சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவு நாள் (பிப்ரவரி 26)

2023 பிப்ரவரி 16-28, 2023 மற்றவர்கள்

வல்லாண்மை மிக்க ‘குடி’யில் 1884ஆம் ஆண்டு எஸ். இராமச்சந்திரனார் பிறந்தார்.

“இனி இந்தக் கையால்ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்’’ என்று பொது மேடையிலேயே சூளுரைத்த சுயமரியாதைச் செம்மல் ஆவார். சிவகங்கை சீமைப் பகுதிக்கு மட்டுமின்றி, தென்னகத் திராவிடர் அனைவருக்குமே இனநல வழிகாட்டியாக விளங்கினார்.

நெல்லையில் 21.7.1929 அன்று நடந்த சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்று, இவர் தொலைநோக்குடன் ஆற்றிய பேருரையில், சுயமரியாதை இயக்கத்தின் இறுதிப் பலன்களாக “உலகத்திலுள்ள சொத்துகள் பூமிகள் எல்லாம் மக்களுக்குச் சொந்தமாகும்; மனித ஆயுள் இரட்டித்துவிடும்; ஒருவர்க்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவும் கொண்டு மக்கள் சதா மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்’’ எனக் குறிப்பிட்டார். இது இவரது சுயமரியாதை மூதறிவுப் பற்றிப் பேசும்.எஸ். இராமச்சந்திரனார் சிவகங்கை மாவட்டத்தில் “முதல் ஆதிதிராவிட மாநாட்டை’’ ஏற்பாடு செய்து ஆதி திராவிட மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களுக்கும் அவர்களைக் கடுமையாக நசுக்கும் பார்ப்பனர் அல்லாத இடைநிலை ஜாதியினருக்கும் எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய புரட்சிக் கருத்துகளைப் பரப்ப முன் வந்தாரென்றால் சுயமரியாதைக் கோட்பாடுகளில் எந்த அளவுக்கு ஊறிப்போயிருந்தாரென்பது துலக்கமாகின்றதன்றோ!

சிறந்த வழக்கறிஞராகவும், கோயில் அறங்காவல் குழுத்தலைவராகவும், ‘தாலுகா போர்டு’ தலைவராகவும் இருந்தார்.மேன்மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடியவாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இயக்கத்திற்காய் உழைத்த சுயமரியாதைச் சுடரொளி ‘இராமச்சந்திரனார் 26.2.1933 அன்று மறைந்தார்.

– பொ. அறிவன், கழனிப்பாக்கம்