி, ஆ. தசரதன், மு. நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாலை 5:00 மணிக்கு யாங்கோன் மாநகரில் சோலியா(தமிழ்) முஸ்லிம் சன்மார்க்க சேவைக் குழுவில் அக்குழுவின் தலைவர் எம்.பி.பி. லியாகத் அலி அவர்கள் தலைமையில் எங்களுக்கும் ரெ.சு. முத்தையா தலைமையில் சென்ற மலேசிய குழுவினர்க்கும் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவின் நிறைவில் யாம் ஏற்புரையாற்றினோம்.
28.1.2003 மாலை 5:00 மணிக்கு யாங்கோன் 51ஆம் வீதியில் அமைந்துள்ள சிறீ மகாலட்சுமி மண்டபத்தில், எமக்கு வரவேற்பு பாராட்டு விழா இந்து மத்திய சபைத் தலைவர் எஸ்.கருப்பையா(சேர்வை) அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில மியான்மர் இந்து மத்திய சபையின் புரவலர் ஜி.எஸ். சர்மா, அவரின் துணைவியார், தமிழ் சமூகப் பெரியவர்கள் வி. துரைசாமி (சேர்வை), இரு. சந்திரசேகர் (சேர்வை), தமிழ்ப் பிரமுகர், பெ.பொ. அம்பிகாபதி, சுயமரியாதை இயக்கத் தலைவர் வீரா. முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் நான் ஏற்புரையாற்றும்போது, ஜாதி ஒழிப்பு- சமத்துவம்- சகோதரத்துவம்- சுயமரியாதை பற்றி விரிவான முறையில் உரையாற்றினேன்.
மியான்மர்(பர்மா) நாட்டில் பெரியார் விழா தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பும் வழியில் சிங்கப்பூர் சென்றடைந்தோம். மியான்மரில் வீரா. முனுசாமி முன்னின்று ஏற்பாடு செய்த அய்ந்து நாள் நிகழ்ச்சிகளில் மலேசியா திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு. முத்தையா, திராவிடமணி, தசரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மியான்மர் புறப்பட்டபோது…
கட்சி வேறுபாடின்றி, இந்து – முஸ்லிம் வேறுபாடின்றி பெரியார் பற்றாளர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பளித்தனர். தமிழ்நாடு திரும்பும் முன்பு சிங்கப்பூரில் தமிழவேள் நற்பணிமன்றம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டோம். பர்மா, சிங்கப்பூரில் பெரியார் கொள்கைப் பணிகளை சிறப்புறச் செய்த மனநிறைவுடன் 3.2.2003 அன்று சிங்கப்பூரிலிருந்து இரவு 11:00 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டோம்.
பாராட்டு விழாவில் உரையாற்றும் ஆசிரியர்
(நினைவுகள் நீளும்…)