ராமனே உடைத்த ராமன் பாலம் ‍

ஏப்ரல் 16-30

– மணிமகன்

லைவாணர் என்.எஸ்.கே.அவர்கள் பாடிய பாடல் ஒன்றை உடுமலை நாராயணகவி எழுதியிருப்பார்.

நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம்…அது அந்தக் காலம்

எதையும் நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்..ஆமா இந்தக் காலம்

வேறு ஊடகங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் கற்பனைச் சிறகைத் தட்டி எழுப்பி அன்றைய மக்களின் பொழுது போக்குக்காகவும்,

அப்படியே அதனை வைத்து தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் எழுதப்பட்டதே புராணங்கள், கடவுள் கதைகள்.

நான்முகச்சாமி, ஆறுமுகச் சாமி, அய்ந்து கரச் சாமி,யானைத் தலைச் சாமி என்று மனித உருவம் அல்லாத வினோதமான ரசிக்கும் படியான ஓவியம் போல சித்தரித்தே கடவுள்களை வடிவமைத்தார்கள்.வழக்கமான மனிதனையே பார்ப்பதில் சுவாரசியம் இருக்காதே…! அதனால்தான் உருவங்களில் இருந்து செயல்பாடுகள் வரை மனிதனுக்கு மீறிய சக்தி படைத்தவையாக கடவுள்கள் சித்தரிக்கப்பட்டன.அப்படி சித்தரிக்கப்பட்டவற்றில் ஆரியம் முதன்மையாக முன்னிறுத்திவது ராமாயணத்தை,அதன் நாயகன் ராமனை.

இந்திய மக்களின் மனங்களின் வலுவாக வேரூன்றிவிட்ட இந்த ராமனை வைத்துதான் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஆரியம் மதவெறியைத் தூண்டி தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயலுகிறது. அன்று பாபர் மசூதியை இடித்து இந்தியாவின் பொது அமைதியைக் குலைத்ததும், இன்று ராமன் பாலத்தை முன்வைத்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதும் ராமன் என்ற கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தித்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இன்றைய அறிவியல் உலகம் விண்ணைத்தாண்டுவது  மட்டுமல்ல, மண்ணையும், கடலையும் ஆழத் தோண்டி ஆய்வு செய்து ஒவ்வொன்றின் இயல்பையும் கண்டறிந்து சொல்லிவிடுகிறது. டிஸ்கவரி, ஹிஸ்ட்ரி, அனிமல் பிளானட்,சயின்ஸ் போன்ற தொலைக்காட்சிகள் இத்தகைய ஆய்வுகளை மக்கள் முன் வைக்கின்றன. உலகம் இதனைப் பார்த்து தெரிந்துகொள்ளவும் தெளிவடையவும் தொடங்கியிருக்கும் காலக்கட்டத்தில் இந்தியாவில் பழம் பஞ்சாங்கங்கள் ராமனைத் தூக்குகின்றன. உலகமே புதியதை நோக்கிப் பயணிக்கும் காலத்தில் இங்கே பழமை தலைவிரித்தாடுகிறது.இன்னும் புராணப் புளுகுகளையே கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

தமிழர்களின் நூற்றி அய்ம்பது ஆண்டுக்கனவான சேது சமுத்திரத்திட்டத்தை சீர்குலைத்து தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் வட இந்தியச பார்ப்பன,பனியா கும்பல் ராமன் பாலம் என்ற கற்பனையைத் திரும்பத்திரும்பச் சொல்லி வழக்கு மனறம் சென்று திட்டத்தைக் கிடப்பில் போடக் காரணமாகி இருக்கிறது. அறிவியல் மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொன்னாலும்,மத உணர்வுகளைச் சொல்லி நீதிமன்றங்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கின்றன.

இன்றைய உலகின் போக்கு,அறிவியல் ஆதாரங்கள்,கடலியல் ஆய்வுகள் மக்களின் வாழ்வாதாரமான பொருளாதார வளர்ச்சி போன்ற முக்கியமான வற்றை தள்ளிவைத்துவிட்டு, ராமேசுவரம் கடலில் இருப்பது ராமன் கட்டிய பாலம் என்று புராண ஆதாரங்களை இந்துத்துவவாதிகள் காட்டுகிறார்கள்.சரி, இந்துத்துவவாதிகளின் வாதத்திற்கே வருவோம்.இவர்கள் கூறுவதுபோல ராமன் பாலம் இன்றும் அங்கே இருக்கிறதா? இல்லை என்கிறார் எழுத்தாளர் மஞ்சை வசந்தன். இந்துத்துவவாதிகள் காட்டும் புராண ஆதாரங்களைக் காட்டியே மறுக்கிறார்.(விடுதலை ஞாயிறு மலர் 7.4.2012)

இராமன் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், அயோக்கியத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

இராமன் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமன் கையாலே, தனது வில்லினால் சேது அணையை தகர்த்து அழித்து விட்டான் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.

அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமன் பாலம் அமைத்தான் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப்பகுதிக்கு  இராமன் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமன் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விட்டான் என்கிறது சேது புராணம்.

இராமன் பாலத்தை தகர்த்ததையும் கூறும் சேது புராண பகுதி இதோ: மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபி ஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்திறைஞ்சப் புட்பக விமானத் திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்தவாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான் சுவாமீ வேதவேதாந்த மூர்த்தியே தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறே யிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்குவரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேதுவாகிய அணையை சோதிக்க வேண்டுமென்று சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனதுகரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.

மேலே கண்ட புராணக் கதையிலிருந்து இராமன் பாலம் கடலுக்குள் அமைக்கப்பட்ட மணல் பாலம் அல்ல.அது மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல். இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமன் ஏற்று, அப்பாலத்தை இராமனே தகர்த்து விட்டான். அதுவும் எப்படித் தகர்த்தான்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமன் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தான்.

இச்செய்திகள் கூறுவது என்ன?

* தற்போது கடலுக்குள் உள்ள மணல்மேடு என்பது இராமன் பாலம், கடல் நீர் மீது மிதக்கும்படியான மிதவைக் கற்களால் அமைக்கப்பட்டது. எனவே இவர்கள் இராமர் பாலம் என்று கூறும் மணல் மேடு இராமர் பாலம் அல்ல. அது இயற்கையாய் உருவானது.

* இந்துத்துவாக்கள் கூறுவதுபோல இராமன் கட்டிய பாலத்தை இராமனே தகர்த்து அழித்து விட்டான் என்று சேது புராணம் கூறுகிறது. எனவே இராமன் பாலமே என்று இப்போது எதுவும் இல்லை.

* மத நம்பிக்கைக்கு அடிப்படை புராணம். புராணமே இராமன் பாலம் அப்போதே இராமனால் அழிக்கப்பட்டு விட்டது என்றுகூறி விட்டபின், இராமன் பாலம் இருப்பதாகக் கூறுவது மோசடியல்லவா? அயோக்கியத்தனமல்லவா?

மஞ்சை வசந்தன் எடுத்துக்காட்டும் இந்தப் புராண ஆதாரங்களுக்கு புராணப்பிரியர்களின் பதில் என்ன?

பழமையான மத நம்பிக்கைகள் பல இன்றைய உலகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.புராணங்கள் கூறுவதையெல்லாம் இன்று இந்துத்துவவாதிகளால் அப்படியே கடைப்பிடிக்கமுடியுமா? அல்லது இன்றைய நவீன அறிவியல் கொடைகளை அவர்களால் புறக்கணிக்கத்தான் முடியுமா?ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த இயந்திரம் பொருத்திய விமானத்தில் பறந்து கொண்டு இயந்திரமே இல்லாத கற்பனையான புஷ்பக விமானத்தை சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறது இந்துத்துவக் கூட்டம்.

1827 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த வால்ட்டர் ஹேன்காக் என்பவர் முதல் நீராவிப் பேருந்தை உருவாக்கினார்.அதன் பரிணாம வளர்ச்சியான இன்றைய சொகுசுப் பேருந்தில் அமர்ந்து கொண்டு அத்வானிகளும் நரேந்திர மோடிகளும் ரத(?)யாத்திரை செல்கிறார்கள். புராணகாலத்தின் ரதங்களை இப்போது பயன்படுத்தி செல்லவேண்டியதுதானே? முடியுமா?வெள்ளைக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்த அத்தனை நவீன வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, புராணகாலத்தின் புளுகுகளை உச்சநீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டுபவர்களுக்கு பதிலடியாகவே இந்த சேது புராணத்தின் ஆதாரங்களைக் காட்டியிருக்கிறது பெரியாரின் பகுத்தறிவுப்படை. துணிவிருந்தால் சோக்கள் மட்டுமல்ல சுனா சாமிகளும் பதில் சொல்ல முன்வரட்டும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *