ஆரிய கலாச்சாரத்தின் உச்சநிலை சீர்கேடு குழந்தைத் திருமணம். இரண்டு வயதில், அய்ந்து முதல் 10 வயதில், 15 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வது அவர்களின் கலாச்சாரம். அதை இக்காலத்திலும் அவர்கள் தொடர்வதும், நியாயப்படுத்துவதும் மனித எதிர்செயல் ஆகும்.
தமிழர் வாழ்வில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் காதலித்து மாலை மாற்றி மணம் முடித்துக்கொள்வது வழக்கம்.
அதில் அவர்கள் விருப்பமே முதன்மையானது.
மற்றவர்கள் தலையிடுவதில்லை. ஜாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் இல்லை.
ஆனால், ஆரியர் அயல்நாட்டிலிருந்து தமிழர் மண்ணில் நுழைந்து வருணப் பிரிவுகளை உருவாக்கி, அதை நிலைநிறுத்த வருணக் கலப்பு ஏற்படாமல் தடுக்க குழந்தைத் திருமணத்தைக் கொண்டு வந்தனர்.
நாடு விடுதலையடைந்து சட்டங்கள் இயற்றப்பட்டாலும், பெண்கள் உரிய வயது அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கும் நிலை இன்னும் அதிகம் காணப்படுகிறது.
18 வயது நிறைவடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும், பெண்கள் 21 வயது நிறைவடைந்தபின்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும். அதுதான் அப்பெண்ணிற்கும், அவள் பெறும் பிள்ளைக்கும் உகந்தது.ஆனால், இன்று 15 முதல் 19 வயதுக்குக் கீழ் திருமணம் அதிகம் நடைபெறுகிறது. மேற்-கு வங்கத்தில் 6 திருமணங்களில் ஒரு திருமணம் “டீன் ஏஜில்’’ நடைபெறுவதாய் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது பெண்ணின் நலத்தை, பிள்ளையின் நலத்தை நாசமாக்கும். எனவே, அரசுகள் இதில் அதிக கவனம் செலுத்தித் தடுக்கவேண்டும்.